Sunday 2 June 2013

திருமாவேலனும் கலைஞரும்



இவ்வார ஆனந்த விகடனில் பலரும் பாராட்டுகிற திருமாவேலனின் கலைஞர் கட்டுரை எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதில்அவர் சொல்லி உள்ளதை விட வேண்டுமென்றே சொல்லாமல் விட்டது அதிகம்.

 
கலைஞர் 90 வயதைஅடைவதை ஒட்டின கட்டுரை என்பதால் கராற்தன்மை இல்லாமல் பாராட்டியிருக்கிறார் என சிலர் நியாயம் தேடலாம். ஆனால்கலைஞர் நம் சமகால வரலாற்றோடு கலந்தவர். அவரைஅதில் உள்ள சர்ச்சைகள், குற்றங்களில்இருந்து பிரித்து வெறுமனே ஒரு கட்சி நாயகனாக அவரை பார்க்க முடியாது. 

திருமாவேலன் கட்டுரைக்குள் தொடர்ச்சியாக கலைஞரின் கட்சி நிர்வாகப் பொறுப்பை மட்டும் பிரதானப்படுத்துகிறார். எமர்ஜென்சி காலத்தில் அவரது துணிவையும் சுட்டுகிறார். ஆனால் கலைஞர் எப்படி தி.மு.கவை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றினார், அதன் மூலம் அவரது குடும்பம் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக மாறியது, பெரும் ஊழல்களுக்கு துணை போனது ஆகியவற்றை எல்லாம் சொல்லாமல் மறைப்பது என்பது கலைஞரைப் பற்றின ஒரு தேசலான சித்திரத்தை தருகிறது என்பது மட்டுமல்ல பிரச்சனை அவரைப் பற்றி கோடானுகோடி தமிழர்களுக்கு உள்ள் பல கேள்விகளுக்கும் விடையளிக்காமல் மூடி மறைக்கும் நேர்மையின்மை ஆகும். வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. 

பல திமுக அனுதாபிகளே கூட இந்தளவுக்கு கலைஞரை விமர்சனம் இல்லாமல் புகழ மாட்டார்கள். ஏனென்றால் நம் காலத்தின் பல பெரும் ஊழல்களின் பகுதியாக அவர் இருந்திருக்கிறார். பல தமிழர்களின் மனங்களில் கலைஞர் ஒரு சீரழிந்த தலைவராகவே இருக்கிறார். ஆனால் திருமாவேலன் கலைஞரின் குற்றங்கள் அத்தனையையும் அவரது குடும்பத்தின் மீது சுமத்துகிறார். கலைஞர் வெறும் தியாகி என்கிறார். அது உண்மை அல்ல. மேலும் கலைஞரும் அவரது குடும்பமும் அவரது கட்சியும் வேறு வேறு அல்ல. திருமாவேலன் இவற்றை பிரித்து பார்த்து கலைஞர் என்கிற தனிமனிதரை தூய்மைப்படுத்த பார்க்கிறார். அது உண்மை அல்ல

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கலைஞர் தாமதமாக விலகினது ஒரு தவறு என்று கலைஞரே புரிந்து கொள்வார் என திருமாவேலன் சொல்கிறார். ஆனால் கலைஞரை பொறுத்தமட்டில் அது ஒரு தவறு அல்ல. அவர் ஒவ்வொரு முடிவையும் தெளிவாக திட்டமிட்டு எடுக்கக் கூடிய முதிர்ந்த அரசியல்வாதி. காங்கிரஸில் இருந்து விலக சரியான நேரம் பார்த்திருந்தார். 2G விசயத்தில் ராஜாவும் கனிமொழியும் நடத்தப்பட்ட விசயம் அவருக்கு மிகுந்த கசப்பை ஏற்படுத்தியது. ஆனால் காங்கிரஸை உடனடியாக எதிர்த்தால் தனக்குத் தான் கடும் விளைவுகள் ஏற்படும் என அறிந்திருந்தார். அதனால் தான் இங்கு மீண்டுமொரு தமிழீழ அலை எழும்பின போது காங்கிரஸையும் பெரிய அளவில் காயப்படுத்தாத அளவில் விலகினார். திருமாவேலன் காட்டுவது போல கருணாநிதி ஒன்றும் பேதையோ அறியா விடலைப் பையனோ அல்ல (என்று திருமாவேலனுக்கும் தெரியும்). 

அதனால் தான் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. திருமாவேலன் நான் மதிக்கும் ஒரு எழுத்தாளர். அவர் கலைஞரைப் பற்றி குழந்தைக்கு எண்ணெய் தடவுவது போல் இத்தனை கவனமாக எழுத வேண்டியது இல்லை. கராறாக நேர்மையாக கலைஞருக்கு உரித்தான பாராட்டை மட்டும் அளித்து அவரது குற்றங்களையும் தராசில் வைத்து பேசியிருக்க வேண்டும்.

கலைஞரின் 90வது அகவையை ஒட்டி அவரை நெகிழ்ச்சியுடன் அணுகும் கட்டுரை இது விமர்சனம் அல்ல என பேசுபவர்களுக்கு மீண்டும் கூறுகிறேன்: கலைஞர் வெறும் “கலைஞர் அல்ல”. அவர் நம் வரலாற்றின் ஒரு பகுதி. அவரை விமர்சனம் இல்லாமல் நாம் வெறுமனே நெகிழ்ச்சியாக எதிர்கொள்வது நம் காலத்தின் அத்தனை ஊழல்கள் குற்றங்களுக்கும் கண்மூடுவது போல.

ஞாநி செய்தது போல கலைஞரை கடுமையாக தாக்க வேண்டும் என நான் கேட்கவில்லை. நான் தி.மு.க வெறுப்பாளன் அல்ல. எனக்கு தி.மு.கவின் வரலாற்று பங்களிப்பு என்ன என தெரியும். நம் சமூகத்தின் மிக முக்கியமான இயக்கம் திராவிட கழகம். அதை அரசியல் தளத்துக்கு கொண்டு வந்து அண்ணா சமரசப்படுத்தினார். ஆனாலும் திமுகவால் நம் சமூகத்துக்கு பல நலன்கள் விளைந்தன. அதைக் குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்வோம். கலைஞரின் பங்களிப்பு ஒரு பண்பாட்டு அளவில் தான் என நம்புகிறேன். பெரியாரைப் போல் அவர் ஒரு சீர்திருத்தவாதியாகவோ போராளியாகவோ இயங்கவில்லை. அண்ணாவின் கீழ் இருந்தவரையில் கலைஞர் ஒரு முக்கியமான போராளியாக இருந்தார். ஆனால் ஆட்சி அதிகாரம் பெற்று ஒரு கட்டத்துக்கு மேல் அவரது கவனம் முழுக்க அதிகாரத்தை தக்க வைப்பதும், சொத்து சேர்ப்பதுமாகவே இருந்து வந்துள்ளது. அவர் தமிழ் சமூகத்தின் தலைவர் அல்ல, ஒரு வணிக நிறுவனத்தின் திறமையான நிர்வாகி. இது நமக்கு தெரிந்த அப்பட்டமான உண்மை.இது நமக்கு தெரிந்த அப்பட்டமான உண்மை.

ஆனால் கலைஞருக்கு இன்னொரு முக்கியமான பரிணாமம் உண்டு. கேரள, மேற்கு வங்க இடதுசாரி முதலமைச்சர்களைப் போல கலைஞர் ஒரு நல்ல வாசகர். இலக்கியம், பண்பாட்டின் மதிப்பை அறிந்தவர். அவர் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் அதிகமாக வாங்கப்பட்டது தீவிர படைப்புகளின் பதிப்பில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணினது. நேரடியாக தீவிர எழுத்தோடு தொடர்புடையவர் அல்லவென்றாலும் அவர் தீவிர எழுத்துக்களை மறைமுகமாக ஆதரித்திருக்கிறார். “ரவிக்குமாரின் ஆளுமை மீது எனக்கு பொறாமை இருந்துள்ளது” என ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு இலக்கிய பிரேமையும் அறிவுலகின் மீது ஈர்ப்பும் இருந்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் அவரது முக்கியமான சமூக பங்களிப்பு. ஒரு ஆய்வாளனாக எழுத்தாளனாக வாசகனாக அவர் மீது இவ்விசயத்தில் நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். கலைஞரின் ஆளுமையின் இந்த பக்கம் எனக்கு என்றும் அணுக்கமானது தான்.
திருமாவேலன் இதே கட்டுரையை எழுபது எண்பதுகளில் இயங்கிய கலைஞரைப் பற்றி பிரதானப்படுத்தி எழுதியிருக்கலாம் அல்லது அவரது பண்பாட்டு ஆளுமையை முன்னிறுத்தி பாராட்டியிருக்கலாம். ஆனால் சமகால கலைஞரை சமரசத்துடன் பாராட்டுவது என்பது, பல விசயங்களை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு அவரது அரசியல் வாழ்வை சித்தரிப்பது என்பது கலைஞர் மீது நியாயமான நேசமும் நியாயமான கோபங்களும் கொண்ட, திருமாவேலனின் எழுத்து மீது நம்பிக்கையும் கொண்ட என்னைப் போன்ற பலருக்கும் ஏற்புடையது அல்ல.


Share This

1 comment :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates