Thursday 18 June 2009

போலியோ: ஒரு பாம்பு--ஏணி ஆட்டம்




"காட்பாதர்" பட புகழ் பிரான்சிஸ் பொர்டு கப்போலா குழந்தைப் பருவத்தில் போலியோவால் தாக்கப்பட்டார். அந்த அனுபவத்தை சொல்கிறார்:
"ஒன்பது வயதில் போலியோ காரணமாய் என்னை ஒரு அறையில் பூட்டி வைத்தார்கள். அது குழந்தைகளுக்கு பரவும் நோய் என்று நம்பி பிற குழந்தைகளிடம் இருந்து என்னை விலக்கி வைத்தார்கள். நண்பர்களுக்காகவும், உடனிருப்புக்காகவும் ஏங்கியபடி படுக்கையில் கட்டுண்டு கிடந்தது நினைவுள்ளது"
கலாச்சார முன்முடிவுகள் காரணமாய் குறிப்பிட்ட சாதிகளை ஒடுக்கும் சமூகம் அறிவியல் விழிப்புணர்வின்மையால் ஊனர்கள் விலக்கி வைத்து தனிமைப்படுத்துகிறது. இங்கு நான் எடுத்தாண்டுள்ள பகுதியில் கப்போலா தனது உற்றமும், சுற்றமும் போலியோ "குழந்தைகளுக்கு பரவும் நோய்" என்ற மூட நம்பிக்கை கொண்டிருந்ததை குறிப்பிடுகிறார். இன்றும் நம் சமூகத்தில் ஊனம் பற்றின குறைபட்ட புரிதலே உள்ளது. பல் பொடி, பஸ்ரூட், பால் விலை போன்ற அன்றாட வாழ்க்கைத் தகவல்களில் மட்டுமே மக்களுக்கு ஆர்வம். மிகவும் விசித்திரமாக, படித்தவர்களில் பலரிடம் இந்த மனப்பான்மை உள்ளது. என் அண்டை வீட்டு டவுன் சிண்டுரோம் குழந்தையை எங்கள் தெருவில் அனைவரும் பைத்தியம் என்றே குறிப்பிடுகின்றனர். இன்போசிஸில் பணி புரியும் என் மனைவியின் மாமாவுக்கு அனைத்து போலியோக்காரகளும் சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்ல வேண்டியவர்கள் என்று புரிதல். என் திருமணத்தை அவர் எதிர்க்கக் காரணம் தமாஷானது. அவர் என் மனைவியிடம் சொன்னார்: "அபிலாஷுக்கு தேவை ஒரு மனைவி அல்ல, கூட மாட அவனுடன் இருக்க ஒரு செவிலி. அவனை கட்டிக் கொண்டால் வீல் சேர் தள்ளியே முடங்கி விடுவாய்". சாதி, மதம், பால் போன்ற வேறுபாடுகளால் நாம் பிளவுபடுவதற்கும் அன்னியமானவற்றை அறிய அணுவும் ஆர்வமில்லாத கிணற்றுத் தவளைத் தன்மையே முக்கிய காரணம். ரோபோட்டிக்ஸ் மேற்படிப்பு படிக்க விரும்பும் என் மனைவியின் தம்பியை கால் கழுவாமல் வீட்டுக்குள் வந்ததற்கு கண்டித்தால் அவன் பதில் "எனக்கு என்ன தீட்டா?". அவனுடன் வாக்குவாதம் நேரும் போது என் மாமியார் கூறுகிறார்: "நீ ஒரு ...பயல்". என் மாமியார் கேந்திர வித்தியாலயா ஆசிரியர். சரியான தகவல்கள் உண்மையை கட்டுவிக்கின்றன; உண்மை மனவிரிவு தருவது. இந்த தகவல் யுகத்தில் எளிய தகவல்களை பலவற்றை வசதியாக தவிர்க்கிறோம்.
போலியோ பற்றின என் பெற்றோரின் அறியாமை என் பால்யம் முழுதையும் அலைகழித்தது.
பள்ளி நிர்வாகம் என்னை எல்.கே.ஜியில் தோற்கடித்தது. வேறு பள்ளிக்கு மாற்றி விடுமாறு கேட்டுக் கொண்டது. காரணம் நான் படிக்காதது அல்ல: "பையனை சதா கண்காணிக்க முடியாது, விழுந்து கிழுந்து தொலைத்தால், நாங்கள் பொறுப்பாக முடியாது". இத்தனைக்கும் கன்னியாஸ்திரிகள் சேவை அடிப்படையில் நடத்தின கல்வி நிறுவனம். பொது இருக்கையில் என்னால் அமர முடியாது என்று பெற்றோரும், நிர்வாகமும் அபத்தமாய் நம்பியதால், ஒரு வருடம் அப்பள்ளியில் என்னை தனி இருக்கை, மேசையில் ஓரமாய் அமர்த்தினார்கள். தனியாய் இருந்த காரணத்தால் என்னிடம் யாரும் பேசவில்லை. புதுப்பள்ளியில் சேர்த்த பின்னரும் இதே நிலைமை. பத்தாவது வயது வரை எனக்கு பேச, பழக நண்பர்கள் இல்லை.
இளம்பிள்ளை வாதம் இளம்பிள்ளைகளை மட்டும் பாதிக்கிற நோய் அல்ல. வளர்ந்தவர்களுக்கும் போலியோ வரும்.
குழந்தைகளில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் போலியோவால் வாதம் வரும் என்றால் வளர்ந்தவர்களில் எழுபத்தைந்தில் ஒருவருக்கு "இளம்பிள்ளை வாதம்" வரலாம். போலியோ வாதம் கை, கால்களின் நோய் அல்ல. மைய நரம்பு மண்டலத்தை வைரஸ் தாக்குவதால் நேர்வதே இது. மேலும் நுட்பமாய் சொல்வதென்றால் முதுகுத்தட்த்தில் உள்ள கிரே மேட்டர் எனும் பகுதியின் மோட்டார் நரம்பணுக்கள் போலியோ கிருமியால் அழிக்கப்படுகின்றன. இதனால் உறுப்புகளுக்கும் மூளைக்குமான தொடர்பு அறுகிறது. தகவல்கள் போய் சேராமல், மூளையின் தூண்டுதல் இல்லாமல் கை, கால்கள் சூம்பும், வலுவிழக்கும், கட்டுப்பாடின்றி துவளும், இறுதியில் வாதம் நேரும். போலியோ நோயில் மூன்று வகைகள் என்றாலும் முதுகுத்தண்டு போலியோ தான் பெரும்பாலானோரை பாதிப்பது. ஆதிகிரேக்கர்கள் இதை அறிந்திருந்தார்கள்: போலியோ மெலிடில் எனும் கிரேக்க வார்த்தைகளுக்கு "சாம்பல்" + "வீக்கம்" என்று பொருள் கொள்ளலாம். இதில் "சாம்பல்" முதுகுதடத்தின் கிரே மேட்டரைக் குறிக்கிறது. "வீக்கம்" போலியோ தாக்குதலில் கிரே மேட்டா¢ல் காணப்படும் வீக்கத்தை சொல்கிறது. நம்மில் பலருக்கு போலியோ ஊனத்தில் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மோட்டார் மட்டுமே பாதிக்கப்படுகின்றன; உணர்வு நரம்புகள் அழிவதில்லை என்ற தகவல் தெரிவதில்லை. ஆதிகிரேக்கர்கள் போல் வாதத்துக்கும், காயத்துக்குமான வேறுபாடு பொதுமக்களில் படித்தவர்களுக்கே தெரிவதில்லை. போலியோ ஊனர்களின் கால்களில் உணர்விருக்காது அல்லது நடக்கையில் பயங்கரமாக வலிக்கும் போன்ற மூட நம்பிக்கைகளை இவர்கள் கொண்டுள்ளார்கள்.
என் பெற்றோர்களுக்கு போலியோ வாதம் என்பது கால்களின் பலவீனம் என்ற தவறான புரிதல் இருந்தது. அவர்கள் சந்தித்த பல புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களும் அதையே கூறினர். விளைவாக என் வாழ்வின் முதல் ஐந்து வருடங்கள் எண்ணை தடவப்பட்டு, ஊறுகாய் போல் ஊறிக் கிடந்து கழித்தேன்.
தோலோடு போகும் எண்ணெய் எப்படி நரம்புகளை உயிர்ப்பிக்கும் என்ற எளிய கேள்வியை இன்னமும் யாரும் இந்த மூட எண்ணெய் வைத்தியர்களிடம் கேட்டபாடில்லை. தேனாம்பேட்டை சேர்ந்த என் நண்பர் கால்களுக்கு இது போன்ற ஒரு நரம்பிய பாதிப்பால் வாதம் வந்து சூம்பி விட்டது. அவற்றை பழையபடி சதைபிடிக்க வைக்கிறேன் என்று சமீபமாய் ஒரு ஆயுர்வேத மருத்துவர் போலியாய் வாக்குறுதி தந்தார்; நண்பர் அதை நம்பி கோயம்பத்தூரில் அம்மருத்துவரது மருத்துவமனையில் சேர்ந்தார். ஒரு மாதம் எண்ணெய் பிழிவு, பிரத்தியேக உணவு, கஷாயம் என்று கழித்தார். கால் ஒரு இஞ்சு கூட பருக்கவில்லை. மருத்துவரை என் நண்பர் வினவ அவர் "ஏறி மிதித்து விடுவேன்" என்று மிரட்டியிருக்கிறேன். 15,000 ரூபாய் இழந்தது பரவாயில்லை என்று ஓடி வந்து விட்டார். அங்கு மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கானோர் இப்போதும் டேப்பால் தங்கள் கால்களை அளந்தபடி காத்திருக்கிறார்கள். போலியோ தடுப்பூசி போடாததை பற்றி நான் என் பெற்றொரை குற்றம் சாட்டினது இல்லை. அவர்களது அறியாமையால் பிற்பாடு பல போலி வைத்தியசாலைகளின் எண்ணெய் வீச்சத்தில், இருளில் என் பால்யம் ஆவியானதை மன்னிக்க முடிவதில்லை. உலகின் ஆகப்பெரும் குற்றம் மடமைதான், குறிப்பாய் படித்தவர்களது அறியாமை: என் அப்பா ஒரு வங்கி அதிகாரி.
என் வாழ்வின் முதல் 15 வருடங்களை எந்த அடிப்படையும் அற்ற சிகிச்சை முறைகளில் வீணடித்திருக்கிறேன். ஒரு சம்பவம் மட்டும் கூறுகிறேன்.
எங்களூரில் ஒரு வைத்தியர் திடீரென்று அவதரித்தார். அவர் தனது குரு இமயமலையில் தவமிருக்கும் ஒரு ரிஷி என்று கூறிக் கொண்டார். அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். அப்போது தரையில் ஊர்வதால் எனது முட்டிப் பகுதி கறுத்திருந்தது. அந்த தோல் கறுப்பை ஒரே நாளில் மாற்றி விடுகிறேன் என்று அவர் வாக்களித்தார். பிறகு காலை நீவிப் பார்த்தவர் மூன்றே மாதத்தில் என் வாதத்தை குணப்படுத்தி விடுவதாய் சொல்லி எனக்கு சிகிச்சை ஆரம்பித்தார். என் பசியை பயங்கரமாய் தூண்டும்படி ஒரு லேகியம் தந்தார். நான் கர்பிணிப்பெண் போல் தினசரி இரண்டு மடங்கு உணவு புசித்தேன். சாப்பாடு மூலம் என் கால் தசைகளை வளர்த்து என்னை நடக்க வைப்பதே அவர் நோக்கம். காலுக்கு எண்ணெய் தேய்த்து இரண்டு மணி நேரம் மரக்கட்டிலில் படுக்க வைத்தார். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் வேறு. உணவில் புளி, உப்பு, எண்ணெய் சேர்க்கக் கூடாது. மூன்று மாதத்தில் 55இலிருந்து என் எடை 75க்கு தாவியது. கால் மட்டும் பெரிய உடலில் குழந்தை போல் சிறிதாய். மூன்றாவது மாதம் அந்த மகாவைத்தியர் ஊரிலிருந்து மாயமானார். 75 கிலோ எடையை குறைக்க எனக்கு அடுத்து பத்து வருடங்கள் ஆகின. இந்த அதிக எடை காரணமாய் பல பெண்கள் என்னை நிராகரித்தார்கள். கழிவிரக்கத்தில் நான் இலக்கியவாதி ஆனேன். அந்த லேகியம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
தண்டுவடத்தின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, எவ்வளவு வைரஸ்கள் தாக்கின, பாதிக்கப்பட்டவாரின் எதிர்ப்பு சக்தி ஆகியன பொறுத்து எப்பகுதியில் (கை, கால்) வாதம் வரும் மற்றும் வாதத்தின் தீவிரம் என்ன என்பன முடிவாகும். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தரையில் தவழ்ந்தபடி, முட்டியில் கையூன்றியபடி பல விதங்களில் ஊனர்கள் இயங்குவதை பார்த்திருப்பீர்கள். கால் முழுக்க பாதிக்கப்பட்டவர்களும் கூட காலிப்பர் அல்லது பிரேஸ் எனும் கருவியை பூட்டிக் கொண்டு நடக்கலாம். அது அவசியமும் கூட. காலிப்பர் பலவீனமான கால்களின் பக்க வலுவுக்காக பூட்டப்படுவது. இது காலுக்கு பாதுகாப்பும் அளிக்கும். இதில் இரண்டு வகை. இரும்புக் கம்பிகளால் செய்யப்படும் கனமான பழைய வகை; பிளாஸ்டிக் போல தோற்றமளிக்கும் ஆனால் உடையாத மூலப்பொருளால் செய்யப்படும் லேசான நவின கருவி. பலரும் பழைய வகை இரும்பு காலிப்பரைதான் பயன்படுத்துகிறார்கள் (விலை ரூ 1000 இருந்து 3000 வரை). நவீன காலிப்பர் கொஞ்சம் செலவு அதிகம் (ரூ 10,000). ஆனால் பலரும் காலிப்பரை பயன்படுத்துவதில்லை. போலியோ பாதித்தவாரின் கால் எலும்புகள் வலுவற்றவை. சாதாரணமாய் வழுக்கி விழுந்தால் எலும்புகள் முறிந்து, பிறகு காயம் ஆற மாதங்கள் ஆகும். காலிப்பர் அணிவது வீழ்ச்சியின் போது காலை முறிவிலிருந்து காப்பாற்றும். அது மட்டுமல்ல போலியோவால் வளைந்த முட்டிப்பகுதி வளைந்திடாமல் தடுக்கவும் இது அவசியம். சினிமாவிலும், நிஜ்வாழ்விலும் நீங்கள் பார்க்கும் ஊனர்கள் கைகளை முட்டியில் ஊன்றி அல்லது சிறு சாய்வுடன் நடப்பவர்களே. காரணம்: காலிப்பர் கருவியின் கனம், அது காலை கட்டுப்படுத்துவது பிடிக்காமல் போவதால் அதைத் தவிர்ப்பது ஒரு புறம், பெற்றோர்களே அதை ஊக்குவிக்காதது மற்றொரு புறம். பொதுவாக இக்கருவியை அணியாமல் நகர்வது இயல்பானது, சுதந்திரமானது என்றொரு தவறான எண்ணம் உள்ளது. அசோக் நகரில் உள்ள பல்லவா ஆஸ்பத்திரியின் எலும்பு சிகிச்சை மருத்துவர் அச்சுத ராமராஜு 18 வருடங்கள் போலியோக்காரர்களுக்கு சிகிச்சை அளித்தவர். என் காலிப்பரை கவனித்த அவர் "நீங்கள் இதை அணிவது ரொம்ப பாராட்டத்தக்கது ... ரொம்ப பேர் காலிப்பர் அணியாது காலை முறித்துக் கொண்டு, எளிதில் குணமடையாமல் என்னிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள்" என்றார். நான் அவரிடம் ஒன்றை சொல்லாமல் மறைத்தேன்: 25 வயது வரை நான்கூட காலிப்பரை தவிர்த்து முட்டியில் ஊன்றி நடந்து வந்தேன், ஒரு விபத்து நடக்கும் வரை.
நான் முட்டியில் கால் ஊன்றி நடக்க ஆரம்பித்தது 12 வயதில். என் மொத்த குடும்பமும் இதை ஆமோதித்தது. இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அவர்கள் தாம் செய்தது பெரும் தவறு என்பதை உணரவில்லை. இப்படி நடந்ததில் நான் வழக்கமாய் மாதம் ஒருமுறை விழுந்து கால் சுளுக்கிக் கொள்வேன். ஆனாலும் காலிப்பர் மீதான வெறுப்பால் தொடர்ந்து அதை அணிவதை தவிர்த்தேன். 13 வருடங்களுக்குப் பிறகு, ஒரு நாள் விடிகாலை கழிப்பறைக்கு செல்லும் போது எப்போதும் போல் வழுக்கி விழுந்தேன். ஆனால் இம்முறை சுளுக்காமல் முட்டி எலும்பு முறிந்தது. காயம் ஆறி நடக்க எனக்கு 6 மாதங்கள் ஆகின. கிடைத்த முதல் வேலை பறி போனது. அதன் பிறகு இன்று வரை இரவு தூங்கும்வரை நான் காலிப்பரை கழற்றுவதில்லை.
என் பக்கத்து வீட்டில் ஒருவருக்கு போலியோ பாதிப்பால் கால் வாதம். ஆனால் சைக்கிள் ஓட்டுவது, ஏறித்தாவுவது, ஓடுவது போன்ற பல சாதனைகளை செய்தார். அவரோடு ஒப்பிட்டு அப்பா என்னிடம் சொல்வார்: "அவன் ஏழை, அதனால் ஊனத்தை பொருட்படுத்தாது நடக்கும் அவசியம், ¨தைரியமாக நடக்கிறான். உன்னை சொகுசாக வைத்திருக்கிறோம் என்பதால் இருந்த இடத்தில் சுகம் கண்டு விட்டாய். நடக்க நீ முயற்சி எடுப்பதில்லை; உனக்கு மன ஊக்கம் இல்லை". அப்புறம் அவர் எம்.ஜி.ஆர் தொண்டையில் சுடப்பட்டு விட்ட பின்னரும் "தத்ததின் தத்தமே" என்று கடுமையாய் முயன்று பேசிய்தை மிமிக்ரி பண்ணிக் காட்டுவார். என்னை தூக்கி நிறுத்தி விட்டு, "உன்னை அறிந்தால் ..., நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..." போன்ற பாடல்களை பாடி "வா... ஓடி வா" என்று தள்ளிப் போய் நின்று ஊக்கமூட்டி அழைப்பார். முடியாமல் நான் சப்பென்று அமர மறுபடி வைவார். பிறகு பிடித்து நடப்பதற்கு பக்கவாட்டில் கழிகளை கட்டி அதில் பயில வைத்தார். இத்தனை கொடுமைக்கும் காரணம் அவருக்கு ஒரு முக்கியமான தகவல் தெரியாமல் இருந்ததே: நான் நடக்காததற்கும், அயல் வீட்டு சிறுவன் தாவிக்குதித்ததற்கும் காரணம் காலுக்கும், மூளைக்குமான நரம்பியல் தொடர்பே, ஊக்கமல்ல.
போலியோ பாதிப்பால் மூளைத்தண்டு மற்றும் முதுகுத்தடத்தில் பல மோட்டார் நரம்பணுக்கள் இறந்து விடும். ஆனால் பிற்பாடு அவற்றில் மீதமுள்ள நரம்பணுக்களில் முளைகள் கிளைக்கும். இவை வீங்கின நரம்பணுக்கள் ஆக மாறும். 200 தசை செல்களை மட்டுமே கட்டுப்படுத்தி வந்த ஒரு ஒற்றை நரம்பணு (முளை) இப்போது 1000 செல்களை வரை கட்டுப்படுத்தி அதிகப் பணி செய்யும். இந்த முளை நரம்பணுக்களால் தான் போலியோ பாதிக்கப்பட்டு ஒரு வருடமான பின்னும் சிலர் நடக்கும் திறன் பெறுவது. இந்த நரம்பு முளைகள் இவர்களின் கால் தசைகளுடன் மூளைக்கு தொடர்பு ஏற்படுத்திட, கால்கள் உயிர்க்கும், வளரும், வலுப்பெறும். என் பக்கத்து வீட்டு ஊனருக்கு இதனால்தான் நடக்கவும், ஓடவும், சைக்கிள் மிதிக்கவும் முடிந்தது; இதில் மனவலுவை கொண்டாட ஒன்றும் இல்லை.
எனக்கு ஆரம்பத்தில் இரண்டு கால்கள் செயலிழந்தாலும், மேற்கூறின முளை நரம்பணுக்கள் தோன்றி ஓ.டி செய்ததால் வலது கால் ஓரளவு செயலூக்கம் பெற்றது. காலின் மிதிக்கும் தசைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், தூக்கும் திறன் கிடைக்கவில்லை. அந்த தசைகளுக்கு நரம்பியல் தூண்டுதல் இல்லை. இதனால் என்னால் இரண்டு சக்கர வாகனத்தை சமனிலை தக்கவைத்து ஓட்ட முடியாது. கூட இரண்டு சக்கரங்கள் பொருத்துவது அவசியம் என்று கருதினேன். ஆனால் என் பெற்றோர், உறவினர், அண்டை அயலார் நான் தைரியம் வளர்த்துக் கொண்டு இரண்டு சக்கர வண்டிதான் ஓட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியாய் இருந்தனர். நான் வண்டி ஓட்ட தயாரான கதை சுவாரஸ்யமானது, சற்று கசப்பானதும் கூட.
பெற்றோர்களும், உறவினர்களும் இரண்டு சக்கர வண்டியை ஓட்டிப் பழக எனக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தார்கள். நாகர்கோவிலில் ஒரு ஊனப் பெண் இரண்டு சக்கர ஸ்கூட்டரை லாவகமாக ஓட்டி பிரபலமாக இருந்தாள். அவளிடம் என்னை ஒப்பிட்டு அடிக்கடி பேசி வந்தவர்கள் ஒரு நாள் அவளைக் காட்ட அவள் வீட்டுக்கே அழைத்துப் போனார்கள். அந்த அழகான பெண் ஒரு காலில் நவீன பாணி காலிப்பர் அணிந்திருந்தாள். அதில் ஆட்டோமெட்டிக் லாக் எனும் அமைப்பு இருந்தது. அவள் முன்னங்காலை அழுத்தினால் முட்டி மடியும், நிமிர்த்தினால் பழையபடி நேராக பூட்டி விடும். சுலபமாக அவள் பலமுறை ஏறி ஓட்டிக் காமித்தாள். அவளது மற்றொரு காலில் செயல்திறன் இருந்ததை, அவள் நவீன பாணி கால் கருவி அணிந்திருந்ததை யாரும் கவனிக்க வில்லை. மாறாக "ஒரு பொம்புளப் புள்ள ஓட்டுறாப் பாரு, உனக்கென்ன பயம்" என்று என் தலையில் குட்டினார்கள். தன்மானத்துக்காக முயற்சிப்பதாய் சத்தியம் செய்தேன். தினமும் என் அத்தான் எனக்கு ஸ்கூட்டர் பழக்கினார். நான் ஓட்டி வருவது பார்த்தால் சாலையில் சிதறி ஓடினார்கள். ஒரு நாள் விபத்தானது. அத்தானுக்கு விரல் முறிய, நான் தப்பித்தேன். எனக்காக வண்டியில் இரண்டு சக்கரங்கள் அதிகப்படியாய் பொருத்துவது தான் நல்லதென்று அன்று என் குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். இன்று வரை அதே வண்டியைத் தான் ஓட்டுகிறேன். ஒரே முறை இரண்டு சக்கர வண்டியில் காற்றைக் கிழித்துப் போவதாய் நான் கனவு கண்டதைத் தவிர.
போலியோ என்றால் கை, கால் முடங்கிப் போகும் கொடிய வியாதி, தடுப்பூசி போடாவிட்டால் கட்டாய ஊனம் போன்ற கற்பிதங்கள் பல உள்ளன.
தடுப்பூசி போடாமல் விட்டால் போலியோ வாதம் வரும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. போலியோ நரம்பு மண்டலத்தையோ தசைகளையோ தாக்கும் வழக்கமுள்ள நோய் கூட அல்ல. போலியோ கிருமிக்கு அப்படியான உத்தேசம் ஒன்றும் இல்லை. வாய் அல்லது ஆசன துளை வழி உட்புகும் இக்கிருமி ஜீரண-சிறுகுடல் பிரதேசங்களை தான் முதலில் ஆக்கிரமித்து பெருகுகிறது. தன் தொகை ஸ்திரப்பட்டதும் அது ரத்தத்தில் கலந்து உடலின் பல பாகங்களுக்கு பயணமாகும்; அப்போது மிக எதேச்சையாக இவ்வைரஸ் பாதை திரும்பி மைய நரம்பு மண்டலத்தை அடைந்து தாக்குகிறது. தாக்கப்பட்டவரில் மூன்று சதவீதத்தினரின் உடலில் மட்டுமே இந்த போக்குவரத்து திருப்பம் நடக்கிறது. இதனால் இக்கிருமிக்கு எந்த லாபமும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். போலியோ வைரஸ் எனும் ஜீரண-சிறுகுடல் உபாதைக் கிருமியின் இந்த விபரீத நிரல் மாற்றத்தின் காரணம் இன்னமும் அறிவியல் அறிஞர்களுக்கு புரியவில்லை.
இந்த மூன்று சதவீதத்தினரில் ஆயிரத்தில் ஒருவருக்கே கை, கால் செயலிழக்கின்றன. மிச்ச நபர்களுக்கு அசெப்டிக் மெனிங்கிடிஸ் எனும் உபத்திரவமில்லாத சில நோய் அறிகுறிகள் தென்படும்: தலைவலி, உடல் வலி, சோர்வு, வயிற்று வலி இப்படி. சில நாட்களில் வந்த சுவடே தெரியாமல் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். அனேகமாய் இதைப் படிக்கும் உங்களில் சிலரை போலியோ தாக்கி இருக்கலாம். ஆனால் மைய நரம்பு மண்டலத்தை தாக்காமல் சின்ன உபாதைகளுடன் மறைந்திருக்கும்.
கை, கால் செயலிழப்பு கூட பாதி பேருக்கு தற்காலிகமே. ஒரு மாதத்தில் சரியாகி விடும். மிச்சத்தில் கால்வாசி பேர்கள் குறைவான பாதிப்புகளுடனும் தப்பி விடுகின்றனர். மூன்று சதவீதத்தில் கால்வாசியினருக்கே கடுமையான வாதம் ஏற்படுகிறது. இந்த விதத்தில் மரபணு ரீதியாய் வரக்கூடிய சர்க்கரை நோய், புற்று நோய், மாரடைப்புக்கும் போலியோவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. சில நேரங்களில் தாறுமாறாய் விரையும் லாரி சாலையிலிருந்து கட்டுப்பாடிழந்து திரும்பி குடிசை டீக்கடையில் புகுந்து, விடிகாலைப் பனியில் எழுந்து கம்பளி போர்த்தியபடி, டீ உறிஞ்சியபடி கனவு கண்டு இருந்தவர்கள் மீது ஏறுவது போன்றது போலியோ ஊனம். இது மிகச்சிலரில் சிலரை மட்டுமே முடக்குகிறது.
தி. நகர் கல்யாணி கவரிங் கடை அருகே நடைபாதையில் ஒரு மாமாவிடம் கறுப்புக் கண்ணாடி வாங்கினேன். அவர் கேட்டார்: "தம்பி உங்களுக்கு விபத்தினால இப்படி ஊனம் ஆச்சா?". "ஆமாம்". அவர் சேரன் போன்ற உதட்டை சுளித்துக் கொண்டு தொடர்ந்தார்: "எல்லாம் விதிப்பா! கார் விபத்தில என் கால் போச்சு; இப்பிடி தெருவுக்கு வந்துட்டேன்...". திரும்பும் போது என் மனைவி கேட்டாள்: "ஏன் பொய் சொன்னே?"
நான் சொன்னேன்: "பொய்யல்ல, உண்மைதான்!"
ஆங்கில உரை நடையாளர் சார்லஸ் லாம்ப் சொன்னார்: "வாழ்வை திருப்பிப் பார்க்கும் போது சில பல நிகழ்வுகள் மட்டும் சிறிதே மாறியிருந்தால் நம் வாழ்க்கை முழுக்க வேறாக இருக்குமே என்று தோன்றும். எனக்கு என் வாழ்வின் முக்கியமான கட்டங்களை திருத்தி எழுதும் வாய்ப்பை கடவுள் தந்தால் பயன்படுத்த மாட்டேன். அப்படி மாற்றி அமைத்தால் அது என் வாழ்வாகாது, நான் நானாகவும் இருக்க மாட்டேன்". நமது சிக்கலான வாழ்வின் மற்றொரு சிடுக்கு மட்டுமே நோய்மை.
நரம்பணு முளைகளின் அதிக பணியால் போலியோ பாதிப்பாளர்கள் கை, கால்களில் இயங்கும் திறனை மீண்டும் பெறுவதை குறிப்பிட்டேன். ஆனால் வருடக்கணக்கான ஐந்து மடங்குப் பணியால் ஒரு கட்டத்தில் இந்த முளைகள் பலவீனமாகி இறந்து விடும். இதனால் படுக்கையிலிருந்து மீண்டு உலகை துடிப்பாக எதிர்கொண்டவர்கள் படுக்கைக்கு திரும்ப நேரும். இந்நிலையை பின்-போலியோ நோய்க்குறி (post-polio syndrome; pps) என்கிறார்கள். வாழ்வின் உச்சகட்ட குரூரம் இப்படி தந்து பறிக்கும் தந்திரம் தான். விஞ்ஞான புனைகதை இலக்கிய நாயகனான ஆர்தர் சி கிளார்க் ("2001: ஸ்பேஸ் ஒடிசி") ஒருமுறை போலியோ தாக்கி பிழைத்து மீண்டவர். வாழ்வு முழுதும் விஞ்ஞானம், இலக்கியம், ஸ்கூபா நீச்சல் என்று பரபரப்பாய் இயங்கியவரை முதுமையில் pps மீண்டும் தாக்கியது. கிளார்க் சக்கர நாற்காலி நிரந்தர வாசியானார். பிறகு பின்-போலியோ தொடர்பான இதய பாதிப்பால் இறந்தார். போலியோ வாழ்வை இப்படி பாம்பு--ஏணி விளையாட்டாக்குகிறது. ஒவ்வொரு நொடியையும் அருமையானதாக மாற்றுகிறது. இளமையில் ஊனத்தால் படுக்கையில் கழித்த சுந்தர ராமசாமியிடம் வாழ்வை மிச்ச வைக்காமல் பருகும் வேட்கை இருந்ததை ஜெயமோகன் "சு.ரா. நினைவின் நதியில்" குறிப்பிடுகிறார். ஹெமிங்வேயின் "கடலும் கிழவனும்" நாவலில் வரும் சாண்டியாகோவை அலைகழிக்கும் ராட்சத மீனைப் போல் போலியோ ஒரு பெரும் சவாலாக ஊனனை சீண்டியபடி உள்ளது. அவனுக்கு சோர்வு மரணம் மட்டுமே.




Share This

5 comments :

  1. இக்கட்டுரையை பாதி வரை படித்து விட்டு நேரம் ஆகி விட்டதால் இப்போது கிளம்ப போகின்றேன். எந்த இடத்தில் விட்டிருக்கின்றேன் என்பதை மிகச் சரியாக நான் நினைவில் வைத்துக் கொள்ள நீங்கள் பேரா பிரித்து எழுதவும்.

    ReplyDelete
  2. //எனக்கு என் வாழ்வின் முக்கியமான கட்டங்களை திருத்தி எழுதும் வாய்ப்பை கடவுள் தந்தால் பயன்படுத்த மாட்டேன்.//


    i think u r cheating yourself...

    ReplyDelete
  3. இதை ஆங்கிலத்திலும் எழுதி இருக்க கூடாதா என்று, கேட்க தோன்றுகிறது. இந்த பதிவு எத்தறை பேர் படிக்க முடிந்தால் , நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. நன்றி வெற்றிமகள். எழுத முயல்கிறேன்

    ReplyDelete
  5. இந்த பின்னணியில் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்: கால்கள்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates