Thursday 11 February 2010

உள்ளுறை துக்கம்: தமிழ்நதியின் தன்னிலைக் கட்டுரைகள்

தாமரை இதழில் வலைப்பூக்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். இது இரண்டாவது கட்டுரை. தமிழ்நதியின் வலைப்பூ இளவேனில் விவாதிக்கப்படுகிறது.

”சூரியன் தனித்தலையும் பகல்” தொகுப்பு மூலம் புலம்பெயர் கவிஞராக பெரிதும் அறியப்பட்டாலும் தமிழ்நதியின் உரைதான் விசேசமானது. அவரது சிறந்த கட்டுரைகள் தன்னிலை ஆனவை. இவரது வலைப்பூ இளவேனில். முகவரி: http://tamilnathy.blogspot.com/

தமிழும் தன்னிலைக் கட்டுரைகளும்

இன்று தமிழில் கட்டுரையாளர்களை அல்லது கட்டுரைகளை இப்படி வகைப்படுத்தலாம். அதிக அளவில் எழுதப்படும் பண்பாட்டு அரசியல் கட்டுரைகள் ஒரு கருத்து நிலை சார்ந்து எழுதப்படுபவை. இதில் குறைந்த பட்ச அவதானிப்புகள் மற்றும் அழகியல் இருக்கும். உச்சபட்சமாக தர்மாவேசமே ஒரே உணர்ச்சி. மாயா, முத்துக்கிருஷ்ணன், யமுனா ராஜெந்திரன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியவர்களை இந்த வரிசையில் நிற்க வைக்கலாம். குறிப்பாக, இவர்களுக்கு கட்டுரை ஒரு வெளிப்பாட்டு கருவி மட்டுமே. அப்புறம் நாகார்சுணன், ஜமாலன் போன்று தூய சித்தாந்த எழுத்தாளர்கள். எந்தவித தீர்மானமான கருத்துக்களும் இன்றி முழுக்க தரவுகளை தொகுத்து எழுதும் வகையறாவும் இன்று பிரபலம். மேற்கில் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே தன்னிலையான கட்டுரைகளுக்கு ஒரு தனித்த இடம் இருந்து வந்துள்ளது. சார்லஸ் லாம்பில் இருந்து இன்றைய லீ மார்டின் மற்றும் டேவிட் செடாரிஸ் வரை அவர்களுக்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. தொண்ணூறுகள் வரை இறுக்கமான, செறிவு மிக்க கட்டுரைகளே தீவிர உலகில் பிரபலம். சமீப காலத்தில் தான் லகுவான தன்னிலை கட்டுரைகள் எழுதப்பட்டு பரவலான கவனத்தை பெற்றன.

இவ்வடிவத்தை மிக வெற்றிகரமாக பயன்படுத்தியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரது கட்டுரைகளில் எஸ்.ரா எனும் தனிமனிதனில் ஆரம்பித்து ஒரு எழுத்தாளனின் பிரக்ஞையுடன் முடியும். எழுத்தாள எஸ்.ரா இல்லாத கட்டுரைகளே ஏறத்தாழ இல்லை எனலாம். சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் எழுத்தாள பிம்பத்தில் ஆரம்பித்து, சூழலில் மாட்டி அவஸ்தைப்படும் தனிநபர் நோக்கி சென்று, பின் அந்த எழுத்தாளனுக்கே மீளும். இவர்களுக்கு பின்னர் இணைய உலகில் உருவாகி வந்தவர்களில் கணிசமானோர் தங்கள் எழுத்தே அடையாளமான தன்னிலை கட்டுரையாளர்கள். இந்த வலைப்பதிவர்களில் பலருக்கு சொல்வதற்கு எந்த அவதானிப்புகளோ கண்டுபிடிப்புகளோ இருப்பதில்லை. இவர்கள் இவ்வடிவுக்குள் புனைவின் சாத்தியங்களை பயன்படுத்தும் பயிற்சியும் இல்லாதவர்கள். தமிழ்ப் பதிவர்களுள் நடை சுவாரஸ்யமும் ஆளுமையும் கொண்ட லக்கிலுக், அதிஷா, கென் போன்றவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இவர்களால் சுய-அனுபவ வெளிச்சத்தில் தாராளமாக பகடி செய்ய முடிகிறது. வலுவாக தங்கள் தரப்பை பதிவு செய்ய முடிகிறது. கடைசியாக சொன்னது முக்கியம். இணையத்துக்கே உரித்தான அந்தரங்க குரல் இவ்வடிவத்துக்கு ஏற்றது.

தன்னிலையின் தன்மைகள்

தன்னிலை வகை எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடைப்பட்டது. இயல்பாகவே கற்பனை படைப்புகளின் அத்தனை தந்திரங்களும், அழகியல் அம்சங்கள், எழுத்தாள சுதந்திரம், அவதானிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களும் பொதுவய எழுத்துக்கு தேவைப்படும் ஆதாரபூர்வ தகவல்களும் இணையும் ஒரு அலாதியான புள்ளி இதில் சாத்தியமாகிறது. புனைவின் சாத்தியங்களை அதிகமாக நம்பி எழுதப்பட்ட தன்னிலை கட்டுரைகளுக்கு முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் மற்றும் ஜெயமோகனின் வாழ்விலே ஒரு நாள் ஆகியவை உதாரணங்கள். இந்த இரண்டுக்கும் நடுவில் இருப்பவை தமிழ்நதியின் கட்டுரைகள். இணையத்தில் காணக்கிடைக்கும் ஆகச்சிறந்த தன்னிலை கட்டுரையாளர்களில் தமிழ்நதியும் ஒருவர்.



தீவிர அக்கறை கொண்ட எழுத்து தமிழ் நதியுடையது. அவர் அரைத்தேன் தாளித்தேன் என்று எழுதுவதே இல்லை. நினைவேக்கம் தோய்ந்த குரல். நேரடியாக தீர்மானமாக சொல்லும் முறை. தமிழில் கவிதையில் இருந்து உரைநடைக்கு வந்தவர்களுக்கு உள்ள வடிவக்குழப்பம் அவருக்கு இல்லை. கவிதையில் இருந்து சில சாதகமான அம்சங்களே இவரது உரையில் சேகரமாகியுள்ளது: சொற்சிக்கனம், ஆழ்மன அதிர்வேற்படுத்தும் வார்த்தை பிரயோகம், செறிவான சித்திரத்தை வாக்கிய அமைப்பின் போக்கில் உருவாக்கும் சாமர்த்தியம். லா.சாராவில் நாம் காணும் ஒரு நெகிழ்ச்சியான கவித்துவத்தை இங்கு தமிழ்நதியிடம் பாருங்கள்:
”இனிதென்று அந்நாளில் நாமுணராத பால்யமே நம்மை உள்நின்று இயக்குகிறது ... மனதின் வெளிகளில் பறவைகளின் சிறகடிப்பை நாளாந்தம் மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.(‘நாடொடிகளும் நகரவாழ்வும்’)”.

இதே கட்டுரையில் வரும் ஒரு நேரடியான புறவய சொற்றொடரை பாருங்கள்:

”நகரங்கள் அழகில்லையென்பதும்கூட பொதுப்புத்தி சார்ந்ததே. வயல்வெளிகளும் பூக்களும் பறவைகளும் எத்தனைக்கெத்தனை அழகோ அத்தனைக்கத்தனை அழகானது நகரம்.”

தமிழ்நதியின் கரிப்பான அல்லது கண்ணீர் தோய்ந்த வரியில் கூட நகைச்சுவையோ பகடியோ எட்டிப் பார்க்கும். இந்த புன்னகையின் வழி மாபெரும் இழப்பின் தாக்கத்தை சமநிலையுடன் ஏற்று நகர்வதே தமிழ் நதியின் உரைநடை பண்புகளில் முக்கியமானது. ஒற்றைபட்டையான குற்றசாட்டல்கள், செயற்கையான தன்னிரக்கம் அல்லது கண்டனங்களின் மறுப்புவாதத்தை இவரிடம் காண முடியாது. ஆனால் உக்கிரமான நாடகீய தருணங்களையும் போகிறபோக்கில் உருவாக்க முடிகிறது.

தமிழ்நதியின் கவிதைகள் மற்றும் புனைவு ஆக்கங்கள் பலவீனமானவை. கட்டுரைகளில் தான் அவரது ஆழ்மனதின் நதி பெருக்கெடுக்கிறது. அவரது சிறந்த கட்டுரைகள் மன-சமநிலையுடன் எழுதப்பட்டவை. படிக்க ஆரம்பித்தவுடன் இது தெரிந்து விடுகிறது. ஒரு தீவிரமான மன அனுபவத்தை புறநிலை விவரிப்புகள் மூலம் ஆரம்பிக்கிறார் என்றால் அந்த படைப்பு ஆற்றல் மிக்கதாய் இருக்கும் என்று உறுதிப்படலாம். உதாரணமாக, போர்ச்சூழலில் அவர் இலங்கை புறப்ப்ட எத்தனிக்கிறார். அந்த தயாரிப்பை கூறும் வரிகள் இவை. எங்குமே மன உணர்வுகளை சொல்லாமல் புறவய சித்தரிப்பு மூலம் ஒரு உணர்ச்சிவேகத்தை திருகியேற்றுவதை கவனியுங்கள்:

இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன்.

தமிழ்நதியின் எழுத்துக்குரல் மிக சன்னமானது. ஒரு கட்டுரையில் தகவல்களை அடுக்கியபடி வருகையில் சட்டென்று மனக்கிளர்ச்சி உற்று சில பத்திகள் நாடகியமாகி, கவித்துவ அவதானிப்புகளை உருவாக்கி சமநிலைக்கு மீள்கிறார். இக்கட்டுரைகள் மிகுந்த வாசிப்பு உவகையை தருவதன் காரணம் இதுவே. அடுத்து இந்த சன்னக் குரல் தான் தமிழ்நதியின் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவைக்கும் ஆதாரம்.

துக்கத்தின் கையணைப்பில் நகைச்சுவை

ஆ.முத்துலிங்கம் அல்லது சாரு போல் எழுத்தாளர்-மைய பகடி அல்ல இவரது. எப்போதும் துயரார்ந்த ஆளுமையாக முன் வரும் தமிழ்நதி சோகத்தில் இருந்து சற்று விலகி நின்று பிறிதொருவரை பகடி செய்வார். நுட்பமான சித்தரிப்பால் அப்பாத்திரத்தின் மிகையின் அசட்டுத்தனம் அல்லது அபத்தத்தை காட்டுவதே இலக்காக இருக்கும். ஓருவரை ஓட்டும் போது எந்த ஒழுக்க மதிப்பீடுகளையும் தமிழ்நதி முன்வைப்பதில்லை. ”ஒரு குடிமகனின் கதையில்” வரும் மணியம் மாமா நல்ல உதாரணம். அந்த நகைச்சுவை கட்டுரையும் ’நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில்’ என்று சோகத்தில் தான் ஆரம்பிக்கிறது. குடிகாரர் குறித்த கீழ்வரும் அறிமுகம் பாருங்கள்:

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது.

மிக தோதான அறிமுகம் இது. ஏனெனில் இந்த மணியம் மாமாவே ஒரு குழந்தைதான். பகலெல்லாம் தோட்டத்தில் மண் கிளறுவார். அவ்வட்டாரத்தில் சமையலில் அவரை அடிக்க முடியாது. ஆனால் மாலை வேளைகளில் குடிக்க கிளம்பினால் மதுவின் அளவுக்கு ஏற்றாற் போல் மனைவியை நடத்துவார். அரை வயிற்றுத் தண்ணிக்கு மனைவியை பார்த்து ‘ நீ என்ரை தெய்வம்’ என்று கொஞ்சுவார். மட்டம் உயர்ந்தால் வசைகளை பொழிவார். வீட்டில் உள்ள ஒவ்வொரு சாமானாய் தூக்கிப் மனைவியை அடிக்க போக அவரது குழந்தைகள் அதனை பிடிங்கி வீட்டில் அதனதன் இடத்தில் வைப்பர். தொடர்ந்து அனைத்து சாமான்களும் இப்படி இடத்துக்கு மீண்டபடி இருக்கும். ஏனெனில் மாமா கர்ணன் மாதிரி. விடுத்த ஒரு அஸ்திரத்தை திரும்ப எடுக்க மாட்டார். திரும்ப திரும்ப இன்னிக்கு என்ன நாள் என்று கேட்பார். உண்மையில் அடுத்த நாள் அலாரம் வைத்து செய்வதற்கு அவருக்கு எந்த வேலையும் இருக்காது. ஆனால் கேட்டபடி இருப்பார். இதோடு அடிக்கடி தன் தாய் மற்றும் சகோதரிகளை நினைத்து ஒப்பாரி வைக்கும் காட்சியையும் சேர்த்து படிக்க வேண்டும். போதைக் கிறக்கத்த்லும் தன் சட்டைப்பாக்கட்டில் ’அறுப்பாத்தாறு ரூபா முப்பத்தஞ்சு சதம் இருக்கு’ என்று துல்லியமாக சொல்கிறார் மணியம் மாமா. வாழ்வின் ஸ்திரமின்மையின் இருவேறு வெளிப்பாடுகள் தாம் இவை: இழப்பு குறித்த நினைவேந்தலும், சட்டைப்பை ரூபாய் குறித்த நிதானமும்.

இலக்கியக் கூட்ட கட்டுரைகள்: எழுத்தின் அரசியல்

இலக்கிய கூட்டங்கள் குறித்த தமிழ்நதியின் பதிவுகள் சுவாரஸ்யமானவை. கூட்டங்களின் போக்கோடு ஒன்றி விடாத மனநிலை தான் இவற்றை முக்கியமாக்குகின்றன. நுட்பமும், சிக்கனமும் கூடிய விவரிப்புகள், இடைவிடாத பகடி, விமர்சனம், தன்னுணர்வு வெளிப்படும் தருணங்கள் ஆகியவை சிக்கலாய் பின்னப்பட்ட உயிர்ப்பான சித்திரங்கள் இவை. பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிக்கை கட்டுரை எழுதுபவர்களிடம் மாவாட்டுபவர்களுக்கான நேர்மையே இருக்கும். நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களை நோகடிக்கடிக்கக் கூடாது என்கிற கவனம் தெரியும். தமிழ்நதி தயக்கமின்றி தன் கருத்தை சொல்கிறார். உதாரணமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதன் நிகழ்ந்த ”கூடல் சங்கமத்தை” பற்றிய கட்டுரை. தமிழ்நதியின் இத்தகைய நிகழ்ச்சிக் கட்டுரைகள் ஈழ அரசியல் குறித்து இணையத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி எழுத்தாளர்களை தங்கள் தரப்புகளை விளக்க தூண்டியது.

கூடல் சங்கமத்தின் இறுதி நாள் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கும் நிழந்த மோதல் சாரு-ஜெயமோகன் வகையறா அல்ல. தமிழ் நட்சத்திர எழுத்தாளர்கள் சிலர் ஈழப்போர் குறித்து ஒரு பனிப்போர் மௌனம் சாதித்தார்கள். இதன் மற்றொரு துருவம் இந்திய கம்யூனிஸ்டுகள் மற்றும் தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் நிலைப்பாடு. முதலில் கூட்டத்தை நோக்கி தமிழ்நதியின் கேள்வி:

”இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா?

இதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் கோணங்கி “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்னும் தொனியில் பதிலளிக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா பதிலாக சில கேள்விகளை முன்வைக்கிறார்: “மலையகத்தமிழ்ர்களை கீழ்மைப்படுத்திய, முஸ்லீம்களை விரட்டியடித்த, தமிழக தலித்துகளுக்காக குரல் கொடுக்காத உங்களுக்காக நாங்கள் ஏன் பேச வேண்டும்”. ஆதவன் தீட்சண்யா அடுத்து கீற்று இணையதளத்தில் தமிழ்நதியை விமர்சித்து கடிதம் எழுதினார். அவருக்கு துணையாக ஷோபா சக்தியும் தமிழ்நதியின் புலி அரசியலை தாக்கினார். இலக்கிய பக்கமிருந்து மனுஷ்யபுத்திரன் அவரது வலைப்பூவில் ஒரு முக்கியமான கட்டுரை எழுதினார். தான் தனிப்பட்ட முறையிலும் தமிழின் பிற முன்னணி படைப்பாளிகளும் இப்பிரச்சனையில் குறிப்பிடத்தகுந்த வகையில் பங்காற்றி உள்ளமை குறித்து விளக்கினார். ஈழப்போர் குறித்து மட்டுமல்ல எந்த அரசியல் பிரச்சனையையும் புறக்கணிக்கும் போக்கு தமிழ் தீவிர எழுத்தாளர்களிடம் இருப்பதற்கு பண்பாட்டு ரீதியாக காரணம் சொன்னார். தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு குறித்து பதிவர்களிடம் இருந்து கேள்விகள் வந்தன. தமிழ்ப்பரப்பில் ஒரு மும்முனை விவாதத்தை புகைய வைத்த புண்ணியத்திற்காக தமிழ்நதியின் கேள்வி மற்றும் இணையப்பதிவு முக்கியமானதாகிறது.

அதே ஜூன் மாதம் நடந்த வால்பாறை இலக்கிய கூட்டத்தை பற்றிய தமிழ்நதித்தனமான கட்டுரையும் தமிழ் விமர்சனத்தின் நேர்மையை கேள்வி கேட்கிறது. இசையின் கவிதைத் தொகுப்பு குறித்து பேசும் கரிகாலன் அவரை மகாகவி என்கிறார். விளைவாக நண்பர் வட்டத்தில் இசையின் பெயர் மகாகவி என்றாகிறது. லேனா மணிமேகலையின் தொகுப்பு மீதான விமர்சனத்தை கொண்டாட்டம் மட்டுமே என்று முஜிபூர் ரகுமான் கண்டிக்க, ஆ.மார்க்ஸ் வழிமொழிகிறார். தமிழ்நதி இசையை விடுவதாக இல்லை. தமிழ்நதியினுடனான உரையாடலில் இசையின் சொல்லாடல் பொதுவான தமிழ் விமர்சனம் மீதான ஒரு நுண்ணிய கேலிச்சித்தரிப்பாக உள்ளது: ‘உங்கள் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. என்னுடைய கவிதைகளும். என்னுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றன… உங்களுடையதும்’. இக்கட்டுரையின் ஊடே ஒரு நினைவேக்கத்தை வேறு புனைந்திருக்கிறார் தமிழ்நதி. இறுதிவரி இந்த உபபிரதியை ஒன்றிணைக்கிறது: ”வாழ்வில் எப்போதாவது பசுமைகளில் நாம் வந்து தங்கிச்செல்லலாம்; ஆனால், தரிக்கமுடியாது. எல்லாவற்றுக்கும் அது பொருந்தத்தான் செய்கிறது.”

தமிழ்நதியின் இளவேனில் வலைப்பூவில் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் புனைகள் சேர்த்து 200க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. பெரும்பாலானவை படிக்கத்தக்கவை தாம். படித்தவுடன் ஒட்டிக் கொள்ளும் அவரது நடையை அனைத்துப் பதிவுகளிலும் காண முடியும். மிகக்காத்திரமான துயரம் தனக்கு அடையாளமாக நகைச்சுவையையும் அமைதியையும் பக்கத்தில் கொண்டிருக்கும். இதனாலே இணையத்தின் கேளிக்கை எழுத்துக்கள் மற்றும் மலினக் கண்ணீர் குட வரிசைகள் மத்தியில் இவரது எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.

தொடர்ச்சியாக எழுதப்படும் வலைப்பூக்கள் சிறுகசிறுக பக்கம் சேர்க்கப்படும் மொத்தத் தொகுப்பைப் போன்றவை. ஒரு எழுத்தாளரின் ஆன்மாவை இதை விட அணுக்கமாக நாம் தெரிந்து கொள்ள முடியாது.
Share This

4 comments :

  1. தமிழ்நதியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் உங்கள் கட்டுரை அவரின் எழுத்துக்களை வாசிக்கும் எண்ணத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன.நன்றி.

    ReplyDelete
  2. நிச்சயம் படியுங்கள்

    ReplyDelete
  3. நல்ல ஒரு அறிமுகம் அபிலாஷ்...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி அபிலாஷ். நமது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன; எவராலோ அது குறித்து பேசப்படுகிறது என்ற நிறைவினைவிட எழுதுபவருக்கு வேறென்ன வேண்டும்? நீங்கள் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்துப் பதிவுசெய்திருப்பது உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தலைக்கனத்தைச் சுமந்துகொண்டு இன்று மாலை நடக்கப்போகலாமென்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்:)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates