Saturday 20 March 2010

வா.மணிகண்டனின் நடுகற்கள் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்

வா.மணிகண்டனின் இக்கட்டுரையில் சில எழுத்தாளர்கள், நன்றாக எழுதுபவர்களாக இருந்தும், ஏன் காணாமல் போகிறார்கள் என்பது குறித்து விவாதிக்கிறார். மிக லாவகமாக கவித்துவத்துடன் பாயும் மொழி. படியுங்கள் ...

புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது...
புகார்கள் தூறலாகவும் சமயங்களில் பெருமழையாகவும் பெய்து எப்பொழுதும் நம்மை ஈரமாகவே வைத்திருக்கின்றன என்று சொல்வதும் கூட புகார்தானே. புகார்கள் இல்லையென்றால் வாழ்கை சலிப்படைந்து விடுகிறது. யாரைப்பற்றியாவது எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதன் மூலமாக புனைவின் சுவாரஸியத்தை அடுத்தவருக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விருட்சம் சிற்றிதழில் பிரசுரமான கவிதைகளை தொகுப்பாக்கி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். தொகுப்பில் இருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் எனக்கு அறிமுகம் இல்லை அல்லது அவர்கள் எழுதிக் கொண்டிருந்த போது நான் பிறக்காமலோ அல்லது பிறந்திருந்தால் கவிதைகளை வாசிக்காமலோ இருந்துவிட்டேன். நான் வாசிக்க ஆரம்பிக்கும் போது அவர்களை இலக்கிய உலகம் முற்றாக மறந்துவிட்டிருந்தது.

தொகுப்பின் கவிதைகளை இரண்டு மூன்றிரவுகளாக வாசித்துக் கொண்டிருக்கும் போது இந்த பெயர் அறியாத கவிஞர்கள் விரல் பிடித்து கவித்துவத்தின் பெருவெளிக்குள் அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கவிதைக்குள் செல்லும் அடுத்த கணத்தில், கவிதையை சற்றே மறந்து, அந்தக் கவிதையை எழுதிய கவிஞனின் பெயரை கவனிக்கும் மூன்று வினாடிகளும் பதட்டமானதாகவே இருக்கிறது. முகம் தெரியாத ஆள் ஒருவனை நம்பி நடுவழி கடந்துவிட்ட சிறு குழந்தையின் மனநிலைக்கு வந்துவிடுவதாகக் தோன்றுகிறது. எழுதியவனிடம் இருந்து படைப்பை நாம் பறித்துக் கொள்கிறோமா அல்லது அவன் தன் படைப்பை தொலைத்துவிட்டு எங்காவது தேடிக் கொண்டிருக்கிறானா? ஒரு குழந்தையை அனாதையாக்குவது போலவேதான் ஒரு கவிதையை அனாதையாக்குவதும் துக்ககரமானது. புகார் சொல்லுதல் வாழ்க்கையை சுவாரஸியமாக்குகிறது என்ற முதல்பத்தி வாதத்துக்கு துணையாக 'காணாமல் போன படைப்பாளிகளை' குறித்தானதாக எனது புகாரை முன்வைக்கிறேன்.

படைப்பின் அனுபவத்தோடு நின்றுகொள்ளாமல் படைப்பாளியை பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என எழும் எளிய கேள்வியை இந்த இடத்தில் நிராகரித்துவிடலாம் என்று தோன்றுகிறது. பிரமாதமான கவிதானுபவத்தை தரும் வரிகளை எழுதிய கவிஞனின் பெயர் எனக்கு தேவைப்படுகிறது. அவனது மற்ற எழுத்துக்கள் ஆசுவாசமானதாக இருக்கும் என அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் சிற்றிதழ்களின் மொத்த தொகுப்புகளை வாசிக்கும் போது மிக முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கும் பல கவிஞர்களின் பெயர்கள் கூட சமகாலத்தில் உச்சரிக்கப்படுவதில்லை என்பது கொஞ்சம் ஆதங்கமாக இருக்கிறது. இதே அனுபவம் ஞானரதம் இதழ் தொகுப்பை வாசிக்கும் போது நிகழ்ந்தது. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்?.

இந்தச் சமயத்தில் கவிஞர் சுகுமாரனோடு பேசும் போது கவிஞன், கவிதாளுமை என்ற பதங்களைப் பிரயோகப்படுத்தினார். அந்தச் சொற்களை படைப்பாளி, படைப்பாளுமை என்ற சொற்களோடு இணைத்துப் பார்க்கலாம். படைப்பாளி என்பவன் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சில படைப்புகளை உருவாக்குகிறான். ஆற்று நீரோட்டத்தில் ஒரு கல்லை எறிவதைப் போல. இந்த எறிதலுக்குப் பிறகு அமைதியாகிவிடுகிறான். உருவாக்கப்பட்ட படைப்புகளை காலம் தன் போக்கில் வெறும் ஒற்றைத்தாளாக மாற்றி தன் பெட்டகத்துக்குள் அடுக்கிக் கொண்டே இருக்கிறது. அடுக்கிச் செல்லப்படும் இந்த ஒற்றைத்தாள்களுக்குள் தான் காணாமல் போனவர்களின் படைப்புகள் புதைந்துவிடுகின்றன. அமைதியாகிவிட்ட படைப்பாளியின் சுவடும் மெல்ல கரைந்தழிந்துவிடுகிறது.

படைப்பாளுமை என்பவன் படைப்பாளியின் அடுத்த நிலை. தான் சார்ந்த மொழிக்கான அல்லது சமூகத்துக்கான தன் பங்களிப்பை ஏதாவது ஒரு விதத்தில் தன் படைப்புகளின் மூலமாக அளித்துவிடுகிறான். படைப்பின் வடிவ மாற்றம், உள்ளடக்கம், படைப்பின் வெளிப்பாட்டு முறை என ஏதாவதொன்றில் தன் இருப்பை அழுந்தப் பதியச் செய்கிறான். இந்த பங்களிப்பின் மூலமாகவே அவனது இருப்பு உறுதி செய்யப்படுகிறது.
படைப்பாளியிலிருந்து படைப்பாளுமை என்ற தளத்திற்கு நகர்வதற்கு மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அது வெற்றுச் சவடல்களாலும், தன்னிலிருந்து உருவாக்கும் சலனத்தாலும் நிகழ்வதில்லை. தொடர்ந்த வாசிப்பும் அசதியில்லாத படைப்பூக்கத்துடன் கூடிய இயக்கத்தில் இருக்கும் படைப்பாளிதான் தன் தடத்தை அழுத்தமாக பதிக்கிறான்.

இதை கட்டுரையை எழுதுவது ஒரு கவிதையோடு காணாமல் போனவர்கள் கவிஞர்கள் அன்று என்பதை பறைசாற்றுவதற்காக இல்லை. மறக்கப்பட்டவர்கள் நல்ல படைப்பாளிகள் இல்லை என்பதுதான் என்பது உன் கூற்றா என்றால், அதற்கான பதிலும் "இல்லை"தான். அந்த மறக்கப்பட்டவர்கள் பட்டியலில் மிக முக்கியமான படைப்பாளிகள் வரிசையில் இருக்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் செயல்பாட்டின்மையாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அவர்கள் அமைதியாகும் சமயத்தில் காலம் அடித்துச் சென்று ஒதுக்கிவிடுகிறது. எந்தப் பீடமும் காலத்தையோ வரலாற்றையோ அவைகளின் ஓட்டத்தில் இருந்து நிறுத்திவிடுவதில்லை.

இன்றைய இலக்கிய வடிவங்களுக்கு நாம் வந்து சேர மூன்றாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. திருவள்ளுவரை விட்டால் இடையில் ஓரிருவரின் பெயர்களை மட்டும் சொல்லிக் கொண்டு மிக அருகாமையில் பாரதியில் வந்து நின்று விடுகிறோம். இடைப்பட்ட காலத்தில் எழுதியவர்கள் எங்கே என்பதும் அவர்களுக்கான இடம் இலக்கியத்தில் இல்லாமல் போனது ஏன் என்பதும் பெரிய கேள்வியாகிறது. மிக எளிதாக காலம் படைப்பாளிகளைத் தாண்டி வந்திருக்கிறது. காலத்திற்கு மரத்தில் இருந்து உதிரும் சருகும் படைப்பாளியும் ஒன்றுதான். ஒரே வேகத்தில்தான் அடித்துச் சென்றிருக்கிறது.

ஒற்றைப்படைப்பின் மூலமாக ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்பாளிகளை கணக்கு எடுத்தாலும் ஒரு பட்டியல் வரலாம். ஆனால் அது சொற்பமான எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். வாசிப்பு போலவேதான் எழுத்தும் பெருமளவில் பயிற்சி சார்ந்திருக்கிறது. படைப்பாளி என்பவன் அடுத்த நிலைக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்க அவன் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. அவன் நிற்கும் போது, அவனை மற்றவர்கள் மறக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதைப்பற்றி பேசும் போது ஒரு குதர்க்கம் நிகழ்ந்துவிடலாம். எண்ணிக்கையும் எழுதிய பக்கங்களும் தான் படைப்பாளியின் இடத்தை உறுதிப்படுத்துவதாக சொல்வதைப் போன்ற கோணம் உருவானால், அந்தக் கருத்தாக்கத்தை கடுமையாக மறுப்பதற்காக படைப்பாளுமை என்பவன் படைப்பியக்கத்தில் தன் பங்களிப்பின் மூலமாக அதன் 'திசையை சற்றேனும் மாற்றியமைக்கிறான்' என்பதை கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

நான்காவது பத்தியில் கேட்ட அதே கேள்வி. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? இந்தப் புள்ளியில் கவிஞன், கவிதாளுமை என்ற விவாதம் தொடர ஆரம்பிக்கலாம். (புகாரில் ஆரம்பித்து புகாரில் முடிக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து வாசிக்கவும்) ஆனால் நாம் சித்து விளையாட்டுகளாலும், கூட்டம் சேர்ப்பதாலும், அச்சுப்பிரதியின் மூன்றாம் பக்க மூலையில் பெயர் வருவதனாலும் இலக்கிய உலகின் பிதாமகன் என்று நினைப்பைச் சூடிக் கொள்கிறோம்.
Share This

1 comment :

  1. தொடர்ந்து எழுதிக்
    கொண்டிருப்பவர்களுக்கு
    திடும்மென ஒரு அயர்ச்சி
    அல்லது ஒரு தடை
    ஏற்படும். இது எழுதுபவர்கள்
    அனைவரும் உணர்ந்த
    விஷயம் தான். ஆனால்
    அதைத் தாண்டி வர
    மிகுந்த மனப் பயிற்சி
    வேண்டும். வந்தவர்களும்
    ஏராளம். தங்கியவர்களும்
    ஏராளம். இப்படித்தான்
    நிறைய பேர்கள் காணாமல்
    போகிறார்கள்.
    ரொம்ப நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates