Monday 22 February 2010

தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்



ஆந்திரா, கேரளா, மும்பை என்று சமீபத்தில் வந்துள்ள செய்திகள் நேரடி வன்முறை, அவதூறுகள், சர்ச்சைகள் என நமது சகிப்பு மனப்பான்மையின் மற்றோரு பக்கத்தை காட்டுகின்றன. இவ்வளவு ரிங்காரத்தையும் ஒரு அரசியல் மற்றும் ஊடக சுருதி மீட்டலாகவும் காணலாம். கிரிக்கெட்டிலும் இதன் எதிரொளி காணப்படுகிறது. குறிப்பாக கிருஷ் ஸ்ரீகாந்துக்கு எதிராக அன்ஷுமன் கெய்க்வர்டு, வெங்க்சார்க்கர் உள்ளிட்ட பல முன்னாள் உபநட்சத்திரங்கள் அணி திரண்டுள்ளார்கள். ஸ்ரீகாந்தின் தேர்வுகளான கார்த்திக், பத்ரி, ஸ்ரீசாந்த் ஆகியோர் இவர்களின் தாக்குதல் இலக்குகள். இதற்கு காரணம் மிக அதிகமாக ஓட்டங்கள் எடுத்துள்ள ஜாபர், பார்த்திவ் போன்ற மும்பைக்கர்கள் மற்றும் குஜராத்திகள் புறக்கணிக்கப்பட்டு ஒரு மாறுதலாக தென்னிந்தியர்கள் முக்கியத்துவம் பெறுவதே. இதன் ஒரு விபரீத உச்சமாக சீக்காவின் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெற்றுள்ள டெஸ்ட் வெற்றியின் முக்கியத்துவத்தை முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன்
கெயிக்வெர்ட் ஒரேயடியாக மறுத்துள்ளதை சொல்லலாம்.

இரு பாரம்பரியங்கள்

கடந்து சில ஆண்டுகளாக இந்திய உள்ளூர் வட்டத்தில்
வலுவான அணிகள் மும்பை, தில்லி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா. மும்பையும் கர்நாடகாவும் வரலாற்று ரீதியாகவே வலுவான பந்துவீச்சை கொண்டவை. தமிழ்நாடு மற்றும் தில்லி வலுவான மட்டையாட்ட அணிகள். மேலும் குறிப்பாக தென்னாட்டு மட்டையாளர்கள் மரபார்ந்த பாணியினர், பொறுமைசாலிகள். கடந்து பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய டெஸ்டு அணியில் நிலைத்தாடி வலு சேர்த்தவர்கள் டிராவிட், லக்‌ஷ்மண், கும்பிளே உள்ளிட்டவர்களே. இவர்கள் சம்பிரதாய ஆட்டமுறை கொண்டவர்கள், கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை ஆதாரமாக நம்பி செயல்பட்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். இந்திய அணியின் எண்ணற்ற வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் இவர்களே. நேர்மாறாக சச்சின், கங்குலி, சேவாக், யுவ்ராஜ் போன்ற வட, மேற்கு, மற்றும் கிழக்கு மண்டல அணி வீரர்கள் தங்கள் துலக்கமான பார்வை மற்றும் அதிவேகக் கரங்களின் ஒருங்கிணைவு மற்றும் உடல் சமநிலையை நம்பி ஆடும் நவீன மட்டையாளர்கள். இந்த இருதரப்பட்ட ஆட்டப்போக்குகளின் ஒருங்கிணைவு இந்தியாவை ஒரு அபாரமான மட்டையாட்ட அணியாக உலகளவில் இன்று வரை நிறுவி உள்ளது. திராவிட் மற்றும் லக்‌ஷ்மண் விலகினவுடன் நமது மட்டையாட்ட ஏணி நடுங்குகிறது. பெரும் தோல்வியை நம் அணி சந்திக்கிறது. இந்த தொடர்ச்சியை நிறுவ மற்றொரு உதாரணம் தரலாம்.
முதல் தெ.ஆ-இந்தியா டெஸ்டில் விஜய் மணிக்கட்டு சுழற்றி ஆடுவது பார்த்து "அட இது லக்‌ஷ்மணே அல்லவா" என்றார் வர்ணனையாளர் கலினன். லக்‌ஷ்மண் வந்த புதிதில் அவரது ஹைதராபாத் முன்னோடியான அசருதீனை தொடர்ந்து நினைவூட்டியபடி இருந்தார். தெண்டுல்கர் அல்லது சேவாக் அணியில் இருந்து விலகின ஆட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்ட மட்டையாளர்கள் அவர்களின் அதே பாணியை சேர்ந்த அதே மண்ணின் மைந்தர்கள்: ரோஹித் சர்மா மற்றும் விராத் கோலி. இருவரும் தங்கள் முன்னோடிகளை ஒரு நுண்ணிய அளவில் நினைவூட்டி இந்திவாலாக்களை மயிர்க்கூச்செறிய வைக்கிறார்கள்.
உள்ளூர் அணிகளை பொறுத்த மட்டிலும் தில்லி, மும்பை, பஞ்சாப், வங்காள அணிகளின் மட்டையாளர்கள் ஆவேசமாக ஆட விரும்புபவர்களாகவே இருந்து வருகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, ஹைத்ராபாத், கர்நாடகா அணியின் மட்டையாளர்களில் மிக சமீபத்தில் தான் சற்று ஆக்ரோசமாக ரன் குவிப்பவர்கள் தோன்றியுள்ளார்கள்.: அபினவ் முகுந்த, கார்த்திக், கவுதம் ஆகியோர். ஆவேசமாய் ஆடினாலும் இவர்கள் கூட விட தங்கள் முன்னோடிகளின் லட்சுமணக்கோட்டை தாண்டி ஒரு அடி கூட வைத்தவர்கள்; சற்று துடுக்கான சம்பிரதாய வீரர்கள். தென்னக அணிகளில் கலகத்தன்மை ஒரே மட்டையாளன் கர்நாடகாவின் மனீஷ் பாண்டே. சுவாரஸ்யமாக, அவர் உத்தராஞ்சலை சேர்ந்த ஒரு வட-இந்தியர்.

ஸ்ரீகாந்தின் மீதான குற்றச்சாட்டு



இந்த பின்புலத்தில் இருந்து மீள்நோக்கும் போது கடந்த பதினைந்து வருடங்களில் தென்னக வீரர்கள் உள்ளூர் ஆட்டங்களில் நிலைத்து ஓட்டங்கள் குவித்தும் மிகக் குறைவான சர்வதேச வாய்ப்பைப் பெற்றுள்ளதை பார்க்கலாம். குறிப்பாக தமிழக வீரர்களில் 1981-இல் ஸ்ரீகாந்த் டெஸ்ட் நிரந்தர இடம் பெற்ற பின்னர் மற்றொரு தமிழரான விஜய்க்கு ஒருமித்த அங்கீகாரம் கிடைக்க 29 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. இதற்கு இடையில் ஷரத், ரோபின், பதானி, ஸ்ரீராம், ரமேஷ் உள்ளிட்ட பல திறமைசாலிகளின் ஆட்டவாழ்வு இருட்டடிக்கப்பட்டது. குறிப்பாக டெண்டுல்கர் தலைமையின் கீழ் நடுத்தர ஆட்டக்காரர்கள் பலரும் முயன்று பார்க்கப்பட்ட போது தமிழகம் அறவே புறக்கணிப்பட்டது. பின்னர் கங்குலி காலகட்டத்தில் தென்னிந்தியர்கள் அணியின் முதுகெலும்பாக இருந்த போதிலும் அவர் தெற்கை ஒழித்துக் கட்டுவதில் தீவிரமாக இருந்தார். நன்றாக ஆடி வந்த குமரனுக்கு வங்கதேசத்தில் பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் இறுதி ஓவர் வீசக் கொடுத்து திட்டமிட்டு வெளிப்படையாகவே அவரது எதிர்காலத்தை சிதைத்தார். பின்னர் முரளி கார்த்திக், ஜோஷி, கும்பிளே என்று கங்குலியின் தெற்கத்திய விரோதம் நீண்டது. இந்த புறக்கணிப்புக்கு எதிராக தன்னை நிரூபித்துக் காட்டவே கும்பிளே மேற்கிந்திய தீவுகள் தொடரின் போது முறிந்த மோவாயில் கட்டுடன் பந்து வீசிய வதையும் நிகழந்தது. அதே நேரத்தில் கண் தெரியாத கரீம், மட்டையாட வராத சமீர் திகே, கால்வாசி திறமையாளர்கள் சஞ்சய் பங்கர், ஆகாஷ் சோப்ரா போன்றவர்களுக்கு கூட வாய்ப்புகள் ஏராளம் வழங்கப்பட்டன. ஸ்ரீகாந்த தேர்வுக்குழு தலைவரானதும் அவசரமாக பல தென்னக வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். விளைவாக இந்தி ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் அவரது தென்மண்டல சாய்வு மீது தொடர்ச்சியாக பல கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள்.

யார் கோமாளி?



கடந்த பத்து வருடங்களில் தனது சமநிலையற்ற பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பெரும் கோமாளித்தனங்களைம் செய்துள்ளவர் யாரென்றால் அது ஹர்பஜன் தான். ஆண்டுரூ சைமண்ட்ஸை இனரீதீயாக தாக்கியது தொடங்கி ஸ்ரீகாந்தை அறைந்தது வரை ஹர்பஜன் தனது அணி மற்றும் நாட்டுக்கு ஏற்படுத்திய மானக்கேடுகள் பல. இவரையும் மற்றொரு வட-இந்திய ஆவேச வீரரான காம்பிரையும் எதிரணியினர் மனவியல் ரீதியாக சீண்டி எளிதில் வம்புகளில் மாட்டி விட்டுள்ளனர். சொல்லப்போனால் கடந்த பத்து வருடங்களில் இவர்களைப் போன்று நேரடியான வன்முறை நடவடிக்கைகளுக்காக வேறெந்த நாட்டு வீரர்களும் சர்ச்சைகளில் மாட்டியதில்லை. ஆனால் நமது இந்தி ஊடகங்கள் இந்த உணர்ச்சி கொழுந்துகளை பெரும் பாசத்துடனே சித்தரித்து வந்துள்ளன. குறிப்பாக ஹர்பஜன் சைமண்ட்ஸை குரங்கு என்ற போதோ காம்பிர் ஜான்சனின் தோளை வேண்டுமென்றே மோதிய போதோ இந்தி ஊடகங்கள் எவற்றுக்கும் நெற்றிக்கண் திறக்கவில்லை.
ஆனால் எதிர் நிலைப்பாத்திரம் மற்றும் நிரந்தர கோமாளிக்கான கிரீடம் என்றும் கேரள வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கே தரப்படுகிறது. ஹர்பஜனின் ஆவேச துள்ளல்களை ரசிக்கும் ஊடகங்களுக்கு ஸ்ரீசாந்த் இதில் கால்வாசி நாடகீயம் வெளிப்படுத்தினால் மிகையாக படுகிறது. மேலும் Rediff, Cricinfo போன்ற இணையதளங்களில் இந்திக்காரர்கள் இடும் பின்னூட்டங்களில் ஸ்ரீசாந்த் மீது பெரும் வெறுப்பு அலை உருவாகி உள்ளதை காண முடிகிறது. இதே மொழி மற்றும் பிராந்திய காழ்ப்பு தினேஷ் கார்த்திக் மீதும் உமிழப்படுகிறது.
தினேஷ் vs பார்த்திவ்



வங்கதேசம் மற்றும் தெ.ஆ தொடர்களில் பார்த்திவ் படேலுக்கு பதில் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட சமீபத்திய சர்ச்சைகளில் கொதிநிலை உயர்ந்தது. மேற்கத்தியர்களை இத்தேர்வு மிக கடுப்பேற்றி உள்ளது. வங்கதேச தொடரில் முதல் டெஸ்டில் கார்த்திக் மோசமாக கீப்பிங் செய்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து கார்த்திக் குறித்த ஒரு எதிர்மறையான சித்திரம் உருவாக்கப்பட்டது. பார்த்திவ் மேலான மட்டையாளர் என்று நிபுணர்கள் வாதித்தனர். ஆனால் இருவரது சாதனைப்பட்டியலை ஒப்பிடுவதை அவர்கள் தந்திரமாக தவிர்த்தனர். உள்ளூர் மற்றும் சர்வதேச ஆட்டங்களில் இருவரது மட்டையாட்ட சராசரி ஏறத்தாழ ஒன்றுதான். ஆனால் தினேஷ் அதிக அளவில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி உள்ளார். குறிப்பாக இங்கிலாந்து பயணத்தின் போது கார்த்திக் துவக்க ஆட்டக்காரராக ஒரு மிக முக்கியமான பங்காற்றினார். ஒரு நாள் ஆட்டங்களை பொறுத்த மட்டில் தினேஷின் சராசரி 27; பார்த்திவுக்கோ 14. இதுவரை பார்த்திவ் சர்வதேச அளவில் ஒரு நூறு கூட அடித்ததில்லை. கடந்த இலங்கை பயணத்தின் போது பார்த்திவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சொற்ப ஓட்டங்களே சேர்த்தார். இதையும் ஊடக நிபுணர்கள் எளிதாக மறந்து விட்டனர்.
தமிழக கிரிக்கெட்டின் மீது விழுந்துள்ளது அணைவதற்கு முன்பான விளக்கின் வெளிச்சம் தான். ஸ்ரீகாந்தின் கெடு முடிந்ததும் இருண்ட யுகம் திரும்பி விடும்.
Share This

12 comments :

  1. கவனம் அபிலாஷ்...

    ஆரிய, திராவிட..
    சைவ அசைவ...
    வெள்ளை கறுப்பு...

    பிரச்சினைகளில் உறிவரும் வலைபதிவாளகள் தாக்கதல் சீக்கிரம் கிடைக்கலாம்.... வலைபதிவில் தன் கருத்தை கூட இதுபோல வெளிப்படையாக சொல்லமுடியாது..

    நல்ல எழுத்து நடை....

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள். கடைசி அணி வீரர்களின் விக்கெட்டை மட்டும் சாய்த்து விட்டு, ஹர்பஜன் ஆடும் அனாகரிக ஆட்டங்கள் யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சும் கேவலமாகத்தான் உள்ளது. வீணாக டென்சன் ஆகின்றார். கார்த்திக்,முரளி விஜய்,பத்திரினாத் போன்றோர் தங்களின் தேர்வை நியாயப் படுத்தியுள்ளனர். அன்ஸ்மென் கொய்க்வாட் இது போல அடிக்கடி எதாவது சொல்லி,தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வார்.இது எல்லாம் கவாஸ்கர் காலத்தில் இருந்து நடப்பது. நன்றி.

    ReplyDelete
  3. ஹர்பஜனுடைய சாதனைகளுக்கு முன் அவருடைய வாய் துடுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை! ஏனென்றால் ஹர்பஜன் நிரந்தரமாக அணியில் இடம் பிடித்த காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா உச்சத்தில் இருந்த காலம்.ஸ்லேடர், ஹெய்டன், ஸ்டீவ் வா மெக்ராத் என்று ஸ்லெட்ஜிங் மாஸ்டர்கள் விளையாடிக்கொண்டிருந்த காலம்.

    யோசித்துப் பாருங்கள்..அந்த வலிமையான அணியையே நம்மவர்கள் ஸ்லெட்ஜிங் செய்தது ஹர்பஜன் பந்து வீசிய பொழுதுதான்,,,( ஆஸ்திரேலியாவுக்கெதிரான கலகத்தா டெஸ்ட்-லக்ஷ்மணும் டிராவிட்டும் ஃபாலோ ஆனிலிருந்து மீளச்செய்து ஹர்பஜன் கடைசி நாளில் எல்லா விக்கெட்டையும் கழட்டினாரே..). இவரையும் சித்துவையும் ஒரே தட்டில் வைத்துதான் எல்லாரும் பார்ப்பார்கள்.. அசட்டு தனமான கோபம் கொண்ட சம்பிரதாய சீக்கியர்களாகவே மீடியாவும் மக்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஷ்ரீ சாந்த் கதை அப்படியல்ல... பெரிதாக எந்த ஒரு போட்டிக்கும் மேட்ச் வின்னராக இல்லாமல் டான்ஸ் ஆடுவதும் கோமாளித்தனங்கள் செய்வதும் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது! ஹர்பஜன் எதற்காக ஷ்ரீ சாந்தை அறைந்தார் என்பது பற்றி யாரும் குறிப்பிடுவது இல்லை.. அந்த குறிப்பிட்ட மேட்சில் பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டு ஷ்ரீ சாந்த் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல...
    தவிர ஷ்ரீ சாந்தின் உடல்மொழி சமயங்களில் அருவருப்பாக இருக்கும்! ஏன் கேரளாவிலேயே அபிஷேக் நாயருக்கு இருக்கும் மதிப்பு ஷ்ரீ சாந்திற்கு இருக்குமா என்பது சந்தேகமே!

    மற்றபடி குண்டப்பா விஸ்வநாத் தேர்வுக்குழுவில் இருந்த போது ஆறு கர்நாடகா வீரர்கள் விளையாடியதையும் மறக்கமுடியாது!

    அபிலாஷ்! நம்மவர்களிடமும் சிறு குறை இருக்கிறது! லார்ட்ஸில் டெஸ்ட் ஆடினால் போதும் என்றுதான் கனவு காண்கிறார்களே தவிர அதே லார்ட்ஸில் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று கனவு காண்பதில்லை! முன்னவர்கள் சடகோபன் ரமேஷ்களாகிறார்கள்! பின்னவர்கள் டெண்டுல்கர்களாகிறார்கள்!

    உங்கள் கட்டுரை அருமை!

    ReplyDelete
  4. நன்றி வெட்டுக்கத்தி மற்றும் பித்தன் அவர்களே!

    ReplyDelete
  5. நன்றி வெட்டுக்கத்தி மற்றும் பித்தன் அவர்களே!

    ReplyDelete
  6. வெட்டுக்கத்திக்கு,
    எனக்கு வந்துள்ள மிகச்சிறந்த எதிர்வினைகளில் ஒன்று உங்களது. நன்றி. ரமேஷ் போன்றோரின் வீழ்ச்சிக்கு நாம் அத்தனை எளிதாக காரணம் காட்ட முடியாது. வெற்றிகள் ஒரு வைரஸ் போல் தோன்றி பல்கி பரவுவது. அல்லது தீ போன்று எனலாம். ஊடகம் இல்லாமல் தீயோ வைரஸோ எப்படி பரவும் சொல்லுங்கள். ரமேஷ் சச்சின் வகையறா அல்ல என்றாலும் ரெய்னா, பதான், ரோஹித் போன்றோருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல. T20 ஒரு 10 வருடங்கள் பின்னர் தோன்றியிருந்தால் இவர்கள் அணியில் இடம் பெறுவது லார்ட்ஸ் கனவாக மட்டுமே இருந்திருக்கும்.

    ReplyDelete
  7. வெட்டுக்கத்தியா ரெட்டைவால்ஸா தலைவரே...(ஒன்னுமில்லை வெட்டுக்கத்தி மன்னிக்க.... பதில் எனக்கா அவருக்கா என்ற குழப்பமே?)

    ReplyDelete
  8. மன்னிக்கவும் அந்த பதில் ரெட்டைவால்ஸுக்கு!

    ReplyDelete
  9. மன்னிக்கவும் அந்த பதில் ரெட்டைவால்ஸுக்கு!

    ReplyDelete
  10. அபிலாஷ்! ரமேஷ் சிறந்த ஆட்டக்காரர் என்றாலும் ரெய்னா ரோஹித் போல தன் தவறை திருத்திக்கொள்ள அவர் முயன்றதே இல்லை.அவருடைய ஃபுட் வொர்க்கை திருத்திக் கொள்ளும்படி சொல்லாத கமெண்டேட்டர்களே இல்லை. மற்றபடி குமரன்,பத்ரி,ராபின் சிங் , எல்லாருக்கும் நீங்கள் சொன்னபடி வாய்ப்புகள் குறைவு என்பதை மறுக்க முடியாது.

    அணியில் நிரந்தர இடம் என்பது மேட்ச் வின்னர்களுக்கே உரியது! (சச்சின்,சேவாக்,யுவராஜ்,ஸாகிர் கான்) ஆனால் இன்னொரு சோகம் என்னவென்றால் இந்திய அணியில் தூக்கினால் தமிழ்நாடு அணியிலும் தூக்கிவிடுவார்கள்.அப்புறம் எங்கே திரும்ப அணியில் இடம் பிடிப்பது? நாமாவர்களில் சில பேருக்காவது இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது..வங்காளம் நீங்கலாக வடகிழக்கு மாநிலங்களில் யாராவது இடம் பிடித்திருக்கிறார்களா? அமோல் மஜூம்தார் போன்ற மும்பைக்காரர்கள் கடைசி வரை இடம்பிடிக்கவே இல்லையே..அதை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  11. ரமேஷ் தனது தொழில் நுட்பம் காரணமாக வெளியேறவில்லை. அவருக்கும் ஒரு தேர்வாளருக்கும் மோதல். அது தான காரணம். அப்போது கூட அவரது டெஸ்ட் சராசரி 37. அடுத்து, இன்றைய சிறந்த மட்டையாளர்கள் ஒன்றும் சிறந்த footwork கொண்டவர்கள் அல்ல. இந்திய அணித்தலைவரே வாத்து போல் தாவி அல்லவா முன்காலில் பந்தை சந்திக்கிறார். கிறிஸ் கெய்ல், சந்தர்பால் ஏன் லாராவின் footwork கூட குறையானதுதான். இத்தனை வருடங்களுக்கு பின் ஸ்மித் மற்றும் பாண்டிங் போன்றோரின் தொழில்நுட்ப பலவீனங்களை கண்டுபிடித்து விட்டதாக பேசுகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் இது சிறு விசயமே. தொழில்நுட்பத்தை விட பந்தை கணித்து எதிர்கொள்ளும் திறனே முக்கியம். கடந்த பத்து வருடங்களின் நட்சத்திரங்கள் இத்தகையவர்களே. இதனால் தான் கவாஸ்கர் ரமேஷின் பெரும் ஆதரவாளராக இருந்தார். ஆனால் இந்திய குமாஸ்தா மனநிலை தொழில்நுட்பம், கச்சிதம் போன்ற சம்பிரதாயங்களுக்கு தேவையற்ற மதிப்பு தருவதாக இருப்பதே இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates