Thursday 18 June 2009

பிற்போக்கின் அரசியலும் மில்லியன் ஆண்டுகளும்

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் தொலைக்காட்சியில் மனுஷ்யபுத்திரனின் கேள்விக்கு பதிலளித்த ஐயா பெரியார்தாசன் இன்றைய இளைஞர்கள் முற்போக்காளர்கள் என்று ஆர்த்துரைத்தார். இதைக் கேட்ட எனக்குப் பூரித்துப் போனது.
எனக்குத் திராவிட இயக்க முற்போக்கு சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு சிறு குழந்தைப்பருவத்திலே ஆரம்பித்து விட்டது. காரணம் அப்பா ஒரு தீவிர தி.மு.ககாரர். ஒரு சின்ன பெரியார் தாசர். அம்மா அடிக்கடி சொல்வாள். தொட்டிலில் என்னை போட்டு விட்டு கைவேலையாய் போகும்போது, அப்பாவை பார்த்துக்கொள்ள சொன்னால், "பெரியார் பெரியார்" என்று சொல்லியே தொட்டிலை ஆட்டுவாராம். டாக்டர் கலைஞரை நள்ளிரவில் உள்ளே போட்ட போது, அப்பா உணவுத் தட்டை தூக்கி வீசி விட்டு உண்ணாவிரதம் இருந்தார். எம்.ஜி.ஆரை டீ.வியில் பார்த்தால் தாரை தாரையாய் கண்ணீர் விடுவார். தந்தைப் பெரியார் பற்றி பேச ஆரம்பித்தாலே நாக்கு தழுதழுத்து அரைமணி நேரம் பேச முடியாமல் தவிப்பார். இப்படியான ஒரு திராவிட அபிமான பாரம்பரியத்தில் வளர்ந்ததால் அடிக்கடி இப்போது வரை ஒரு இறைமறுப்பு இந்தனையாளனாகவே இருக்கிறேன். எந்த அளவுக்கென்றால் "கடவுள்" என்று பேச ஆரம்பித்தாலே எனக்கு கொட்டாவி வந்து விடும்.
என் தாத்தா மைவள்ளி (வட்டப்பெயர்) நாராயணன் தந்தைப் பெரியாருடன் கைகுலுக்கி பேசியுள்ளதாக என் அப்பா வீட்டுச் சுவர்களில் எழுதி வைக்காத குறைதான். உங்களைப் போலவே நானும் அதை நம்பவில்லை.
இப்படியான முற்போக்கு திராவிட சிந்தனை பாரம்பரியத்தில் வாழையடி வாழையாய் தோன்றின எனக்கு ஒரு பெரிய தடையாய் அமைந்துள்ளது என் பெயர்தான். "தமிழ்மகன்" என்றோ "தமிழ்ச்செல்வன்" என்றோ வைத்திருக்கலாம். இவ்விசயத்தில் அப்பாவை ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்.
ஐயா பெ.தா அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு "முற்போக்குப் பயிரான" என் அப்பாவுக்கு தந்தைப் பெரியாரின் பெண்ணிய சிந்தனையோடு மட்டும் உடன்பாடில்லை. புரூஸ்லியின் சிந்தனையோடு ஓரளவு ஒத்து வருவார். சாப்பாட்டில் உப்பு காரம் இருந்தாலோ, சில நேரம் இல்லாவிட்டாலும் கூட, பிற்போக்குப் பயிரான என் அம்மாவின் மூக்கில் ஒரு குத்துவிடுவார். இப்படியான தொடர்தாக்குதல்களினால் அம்மாவின் பிற்போக்கு மூக்கின் எலும்பு ஒரு நாள் நொறுங்கியே விட்டது. ஆனாலும் திருந்திய பாடில்லை.
ஐயா பெ.தா அவர்கள் (என்னைப் போன்ற) முற்போக்காளர்களே இன்றைய தலைமுறையில் அதிகமாய் இருப்பதாய் கூறியது கேட்க நிச்சயம் பெருமிதமாய் இருந்தது. ஆனாலும் சமீபமாய் நவீன இளைஞர்களிடம் பழமைவாதம் பரவலாய் காணப்படுவதாய் புள்ளிவிவரங்கள் சொல்லுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. உதாரணமாய், பாண்ட், சட்டையிலிருந்து நாய்க்குட்டிக்கான உணவு வரை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் இளையதலைமுறை மிகவும் பிற்போக்காக திருமணம் போன்ற சடங்குகளை இன்னும் பின்பற்றுகிறார்கள். அன்று தரகர்கள் செய்த இந்த பல்பார்த்து ஆள்பிடிக்கும் வேலையை matrimonial.com போன்ற இணையதளங்கள் பட்டவர்த்தமாய் செய்து கோடிகள் குவிக்கின்றன. சாதி, உபசாதி, ஜாதக பொருத்தம் என பல வித மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்னர் தான் மணமக்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து முடிவு செய்கிறார்கள். எந்த அளவுக்கு அதிகமாய் படித்து சம்பாதிக்கிறார்களோ, நைட் கிளப், டேட்டிங் என்று ஆட்டம் போடுகிறார்களோ அந்த அளவுக்கு கட்டுப்பெட்டித்தனமாய் பிற்போக்கு சடங்குகளில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஒரு பிரபலமான உதாரணம் தருகிறேன்: ஜாதக பொருத்தமின்மைக்கு பரிகாரமாக நடிகர் அபிஷேக் பச்சனை மணமுடிக்குமுன் சர்வதேச திரைத்தாரகை ஐஸ்வர்யா ராய் ஒரு மரத்துக்கு மாலையிட்டு திருமணம் செய்தார். இல்லாவிட்டால் திருமணத்துக்குப் பின் அபிஷேக்கின் உயிருக்கு ஆபத்தாம். இன்னும் நாம் திருமணம் என்ற பெயரில் பெண்ணுக்கு மூக்கணாங்கயிறு கட்டும் பழக்கத்தை விட்டபாடில்லை. என் மனைவியை நான் மூக்கணாங்கயிறு அணிய வற்புறுத்தவில்லை என்பதால் என் மூன்று பால்யகால நண்பர்கள் (நரேந்திர மோடியின் வழிபாட்டாளர்கள்) இப்போது வரை என்னிடம் பேச மறுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவன் இஸ்ரேலில் மென்பொருள் வல்லுநன். மற்றுமிருவர் பிரபல எம்.என்.சிகளில் மேலாளர்கள்.
இதில் முற்போக்குக் குடும்பங்களிருந்து வரும் பெண்கள் நிலைமைதான் ரொம்ப பாவம். என் அலுவலகத் தோழி கயல்விழியின் அப்பா தி.காவில் 20 வருடங்களாய் முற்போக்குத் தொண்டாற்றுபவர். அவர் பெண்ணுக்கு அவர் ஜாதகம் இயற்றாததால் வரனுக்காக பெரியாய் திடலிலுள்ள கட்சியின் திருமண மையத்தைதான் நம்பி இருந்தார். இரண்டு வருடங்களாய் அலைகழிக்கப்பட்டு, ஏதும் அமையாமல் நொந்து போனார். சுயமரியாதையை விட்டு அவர் பழமைவாதிகளின் வரன் தேடும் இணையதளங்களில் இப்போது பதிவு செய்துள்ளார். அங்கும் 'இறை நம்பிக்கை' இல்லை என்று தெரிவிக்கும் பையன்கள் கூட ஜாதகப் பொருத்த விசயத்தில் விடாப்பிடியாய் உள்ளார்கள். நம்மூரில் ரேசன் அட்டைக்கு அடுத்தபடியாய், ஜாதகம் இல்லையென்றால் அணுவும் நகராது என்னும் நிலை உள்ளது. ஜாதகம் இல்லாத பெண்களுக்கு மணமாகும் தகுதி இல்லை. அதுவும் திராவிட நிறம் வேறு என்றால் சொல்லவே வேண்டாம்!
இன்றைய நவீன இளைஞர்களிடம் காணப்படும் மற்றொரு மனநோய் மாட்டுப்பெண்ணை வீட்டுப் பெண்ணாகவே வைத்துக் கொள்வதற்கான தீவிரம். பொறியியல் படிப்பு முடித்து விட்டு கணவனின் வற்புறுத்தலால் வேலைக்குப் போகாமல் வீட்டை நாலுமுறை பெருக்கி, கிடைக்கிற பொருளை எல்லாம் எடுத்து துடைத்து வைத்து, இத்தனைக்குப் பிறகும் நேரம் மீதமிருப்பதால், டீ.வியில் குடும்பத்தொடர்கள் பார்த்துக் கொண்டே தூங்கி தங்கள் திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் அலுவலக வேலைப்பிரிவை பொறுத்த மட்டிலுமே கடந்த 6 மாதங்களில் 4 பெண்கள் கணவனின் வற்புறுத்தலால் வேலையை விட்டுள்ளனர். இதைப் போன்றே இரண்டாவதாய் குழந்தை பெற்று குலதெய்வ பெயரிட்டு மக்கள் தொகையை எகிற விடும் உயர் நோக்குடன் மேலும் பல பெண்கள் வேலையை விடுகிறார்கள். இங்கும் ஆண் குழந்தை பெறுவதற்கான ஆணின் பேராசைதான் தூண்டுதல். இப்படியான 'குடும்ப' வற்புறுத்தலால் என அலுவக தோழி சுகன்யா வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை சமீபமாய் பெற்றுக் கொண்டார். ஆனால் வீட்டில் அவர் அலுவலக வேலையோடு சேர்த்து சமையல், பெருக்கி, துடைப்பது, தினமும் வடை பாயச சாப்பாடு சமைப்பது என அடிமாடாக இரட்டை வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. அதை விட கொடுமை அவரது மாமனார் அவரை அலுவலக வேலையை ஒரேயடியாய் துறந்து விடுமாறு தொடர்ந்து மிரட்டி வருவது. "சம்பாத்தியம் புருஷலட்சணம்" என்று என் மாமியார் அடிக்கடி காதுபட சொல்லுவார் ( நான் என் மனைவியை விட குறைவாக சம்பாதிப்பதனால்). இந்த தர்க்கப்படி எங்கே தங்கள் லட்சணம் பறிபோய் விடுமோ என பல திருமணமான, ஆகாத இளைஞர்கள் ஒருவித பதற்றத்தில் உள்ளார்கள். இதனால் ஒரு முக்கிய முன்-திருமண கோரிக்கையாக "கல்யாணத்துப் பிறகு வீட்டோடு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், வேலைக்குப் போகக் கூடாது" என்று பரவலாய் வலியுறுத்தப்படுகிறது. பின்-திருமண பழுது சரி செய்யும் நடவடிக்கையாக வேலைக்குப் போகும் மாட்டை கொம்பைப் பிடித்து கொட்டகையில் அடைப்பது பல குடும்பங்களில் உறவினர்களின் பேராதரவுடன் நடக்கிறது. என் மனைவியின் மேலாளர் ஒரு பெண். சந்தியா. மாதம் ஐம்பதினாயிரம் சம்பாதிக்கிறார். வேலை பார்க்கும் நிறுவனத்தின் பாதி பங்கு வேறு உள்ளது. ஆனாலும் இவரது கணவனும், மாமனார் மாமியாரும் வேலையை விடும்படி தினசரி மனவதை செய்கின்றனர். கணவனுடன் 2 வருடங்களாய் சுமூக உறவில்லை. பேச்சு வார்த்தைக்கு முயன்றால் " நீ வேலையை விடு, எல்லாம் தானாய் சரியாகி விடும்" எனபது அவரது ஒரே பதில். இவருக்கு 6 வயதில் ஒரு மகள். இந்த வேலையை விடும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதற்க்காக மாமனார் மாமியார் பேரக்குழந்தையை கவனிக்காமல் உதாசீனிக்கிறார்கள், ஒருவித மறைமுக மிரட்டல் என. ஒரு நாள் வழக்கம் போல் மதியம் பள்ளி விட்டு வந்த குழந்தைக்கு 102 டிகிரி ஜுரம். வீட்டில் யாரும் மருந்து தரவோ, பொருட்படுத்தவோயில்லை. மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்த இவரிடம் மாமியார் ரிமோட்டால் டீ.வி சானலை மாற்றிக் கொண்டே சொல்கிறார்: "கொழந்தைக்கு ஜுரம் போல, என்னன்று போய் பாரு". இவரது கணவர் ஹைதராபாதில் சத்யம் நிறுவனத்தில் பொறியியலாளர். மனைவியை விட சற்று குறைவாய் சம்பளம்.
இந்தியாவின் 18 நகரங்களில் இந்தியா டுடே நடத்திய சர்வே பெரும்பாலான இந்திய இளைஞர்கள் சம்பிரதாய குடுமிகள், பிற்போக்காளர்கள் என்று சொல்லுகிறது. இதில் தமிழ் இளைஞர்களும் விதிவிலக்கல்ல. ஆகப்பெரும் கொடுமை 70 சதவீதத்தினர் மதவெறியர்கள் என்பது. இவர்கள் எதற்காகவும் தங்கள் மதத்தை மட்டும் விட்டுக் கொடுக்க தயாரில்லை என தெரிவித்துள்ளனர். எனக்குத் தெரிந்தே நரேந்திர மோடி ஜி தான் இந்தியாவின் தேசத்தந்தை என நம்பும் பலர் இருக்கிறார்கள். இத்தகைய இளைஞர்களை ஆதிக்க சாதியர்கள், ஆதிக்க சாதி ஆதரவாளர்கள் என் இருவகையாய் பிரிக்கலாம். உதாரணமாய், என் அலுவலக மொட்டை மாடி திறந்த வெளி 'உணவறையில்' யாரும் அசைவம் (ஆரிய உணவை சைவ உணவென்பதால் நமது புலால் உணவை பௌத்த உணவென்று அழைக்க வேண்டும் எனும் நண்பர் ஹமீம் முஸ்தபாவின் உயர்கருத்தை வழிமொழிந்து இனிமேல் அவ்வாறே குறிப்பிடுவோம்) தின்னக்கூடாது என்றொரு எழுதப்படாத சட்டம் உள்ளது. ஆதிக்கசாதி ஆரியர்களுக்கு பௌத்த உணவு (அசைவ) மணம் என்றால் குமட்டிக் கொண்டு வருமாம். ஆரிய கலாச்சாரம்தான் லட்சியம் என்று கொண்டுள்ள ஆரிய ஆதரவாளர்களும், நாங்கள் ஆசையாய் பொரித்த கருவாடு, வறுத்த நண்டு என்று கொண்டு வந்து கடித்தால் முறைத்துப் பார்ப்பது மட்டும் இல்லாமல் விலகிப் போயும் அமர்கிறார்கள். தீண்டாமை ஒழிந்து விட்டதென்று யார் சொன்னது? ஆரியர்களை குஷிப்படுத்துவதெற்கென்றே எங்கள் காண்டீனில் சைவ உணவு மட்டுமே தந்து, பிறந்ததிலிருந்தே மீன் மணம் இல்லாமல் சோறிறங்காத என்னைப் போன்ற பல பௌத்த பிரியர்களை காயப் போடுகிறார்கள். மற்றொரு அலுவலக சாதிக் கொடுமையை பற்றிச் சொல்லுகிறேன். நான் பொதுவாய் சாதி வித்தியாசம் பாராமல் ஆரியர்களிடம் கூட சகஜமாக பழகக்கூடியவன். அப்படி ஒரு நாள் அல்வா சாப்பிடுவதற்காக என் கூடப் பணிபுரியும் ஒரு ஆரியப்பெண்ணிடம் கரண்டி வாங்கினேன். பிறகு நன்றாக அலம்பி உணவு நேரத்தில் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவள் அதை பயன்படுத்தாமல் வெறும் கையாலே உருட்டி விழுங்க ஆரம்பித்தாள். நான் சொன்னேன்: " நன்றாக சோப்புப் போடு அலம்பி விட்டேன் தேவி (மோடிக்கு பயந்து பெயரை மாற்றியுள்ளேன்) நீ அதை பயன்படுத்தலாம்". நான் தொடர்ச்சியாய் வற்புறுத்தியும் அவள் நான் எச்சில் படுத்தி அலம்பிய கரண்டியை மீண்டும் வாயில் வைக்க மறுத்து விட்டாள். என் முன்னே தூக்கி வீசாமல் இருந்தாளே என்று ஆறுதல் சொல்லிக் கொண்டேன். ஆனாலும் ஐயா, எனக்கு பல இரவுகள் இந்த நுட்பமான "ஒத்திப் போவை" நினைத்து தூக்கம் வரவில்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் மிக அபாயகரமானது சொந்த சாதியர்களை மேல் நிலையிலும், ஆதரவு சாதிகளை சற்று அடுத்தபடியாயும் உயர்பதவிகள் தந்து அலுவலக மேலாண்மை வட்டத்துள் ஒரு சக்கர வியூகத்தை ஆரியர்கள் அமைத்து வருவது. வெகு சீக்கிரத்தில் ஒரு ரதயாத்திரை நடத்தும் அளவுக்கு என் மேலாளரான நாமக்காரர் ஆரியர்களை அதிகமாய் பணியில் அமர்த்தி அரசியல் செய்கிறார். நான் குறிப்பிட விரும்புவது இந்த வெறியர்கள் எல்லாரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதே.
நாம, பூணூல் சக்திகளின் இந்த ஆட்டத்தைப் பார்த்தால் என் ரத்தம் கொதிக்கிறது ஐயா! எங்கல் அலுவலக முகப்பில் ஒரு பிள்ளையார் சிலை வைத்திருக்கிறார்கல். தேச, இன எல்லைகள் தாண்டி சேவை செய்யும் பி.பி.ஓ நிறுவனம், ஆனால் முகப்பிலேயே பிற்போக்கின் அடையாளம். பார்க்கும் போதெல்ல்லாம் என் நரம்புகள் புடைக்கின்றன. உடைத்து நொறுக்கலாம் என்று போனால், அட, பிளாஸ்டிக் பொம்மை.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஜெ.டபிள்யூ.டி சக்ரா எனும் ஒரு ஆய்வு சென்னை இளைஞர்கள் பழமைவாதிகள், அச்சம் மிகுந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. மிகவும் முற்போக்கானவர்களையே பிற்போக்காய் செயல்பட வைக்கும் சூழல் இங்கு நிலவுகிறது. திருமணத்துக்கு முன்பே நானும் என் மனைவியும் மிகவும் நவீனமாய், முற்போக்காய் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டோம். ஆனால் என் மாமியார் போலீசில் பிடித்துக் குடுப்பேன் என் மிரட்டியதால், திருமணம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பதிவாளர் அலுவலகத்துக்குப் போய் திருமணத்தை சுளுவில் முடித்து விடலாம் என்று பார்த்தால், சட்டம் மாறியது தெரிய வந்தது. போலித்திருமணங்களை தடுக்க நிலுவையில் இருந்த அச்சட்டம், மறைமுகமாய் பழமைவாதிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டது. ஏதாவது கோவிலிலோ, மண்டபத்திலோ மணமுடித்து விட்டு ஆதாரம் தந்தால் பதியலாமாம். மண்டபத்திற்கு என்னிடம் வசதி இல்லை. மனசாட்சி இடம் தராவிட்டாலும், ஒரு சின்ன கோவிலாய் ஏற்பாடு செய்தேன். ஆனால் அங்கும் பழமைவாதிகள் ஒரு ஆப்பு வைத்திருந்தார்கள். திருமணம் கோவிலில் பதிவு செய்வதற்கு மாமியார்/மாமனார் கையெழுத்திட வேண்டுமாம். என் மாமியார் திருமணத்துக்கு வருவாரா மாட்டாரா என்று கடைசி நேரம் வரை திகிலாகவே இருந்தது. ஒருவழியாய் அவர் ஒருமணி நேரத்துக்கு முன் விஜயமாகி திருமணத்தை 20-20 கிரிக்கெட் போல் முடித்து வைத்தார். இந்த சட்டக் குளறுபடி சாதிப் படிநிலையை, பழமைவாதத்தை மேலும் வலுவாக்கவே பயனபடுகிறது.
இதையெல்லாம் கடந்து, தமிழ் நாட்டுக்கு ஒரு நீண்ட திராவிட அரசியல் பாரம்பரியம் உண்டு. நமது திறமிக்க தலைவர்களின் சீரிய வழிகாட்டுதல் இருந்தும், சாலை ஓரங்களிலும் மத்தியிலுமாய் அவர்கள் சிலைகளாய் வேறு நின்று முற்போக்கு சிந்தனைகளை நினைவுபடுத்துயும் கூட, நாம் ஏன் இப்படி பிற்போக்கு மந்தைகளாய் உள்ளோம்? இதை தமிழகத்தை செவ்வனே ஆண்டு வரும் திராவிட அரசுகளின் கையாலாகாத்தனம் என்று பழி சொல்லும் சில அன்னிய சக்திகள் உள்ளன. அவர்களுக்கு நான் கூற விரும்புவது: மனிதன் குரங்கிலிருந்து பரிணமிக்க பல மில்லியன் வருடங்கள் ஆனது. அப்படியிருக்க பழமைவாதியிலிருந்து அவன் சில பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே முற்போக்குவாதியாக வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்! அதற்குள் எப்படி நம் அரசுகள் அவனை சங்க கால சிறப்புக்கு கொண்டு செல்ல முடியும். நாம் மேலும் பொறுமைசாலிகள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
நமது பிற்போக்கு நிலைக்கு எரிக் புரோம் எனும் ஜென்மானிய தத்துவ, மனவியலாளரின் சிந்தனையில் பதில் உள்ளது. என் நண்பன் ஜோர்ஜ் ஒரு நாய் பயிற்சியாளன் மற்றும் கால்நடை மருத்துவன். அவன் நாய்கள் பற்றி ஒன்று சொன்னான். நாய்கள் சமூகத்துக்குள் கண்டிப்பான ஒரு படிநிலை உண்டு. அதாவது தலைவனுக்கு கீழே வலிமை குன்றின நாய்கள். அதற்கும் கீழே நோஞ்சான்கள், குட்டிகள், இப்படி. ஆனால் இன்றைய பல நவீன குடும்பங்களில் நாய்கள் குடும்ப உறுப்பினருக்கான சமஅந்தஸ்துடன் வளர்க்கப்படுகின்றன. இதனால் யார் முதலாளி \ கூட்டத்தலைவன் என்ற குழப்பம் நாய்க்கு ஏற்படுகிறது. தொடர்ந்து தலைவன் இல்லாத பிரஜை பதற்றம் கொள்கிறது. சில நாய்கள் தங்களை தலைவன் என்று சுயமாய் முடி அணிந்து உங்களை அடக்கி ஆள முயலும். சில நாய்கள் மாறாய் ஒருவித இறுக்கத்துடன் ஆர்வமற்று காணப்படும். சொன்ன பேச்சை கேட்காத, சாப்பாட்டை பறித்து ஓடும் நாய்கள் உண்மையில் மனிதனை பிரஜை என்று கருதுபவை. மற்றவை தான் என்னவென்ற குழப்பத்தில் இருப்பவை. இந்த படிநிலை பதற்றமும், அடக்குமுறை குணமும் தொழில்மயமாக்கலின் பின்னான நவீன சமூகத்தில் காவல் மிருக நிலையிருந்து செல்லப்பிராணியாக பதவி உயவு பெற்றதில் நாய்க்கு கிடைத்த அபரிதமான சுதந்திரத்தினால்தான் ஏற்பட்டது. புரோம் தனது "சுதந்திரம் மீதான பயம்" என்னும் நூலில் இவ்விசயத்தை மனித வரலாற்றை முன்வைத்து விளக்குகிறார். முன்-தொழில்மய சமூகத்தில் மனிதன் மிகச்சட்டதிட்டமான புறாக்கூண்டு சமூக அமைப்புக்குள் வாழ்ந்தான். சமூகம் வரையறுத்தது போன்றே எளிதாய் வாழ்ந்து முடித்தான். தன் அடையாளம் என்னவென்ற கவலை அவனுக்கு இல்லை. அது ஏற்கனவே முடிவாகி இருந்தது. தொழிமயமாக்கலுக்குப் பின், முதலாளித்துவத்தின் எழுச்சியின் போது, அவனது அடையாளம் மாறியது. உற்பத்தியில் பங்களிக்கும் பணியாளன், மற்றும் உற்பத்திப் பொருளை நுகர வேண்டிய நுகர்வோனாக ஒரு புது அடையாளப்பட்டி அவன் கழுத்தில் மாட்டப்பட்டது. சமூக அமைப்பும் வெகுவாக தளர்ந்தது. மனிதன் தனிமனிதன் ஆனான். மேற்கில் மறுமலர்ச்சி காலகட்டத்தில் வாழ்வின் மையத்தில் சர்வாதிகாரியாக வீற்றிருந்த கடவுளின் இடம் கேள்விக்குறியானது. லூதர், கால்வின் போன்றோர் ஆன்மீகப் பாதையில் தனிமனிதனின் பங்கு பற்றி வாதிட்டனர். அதோடு அவன் தலையில் "சுதந்திரம்" எனும் ஒரு முள்கிரீடமும் வைக்கப்பட்டது. தன் விதியை அவனே தீர்மானிக்கும், அதற்கு அவனையே பொறுப்பாக்கும் பேஜாரான சுதந்திரம். முந்தைய சட்டதிட்டங்களும், நம்பிக்கைகளும், பிம்பங்களும் இருந்த இடத்தில் இப்போது பெரிய வெற்றிடம் இருந்தது. காலுக்கு கீழே நிலம் நகர்ந்து எங்கும் அந்தரம் ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. வெற்றிடத்தில் புதிதாய் ஒரு சமூக ஒழுங்கு முறையை தனிமனித நிலையிலிருந்து உருவாக்குவது. இரண்டாவது, எஞ்சின பழைய அமைப்புகளுக்குள் ஓடி ஒளிவது. தனிமை, ஸ்திரமின்மை, பொறுப்பின் பதற்றம் அவனை கடுமையாய் அழுத்தியது. பலரும் ஓடி ஒளிந்தனர். ஏதாவது ஒரு வசதியான முகமூடியை மாட்டிக் கொண்டனர். நமது முந்தைய தலைமுறைக்கு தலைவர்களில், அரசியல் மாற்றத்தின் நன்மையில் நம்பிக்கை இருந்தது. அவர்கள் சித்தாந்தங்களை முகங்களில் மாட்டியிருந்தனர். நமது முந்தைய தலைமுறையில் தலைவர்களின் பெயரை குழந்தைகளுக்கு ஆசையாய் சூட்டினார்கள், நேரு, இந்திரா என. இப்போது வாஜ்பாய், லல்லு என பெயர் வைக்கும் தைரியம் உண்டா? நவீனத் தனிமனிதனுக்கு பொருள் நுகர்வதிலும், கேளிக்கையிலும் மட்டும் நம்பிக்கை மீதமிருக்கிறது. அவன் ஊடகங்கள் கட்டி எழுப்பும் கேளிக்கை நட்சத்திர பிம்பங்கள் பின்னிருந்து எட்டிப் பார்க்கிறான்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உலகமயமாக்கல் கொண்டு வந்துள்ள கருத்தியல், அரசியல் சுதந்திரம் ஒரு நிலஅதிர்வு போல் சமாளிக்க முடியாததாக உள்ளது. அரசியல் சுதந்திரம் பொருளாதார சுயசார்பு தந்து பெண்களை பெருமளவில் விடுவித்துள்ளது. இது ஆண்களை தகிடுதித்தாட வைத்துள்ளதால், அவர்கள் பெண்கள் மீதான் தங்கள் பிடியை மேலும் வன்மமாக்கியுள்ளனர். விளைவுகள்: ஒழுக்கப் போலீஸ், தொலைக்காட்சி சேனல்கள் மீதான பாலியல் கெடுபிடி, கருத்தடை மாத்திரை மீதான எதிர்ப்பலை, பல்கலை, கல்லூரி ஆடைக்கட்டுப்பாடு போன்றவை. இரவுப்பணியின் போது சில பி.பி.ஓ பெண்கள் பரிதாபமாய் கொல்லப்பட்ட போது மக்களின் கவனம் பாலியல் பாதுகாப்பில் குவிந்திருந்ததை கவனியுங்கள். இப்போதும் கூட பி.பி.ஓக்கள் மீதான குற்றச்சாட்டு பாலியல் ஒழுக்கம் பற்றியதே. இது நவீன இந்திய ஆணின் பதற்றம். கருத்தியல் சுதந்திரம் பலவித புது கலாச்சாரங்கள், பழக்கங்கள், கருத்துக்களை நம் பரிசீலனைக்கு கொண்டு வருகிறது. ஒரு விதத்தில் நம் சிந்தனை, கலாச்சார தளத்தை இது விரிவு செய்தாலும், நமது காலங்காலமான சில அடிப்படைகளை மறுபரிசீலனை செய்யும் கட்டாயமும் ஏற்படுகிறது. பாதுகாப்பு இழந்ததாய் பதறுகிறோம். மீண்டும் பழைய மரபுகள், நம்பிக்கைகளில் போய் ஒளிந்து கொள்வோம். இது ஒருவித இடத்தை தக்கவைப்பதற்கான முயற்சி. ஐ.டி படித்த என் தோழி அபர்ணா உடல் பருமனுக்காக சிகிச்சை எடுத்து வந்தாள். அவள் ஐயர். சோறு, கூட்டு, சப்பாத்தி என எதிலும் நெய் வடியாவிட்டால் இறங்காது. நெய் அவள் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய போது, அவள் கடுமையாக மறுத்தாள். நெய் புத்தி கூர்மைக்கு சிறந்ததாம். அவள் சாதியில் பலர் விஞ்ஞானி, பொறியியலாளர் என்று உயர் பதவிகளில் இருப்பதற்கு நெய் தான் காரணமாம். அவளது வாதத்தின் அபத்தம் அவளுக்கு புரியாமலில்லை. ஆனாலும் தனது சம்பிரதாய அடையாளம் ஒன்றையே அவள் பெரிதும் நம்பி, ஒட்டிக் கொண்டிருப்பதால், இதுபோல் அவளுக்கு முன்னோர்கள் வழங்கின மூட நம்பிக்கைகள், அபத்த பெருமைகளை எல்லாம் வாங்கி தலைமேல் தூக்கி கொண்டாட வேண்டியுள்ளது. இது ஒரு வசதி. மாற்றத்தை நேருக்கு நேர் ச்ந்திக்கும் திராணி இல்லாததன் விளைவு. இப்படி மாற்றம் கண்டு பதறும் மனிதன் புரியும் எதிவினைகளை புரோம் வகைப்படுத்துகிறார்: சர்வாதிகார வகை, எந்திரமனித உடன்படு முறை மற்றும் அழிவுசார் முறை. சர்வாதிகார எதிர்வினைக்கு ஹிட்லர் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய மனிதர்கள் தங்கள் அடையாளம் சார்ந்த குறைபாட்டை பிறரை அடக்கி ஆள்வதன் மூலம் நிறைவு செய்யப் முயல்வார்கள். இரண்டாவதான எந்திரமனித உடன்படு வகை மனிதர்கள் அபர்ணா வகை. மத்திய, உயர்மத்திய வகுப்புகளை சேர்ந்தவர்கள். மூன்றாவது வகை மனிதர்கள் பிறிதை அழிப்பது மூலம் தங்கள் இருப்பை பத்திரப்படுத்த முயல்பவர்கள். சமீபத்திய பஜ்ரங்தள், எம்.என்.எஸ் மற்றும் இந்து இஸ்லாம் போன்ற மதம்சார் தீவிரவாத நடவடிக்கைகள், பழமைவாத செயல்களில் ஈடுபடுபவர்கள், துணை நிற்பவர்களை நாம் இந்த பிரிவுகளுக்குள் அடக்கலாம். நாசி ஜெர்மனிக்கும் தற்போதைய இந்தியாவுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. முதலாம் உலகப்போருக்குப் பின் ஜெர்மன் பாதுகாப்பற்றதாய் உணர்ந்தது. மக்கள் நம்பிக்கை அற்றிருந்தனர். ஹிட்லர் தன் மக்களிடம் யூதர்கள் மீது இனவெறியையும், ஆரிய சுய அபிமானத்தையும் வளர்த்தெடுத்தான். அதன் மூலம் சர்வாதிகாரியானான். இன்றைய இந்தியாவில் மக்களிடம் மாநில, மொழி, மதம் வாரியான சுய அபிமானம் முதலாம் வகை மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது. மோடி, அத்வானி, தாக்ரே நமது சமகால ஹிட்லர்கள். மொழி, மத, மாநில ரீதியான கலவரங்களில் மூன்றாவது வகை மனிதர்கள் செலுத்தப்படுகிறார்கள். ஹைடெக் தீவிரவாத்தை முன்னெடுத்துப் போவது இரண்டாவது மற்றும் மூன்றாவது வகைகள்: லெப்டனண்டு கர்னல், காவி சாமியார், மென்பொருள் பொறியாளர் என மேதாவிப் படை.
இப்படியாக, தமிழக மக்களின் பழமைப்போக்கிற்கு திராவிட கட்சி அரசுகள் பொறுப்பல்ல. மேலும், தமிழர்கள் சிறந்த பகுத்தறிவாளர்களாய் பரிணமிக்கும் பொருட்டு, மேலும் பல சிலைகளை நிறுவ வேண்டியுள்ளது; வீட்டுக்கு வீடு இலவச டி.விக்கள் வினியோகிக்க வேண்டியுள்ளது. பல சாலைகள், சந்து, பொந்துகளுக்கும் தலைவர்களின் திருநாமங்களை சூட்டியாக வேண்டும். ஆகையால் மக்களின் பரிணாமத்துக்கு போதுமான கால அவகாசம் அளித்து திராவிட கட்சிகளையே இன்னும் பல மில்லியன் ஆண்டுகள் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Share This

1 comment :

  1. அடிப்படையில் ஆரியர்கள் அசைவர்களே. யாகங்களில் மிருகங்களை பலியிட்டு அதன் மாமிசத்தை புசித்தவர்கள்தான் பிராமணர்கள். சைவ உணவு பழக்கம் தமிழ் சம்ணத்தை அடிப்படையாக கொண்டது. அதற்கு கிடைத்த மதிப்பின் காரணமாக பிராமணர்களால் கைக்கொள்ளப்பட்டது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates