Friday 19 March 2010

குழந்தைத்தன மற்றும் பெற்றோர்த்தன புகைப்படங்கள்: நேரலின் உலகம்



தாமரை இதழில் வலைப்பக்கங்கள் குறித்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். இம்முறை ஒரு புகைபட தளம் குறித்து. குழந்தை சித்திரங்கள் ...


புகைப்படங்களுக்கு இரண்டு நோக்கங்கள். ஆவணப்படுத்துவது; காட்சிகளை படைப்பாக மாற்றுவது. நம் வெளியை பெரும்பாலும் ஆக்கிரமித்து உள்ளவை ஆவணப் புகைப்படங்கள் தாம். இந்த நொடி கூட எங்காவது ஓரிடத்தில் வாழ்வின் பிம்பங்கள் கைப்பேசி அல்லது point and shoot எனப்படும் எளிய கருவிக்குள் பதிவாகிக் கொண்டிருக்கும். ஆனால் தமிழில் அசிரத்தையாக எழுதப்படும் கோடிக்கணக்கான கவிதைகளில் உள்ள குறைந்தபட்ச அழகியல் தன்மையோ வடிவ ஒழுங்கோ கூட இவற்றில் இருப்பதில்லை. இதற்கு மூன்று காரணங்கள்: தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் பணவசதி போதாமை. ஏழைக்கவிஞன் என்பது போல் ஏழை புகைப்படக் கலைஞன் சாத்தியம் இல்லை. குறைந்த விலையிலான எளிய கருவிகள் புகைப்படங்களின் கலை மற்றும் ஆவண சாத்தியங்களை நிச்சயம் கட்டுப்படுத்தும். அதே போல் லட்ச ரூபாயில் வாங்கிய கருவி கூட தொழில்நுட்ப பரிச்சயமோ படைப்பூக்கமோ அற்றவர்களால் இயக்கப்படும் போது காண சகிக்காத படங்கள் தாம் கிடைக்கும். நமது திருமணம் உள்ளிட்ட பிற வைபவங்களை பதிவாக்கும் பெரும்பாலான தொழில்முறை புகைப்படக்காரர்கள் பல அடிப்படையான தொழில்நுட்ப தவறுகள் செய்கிறார்கள். மேலும் ஒரு நிகழ்ச்சியின் மனநிலை அல்லது அபூர்வமான தருணங்கள் பதிவாகாமல் இப்படங்கள் வறட்சியாக இருக்கும். அழகியல்பூர்வமாய் நேர்த்தியாக ஆவணப்படுத்தும் படங்கள் குறித்த பிரக்ஞை நமக்குத் தேவை.

Njoythemoment.com



குழந்தைப் புகைப்படங்களையும் நாம் இவ்வாறு வகைப்படுத்தலாம்: பெற்றோர்களின் குழந்தைப்படங்கள்; குழந்தைகளின் குழந்தைப்படங்கள். முதல் வகையில் பெற்றோர் பருவடிவிலோ பிரக்ஞைபூர்வமாகவோ குழந்தைகளின் எல்லைக்கோட்டுக்குள் நிறைந்திருப்பர். இரண்டாவதில் குழந்தைகள் தங்களோடு இருக்கும் எதார்த்த தருணங்கள் இருக்கும். முதல் வகைப்படங்கள் பார்க்கும் போது ஒரு தந்தைமை \ தாய்மை பூரிப்பு ஏற்படலாம்; அபாரமான நெகிழ்ச்சி ஏற்படுத்தும் படங்கள் இவை. ஆனாலும் குழந்தைகள் இவற்றில் ஒரு துணை-ஜீவனாக மட்டுமே உள்ளதை மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு தனித்த ஈகோ உண்டு என நிறுவப்பட்டுள்ளது. மனித வாழ்வுக்கான அனைத்து அசட்டுத்தனங்கள் மற்றும் படைப்பூக்கத்தை குழந்தைகள் வெளிப்படுத்திய படி இருக்கும். இவற்றை பதிவு செய்யும் இரண்டாவது வகை புகைப்படங்கள் ஆழமான மனக்கிளர்ச்சி அளிப்பவை. நேரல் என்பவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர். ஆஸ்திரேலிவில் மெல்போர்னை சேர்ந்தவர். இயற்கை, நிலவெளி, நகரம், காதல் பற்றிய படங்களை எடுத்திருந்தாலும் குழந்தைப்படங்கள் தாம் இவரது பிராந்தியம். Njoythemoment.com-இல் நேரலின் பல அருமையான புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நான் மேலே குறிப்பிட்டதில் முதல் வகையை சேர்ந்தவை.



நேரலுக்கு இரண்டு குழந்தைகள். இக்குழந்தைகள் குறித்த ஏராளமான நுணுக்கமான சித்திரங்கள் இத்தளத்தில் உள்ளன. கை நிறைய பாப்பாக்களுடன் தோன்றும் நேரல் நமக்கு தால்ஸ்தாயின் தாய்மைப் பாத்திரங்களான நட்டாஷா மற்றும் கிற்றியை (போரும் அமைதியும் மற்றும் அன்னா கரனினா) நினைவுறுத்துகிறார். இவரது பகலும் இரவும், குற்றங்களும் நன்மைகளும் குழந்தைகளிடத்து ஆரம்பித்து அவர்களிடத்தே முடிகின்றன. பெண்கள் முழுநேரத் தாயாக இருப்பதில் சலிப்பும் குற்ற உணர்வும் உணரும் இன்றைய காலகட்டத்தில் நேரல் கடந்த தலைமுறையின் எச்சமாக படுகிறார்.



நேரல் தனது இரு பாப்பாக்களையும் ஆளுக்கு ஒரு வருடம் தினமும் படம் எடுத்திருக்கிறார். மொத்தம் 732 புகைப்படங்கள். இவை அத்தனையும் தொகுத்து பின்னணி இசையுடன் ஸ்லைட் ஷோ எனும் ஓடும் படத்தோகுப்பாக தன் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் தாம் நேரலின் தலைசிறந்த படைப்புகள் எனலாம். இந்த 732 படங்களில் குழந்தைமையின் பல்வேறு விழிப்பு நிலைகள் மற்றும் இப்பொழுதுகளில் உலகை உற்று நோக்கி குழந்தை மேற்கொள்ளும் உறவாடல்கள் உற்சாகமாக சொல்லப்பட்டுள்ளன. கசப்பு, சோர்வு, வியப்பு, கவனம், தேடல் விழைவு, களிப்பு என ஒரு வினோதப் பூவின் பலவண்ண இதழ்கள் போல் விதவித உணர்வு நிலைகள் தங்குதடையின்று வெளிப்படுகின்றன. தேங்கித் தயங்கி செல்லும் மனித ஆறு இந்த பிறீச்சிடும் ஊற்றில் இருந்து அல்லவா ஆரம்பிக்கிறது.



உணவகத்தில் அப்பாவிடம் இருந்து பட்சணப் பட்டியலை படிக்க முயலும், வழவழ படக்கதை நூலை பிறாண்டிப் பார்க்கும், கவனமாக விளையாடும், அப்பாவால் நடை பழக்கப்படும், ஊஞ்சலாடும், பசுவின் முகம் தடவும், கண்ணாடிக் கோப்பைக்குள் கையிட்டு கலக்கும், சைக்கிள் பழகும், கடற்கரையில் மணல் கிளறும், எதையும் கடித்து சோதிக்கும், அக்காவுடன் சேர்ந்து குனிந்து தரையில் தேடும், ஏணி ஏறும், அம்மாவின் தோல்பையை மாட்டி நடக்கும், பெரியவர்களுக்கான ஹைடுரோலிக் உடற்பயிற்சி கருவியை இயக்கப் பார்க்கும், சமையலறையில் கொதிக்கும் தேனீர் பாத்திரத்தை வேடிக்கை பார்க்கும், காரின் இருட்டுக்குள் தனியாக இருக்கும், தோள்களுக்கு மேலாக தூக்கப்படும், தனிமை வயப்படும், பொம்மை கழுத்தை நெரிக்கும் .. இப்படி எத்தனை வித குழந்தைச் செயல்கள்! இந்த காட்சி துணுக்குகள் இக்குழந்தைகள் உலகுடன் செய்யும் தொடர்புறுத்தல்களை ஆவணப்படுத்துவதுடன் ஒரு ஆழமான கவித்துவ பார்வையையும் அளிக்கின்றன. குறிப்பாக பின்கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு படம். சிறுவன் கோணலாக துவளும் தன் கால்சட்டையின் பிரக்ஞையின்றி ஒரு நடைபாதையில் செல்கிறான். இந்த கல்மிஷமில்லாத நேர்த்தியின்மைதான் குழந்தைகளின் உலகை புத்துணர்வுடன் எப்போதும் வைத்திருக்கிறது. அக்குழந்தையின் பின்பக்க நடை பாவனை இதை நுட்பமாக சித்தரிக்கிறது.



நெரலின் படங்கள் நிர்மலமான குழந்தைமையை முன்னிறுத்துகின்றன; மிகையாக கொண்டாடுகின்றன. ஆனாலும், எல்லா சிறந்த கற்பனாவாத படைப்புகளையும் போல இவை கசப்பற்ற கண்ணீரையும், ஆணவமற்ற புன்னகையையும் வெளிப்பட வைப்பதால் முக்கியமானவை ஆகின்றன.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates