Wednesday 25 November 2009

பூனை மற்றும் நவீன மனிதன்: ஒரு வளர்ப்புப் பிராணியின் ஆளுமை



இதைச் எழுதும் போதும் என்னை முறைக்கும் பூனை தனிப்பட்ட ஆளுமை கொண்டது. அவ்வாளுமை மீது தீர்மானமான நம்பிக்கையும். ஆர்.கே நாரயணின் The Musical Cat எனும் கட்டுரையில் ஒரு கானசபா பூனை ஜி.கே பட்டம்மாளின் பாட்டுக்கு மட்டும் மேடையில் வரும். அது அமர்ந்திருப்பது யாருக்கும் தெரியாது. ரொம்ப நாள் கழித்து நாராயணுக்கு தெரிய வருகிறது. பூனைக்கு இசை விருப்பமா என்பதற்கு எந்த ஆய்வுபூர்வ சான்றும் இல்லை. ஆனால் பூனைக்கு மிக சன்னமான ஒலிகளும் பெரிதாக தெளிவாக கேட்கின்றன. குட்டியாக இருக்கையில் எங்கள் பூனை டீ.வியில் ரஹ்மானுடையது போன்று பிரத்யேக ஒலிகள் தனிப்பட்டு துல்லியமாக ஒலிக்கும் இசையை கவனமாக கேட்பதை பார்த்து ஒருவேளை இசை பயிலுமோ என்று சங்கடத்துடன் வியந்திருக்கிறேன். ஆனால் பூனையின் ஆர்வம் இசை ஒழுங்கில் அல்ல தனித்தனி இசை எழுப்பல்களை கவனிப்பதிலே உள்ளது.

சும்மா ஒரு வேடிக்கைக்கு உங்கள் முகத்தின் கண், வாய் மற்றும் மூக்கின் அளவை காதுடன் ஒப்பிடுங்கள். ஏறத்தாழ சமம். ஆனால் பூனையின் காதுகள் அதன் (திறவாத) வாயை விட பெரிது; திசைக்கு ஏற்றாற்போல் உயர்த்த திருப்ப கூர்மைப்படுத்தி கேட்க உகந்தது. பூனை காதை உயர்த்தினால் தீவிர/விழிப்பான/கோபமான மன நிலையில் உள்ளதென்று பொருள். ஒருமுறை என் குறும்பேசியின் திறந்து மூடும் பகுதியை எதேச்சையாக மீண்டும் மீண்டும் திறந்து மூடினேன். பக்கத்து அறையில் ஓய்வு கொண்டிருந்த பூனை திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் அதன் முதுகுப் பகுதியில் ஒரு தசை துடித்து அடங்கியது. நான்கு முறை அவ்வொலியை எழுப்பி சோதித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதே எதிர்வினை. ஆனால் ஐந்தாவது முறை துடிப்பில்லை. இந்த ஒலிக்குறிப்பின் ஒரு வார்ப்பு அதன் நரம்பணுவில் உருவாகி விட்டது. இப்படி ஒவ்வொரு ஓசைத் துணுக்கையும் அது உள்வாங்குகிறது. நோபல் பரிசு வென்ற பிரஞ்சு எழுத்தாளர் லே கிளேசியோ தனது பேட்டி ஒன்றில் எழுத்தாளன் காலத்துடன் எதிர்வினை செய்பவனல்ல; அவன் ஒரு சாட்சி மட்டுமே என்கிறார். பரிணாப் பாதையில் மனித சமூகத்தின் இரு முக்கிய விலங்குகளான நாயும் பூனையும் இவ்வாறு மாறுபட்ட திசைகளில் பிரிந்து சென்றன. நாய் செயல்வீரன்; பூனை சாட்சி. ஒலி மற்றும் வாசனைக் குறிப்புகளை சேகரிப்பதே அதன் வாழ்க்கைப் பணி. எலி பிடிப்பது?




வேட்டை என்பது உணவுத் தேவைக்காகவே. Whiskas போன்ற பதப்படுத்தப்பட்டு அறிவியல் முறைப்படி தயாராகும் உணவு கொறித்து வளரும் ஒரு அபார்ட்மெண்ட் பூனைக்கு எலி குறுக்கிடும் அன்னியன் மட்டுமே. பூனை-எலி விரோதம் பெரும் மானிடக் கற்பனைகளில் ஒன்று. கல்யாணமாகி விட்ட நீங்கள் உங்கள் மச்சினிச்சியை பார்த்து எவ்வளவு உணர்ச்சி வசப்படுவீர்களோ அவ்வாறே பூனையும் எலியிடம் எதிர்வினையாற்றும். எங்கள் கிராமத்தில் மதில்மேல் கோழி சிறகு விரித்தவுடன் பூனை கவர்ந்து போகும். ஆனால் பொரிந்து சில நாட்களே ஆன, சில இஞ்சுகள் நகர மட்டுமே முடிகிற புறாக்குஞ்சுகளை முதன்முறை பார்த்த என் அபார்ட்மெண்ட் பூனை பயத்தில் நாலடி தள்ளி நின்று கொண்டது.

பல்லி, அணில் குஞ்சு போன்றவற்றை பிடிக்கும் வீட்டு பூனை மணிக்கணக்காக விளையாடும், தின்னாது. வேட்டையில் தோற்றாலோ அல்லது இழந்து விட்டாலோ Whiskas பூனை கடுமையான இழப்புணர்வுடன் அலையும். ஏங்கி நீளமாய் கத்தும். அதன் பிடியிலிருந்து பிராணிகளை மீட்டதற்கு என் பூனை ஒரு நாள் முழுக்க மன-அழுத்தம் கொண்டிருந்தது. ஆம் மன-அழுத்தம். மருத்துவ நூலில் உங்களுக்கு தரப்பட்டுள்ள பல மன-அழுத்த அறிகுறிகள் பூனை பொருந்தியது:
• உணவு மற்றும் தண்ணீரில் ஆர்வம் இன்மை.
• தூக்கக் குறைவு
• எளிய அசைவுகளை அல்லது செயல்களை தவறாக கற்பனை பண்ணிக் கொண்டு கலவரப்படுவது …

உங்கள் படுக்கை அறையில் ஒரு அன்னிய லுங்கி தொங்கினால் நீங்கள் கலவரப்படலாம். ஆனால் பூனை தன் அதிகார வரம்புக்குள் காட்சிபூர்வ ஊடுருவலை பொருட்படுத்தாது. என் உடலில் இருந்து புது வாசனை கிளம்பினால் முகர்ந்து பார்த்து சமாதானப்படும். அன்னியர்கள் இரண்டாம் முறை வீட்டுக்கு வர, எட்டத்தில் நின்று முகர்ந்து நினைவுக் கோப்புகளை சரி பார்க்கும். ஆனால் வாசனை மற்றும் ஒலிக் குறிப்புகள் இல்லாத பொருட்களையோ உயிர்களையோ பூனை பொருட்படுத்தாது.

பூனையின் மீசைகள் மீசைகளல்ல. “மீசையில்லாத ஒரு போலீஸ்காரரை உங்களால் கற்பனை பண்ண முடியுமா” என்று மலையாள ஹாஸ்ய நடிகர் இன்னசெண்ட் ஒரு பேட்டியில் கேட்டார். “மீசையில்லா பூனை” எனும் கந்தசாமி பாடல் வரி அதைவிட விகாரமானது. “மூக்கு துண்டிக்கப்பட்ட மச்சானே” என்பது போன்றது. மீசை பூனையின் மூன்றாவது செவி. நம் காதில் விழாத ஒலிக்குறிப்புகள் கூட வரைபடமாக பூனைக்கு தெரிவது விஸ்கர்ஸ் எனப்படும் இந்த மீசை மயிர்களாலே.

“திருட்டுப் பூனை” என்பது மற்றொரு மகாபொய். ரஜினி புவனேஸ்வரி விவகாரத்தில் குறிப்பிட்டது போல் “இரண்டு வேளை சோற்றுக்கு” கூட பூனை திருடுவது இல்லை. அது வேட்டையாடுகிறது. ஓசை எழுப்பாத பம்மலும், நகர்வும், அதிரடி வேகப் பாய்ச்சலும் வேட்டையின் அம்சங்கள். பூனை பொதுவாகவே சந்தடி இரைச்சலை விரும்பாது. தன் அடையாளத்தை எங்கும் விட்டுச் செல்லாமல் ஒரு ரகசிய இடத்தில் எல்லை வகுத்து வாழும் சிறு மாயாவி அது. நாய் குழு-வாழ்க்கையை சார்ந்து பரிணமித்த விலங்கு. அது வாசனை, ஒலி மற்றும் உடல் மொழி மூலம் தன் இருப்பை தொடர்ந்து தன் சகாவுக்கு அறிவித்தபடி உள்ளது. கூட்டு வேட்டைக்கு இந்த இயல்பு மிக உபயோகமானது. நாய் இவ்வாறு கூட்டத்தை நம்பும்போது பூனையை கூட்டுவேட்டை மீது அவநம்பிக்கை கொள்கிறது. அது தனியாக ரகசியமாக உணவு தேடி அடைய விரும்புகிறது. சமையலறையில் திருடும் பூனை குமாஸ்தா வேலை பார்க்க செல்லும் எழுத்தாளனை போலவே பரிதாபத்துக்கு உரியது. குமாஸ்தா பணியைப் போன்றே பூனைக்கு அசைவம் தவிர்த்த பதார்த்தங்கள் பிடிக்காது. பெரும்பாலான மனித உணவுகள் அதற்கு ஒவ்வாதது. புலியையும், எழுத்தாளனையும் போல பூனை பசித்தால் பாலும் குடிக்கும். ஆனால் உண்மையில் பாலை செரிக்கும் திறன் கூட அதற்கு இல்லை. திருட்டுத்தனத்தை போன்றே பூனை பால் குடிக்கும் என்பதும் ஒரு மித்துதான்.

பூனை தனிமைவாதியா?



எழுத்தாளனைப் போன்றே பூனையும் தனிமையை விரும்புவதில்லை; ஆனால் தனிமை இருவருக்கும் தேவைப்படுகிறது. நாய்களைப் போன்று மனிதனும் கூட்டுவேட்டையாளியே. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் ஏழைப் பெண்களை திருமணம் என்ற பெயரில் வட-இந்தியர்கள் கடத்தி செல்வதாய் புகார் எழுந்தது. இந்த பெண்கள் வட-இந்திய குடும்பத்தின் மாடு முதல் மைத்துனர் மாமனார் வரை திருப்தி செய்ய வேண்டும். மணமுடிப்பதற்கு பிற பல தகுதிகளையும் புறமொதிக்கி விட்டு தமிழக ஆண்கள் குடும்பப் பெண்களையே கேட்கிறார்கள். கூட்டுவேட்டை பற்றி சொன்னதற்கு இதுவே தகுந்த உதாரணம். ஆப்பிரிக்க காட்டு நாய்கள் சமூக வேட்டைக்கான தொழில் நேர்த்தி, ஒருங்கிணைவு, திட்டமிடல் திறனை உள்ளுணர்வு ரீதியாய் பெற்றவை. ஒரு ராணுவப் படையை போல் இந்நாய்கள் இரையை முற்றுமையிட்டு உயிருடன் ஆளுக்கொரு பாகமாய் படுவேகத்தில் கவ்வி விழுங்கும். சில நாய்கள் இப்படி கவ்வியதை வாய்க்குள் சேமித்து தன் குடும்பத்து வயோதிகர்கள், குட்டிகள், மற்றும் அவர்களை பேணும் பெண் நாய்களுக்கு கொண்டு வரும். ஆனால் சில சமயம் கூட்டாக வாழ நேரும் பூனைகள் கூட தனித் தனியாகவே வேட்டையாடும். தனியாக வேட்டையாடுபவர்கள் ஒலி, வாசனை போன்ற வாசனைகளை துறக்க வேண்டும். பூனையும் தன் கோடி வருட பயணத்தில் இதையே செய்தது.

பூனைக்கு தண்ணீர் ஒவ்வாது (வங்காளப் பூனை தவிர). நீரென்றால் பத்தடி விலகும். பல பூனைகள் வாழ்நாளில் ஒருமுறை கூட குளித்திராது. ஆனால் நம்மால் முகர்ந்து பார்க்க கூடியவற்றில் வாசமே அற்ற ஒன்றாக பூனை உள்ளது. எப்படி? பெரும்பாலும் அது தூங்கும் முன் தன் சொரசொர நாக்கு மற்றும் டியோடரண்ட் உமிழ்நீர் கொண்டு நக்கி சுத்தம் செய்யும். இப்படியான உறக்க முனைப்பின் போது என் மனைவி பூனையை பற்றி ஆதுரத்துடன் முத்தமிட்டால் அது முடிக்கும் வரை பொறுத்துக் கொள்ளும்; அடுத்து பட்ட இடங்களை நக்கி சிரத்தையாக சுத்தம் செய்யும். பல்ப்! தூங்கும் போது, முக்கியமாய் எதிரிக்கு, எந்த தடயமும் விட்டு வைக்க கூடாதென்று நினைக்கிறது பூனைக்குள் இருக்கும் ஒரு ஆதி விலங்கு. ஏறத்தாழ, நாம் படுப்பதற்கு முன் கதவு சாத்துவது போன்றது இது.



பூனை தனிமைவாதி அல்ல. தனித்த வேட்டையாளி. பன்னெடுங்காலம் முன் எகிப்தியரின் தெய்வமாக விளங்கிய பின் இன்று அமெரிக்காவில் மட்டும் 80,240,000 பூனைகள் வளர்ப்பு பிராணிகளாக உள்ளன. இது நாய்களின் தொகையை விட அதிகம். மேற்சொன்ன இரு காலப்புள்ளிகளுக்கும் இடையே மனிதனின் வரலாற்றில் பூனைக்கு இடமே இல்லை. காரணம், மனிதனுக்கு வேட்டைத் துணையாகும் அனைத்து குணங்களும் நாய் பெற்றிருந்ததே. மனிதனுக்கு சேவகம் செய்ய தலைப்படாத பூனை அங்கீகரிக்கப் படாததன் காரணம் அப்பா / கணவனால் பேண்ட் சட்டை அணிய அனுமதிக்கப்படாத ஒவ்வொரு சமகால பெண்ணுக்கும் புரியும். அதன் சுயசார்பு, சற்றே அதிகபிரசிங்கித்தனமான சுயநலம், குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக செயலாற்றும் பொறுப்பு இல்லாமை, தனிமைவாதம் ஆகியன், மீண்டும் ஒரு எழுத்தாளனைப் போன்று, பூனையை சமூகத்தின் பொருந்தாக் கண்ணி ஆக்கியது. பல இணைத்தேர்வு நிபுணர்களால் நிராகரிகச் செய்தது. பிறகு எந்திரமயமாக்கல் எழுத்தாளனுக்கும், பூனைக்கும் நாகரிக சமூகத்தில் ஒரு தனித்த வெளியை எற்படுத்தி தந்தது. பன்னெடுங்காலமாக தனித்திறன் மற்றும் இயல்புகள் தேர்ந்தெடுத்து இணை சேர்க்கப்பட்டு லாப்ரடார் போன்று் நூற்றுக்கணக்கான மனிதக் கட்டளைகளை பின்பற்றும் நாய் இனங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. ஆனால் பூனை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இதனால் இன்னமும் அது பாதி காட்டுவிலங்காக உள்ளது. வளர்ப்பு விலங்குகளின் வரிசையில் பூனை இரண்டாம் இடத்தில் உள்ளதற்கு இது முக்கிய காரணம்.
பூனையை பயிற்றுவிக்க முடியுமா? பூனைக்கு குறுகிய நேரத்துக்கு மேல் எதிலும் கவனம் தங்காது. அந்நேரத்துக்கு மட்டும், ஒரு எழுத்தாளனை போல், தன் முழுஆற்றலையும் ஆவேசமாய் வெளிப்படுத்தி ஓயும். பின்னர் படுத்தபடி பிரபஞ்சத்தை கவனிக்க தொடங்கி விடும். ஒரு திட்டவட்டமான நிரலுக்குள் நீடித்து செயல்படும் மனிதர்களுடன் ஈடு கொடுக்க நாயால் மட்டுமே முடியும். ஆனால் இக்குறை கடந்து வர பூனையால் முடிகிறது. அதனால் மிக நுட்பமாக மனிதனுடன் உரையாட முடியும்.
பல்வேறு உணர்வு நிலைகளை அல்லது தேவைகளை வெளிப்படுத்தும் குரல் லாவகம் பூனைக்கு உண்டு. ”அவள் க்ளுக் என்று சிரித்தாள்” என்பதில் உள்ள உண்மையின் அளவே “பூனை மீயாவ் என்றது” என்பதிலும் உள்ளது. “க்ளுகும்” “மீயாவும்” வசதி கருதியே. பல்வேறுபட்ட ஒலிவடிவங்களின் கூட்டு மேம்போக்கு சொல்லே “மீயாவ்”. அதை ஒரு மனிதச் சொல்லாகவே அகராதியில் ஏற்றி விடலாம். பூனை மொழியில் உள்ள ஏகப்பட்ட நுட்பங்களை வருடக்கணக்கில் பக்கத்தில் இருந்து கவனித்தாலே விளங்கும். அப்போதும் கூட புதிதாக ஒரு குரல் கொடுக்கும் முறையை அல்லது தொனியை வெளிப்படுத்தி அது நம்மை ஆச்சரியப்படுத்தும். பூனையால் நான்கைந்து மனநிலைகள் அல்லது உணர்வுகளை அடுக்கடுக்காக வேகமாய் தன் பேச்சில் காட்ட முடியும். இது ஒரு அசாதாரண திறன். மனிதர்களுக்கு உணர்ச்சி மாற்றங்களை கூர்மையாக வெளிக்காட்ட அபாரமான மொழித் திறன் மற்றும் உடல்மொழி அவசியம். அப்படியும் நம்மால் பேசும் போது தோன்றும் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தையும் எளிதில் வெளிப்படுத்த முடிவதில்லை. அதற்கு முன் எதிர்தரப்பாளர் உரையாடலில் அடுத்த படிக்கு தாவி சென்று விடுவார். ஆனால் ஒரு பூனையுடன் உரையாடும் போது நாம் சுதாரிக்கும் முன்னரே அது பணிவான வேண்டுகோள், ஏக்கம், ஏமாற்றம், கோபம், கண்டனம், மீண்டும் பணிவு என ஒரு சுற்று விசயங்களை படுவேகமாய் சொல்லி விடுகிறது. வேகத்தடத்தில் நம்மை பேசித் தோற்கடிக்க குழந்தைகளுக்கு அடுத்த படியாய் பூனை. காட்டில் வாழும் பூனைகள் அரிதாகவே குரல் எழுப்பும். அவை பெரும்பாலும் மௌனிகளே. மனிதனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகு அவனோடு உரையாடவே அது ஒரு அந்தரங்க மொழியை பயின்றுள்ளது.
கூட்டு வாழ்வில் இருந்து, அதன் தொடுபுலன் அன்னியோன்யத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமாய் விலகி வரும் மனிதனின் பண்புக்கூறுகள் சிலவற்றை பூனையில் காணலாம்.



அதனாலே எம்.டி வாசுதேவன் நாயர், அசோகமித்திரன் போன்ற நவீனத்துவ கதையாளர்களின் பிரதிகளில் பூனை மனிதனின் குறியீடாக வருகிறது.



பூமா ஈஸ்வரமூர்த்தியின் ”ஒரு பூனை” கவிதையும் குறிப்பிடத்தக்கது. நவீன மனிதனும் பூனையும் சந்தித்துள்ள புள்ளி முக்கியமானது. பூனையை நவீன மனிதன் வளர்க்க அவன் இணைந்துள்ள சமூக/பொருளாதார/அரசியல் அமைப்பு அவனை வளர்க்கிறது. இருவருமே தம்மை வளர்ப்புப் பிராணியாய் கருதுவதில்லை. இருவருமே பாதி நவீனர்கள்; பாதி வனவிலங்குகள். தப்பிக்க வழிவகையற்ற நெருக்கடி வெளியில் இருவரையும் தனியாக சந்திக்காமல் இருப்பது நன்று.

பூனை புகைப்படங்கள்: ஆர்.காயத்ரி தேவி
மேலும் பார்க்க: http://www.flickr.com/photos/mindspeephole/
Share This

2 comments :

  1. :) :)
    :) :)

    இவைகள் ஸ்மைலிகள் இல்லை. எல்லாம் பூனைக்குட்டிகளே

    ReplyDelete
  2. இப்படி பூனை<==>மனிதன் என ஒப்புமை நோக்கில் என்றும் சிந்தித்ததில்லை. திகைக்க வைக்கும் நல்ல அவதானிப்பு/பதிவு...

    இனி பூனை தொடர்பான படிமங்களை கவிதை/கதைகளில் வாசிக்க நேர்ந்தால், என் புரிதல் இன்னும் அதிகமாகும்... நன்றிகள் அபிலாஷ்!!!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates