Tuesday 17 November 2009

இந்திய குறுக்குவிதிகளும், பனிக்கரடியும்

என் ஐந்து வருட கல்லூரிப் படிப்பின் மிக முக்கியமான வகுப்பு ஐந்தாவது வருட இறுதியில் நிகழ்ந்தது. மார்க்ஸிய-காந்திய-கிறுத்துவரும், மிதிவண்டியில் மட்டுமே எங்கும் பயணிக்கும் பேராசியர் செரியன் குரியன் அதை சொன்னார்: ”படித்து முடித்து என்னதான் கிழித்தாலும் உங்களுக்கு எல்லாம் பரிந்துரை இருந்தால் தான் வேலை கிடைக்கும். தொடர்புகள் இல்லாவதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்”. அவரது கனத்த குரலுடன் குழல்விளக்கு விட்டில் போட்டி போட ஒவ்வொரு வார்த்தையாக திரும்பத் திரும்ப யோசித்தேன். என் அம்மாவுக்கு வேலை பற்றி இருந்த மற்றொரு அபத்தமான கவலை நினைவு வந்தது. பதின்பருவத்தில் சமூக ஊனம் என் கல்விக்கு பெரும் தடையாக இருந்தது. நான் எதிர்காலத்தில் வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் புசிக்க வேண்டி வரும்; வீட்டை எத்தனைக்கு வாடகைக்கு விடலாம் என்றெல்லாம் அம்மா அப்பாவிடம் உள்ளார்ந்த கவலையுடன் விசாரித்துக் கொண்டிருந்ததை ஒருநாள் ஒட்டுக் கேட்டேன். படிப்பதற்கான உந்துதல் அப்போதுதான் ஏற்பட்டது. ஐந்து வருடங்கள் ஒவ்வொரு செமிஸ்டரிலும் முதலாவதாக வந்தேன். வேலை கிடைத்து விடும் என்ற உறுதியில் நெஞ்சு உயர்த்திய போதுதான் செரியன் இப்படி சொன்னது. ஐந்து வருடமா செரியனா? என் நெஞ்சு மேலும் பொங்கியது.

நான் படித்த கடைசி வருடத்தில் எங்கள் கல்லூரியில் படித்து தங்கப் பதக்கம் பெற்ற ஒரு சிரியன் கிறித்துவ இளைஞர் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்தவர்கள் “தங்கப் பதக்கம், பதக்கம்” என்று பரபரப்பாக பேசினர். எனக்கும் அவ்வருடம் அதே பதக்கம் தந்தார்கள். பேராசிரியர்கள் மத்தியில் நல்ல பேரும் பரிச்சயமும் இருந்தது. ஆனால் வேலைதர மட்டும் முரண்டு பிடித்தார்கள். இதற்கான தனிப்பட்ட காரணங்கள் முக்கியமல்ல. பின்னர், பதக்கம் மற்றும் நான் பெற்ற பரிசு சான்றிதழ்களை நேர்முகங்களில் கேள்வியாளர்களின் முகங்களுக்கு நீட்டி அவசரமாக பேசும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒரு முறை ஒரு பேட்டியாளர் மறதியில் தன் போண்டாவை என் சான்றிதழில் துடைக்க முயன்றதில் இருந்து நான் நிறுத்திக் கொண்டேன். சுவாரஸ்யமான பகுதி வேலையை தீர்மானிக்கும் வெளிக்காரணிகள் தாம். என் நண்பர் ஸ்ரீதரின் கதைக்கு வருகிறேன்.

ஸ்ரீதர் என் ஊரில் இருந்து என்னைப் போன்றே மத்திய வர்க்க, எளிய கல்விப் பின்னணியில் இருந்து சென்னைக்கு முதுகலை ஆங்கிலம் படிக்க வந்தவர். நான் பிரபல்யம் மிக்க எம்.சி.சியை தேர்வு செய்ய, அவர் ஒரு ஒளிகுறைந்த சிறுபான்மை கல்லூரியில் இணைந்தார். இறுதித் தேர்வு மதிப்பெண்கள் வெளியான போது என் வகுப்பில் 4 பேர் முதல் வகுப்பு பெற்றிருந்தார்கள். ஸ்ரீதர் தன்னுடைய பிற வகுப்பு நண்பர்களை விட சிறப்பாக மதிப்பெண் பெற்றிருந்ததாலும், வகுப்பில் அவர் சுட்டி என்பதாலும் துறைத்தலைவர் அவருக்கு அங்கு வேலை தந்தார். அங்கு மூன்று வருடங்கள் பணி புரிந்தார். நான் கல்லூரிகளில் வேலை கிடைக்காமல் தனியார் நிறுவனங்களில் கங்காரு போல் துள்ளிக் கொண்டிருந்தேன். ஆறு வருடங்களுக்குப் பின் கைகால் பிடித்து நான் கல்லூரி ஒன்றில் நுழைந்த போது அங்கு பணிபுரிந்த ஸ்ரீதரை சந்தித்தது இரு வாழ்க்கை துருவங்கள் நேருக்கு நேர் பார்த்தது போல் இருந்தது. ஒரு கால-எந்திரம் இருந்தால் கொடுங்கள்; நான் என் அம்மா-அப்பா சர்ச்சித்துக் கொண்டிருந்த அந்த பொழுதுக்கு திரும்ப வேண்டும்.

வேலை மற்றும் சமூக அங்கீகாரத்தை சூழலும் தொடர்புகளும் தாம் பெருமளவில் தீர்மானிக்கின்றன. ஏழை எளியவர்கள் படித்தால் தான் முன்னேற முடியும் என்று குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவது ஒரு கற்பிதம். சற்று ஆபத்தான உபதேசமும் கூட. மதிப்பெண்கள் மிகச்சிறிய பங்கைத்தான் ஆற்றுகின்றன. தவமாக படித்து கிம்பளம் தராமல், ஆள்பிடிக்காமல் அரசு வேலை பெறும் சில விதிவிலக்குகளை தவிர்க்கிறேன். இந்த போக்குக்கு ஒரு சமூகவியல் பின்னணி உள்ளது; அதற்கு பிறகு வருகிறேன். அடுத்து ஸ்ரீதரின் வகுப்பு நண்பனான சீனிவாசன் என்கிற சீனுவின் கதைக்கு போக வேண்டும். அது நமக்கு இவ்விவாதத்தின் ஒரு புதிய கோணத்தைக் காட்டும்.

சீனு வலுவான பிராமண சாதியை சேர்ந்தவர். பாலசந்தர் போன்றவர்கள் பார்த்தால் கண்ணீர் வடிக்கும் வறிய பிராமணன். ஆனால் எங்கு சென்றாலும், அவரது மீசையில்லாத முகம் பார்த்து புரிந்து கொள்பவர்கள், உடனே அகதூண்டல் பெற்று சீனுவை அவரது சராசரி உயரத்தில் இருந்து ஒரு அடி உயர்த்தியே காண்பார்கள். அதற்கு மேல் சில குச்சிகள் அடுக்கி எட்டி காலகட்டி நடந்து அவர் பல பொருளாதார, அங்கீகார அடுக்குகளை கடந்தார். எப்படி? சீனு தன் இஸ்லாமிய துறைத்தலைவருக்கு செல்லப் பிள்ளை. தத்துபித்தென்று ஆங்கிலம் பேசினாலும் துறைத்தலைவர் வராத நாட்களில் சீனு வகுப்புக்கு வந்து தன் நண்பர்களுக்கே போதிக்கும் உரிமையை அடையும் அளவிற்க்கு உயர்ந்தார். சும்மாவெல்லாம் அல்ல. கடுமையாக உழைத்து அவ்விடத்தை அடைந்திருந்தார். எப்புடி? அது பற்றி சீனுவே என்னிடம் குறிப்பிடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. துறைத்தலைவரின் வீட்டுக்கு சென்று ”பலவிதங்களில்” (எப்படி என்றெல்லாம் பற்றி குறைந்தபட்ச தகவல்களே கிடைத்தன) பணிவிடைகள் செய்துள்ளான். “எத்தனை டப்பா மாவடு, சீடை எல்லாம் கொண்டு கொடுத்திருக்கிறேன் அவருக்கு “ என்று எந்தவொரு குற்ற்வுணர்வும் இன்றி குறிப்பிட்டான் ஒருமுறை. தகவல் போதாமல் நான் ஸ்ரீதரை மேலும் நோண்டினேன். ஸ்ரீதர் திரும்பத் திரும்ப இதையே சொன்னான்: “அக்காலத்தில் எல்லாம் சீனு ரொம்ப லட்சணமாக இருப்பான்; பார்ப்பவருக்கு எல்லாம் அவனைப் பிடிக்கும்”. இத்தகவல் ஆபாசமாக இருந்ததால் நான் அதற்கு மேல் அவனை பேச விடவில்லை. நீங்களும் மறந்து விடுங்கள். முக்கியமான கட்டம் தேர்வு மதிப்பெண் வெளியான போது தான் வருகிறது. சீனு ஒரு பாடத்தில் மட்டும் தோற்று விட்டான். ஆனாலும் அதே கல்லூரியில் விரிவுரையாளர் வேலைக்கு முயன்றான், துறைத்தலைவரின் பரிந்துரைக் கடிதத்துடன். “சீனிவாசன் மிகத் திறமையானவன். மதிப்பெண்கள் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் மீது எனக்கு தீர்க்கமான நம்பிக்கை உள்ளது. ... வேலை தரவும்” இப்படியாக துறைத்தலைவர் எழுதியிருந்தார். ஸ்ரீதருக்கும் சீனுவுக்கும் ஒரே நேரத்தில் வேலை கிடைத்தது. இதை எழுதும் போது தங்கப்பதக்கத்தை மாட்டியிருந்த என் கழுத்து செயினை கழற்றி கணினி மேசை மீது பவ்யமாக வைத்து விடுகிறேன். நம்புங்கள்.

சீனுவின் தொழில்முறை வாழ்வின் இரண்டாவது கட்டம் இதைவிட சுவாரஸ்யமானது. அதற்கு முன் அரசு விரிவுரையாளர் பணிக்கான தகுதிகள், விரிவுரையாளர் பணிக்கான உழைப்பு, சமூகப் படிமம் பற்றின விபரங்கள் ...

கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு ஒருவர் NET எனப்படும் பரீட்சையில் தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது PhD முடித்திருக்க வேண்டும். இரண்டுமே மிகுந்த உழைப்பை கோருபவை, ஆனால் அறிவை அல்ல. இதில் ஏதாவதொரு தகுதியை பெற்று வரும் ஆங்கில விரிவுரையாளர்களில் பலரும் ஒரு புதிய கவிதையை கூட புரிந்து கொள்ள முடியாமல் மூத்த பேராசிரியர்களிடம் பாடம் கேட்டு அதை வகுப்பில் சென்று ஒப்பிப்பதை பார்த்திருக்கிறேன். ஏன் இந்த நிலைமை? PhD ஆய்வுக்கட்டுரை எழுத ஒருவருக்கு எழுத்துத் திறமையோ சொந்தமான அவதானிப்புகளோ தேவையில்லை. புத்தகங்களில் இருந்து காப்பி அடித்து சற்று மழுங்கடித்து ஒப்பேற்றி விடலாம். காசு கொடுத்தும் எழுதி வாங்கலாம். ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் பண நெருக்கடியின் போது இப்படி ஒருவருக்கு PhD ஆய்வுக்கட்டுரை எழுதித் தந்து பயன்பெற்றதாக என்னிடம் குறிப்பிட்டார். PhD ஆரம்பிக்க ஒப்புதல் பெறுவது சிரமம் என்கிறார்கள். வழிநடத்தும் ஜடாயு பேராசிரியரின் தயவு தேவை. அவரை சமாளிப்பதற்கான நடைமுறை பாடே பெரும் போராட்டமாக இருக்கும் சிலருக்கு. உதாரணமாக என் நண்பர் ஒருவரின் வழிநடத்துநர் காலை 6 மணிக்கு தன்னை சந்திக்க ஒரு மருத்துவமனைக்கு வரச் சொன்னார். நண்பர் சென்று காத்திருப்பு வரிசையில் தன் பேராசிரியருக்காக இடம் பிடித்து 8 மணி வரை காத்திருந்து, அவர் காரில் வந்து இற்ங்கியதும் இடத்தை பத்திரமாக ஒப்படைத்து, இட்லி டீ வாங்கித் தந்து கிளம்பிருக்கிறார். ஒருநாள் ”பங்களூரில் இருந்து சென்னைக்கு உடனே வா” என்றாராம். நண்பர் விமானம் பிடித்து அவசரமாக பிரசன்னமாக அவர் ”நீ ஏன் இப்போது வந்தாய், உன்னை வரவே சொல்லவில்லையே” என்று கதவை சாத்தியிருக்கிறார்.. இதுதான் PhDக்கான நிஜமான உழைப்பு.



NET தேர்வு ஒரு நபரின் தகவல் அறிவையும் ஓரளவு எழுத்துத் திறனையும் சோதிப்பது. ”மில்டன் எத்தனை வயதில் குருடானார்?” “ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டுராட்போர்டு அபான் ஏவனில் உள்ள ஏவன் ஆறா நகரமா?” போன்ற இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் எல்லாம் கேட்பார்கள். இதை விட முக்கியமாய் ஒரு அடிப்படைத் தகுதியை அறிய NET கோட்டை விடுகிறது. குறிப்பாய் கலைத்துறைகளை பொறுத்தமட்டில், விரிவுரையாளர் பணி ஒரு நிகழ்த்து கலை. புத்தகப் புழுக்களை விட பேச்சாளர்களே இப்பணியில் சிறப்பார்கள். நான் படிக்கும் போது செபாஸ்டியன் என்றொரு பேராசிரியர் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் பிரபலமாக இருந்தார். அவன் நுண்வாசிப்பாளரோ தீவிர இலக்கிய ஆர்வலரோ ஒன்றும் கிடையாது. ஆனால் சிறந்த மேடை நடிகர். அவரால் துறையில் உள்ள பல புத்தகவாசிகளை எளிதில் விஞ்ச முடிந்தது. எம்.சி.சியிலும் ஆங்கில மற்றும் தமிழ்த்துறைகளில் கணேஷ், பாலுசாமி போன்ற பேச்சாள பேராசிரியர்களின் வகுப்பையே மாணவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். நம்மில் பலருக்கும் ஒரு கூட்டத்துக்கு முன் சரளமாய் பேச முடியாத படி பல ஆளுமைச்சிக்கல்கள் இருக்கலாம். சிலர் வாழ்வெல்லாம் மோசமான பேச்சாளர்களாகவே இருப்பர். இவர்கள் NET-இல் தேர்வாகி வேலை பெறுவதில் ஒரு பேச்சாளனை முந்தி விட முடியும். இது ஒருவித கட்டாய திருமணம் போல. காலமெல்லாம் அவஸ்தை. இதை விடக் கொடுமை, NET-இல் தேர்வாகும் நபர் மேடை பார்த்தால் உடன் திக்கத் தொடங்குபவராக, விறைத்து நடுங்குபவராக இருந்து விட்டால்? இந்த வேலை புணர்ச்சி போல; மூட் சரியில்லை என்று பாதி உரையில் நிப்பாட்டி எழுந்து போய் டீயடித்து புகை கக்கி திரும்ப வர முடியாது. சரியான NET தேர்வு பெரும்பான்மையாக பேச்சுத் திறனை அளப்பதாக இருக்க வேண்டும். ஏன் இல்லை? ஒரு காரணம் நம் மத்தியில் உள்ள பேராசிரியர் பற்றின அறிவுஜீவி பிம்பம்.




பேராசிரியன் சதா படித்து சிந்தித்து மாணவர்களுடன் பகர்பவன் என்ற சித்திரம் போலியானது. அப்படியான விதிவிலக்கு மண்டை-வீங்கிகளும் கணினி, டீவி போன்ற செயல்-எதிர்ச்செயல் (interactive ) ஊடகங்களின் இந்த யுகத்தில் காலாவதி ஆகி விட்டார்கள். கீழ்ஸ்தாயில் கால்விரல் பார்த்து போதிக்கும் ஆசிரியர்களின் வகுப்பில் இன்றைய மாணவர்கள் இருப்பதில்லை. பேராசிரியர்கள் வெறும் தகவல் தரும் எந்திரங்களாகவும் இந்த காலகட்டத்தில் ஓட்ட முடியாது. அவர்களின் தகவல் மூட்டைகள் இன்றைய தகவல் யுகத்தில் திரௌபதியின் வஸ்திர உரிதல் போல் அபத்தமாகி விட்டது. வகுப்பில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் தகவல்களை அத்தனையும் இணையத் தொடர்புள்ள ஒரு நுண்பேசியை சொடுக்கினால் மாணவனுக்கு ஒரு சில நொடிகளில் கிடைத்து விடுமே? அதற்கு ஒரு கோடை பிரதேச பனிக்கரடியை நம்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. கரடிக்கு 65,000 வரை சம்பளம் கொடுத்து யு.ஜி.சி புஜம் முறுக்கி செய்யும் வேலையை ஒரு நுண்பேசி செய்து விடுகிறதே!




நான் பாளையங்கோட்டையில் வேலைபார்த்த பி.எஸ்.என் கல்லூரியின் சேர்மன் சுயம்புலிங்கம் ஒரு முறை விரிவுரையாளர்க்ளை கூட்டி ஒன்று சொன்னார்: “நீங்கள் ஆசிரியர்களாகவும் மாணவர்கள் உங்களுக்கு கீழும் உள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் மேதாவிகள் என்தால் அல்ல. ஏனென்றால் உங்களை விட விசயஞானம் உள்ள மாணவர்கள் நம் கல்லூரியிலே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு படிப்பிக்க தெரியாது. இதுதான் உங்களை இங்கே அமர வைத்துள்ளது”. இதே சேர்மன் ஒருமுறை துறைகளில் சோம்பிக் கிடந்து அரட்டை அடிக்கும் விரிவுரையாளர்களை பூங்காவில் உள்ள புல்வெட்ட அவர்களை அனுப்பப் போவதாக மிரட்டினார். அப்போது அடக்குமுறையாக பட்டாலும் கல்லூரி ஆசிரியர் பற்றின மேதை படிமத்தை அவர் உடைத்து வந்தது முக்கியமாக படுகிறது.

NET தகுதியின் மற்றொரு அபத்தத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கல்லூரி மேலாண்மை நினைத்தால் NET / PhD இல்லாதவரையும் வேலைக்கு அமர்த்தலாம். கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கான விலை 15 லட்சம் தாண்டி விட்டது.

சீனுவுக்கு வருவோம். அவன் பின்னர் தன் பீஷ்மபிதாவிடம் கோபித்துக் கொண்டு மற்றொரு கல்லூரிக்கு சென்றான். அங்கு அந்தண பேராசிரியர்களின் ஒரு வலுவான வலைத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான். பின்னர் கிறித்துவரான தன் துறைத்தலைவரிடம் மோதல் ஏற்பட இதே தொடர்புகளைக் கொண்டு அவரை நுட்பமாக அவமதித்தான். உதாரணமாக எதிரில் அவனது துறைத்தலைவரும் ஐயரான மற்றொரு துறையின் தலைவரும் பிரதியட்சப்பட்டால் பின்னவரை நமஸ்கரித்து முன்னவரை காணாதது போல் முகம் திருப்புவான். துறைத்தலைவரால் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை; கர்ண கவச குண்டலத்தின் வலு அப்படி. சீனுவுக்கு விரிவுரையாளர் தகுதிகளான NET / PhD இல்லை. ஆனாலும் அவனுக்கு சென்னையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் புலால்-மறுப்பு கல்லூரியில் நிரந்தர அரசு வேலை கிடைத்தது. எப்படி என்கிறீர்களா? ஊழல், கவசகுண்டல்ம் என்று பல காரணங்கள் இருக்கலாம். நம் கவலை அதுவல்ல. சீனு தேர்ந்த முறை எத்தனை எளிதாக, வெற்றிகரமாக, சமூக அங்கீகாரம் கொண்டதாக இருக்கிறது, இதன் முன் நானும், ஸ்ரீதரும் எத்தனை முட்டாள்களாக நிற்கிறோம் என்பதே நாம் இங்கு ஆராய வேண்டிய பாடம்.

சுகீது மேத்தா தன்வரலாறு மும்பை மாநகரின் வரலாறு இரண்டையும் கலந்து Maximum City என்றொரு நூல் எழுதியிருக்கிறார்.



சுகீது பெரும்பாலான இளமையை அமெரிக்காவில் கழித்து விட்டு நூல் எழுதும் நோக்கத்துடன் இந்தியாவில், மும்பையில், வசிக்க குடும்பம் சகிதம் வருகிறார். அரசு எந்திரம் அவருக்கு பலவித நெருக்கடிகள் கொடுக்கிறது. குறிப்பாய், சில சிக்கலான விதிமுறைகளை முன்னிட்டு அவருக்கு சமையல்வாயு இணைப்பு தர மறுக்கிறது. சுகீது நிரப்பின விண்ணப்பங்கள், சான்றுகளுடன் பலமுறை ரேசன் அலுவலகம் சென்று மோதுகிறார். பலன் இல்லை. வெந்நீர் போட்டுக் குடிக்கக் கூட வழியின்றி மொத்த குடும்பமும் தவிக்கிறது. அப்போது சுகிதுவின் அத்தை ஒருவர் உதவிக்கு வருகிறார். அவர் விண்ணப்ப படிவஙகளை தூக்கி கடாசி விட்டு நேரடியாக ரேசன் அலுவலகத்து குமாஸ்தாக்களிடம் முறையிடுகிறார். உடனே அவர்கள் மனம் இளகி, ”கடுமையான” விதிமுறை சிக்கல்களை ஒதுக்கி விட்டு அடுத்த நாளே ரேசன் அட்டை வழங்கி சமையல் வாயு இணைப்புக்கும் வழிவகை செய்கின்றனர். அத்தை சொன்னது இதுதான்: “இவர் வீட்டில் ஒரு பச்சைக் குழந்தை பாலில்லாமல் அழுது தவிக்கிறது; பால் காய்ச்ச கேஸ் வேண்டாமா. நீங்கள் தாய் தந்தையர் தானே, உஙகளுக்கு கருணை உள்ளதல்லவா. ஒரு குழந்தையின் ஜீவனை முன்னிட்டு உதவுங்கள்”. இந்தியாவில் எதுவும் விதிமுறைப்படி நேரடியாக முயன்றால் வேலைக்கு ஆகாது என்று சுகீது புரிந்து கொள்கிறார்.



இப்படியான நிலைமையை நம்மில் பலரும் சந்தித்திருப்போம். இந்தியர்கள் விதிமுறைகள், ஒழுங்குமுறை, காத்திருப்பு வரிசை போன்றவற்றை விட தொடர்புகளையே அதிகம் நம்புகிறார்கள்; பல துறைகளில், தளங்களில் தொடர்புகளின் மூலம் காரியம் சாதிப்பது தான் எளிதானது. இதன் ஒரு உபரி விளைவு தான் லஞ்சம். பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில மூன்றாம் உலக நாடுகளுக்கு போய் வந்துள்ள என் நண்பன் ஒருவன் இது மூன்றாம் உலக நாடுகளுக்கான பொது சமூகவியல் தன்மை என்கிறான். ஆனால் ஒரு நாடு நகரம் நோக்கி வளர்ந்து கலாச்சார உச்சம் அடையும் போது அதன் மக்கள் விதிமுறைகளை, ஒழுக்கத்தை, எந்திரங்களை தீர்மானமாய் நம்ப ஆரம்பிக்கிறார்கள். என் மனைவியின் அமெரிக்க முதலாளி இந்தியா வந்ததும் முதலில் வியந்தது “இந்த போக்குவரத்தில் எப்படி ரோட்டில் செல்கிறார்கள்?” என்றுதான். இந்திய சாலை நம் மாநகர கலாச்சாரத்தின் குறியீடு தான். நம் சாலைகளில், நகரங்களிலும், செல்லுபடியாவது காட்டு விதிகள் தாம். அடுத்த மனிதன் மீதான அபார நம்பிக்கை தான் இந்தியக் குழப்படியில் நம்மை முன் செலுத்துகிறது. எல்லாம் நேர்த்தியாக நடைபெற வேண்டும் என்பதை விட எப்படியாவது உய்ய வேண்டும் என்பதே சமூகத்தின் பொது நோக்கம். இந்த நெரிசல் பந்தயத்தில் ஒருவர் கையை மற்றவர் இறுக்கமாய் பற்றி பயணிக்கிறோம். தலித்துகள், பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோரின் நலன்கள் நசுக்கப்படுவது ஒரு நெரிசல் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாதது. தனிமனித அடையாளத்துக்கு அங்கீகாரம் இல்லை ஆதலால் தனிமனிதத் திறன்களுக்கு இடையிலான நுண்ணிய வித்தியாசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. திறமையும், தகுதியும் இன்றி கூட்டு சேரும் வலுவும், உழைப்பும் கொண்டு இத்தகைய ஒரு சமூகத்தில் ஒருவர் ஆகப்பெரிய இடங்களை எல்லாம் அடைய முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் தேர்வில் தோற்றவர் விரிவுரையாளர் ஆகும் அநியாயம் நடக்காது தான். தலித்துகள், குழந்தைகள், ஊனமுற்றோரை சமூகம் மரியாதையுடன் நடத்தலாம்.

லண்டனில் சிலுவை ராஜ் என்ற பயண நூலில் ராஜ் கௌதமன் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்குமான இந்த கலாச்சார வேறுபாட்டை நுட்பமாக இனம் காண்கிறார். மக்கள் அங்கு மந்திரித்தது போல் விதிகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் அக்கலாச்சாரத்தில் ஒரு எந்திரத் தன்மை உள்ளது. துணையும் சூழலும் அமையப் பெறாதவன் அங்கு கடுமையாக தனிமைப்படுவான். டீக்கடையில், ரயிலில் காத்திருப்பு வரிசையில் பார்ப்பவரிடம் எல்லாம் குடும்ப வரலாறு கதைக்க முடியாது. லண்டனில் “காக்காயை” கூட கண்ணால் பார்க்க முடியாது என்று பகடி செய்கிறார் ராஜ்.

சீனுவுக்கு நிரந்தர வேலை கிடைத்ததில் என் கல்லூரி விரிவுரையாள நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் யாரும் கோபப்பட்டதாக தெரியவில்லை. அதனால் எழுத்தாளனுக்கு ஒழுக்க-அறவுணர்வு கட்டாயம் வேண்டும் என்ற சாரு நிவேதாவின் சொற்படி நான் அவ்விடம் தர்மாவேசப் பட்டேன். அதற்கு ஸ்ரீதரின் பதில்: “சீனுவுக்கு அந்த வேலை கிடைத்தது அநியாயம் தான். ஆனால் அவன் அதற்கு ரொம்ப ஆசைப்பட்டான். அவனது சாதி மக்கள் பொதுவாக உயர்குடியை சேர்ந்தவர்களாக இருப்பதால் சீனுவுக்கு தான் மத்திய வர்க்கமாக இருப்பதில் தாழ்வு மனப்பான்மை உண்டு. சாலையில் ஏதாவது இறக்குமதி கார் போகப் பார்த்தால் நான் எப்போடா இது மாதிரி ஒண்ணு வாங்குறது? என்று ஏங்கி சொல்வான். அவனுக்கு குடும்பம் வேறு இருக்கிறது. அவனுக்கு நல்லது நடந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான் ...” . சிலுவை ராஜுக்கு லண்டனில் காணக் கிடைக்காத காக்கா இந்த மீ-தர்க்க உணர்வு தான். நியாய, ஒழுக்கம் மீறி வெளிப்படும் கருணை எனும், ஆப்பிரிக்க வேட்டை நாய்களிடம் காணப்படும், குழு உணர்வு.
Share This

1 comment :

  1. சாருவின் சுட்டியே.. உங்களை உயிரோசையில் படிக்க் வைத்தது. அது நல்லாயிருந்த்து. அப்புறம் உங்க சைட் போரடித்தது... இந்த பதிவு மீட்டெடுத்து.நன்றி. இது நல்ல பதிவு.

    விரிவாக பின்னர் வருகிறென்.

    remove word verification abilash.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates