Thursday 18 June 2009

பூச்சிகள் நம்மை எப்படித் தோற்கடித்தன மற்றும் நம்மிடம் எப்படித் தோற்றன?

எங்களது BPO நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு வருகை அளித்த பரங்கி முதலாளியிடம் ஒரு விசித்திரம்: மின் கொசுமட்டையைக் கொண்டு காற்றில் துழாவியபடியே நுழைந்தார். அவரிடம் கொசு பற்றின சிறு கவலை சதா இருந்தது. இந்தியாவில் இருந்த சில வாரங்களில் எங்கு சென்றாலும் வெடிகுண்டு போலீஸ் மாதிரி மட்டையால் சோதித்த பின்னரே நகர்ந்தார். சாலையில் நடக்கும் போது அம்மட்டையால் ஒரு கண்காணா எதிரியுடன் காற்றில் போராடினார். ஒருமுறை அவர் ஒரு ஆட்டோவுக்குள் மட்டையைத் துழாவிட இரண்டு கொசுக்கள் நிஜமாகவே வெளியேறின. மும்பை குண்டு வெடிப்பு வாரத்தின் போது ஷாப்பிங் போகத் தயங்காதவர், அவசரமாக மலேரியா தடுப்பு மாத்திரைகளைத் தேடி வாங்கி முழுங்கினார். சம்பள உயர்வு பற்றி விசாரித்தால் செவிடாகி விடும் முதலாளி, எங்கள் கை, முகத்தில் கொசுக்கடி காயங்கள் கண்ணுற்றால் 'வெயிலில் வாடின பயிருக்காக நானும் வாடினேன்' அளவுக்கு உருகி பரிவாய் விசாரிப்பார். அன்றாட கவலைகளுக்கு மத்தியில் மூன்றாம் உலக நாட்டுக்காரர்கள் கொசுவைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் மனித இனத்தின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி கொசுதான்.
உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலகம் பூரா வருடத்துக்கு 300-500 மில்லியன் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 1.5-2.6 மில்லியன் மக்கள் வருடத்திற்கு சாகின்றனர். ஆப்பிரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு 250 குழந்தைகளை கொசுக்கள் கொல்லுகின்றன. இலங்கையில் ராஜபக்ச அரசு புலிகளுக்கு அடுத்தபடியாய் கொசுக்களைப் பற்றித்தான் கவலைபட வேண்டும். அங்கு வருடத்துக்கு ஒரு மில்லியனுக்கு மேல் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். எய்ட்ஸை விட இரண்டு மடங்கு அதிக உயிர்களைக் குடிக்கிறது கொசு.
இக்கட்டுரை கொசுவைப் பற்றினதல்ல. கொசு போன்ற எளிய பூச்சிகளிடம், சிங்கம், யானை போன்றவற்றை அடக்கி சர்க்கஸ் சொல்லித் தந்த மனிதன் தொடர்ச்சியாய்த் தோற்றதும், பின்னர் புத்திசாலித்தனமாய் வென்றதும் பற்றியது.
1995-இல் உலக சுகாதார நிறுவன சார்பில் உலகம் பூரா DDT கொசு மருந்து தெளித்து மலேரியாவை ஒழிக்கும் திட்டம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. 36 நாடுகளில் மலேரியா வேரோடு ஒழிக்கப்பட்டது. பிற நாடுகளில் மலேரியா பாதிப்பு குறிப்பிடும்படியாகக் குறைந்தது. ஆனால் இக்கொசுத்தடுப்புப் போர் ஒரு நாள் கடும் தோல்வி அடைந்தது. 1969-இல் மனிதனைத் தாக்கும் அனோபலஸ் கொசு (3000 கொசு வகைகளில் ஒருசில மட்டுமே கடிப்பவை) DDT மற்றும் பிற மலிவனான மருந்துகளுக்கு எதிரான தடுப்பு சக்தியைப் பெற்றது. DDTக்கு பதிலாக பயன்படுத்தின மலேதியான் பலனளிப்பதாக இருந்தாலும் முன்னதை விட இதற்கான செலவு 5 மடங்கு அதிகம். கொசு இம்மருந்துக்கும் நெஞ்சு விடைத்துக் காட்ட புரோபக்ளஸ் என்ற மருந்தைப் பயன்படுத்தினோம்; இதனால் செலவு 20 மடங்கு அதிகமாகியது. சட்டைப்பை ஓட்டையானதும் உலக சுகாதார நிறுவனம் பின்வாங்கியது; தள்ளி நின்று ஏழை நாடுகளுக்கு மலேரியாவுக்கு எதிரான ஆதரவை வழங்கியது. கொசுவை முழுமையாக அழிக்கும் மருந்தை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. தாலிபான் நாடுகளில் குண்டு வீசுவதை விட சிரமமும் சிக்கலுமானதாகவே இன்று வரை இது இருக்கிறது.
கழிவுப் பொருட்களின் ஈரத்தை உறிஞ்சி விட்டு உங்கள் உணவில் அமர்ந்து ருசி பார்க்கும் வீட்டு ஈ டைபாய்டு போன்ற பல கொடிய வியாதிகளைப் பரப்புவது. அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி போர்டு மலிவு விலை மோட்டார் வாகனங்களை பெருமளவில் உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்யும் வரை அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோரின் வீடுகளில் குதிரை லாயங்கள் இருந்தன. அங்கு குவிந்த சாணியில்தான் 90% ஈக்கள் முட்டையிட்டு வம்சாவளி பெருக்கின. போர்டின் கார்கள் குதிரைப் பயன்பாட்டைக் குறைத்து, லாயங்களை இல்லாமல் செய்ய ஈக்களின் மக்கள் தொகையும் பெருமளவில் அடிவாங்கியது. ஆனாலும் முழுக்க அழியவில்லை. அவை பரப்பும் தொற்று வியாதிகளும் எளிய மக்களின் இறப்பு விகிதத்தை உயர்த்தின. கொசு மருந்தாகப் பயன்பட்டு வந்த DDTயைத் தண்ணீருடன் சிறிதளவு கலந்து தெளித்தாலே 6 மாதங்களுக்கு ஈக்கள் சுவரில் அமர்ந்த மட்டிலேயே செத்து விழும் என்று கண்டு பிடிக்கப்பட்டது. தாமஸ் டஸ்லப் எனும் அறிவியலாளர் தனது ‘DDT’ எனும் நூலில் இம்மருந்தை "ஈக்களுக்கு எதிரான அணுகுண்டு" என்று அறிவித்தார். ஆனால் அவர் பரிணாமத்தின் ஆற்றலை கணக்கில் கொள்ளவில்லை. 1945-இல் 0.18 mg DDTக்கே சுருண்டு விழுந்த ஈயை சீண்டுவதற்கே 1951-இல் 125 mg DDT தேவையானது. அதாவது ஆறே வருடங்களில் மருந்தின் தேவையளது 700 மடங்கு எகிறி விட்டது. ஈக்களின் DDTக்கு எதிரான சக்தியை ஆய்வு செய்ய அறிவியலாளர்கள் DDT ரசாயனம் சுவர்கள், தரை, கூரை எங்கும் திட்டுத்திட்டாகப் பூசப்பட்ட கூண்டுகளில் ஈக்களைக் கூட்டம் கூட்டமாக வளர்த்தார்கள். இந்த ஈக்கள் கலப்படமில்லாத, சுத்தமான DDT மீதே அலுங்காமல் நடக்கும் அளவுக்கு எதிர்ப்பு சக்தியை 1000 மடங்கு வளர்த்துக் கொண்டன. எப்படி? ஈ உடம்பினுள் உள்ள உணவுச் செரிமானப் பொருள் ஒன்று சந்தர்ப்பவசமாக DDT-உடன் எதிர்வினையாற்றி அதை சாதுவான DDE ஆக்கியது. DDT ஈக்கு விஷம் என்றால், DDE ஆக மாற்றப்பட்ட பின் அந்த ரசாயனம் ஈக்கு நீலகண்ட அமுது; மனிதனுக்கும், பிற விலங்குகளுக்கும் கடும் விஷம். கொசு, ஈ சேர்த்து இவ்வாறு DDTக்கு எதிரான தடுப்பு சக்தியை வளர்த்து தப்பித்த பூச்சிகளின் எண்ணிக்கை ஒன்று ரெண்டல்ல, 500.
DDT முறையின் தோல்வியை நாம் அறிவியலின் வீழ்ச்சியாகக் கொள்ளக் கூடாது. வாழ்க்கைப் போக்கு மற்றும் உடலமைப்பில் பரிணாமத்தின் பாதிப்பை சரிவரப் புரிந்து கொள்ளாது, பூச்சிகளின் உயிரியல் வாழ்வை நுட்பமாய்க் கவனிக்காமல் அவற்றை அழிக்கும் திட்ட நடவடிக்கைகளைப் பத்தாம்பசலியாக மேற்கொண்டதன் விளைவே பூச்சி மருந்துகளின் தோல்வி. வெற்றிகரமாகப் பயன்பட்ட பூச்சி மருந்துகள்கூட பல சமயங்களில் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. உதாரணமாய், மருந்து பயன்பாடால் ஒரு பூச்சி இனம் அழிந்தால், அவ்வினத்தால் அதுவரை புசிக்கப்பட்டு வந்த வேறு எளிய பூச்சிகள் எண்ணிக்கையில் பெருகி பயிர்களை அழித்த அவலம் மெக்சிக்கோவில் ஒரு முறை நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பருத்தி விவசாயம் சாத்தியமற்ற நிலையில் கைவிடப்பட்டது. இன்று சந்தையில் கிடைக்கும் அனைத்து காய்கறிகளிலும் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் கலந்துள்ளன. கண்மூடித்தன அறிவியல் முயற்சிகளின் இத்தகைய அபத்தங்கள் நம்மை திரும்ப முடியாத புதிர்ப்பாதையின் எல்லையில் நிறுத்திவிட்டது.
பூச்சிகளின் புத்திசாலித்தனத்தை நாம் குறைவாகவே மதிப்பிடுகிறோம். இதற்கு நல்ல உதாரணம், சோளவேர்ப்புழுக்கள் அமெரிக்க விவசாயிகளின் புழு-ஒழிப்பு முறையை சாமர்த்தியமாகத் தோற்கடித்த சம்பவம். சோளவேர்ப்புழுக்களில் இருவகை: வடக்கத்திய சோளவேர்ப்புழுக்கள், மேற்கத்திய சோளவேர்ப்புழுக்கள். ஒருவகை வண்டுகளால் இவற்றின் முட்டைகள் சோளக்கதிர் வயல்களில் மழைக்காலத்தில் இடப்படுகின்றன. மழைக்காலம் முழுக்க பொரியாமல் ஆழ்தூக்கத்தில் இம்முட்டைகள் காத்திருக்கும். வசந்த கால ஆரம்பத்தில் ஏற்கனவே பயிர் செய்யப்பட்டிருந்த சோளக்கதிர்கள் கொழித்து தயாராக இருக்கும். அப்போது வெளிப்படும் ஆயிரக்கணக்கான சோளவேர்ப்புழுக்கள் வேர்களை உண்டு சில நாட்களிலேயே ஒரு பெரும் வயலை இவை அழித்து விடும். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இப்புழுக்கள் அமெரிக்காவின் பெரும்பகுதி சோளவயல்களை நாசப்படுத்தி பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தன. அறுவடை முடிந்து, அடுத்த முறைக்கான பயிர் விதைக்கும் முன், இப்புழுக்களின் முட்டைகளை முழுக்க தேடி அழிப்பது சாத்தியம் இல்லை. பூச்சியியல் ஆய்வாளர்கள் இவ்வழிவைத் தடுக்க வழி தேடும் போது, இப்புழுக்களின் விசித்திர உணவுப்பழக்கம் கவனத்தில் வந்தது. அதாவது, இந்த சோளவேர்ப்புழுக்கள் சோளவேர்களைத் தவிர வேறெதையும் உண்ணாது. சோளவேர்கள் அருகில் கிடைக்காத பட்சத்தில் அதிகம் நகர்ந்து உணவு தேடும் ஆற்றல் இல்லாத இவை இறந்து போகும். இம்முட்டைகளை இட்ட பின் கோடைமுடிவில் இதன் பெற்றோர்கள் அனைத்தும் இறந்து போகும். இப்படி நோவாவின் கப்பல் போல் ஒரு பிரதேசத்து வண்டு இனத்தின் உயிரியல் ஆதார மொத்தமும் இம்முட்டைகள் மட்டுமே. இவை பொரிந்து வண்டுகளாக வளராவிட்டால் அவ்வினமே ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அழிந்துவிடும். இரண்டாம் முறையாக சோளத்தையே விதைக்காமல் வேறு பயிர் விதைத்தால் (சுழற்சி முறை) சோளவேர்ப்புழுக்களை அழித்துவிடலாம் என்று ஒரு திட்டத்தை பூச்சியியல் நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இந்தச் சுழற்சி முறை மகத்தான வெற்றியாக அமைந்து, ஒரு நூற்றாண்டுக் காலம் சோளவேர்ப்புழுக்களிடம் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றியது.
ஆனால் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோளவேர்ப்புழுக்களின் மறுவரவு நிகழ்ந்தது. மூன்றாம் முறை பயிரடப்படும் சோளக்கதிர்கள் வேர்கள் அரிக்கப்பட்டு சரிந்தன. விவசாயம் பெரு வீழ்ச்சி கண்டது. மெதுவாக இதன் காரணம் பூச்சியியலாளர்களுக்குப் புரிய வந்தது. இந்தத் தலைமுறையின் வடக்கத்திய சோளவேர்ப்புழு முட்டைகள் முதல் வசந்த பருவத்தில் பொரிந்து மாட்டிக் கொள்ளாமல் சமர்த்தாய் இரண்டு வருடங்கள் காத்திருந்து இரண்டாம் மழைக்காலத்தில் சோளம் பயிராகும் போது பொரிந்து வெளிவந்து வேர்களை அரித்தன. மேற்கத்திய சோளவேர்ப்புழுக்கள் சுழற்சித் திட்டத்தை முறியடிக்க வேறொரு உபாயம் பயன்படுத்தின. இவற்றின் தாய் வண்டுகள் சோளக்கதிர்களின் வேர்களில் முட்டையிடாமல், இரண்டாம் முறையாக பயிராகும் சோயா பயிர்களின் வேர்களில் முட்டைகளை பதுக்கின. இவை அடுத்த வசந்தத்தில் பொரியும் போது சோளவேர்கள் தயாராக இருந்தன. இப்படியாக இரண்டு இஞ்சு புழுக்கள் நமது சுழற்சித் திட்டத்தை அனாயாசமாகத் தோற்கடித்தன.
பூச்சிகளுடனான இந்த மூளைப் போரில் மனிதன் கண்ட முக்கியமான வெற்றி தசைகளைக் குடைந்து தின்னும் திருகாணிப்புழு ஈக்களுக்கு எதிரானது. இம்முறை பூச்சியியலாளர்கள் இவற்றை நேரடியாகத் தாக்காமல், இவை உலகில் தோன்றவே விடாமல் செய்ய ஒரு திட்டம் தீட்டினர்: காங்கிரசுக்குச் செல்லமான கட்டாயக் கருத்தடைத் திட்டம்.
திருகாணிப்புழு ஈக்கள் புளோ ஈக்கள் எனப்படும் அழுகின தசையைப் புசித்து உலகை சுத்தப்படுத்தும் வெட்டியான் பூச்சிக் குடும்பத்தை சேர்ந்தவை. புளூபாட்டில், கிரீன்பாட்டில் ஈக்கள் தங்கள் முட்டைகளை இறந்த பறவை, பூச்சிகளின் சடலங்களில் இட, அவை புழுக்களாகப் பொரிந்து தசைப்பகுதிகளை காலி செய்யும். ஒரு அடிப்படை பொதுவிளக்க மெய்ம்மைப்படி (hypothetically) மூன்று இவ்வகைப் பூச்சிகள் சேர்ந்து ஒரு குதிரையின் சடலத்தை ஒரு சிங்கம் புசிக்கும் அதே வேகத்தில் தின்றுவிட முடியும். இந்த வெட்டியான் பூச்சிகளின் புழுக்கள் மனித, மிருக உடல்களின் புண்களில் குடியேறி அழுகின தசைகளை மட்டுமே தின்னும், உயிருள்ள செல்களைத் தீண்டாது. முதல் உலகப் போரில் உடல் உறுப்புகளின் அழுகின பகுதிகளை அகற்ற இப்புழுக்களை மருத்துவர்கள் பயன்படுத்தினர். அழுகின செல்களை மட்டுமே தின்பதோடு இவை ஒருவித நுண்ணுயிர்க்கொல்லி திரவத்தையும் (அலண்டோனின்) சுரந்து நோயாளியைக் காப்பாற்றின. நவீன நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுக்கு தற்போது நுண்ணுயிர்கள் எதிர்ப்புசக்தியைப் பெற்று விட்டமையால் இன்றைய மருத்துவர்கள் மத்தியில் இந்த வெட்டியான்புழு சிகிச்சை மீண்டும் பிரபலமாகி உள்ளது.
திருகாணிப்புழுக்கள் சாத்வீக புளோ ஈ குடும்பத்தில் பரிணாப்போக்கில் ஏற்பட்ட ஒரு விபரீத விபத்து: இவை உயிருள்ள பிராணிகளின் ரத்தத்தை உறிஞ்சி, தசைகளை உண்டு வாழும் ஒட்டுயிர்கள். திருகாணிப்புழு ஈக்கள் அரிதாகவே மனிதனைத் தாக்கும். ஆனால் தாக்குதல் விளைவுகள் கடுமையான வலி, தீவிர உடல் உபாதைகள், மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தத்தக்கவை. உதாரணம் 1: டெக்சாஸில் பிராங்கிளின் எனும் விவசாயி சைனஸ் கோளாறு உடையவர். ஒரு நாள் இவர் தூங்கும்போது திருகாணிப்புழு ஈ மூக்கில் நுழைந்து முட்டைகள் இட்டது. இதனால் இவருக்கு பின்னர் கடுமையான தலைவலி, மயக்கம் ஏற்பட்டது. கடுமையான ஜுரத்தினால் பித்து நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒன்பதாவது நாளில் இவரது மூக்கிலிருந்து 380 திருகாணிப்புழுக்கள் விழுந்தன. உதாரணம் 2: தனிமையில் வாழ்ந்த அமெரிக்க மூதாட்டி ஒருவர் அடிபட்டுக் கீழே விழுந்து உதவி செய்ய ஆளின்றிக் கிடந்தார். இவரது புழைக்குள் திருகாணிப்புழுக்கள் நுழைந்து தொப்புள் பகுதியில் பெருகி செல்களை அரித்தன. இறுதியில் மருத்துவ பலன் இன்றி இறந்தார்.
திருகாணிப்புழுக்கள் கால்நடைகளைத்தான் அதிகப்படியாய் சேதம் செய்கின்றன. கால்நடைக்கு மிகச்சிறிய புண் ஏற்பட்டிருந்தாலும் கூட ரத்த மணம் பிடித்து வரும் திருகாணிப்புழு ஈக்கள் அங்கு முட்டையிட்டு புறப்படும். முட்டையிட்டிருப்பது அறிந்ததும் அடுத்து பல திருகாணிப்புழு ஈக் குழுக்கள் வருகை தந்து அதே புண்ணில் முட்டைகளைக் குவிக்கும். லட்சக்கணக்கான கால்நடைகளின் கண்ணுக்குத் தெரியாத புண்களைத் தேடி தினசரி சுத்தம் செய்து மருந்திடுவது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நடைமுறை ரீதியாய் சாத்தியமல்ல. இப்பூச்சிகள் குறைந்த எண்ணிக்கையில் ஒரு பிரதேசம் முழுக்க அங்கொன்று இங்கொன்றாய்ப் பரவி இருக்கும் என்பதால் பூச்சி மருந்து அடிப்பதும் உதவாது. அமெரிக்க விவசாய ஆய்வு சேவையின் பூச்சியியல் ஆய்வுக்கிளை தலைவரான நிப்ளிங் இப்பிரச்சினையைத் தீர்க்க, திருகாணிப்புழு ஈக்களின் வாழ்வு முறையை நுட்பமாகக் கவனித்து ஒரு அபூர்வத் தகவலைக் கண்டுபிடித்தார். இத்தகவல் அடிப்படையில் அவர் முன்வைத்த நூதன பூச்சி அழிப்புத் திட்டம் குறைந்த செலவில் பெரும் வெற்றி பெற்றது.
மனிதனைப் போலவே திருகாணிப்புழு ஈக்களுக்கும் லிங்கம் உண்டு. அவை ஆயுளில் 900 முட்டையிடும். ஆனால் பெண் ஈ வாழ்வில் ஒருமுறைதான் கூடும். ஒரே கூடலில் எப்படி 900 முட்டைகள்? திருகாணிப்புழு ஈக்கள் விந்து விசயத்தில் மனிதனை விட சிக்கனமானவை. ஒரு குழந்தைக்காக ஆணின் சுக்கிலத்தில் கோடிக்கணக்கான விந்தணுக்களை வீணடிக்கிறோம். ஆனால் இந்த ஈக்கள் ஆணிடமிருந்து ஒருமுறை பெற்ற விந்தணுக்களை ஸ்பெர்மதீக்கா எனும் உறுப்புப் பையில் சேகரித்து வைக்கும்; ஒவ்வொரு முட்டைக்கும் ஒன்று என வெளிப்படுத்தி அனைத்து விந்தணுக்களையும் இவ்வாறு பயன்படுத்தும். இதனால் பெண் திருகாணிப்புழு ஈக்களுக்கு ஆயுளுக்கு சில கணங்கள் மட்டுமே காதலும், கூடலும் அவசியப்படும். ஒரு முறை புணர்ந்த பின் மீண்டும் பாலியல் ஈடுபாடு தோன்றாது இந்தக் கற்பின் கனலிகளுக்கு. ஆய்வாளர் நிப்ளிங் இந்தக் குறிப்பிட்ட குணாதிசயத்தை முன்னிறுத்தி தன் திட்டத்தை உருவாக்கினார். அவரை இதற்குத் தூண்டிய கேள்வி: பெண் ஈக்களை முதலில் புணரும் ஆண்கள் மலடாக இருந்தால் என்னவாகும்? நிச்சயம் முழுவளர்ச்சியற்ற முட்டைகள் உருவாகும். உண்மை அறியாத பெண் ஈ சரிவர கருத்தரிக்க உதவாத மலட்டு விந்தை வாழ்நாளெல்லாம் சிறிதுசிறிதாகப் பயன்படுத்தி, பொரியாத முட்டைகளை இடும். அதன் வம்சாவளி இதனால் அழியும். இப்படி அனைத்து திருகாணிப்புழு ஈக்களுக்கும் நிகழ்ந்தால், அவ்வினமே அழியும். இந்த வாய்ப்பை சாத்தியமாக்க நிப்ளின் தன் ஆய்வுக்கூடத்தில் மில்லியன் கணக்கில் திருகாணிப்புழு ஈக்களை வளர்த்தார். அவற்றை பீட்டா கதிரியக்கம் மூலம் மலடாக்கினார். கால்நடை பண்ணைகள் உள்ள பிரதேசங்களில் இந்த மலட்டு ஆண்களை ஹெலிகாப்டர் மூலம் கீழே விட்டார். இவை வீரியமுள்ள ஆண் பூச்சிகளுடன் போட்டியிட்டு பெண்களை ஏமாற்றி நிறைய வளர்ச்சியற்ற முட்டைகளை இட வைத்தன. ஆறே மாதத்தில் இச்சோதனை நிகழ்ந்த பிரதேசங்களில் திருகாணிப்புழு ஈக்கள் முற்றிலுமாய் அழிந்தன. எந்தப் பூச்சி மருந்தாலும் இதுவரை நிகழ்த்த முடியாத சாதனை இந்த இன அழித்தொழிப்பு.
ஆனால் ஆட்டம் இன்னும் முடிவடையவில்லை என்பதை அறிவியலாளர்கள் நன்கு அறிவர். மனிதனின் குறுக்கிடலுக்கு இயற்கை பரிணாம வழியில் மீண்டும் பதிலடி தரலாம். நவீன வாழ்வு எனும் இயற்கைக்கு எதிரான போராட்டத்துக்கு பூச்சிகளுடனான இம்மனித மோதல் ஒரு எளிய அத்தியாயம் மட்டுமே. ஒளியின் வேகத்தில் பயணிக்கத் துடிக்கும் மனித இனத்துக்கு இனி வெள்ளைக் கொடி காட்டி இயற்கையுடன் இயைந்து வாழ்தல் ஒரு மீள்பயணமாக மட்டுமே அமையும். அம்புப்படுக்கையில் இருந்து பீஷ்மரைத் தட்டி எழுப்பி சிகண்டிக்கு மணம் முடித்து வைப்பது ரொம்பவே பேஜாரானது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates