Tuesday 23 March 2010

கனவு எனும் உறங்காத கண்



தால்ஸ்தாயும் அவரது பன்னாட்டு சிஷ்யகோடிகளும் விடிகாலையில் எழுந்து நடைபழகி ஒழுக்கசீலர்களாக எழுத்து வேலையை ஆரம்பித்தவர்கள் ... ப்பவர்கள். ராவெல்லாம் விழித்து இருந்து சிகரெட் புகைப்படலத்தால் மூடப்பட்டு மூளை சூடேறி ஆவேசமாய் எழுதித் தள்ளின மற்றொரு மேதை இருந்தார். தஸ்தாவஸ்கி; ராத்திரி எழுதுவது நல்ல தெளிவான எழுத்தாக இருக்காது என்று தல்ஸ்தாய் கருதினார்; புறங்கையால் அத்தகைய இருட்டு எழுத்துக்களை ஒதுக்கினார். தஸ்தாவஸ்கி தன் ஆவேச எழுத்தை விளக்கினார்: ”என் குருதியில் பேனா தோய்த்து எழுதுகிறேன்”. அவரது ”குற்றமும் தண்டனையும்” குறித்து தால்ஸ்தாய் இப்படி குசும்புடன் சொன்னார்: “முதல் சில அத்தியாயங்களை படித்ததும் நாவல் எங்கே சென்று முடியும் என்று தெரிந்து விடுகிறதே”. அவருக்கு தஸ்தாவஸ்கி மீது பிரியமும் இருந்தது. தஸ்தாவஸ்கி இறந்த சேதி அறிந்ததும் அவர் மேலும் எழுந்து வராதபடி ஒரே இரவில் புத்தகம் ஒன்றும் எழுதவில்லை என்றாலும் தால்ஸ்தாய் கண்ணீர் விட்டு அழுதார். தல்ஸ்தாயின் விமர்சனத்துக்கு திரும்புவோம்: இரவில் எழுதும் போது களைப்புற்ற மூளையால் உச்சபட்ச படைப்பூக்கத்துடன் இயங்க முடியுமா? பகலில் ஆழமாக தூங்காத பட்சத்தில் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல. தூக்கத்தின் போது மனம் அன்றைய தினத்தின் வெவ்வேறு நிகழ்வுகளை குலுக்கிப் போட்டு யோசிக்கிறது. தொடர்பற்ற சம்பவங்கள், உணர்வுகள் மற்றும் சேதிகளின் எதிரெதிர் முனைகளுக்கு முடிச்சு போடுகிறது. அவதானிப்புகள் நடத்துகிறது. இதுதான் கனவு என்று விளக்குகின்றனர் சாரா மெட்னிக் மற்றும் ஜான் போர்ன். ஜான் போர்ன் சில எலிகளை சீராக ஒரே தடத்தில் ஓட விட்டார். பிறகு அவை கனவு காணும் போது மூளையை சோதித்தவர் அவை தமது கனவுப் பிரக்ஞையில் முன்பு ஒடிக் கொண்டிருந்த அதே ஓட்டத்தடத்தில் அப்போதும் இருப்பதாக கண்டு பிடித்தார். ஜெயமோகன் தான் விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கண்ட கனவு ஒன்றில் நாவலில் எழுதியிருந்த தெரு ஒன்று கனகச்சிதமாக தெரிந்ததாக சொல்லி உள்ளார். பகலில் பல முறை புணர்ந்து விட்டு தூங்குபவரின் கனவில்?



சாரா தன் சோதனைகள் மூலம் ஆழ்ந்த தூக்கம் பெறாதவர்கள், கனவு காணாதவர்களுக்கு அறிவுக் கூர்மையும் அவதானிப்பு திறனும் சற்று மங்கலாக இருப்பதாக கண்டறிந்து உள்ளார். இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு படைப்பியக்கத்தில் மதிப்பு உண்டா? இரவு படைப்பாக்கத்துக்கு சிறந்த பொழுது. பகலில் எழுதுபவர்கள் நம் சூழலில் சிலரே இருக்க முடியும். இருந்தும் எழுத்தை உள்ளிட்ட படைப்பாக்க தூண்டுதல்களுக்கு உடலின் விதிமுறைகள் பொருந்தாது. கடுமையான களைப்பு மற்றும் மன அவஸ்தையில் இருந்தும் கூட சிறந்த படைப்புகள் வெளிவரலாம். காலை நடைபயிற்சி, அருகம்புல் ஜூஸ், தியானம், யோகாவுக்கு பிறகு எழுதப்படுவது மொண்ணையாகவும் அமையலாம். ஆழ்மன உற்சாகம் தான் ஆதாரம்.
ஆனால் அன்றாட வாழ்வில் செயலூக்கத்துடன் இயங்க கனவு நிலை ஒரு முக்கிய பங்காற்றுகிறது. தூக்கத்தின் உள்ளீடு மட்டும் அல்ல, கனவு வந்ததா இல்லையா, ஏன் தூக்கம் தொந்தரவுக்கு உள்ளானது போன்றவை பெரும் புதிர்த்தன்மையுடனே இப்போதும் உள்ளன. மனதை அரிக்கும் புலனாகாத கவலைகளை தூக்கமிழப்பு சுட்டிக் காட்டும். கனவு அவற்றின் விசித்திர பரிமாணங்களை ஒரு கலைஞனைப் போல் தேடிக் கொண்டே நம் முன் படைத்துக் காட்டும். அன்றாட வாழ்வில் நாம் புறக்கணிக்கக் கூடிய ஒரு மன நெருக்கடியை எதிர்பாராத தருணத்தில் கனவு புனைந்து காட்டுவது அலாதியான அனுபவமே. உதாரணமாக, எனது நண்பர் ஒருவர் தன் அண்ணனின் சிறுவயது மகன் இறந்து போவதற்கு ரெண்டு நாட்களுக்கு முன்னர் கனவில் அம்மரணத்தை கண்டார். இது போன்ற பல அனுபவங்கள் உங்களுக்கு நேர்ந்திருக்கலாம் அல்லது அவற்றை கேள்விப்பட்டிருக்கலாம். கனவை வாசித்தல் குறித்த விவாதங்களுக்கு இது நம்மை தூண்டலாம் என்றாலும் நமது மனம் இத்தகைய நிகழும் மற்றும் நிகழப் போகும் நிகழ்வுகளை எப்படி நுணுக்கமாக அவதானிக்கிறது, எந்த நினைவு முடிச்சுகளை இணைத்து எதிர்காலத்தை அது காண்கிறது என்பது பிரமிப்பூட்டும் விவாதம். நமக்குள் மற்றொருவன் நம்மை விட மிகுந்த விழிப்புடன் கவனித்தபடி வேகமாக முன்னகர்ந்தபடி உள்ளான் என்பது ஒரு கிளர்ச்சி ஊட்டும் சிந்தனை.
உறக்கத்தை உற்று கவனிப்பது பயனானது என்கிறது நவீன அறிவியல். கனவுகள் காமப் பீறிடல்கள் என்ற பிராயிடிய கருத்தியல் காலாவதியாகி விட்டது. கனவுகள் வாழ்வுக்கான ஒத்திகைகள் என்பதே சமகால புரிதல்.
Share This

3 comments :

  1. கனவு : சில குறிப்புகள்
    நன்றாக இருந்தது.
    ஆனால் ஊடாலே
    ’அவர் எழுந்து வராமல்
    இருக்க ஒரு புத்தகம்
    எழுதவில்லை’
    எதற்காக ஜெயமோகனை
    வம்புக்கு இழுக்கிறீர்கள்?

    ReplyDelete
  2. நீங்கள் கண்டுபிடிக்கிறீர்க்ளா என்று பார்க்கத்தான்!

    ReplyDelete
  3. கனவுகள் பற்றிய புரிதல் இப்போதைக்கு அல்லது எப்போதுமே சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வெள்ளத்தில் மிதந்து வரும் எதோ வீட்டு பொருட்களை 'பொம்மையோ' என ஆவலாய் பார்க்கும் குழந்தைகள் போல எழுத்தாளர்கள்/கவிஞர்கள் கனவுகளை தங்களுடைய கருவாக்கி கொள்ள முனைதல் நடந்தபடி இருக்கிறது.

    பகலில் கனவு காண்பவன் என்பது இப்போது பலர் தைரியமாக சொல்ல தொடங்கியிருக்கிற 'தனக்கு பிடித்த பொழுதுபோக்கு.'

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates