Monday 15 February 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 12



என் குழந்தைப் பருவத்திலும் கூட சிறு நகரங்களை ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எளிதாக இருந்ததில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு சௌந்தரிய அமைதி ததும்பும் பெயர்களை --- துகாரின்கா, குவாமச்சிட்டேசு, நிர்லாண்டியா, குவாகாமயால் -- ஏந்திய பலகைகள் ரயில்நிலைய வராந்தாக்களில் வீழ்ந்து கிடக்க, அவை நினைவிலுள்ளதைக் காட்டிலும் அதிகமாய் தனிமைப்பட்டு விட, இது, மேலும் சிரமமாகி விட்டது.
ஏறத்தாழ காலை 11:30 மணிக்கு ரயில் செவில்லகாவில் தண்ணீர் பிடிக்கவும், இயக்குப்பொறி மாற்றவும் 15 நிமிடங்கள் முடிவற்று நின்றது. அப்போதுதான் வெக்கை அதிகமாகியது. வண்டி நகர ஆரம்பித்த போது, புதிய இயக்குப்பொறி தொடர்ச்சியாய் வெடித்துக் கக்கிய கரிப்புகை, கதவற்ற ஜன்னல்கள் வழி புகுந்து எங்களை கரும்பனியில் மூடியது. பாதிரியாரும், பெண்ணும் ஏதோ தெருவில் எங்களுக்குத் தெரியாமல் ஏற்கனவே இறங்கி விட்டிருந்தனர். எனக்கும் அம்மாவுக்கும் நாங்கள் ஒரு பேய் ரயிலில் பயணிப்பதான உணர்வை இது தீவிரப்படுத்தியது. எனக்கெதிரே அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே நோக்கியவாறு அவள் இரண்டு மூன்று தடவை குட்டித்தூக்கம் போட்டாள். ஆனால் நன்கு விழிப்பு தட்டியபின், மீண்டும் அந்தப் பயங்கர கேள்வியை கேட்டாள், "சரி நான் உன் அப்பாவுக்கு என்ன சொல்ல?"

என் முடிவை தகர்ப்பதற்கு வாகான இடத்தை கண்டுபிடிப்பதற்கான தேடலை அவள் ஒருபோதும் கைவிட மாட்டாள் என்று தோன்றியது. இதற்கு முன் அவள் முன்வைத்த சில சமரசங்களை எடுத்த எடுப்பிலே நிராகரித்து விட்டிருந்தேன். அவளது பின்வாங்கல்கள் ரொம்ப நேரம் நீடிக்காது என்று எனக்கு தெரிந்தது. இருந்தும் இந்த புதுத்தாக்குதல் எனக்கு அதிர்ச்சி தந்தது. இதற்கு முன்னால் இல்லாத அதிக நிதானத்துடன், மற்றொரு நீண்ட பயனற்ற மோதலுக்கான தயார் நிலையில் பதிலுரைத்தேன்.

"என் வாழ்க்கையில் நான் ஆசைப்படுவதெல்லாம் எழுத்தாளனாக வேண்டும் என்பதே. அதுதான் நடக்கப் போகிறது என்று அவருக்கு சொல்லுங்கள்"

"அவர் உன் விருப்பத்திற்கு எதிரானவரல்ல", அவள் சொன்னாள், "நீ எதிலாவது பட்டம் வாங்கும் வரை"

என்னைப் பார்க்காமலே பேசினாள், ஜன்னலுக்கு வெளியே நிகழும் வாழ்க்கையில் இருப்பதை விட மிகக்குறைவான ஆர்வமே எங்கள் உரையாடலில் அவள் கொண்டிருப்பது போன்ற பாசாங்குடன்.

" நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று மிக நன்றாய் தெரிந்திருந்தும் ஏன் இவ்வளவு வற்புறுத்துகிறாய் தெரியவில்லை", நான் அவளிடம் சொன்னேன்.

ஆர்வம் தூண்டப்பட்டது போல், அவள் என் கண்களை நோக்கி கேட்டாள், "எனக்கு தெரியும் என்று ஏன் நம்புகிறாய்"

"ஏனென்றால் நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி அல்லவா"
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates