Thursday 18 June 2009

தெ ரெஸ்லர்: தனிமையும், ஏசுவும்

டேரன் அரபோன்ஸ்கி இயக்கியுள்ளதெ ரெஸ்லர்திரைப்படத்தை இரு தளங்களில் அணுகலாம். ஒன்று, தனிமைப்படும் ஒரு குஸ்திக் கலைஞன் எளிய அன்றாட மனிதனாக வாழ்ந்து, குடும்ப உறவுகள் நிறுவ முயன்று தோற்றுப் போவது. கிறித்துவ மதம் தோன்றக் காரணமான ஏசு கிறிஸ்துவுக்கும் எளிய மானிட கும்பலுக்குமான உறவின் மீதான பகடி இதன் இரண்டாவது தளம். வெகுஜன ஊடகங்கள் பொருட்படுத்தாத படத்தின் உபபிரதி இது; இந்த மத-பகடி பற்றி இதுவரை எந்த சர்ச்சையும் உருவாகவில்லை என்பது சுவாரஸ்யமான விசயம். படத்தின் குஸ்திக் காட்சிகளில் ஒன்றில் அயடோலா எனும் பாத்திரம் ஏறத்தாழ இரானியக் கொடியை ஒத்த ஆடை அணிந்து சண்டையிட்டு தோற்றுப் போவார். அடுத்து, கதாநாயகன் ரேண்டி ஒரு குஸ்திக் காட்சியில் இரானியக் கொடி பறக்கும் கம்பத்தை முறிக்கிறான். நுட்பமான கிறித்துவ பகடி பொருட்படுத்தப்படாமல் இந்தச் சல்லிக் காரணங்கள் பெரிதுபடுத்தப்பட்டுதெ ரெஸ்லர்ஒரு இரானிய எதிர்ப்புப் படமாக அந்நாட்டு ஊடகங்களால் வசை பாடப்பட்டது. முழுக்க முழுக்க நகைமுரண்கள் மற்றும் பகடியால் நகரும் இப்படத்தின் மிகப்பெரிய வெளிமுரண் இந்த இரானிய சர்ச்சைதான்.

ரோபின் ராம்சின்ஸ்கி (மிக்கி ரூக்) 80-களில் தொழில்முறை நட்சத்திர குஸ்தி வீரராக விளங்கியவர். தமிழ் நாட்டின் முன்னாள் இயக்குனர் சிகரங்கள் சரக்கு புளித்த பின்னரும் தொலைக்காட்சியில் மாவரைப்பது போல் எளிய விளம்பர குஸ்திப் போட்டிகளில் பங்கேற்று, பல்பொருள் அங்காடியில் பெட்டி தூக்கி ஜீவனம் நடத்துகிறார். ரோபினின் முக்கிய பிரச்சினைகள் வறுமையும், அடையாள இழப்பும். பிரபல குஸ்திக்கலைஞனாக வாழ்ந்த காலத்தில் அவர் நிலையான உறவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை. ஒரே பெண் குழந்தையைக் கைவிடுகிறார். அப்போது தன் நிகழ்த்து கலையின் அகங்காரக் கிளர்ச்சி மற்றும் ரசிகர்களின் கரகோஷம் மற்றும் பிரபல்யத்தில் தீக்காய்ந்தவர், இப்போது வாய்ப்புகள் குறைந்து, உடல் தளர்ந்து, வறுமையால் உறிஞ்சப்பட்டு பனிப்பிரதேசத்தில் காகம் போல் தவித்து அலைகிறார். இளமையில் கைவிட்ட மகளைத் தேடிச் சென்று உறவை வேண்டுகிறார். அவள் தன் பொறுப்பற்ற தகப்பனை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை.

ஆனால் ரோபினின் கடுமையான தொடர்முயற்சிகளால் அவளது மனம் இளகுகிறது. பிறகு ஒரு அருமையான காட்சி வருகிறது. ரோபின் காஸிடி (மாரிஸா டோமே) எனும் ஒரு மதுக்கடை நிர்வாண நடனப்பெண்ணிடம் நூல் விடுகிறார். அவள் ரோபினுக்கு எதிர்நிலைப் பாத்திரம். ரோபின் தினசரி எதார்த்தத்துக்கும் கலையின் அதிஎதார்த்ததுக்கும் இடையிலான வேறுபாடு உணராதவர். ஆனால் காஸிடி தன் நடன வாழ்வுக்கும் தினசரி வாழ்வுக்கும் இடையே திட்டவட்டமான எல்லை வகுத்துள்ளாள். நடனக்காரியாக அவளை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி வாழ்வில் அனுமதி இல்லை. எதார்த்த வாழ்வில் அவள் ஒரு 8 வயதுப் பையனுக்குத் தாய். மதுக்கடையில் காம நுகர்பொருள். இந்த எல்லைக்கோட்டை உடைத்து ரோபின் காதலனாக அவளது தினசரி வாழ்வில் நுழைவதை அவள் ஆரம்பத்தில் விரும்பவில்லை. காஸிடியின் நிராகரிப்பு குஸ்தி நட்சத்திரத்தைக் காயப்படுத்த, அவர் தன் மகளுடன் இரவுணவுக்குச் செல்ல வேண்டியிருந்ததை மறந்து குஸ்திப் போட்டி பார்க்கச் செல்கிறார். அங்கு குடித்து, கொக்கெயின் மூக்கில் ஏற்றி ஒரு ரசிகையை கழிப்பறையில் புணர்ந்து அவள் அறைக்குச் செல்கிறார். மகள் பல மணி நேரங்கள் அப்பாவுக்காக உணவு விடுதியில் காத்து ஏமாற்றத்தில் அவரை வாழ்விலிருந்து முழுதாக விலக்கிட முடிவு செய்கிறாள். எப்போதும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் மிதக்கப் பழகிய அந்தக் கலைஞனால் எளிய உறவுகளின் அங்கலாய்ப்புகளில் திருப்தி அடைய முடியாது. விடிந்த பின் தான் முன்னிரவு கூத்தில் தன் மகளுடனான உறவை சீர் செய்ய முடியாவண்ணம் சிதைத்து விட்டதை ரோபின் உணர்கிறார். தன் இரவுத்துணையின் அறையை சுற்றிப் பார்க்கிறார். அங்கு சுவர்களில் பல குஸ்தி நட்சத்திரங்களின் படங்கள். இரவில் அப்பெண் புணர்ந்தது தன்னை அல்ல, தனது நட்சத்திர பிம்பத்தை எனும் விழிப்பு அவருக்கு ஏற்படுகிறது. படத்தில் இது ஒரு முக்கிய கணம்.

ரோபின் கலை அடையாளம் எத்தனை நிஜமானது என்பது படத்தில் முக்கிய கேள்வி. வாடகை தராததால் வீட்டின் சொந்தக்காரர் அவரை முதல் காட்சியில் வீட்டைப் பூட்டி வெளியே அனுப்புகிறார். பல்பொருள் அங்காடி முதலாளி ஒரு புழுவுக்கான மரியாதை மட்டுமே பயில்வானுக்குத் தருகிறார். அவருடன் மதித்து உறவாடுவது குழந்தைகள் மட்டுமே. அவர்களுடன் ரோபின் தெருவில் குஸ்தி பழகும் காட்சி துயரம் தோய்ந்த நகைச்சுவை. ரோபின் ராம்சின்ஸ்கியின் குஸ்தி புனைபெயர் ரேண்டி தெ ரேம். கடையில் கல்லாப்பெண் இவரை ராம்சின்ஸ்கி என்னும் போதெல்லாம் ரோபின் தன்னை "ரேண்டி தெ ரேம்" என அழைக்கும்படி வற்புறுத்துகிறார். அவர் தனது காரில் அலங்காரத்துக்கு வைத்துள்ள தனது பெயரிலான ரேண்டி தெ ரேம் குஸ்தி பொம்மை இந்தப் போலி அடையாளத்துக்கு ஒரு சிறந்த நகைமுரண் குறியீடு. ரோபின் இவ்வாறு தன்னை பயில்வானாக முன்னிறுத்த முயன்று உதாசீனப்பட்டு அவமானப்படும் காட்சிகளில் படக்கருவி ஒரு WWF காட்சியில் போல் பயில்வானின் முதுகுப்புறமாக தொடர்ந்து முறுகிப் புடைத்த தசைகளின் பிரம்மாண்டத்தை, அந்த மாமிச மலை மடுவாகக் காணப்படும் நகைமுரணைக் கூர்மையாக முன்வைக்கிறது. பயில்வான் குடும்ப உறவுகளை நாடி எளிய மனிதனாகும் காட்சிகளில் லாங், மற்றும் மிட் ஷாட்கள் பயன்படுகின்றன.

விளம்பரத்துக்கான குஸ்திப்போட்டிகளால் ராபினுக்குப் பொருளாதாரப் பயனில்லை. ஆனால் அவரது சன்னமான பயில்வான் அடையாளத்தைத் தக்க வைக்க அவை பயன்படுகின்றன. ஒரு ரத்தக்களறியான குஸ்திக்குப் பின்னர் ரோபினுக்கு மாரடைப்பு வருகிறது. பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொள்கிறார். மறுபடி குஸ்திகளில் தொடர்வது உயிருக்கு ஆபத்து என்பதால் கட்டாய ஓய்வு பெற வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. தற்போது அடையாளங்களும் இன்றி ரோபின் காப்காவின் பிரமாண்ட கரப்பான் பூச்சியாக அவர் கடுமையாக தனிமைப்படுகிறார். இந்த அடையாள இழப்பைத் தாக்குப்பிடிக்க முடியாது திணறும் கட்டத்தில் சில அருமையான காட்சிகள் வருகின்றன. பல்பொருள் அங்காடியில் உணவுப்பொருட்களை அளந்து வினியோகிக்கும் பணி கிடைக்கிறது. அங்கு அவர் முதல் நாள் பயில்வான் குஸ்தி அரங்கில் நுழையும் நாடகீய பாவனைகளை மேற்கொள்வது, குஸ்தி உடல் மொழி மற்றும் பாணியை கடைவேலையில் காமிப்பது உச்சபட்ச நகைமுரண் மற்றும் பகடி. உணவைப் பொட்டலமிட்டு வாடிக்கையாளர் ஒருவரிடம் 'இந்தா பிடிச்சுக்கோ' என்று வீச அவர் தடுமாறிப் பிடிக்கிறார். ஒரு மூதாட்டி ரெண்டு பவுண்டு சாலட் துல்லியமாக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். ஒவ்வொரு முறையும் ரோபின் அதே உணவைக் குறைத்தும் கூட்டியும் அளந்து கொடுக்க அவள், அது சற்று கூட அல்லது குறைவு என்று வாங்க மறுக்கிறாள். இறுதியில் கண் முன்னாடியே அவர் சிறிது சாலட்- எடுத்து வாயில் இட்டு மென்றபடி "இப்போ சரியாக உள்ளதா" என்று கேட்க மூதாட்டி சரியாக உள்ளதாகத் திருப்திப்படுகிறார். மத்திய வர்க்க வாழ்வின் மீதான நுண்மையான பகடி இது. கடையில் உணவு வினியோகப் பணி ரோபின் போன்ற நட்சத்திர பயில்வானுக்கு மிக அவமானகரமானது. தனக்குத்தானே இதை மறைத்து வேலையில் தொடர்கிறார். ஒருநாள் அவர் முன்னாள் குஸ்தி நட்சத்திரம் என்பதை ஒரு வாடிக்கையாளர் கண்டுபிடித்துக் கேட்டுவிடுகிறார். ரோபின் மறுத்தும் அவர் விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ரோபினுக்குள் அடக்கி வைத்திருந்த வலியும், ஆத்திரமும் வெளிப்படுகிறது.

படத்தில் முன்னொரு குஸ்திக்காட்சியில் பார்வையாளர்களின் வன்முறை வெறியைத் திருப்திப்படுத்த தன் நெற்றியை ரகசியமாக பிளேடால் ரோபின் கிழித்துக் கொண்டு முகமெல்லாம் குருதியாக கரகோஷத்தின் மத்தியில் சண்டையிடுவார். அக்காட்சியின் ஒரு குரூரத் தொடர்ச்சியாக இங்கு கடையில் தன் வாடிக்கையாளர் முன் கறிவெட்டும் எந்திரத்தில் தன் கையை வேண்டுமென்றே அறுத்துக் கொண்டு "ஆம்! நான்தான் ரேண்டி, குஸ்தி பயில்வானே தான்" என்று கத்தியபடி வேலையை உதறிக் கிளம்புவார். போகிற வழியில் குஸ்தி பாணியில் கடையில் அடுக்கி வைத்துள்ள பொருட்களை உடைத்து சிதறடிப்பார். இக்காட்சி சுகேது மேத்தாவின் ‘மேக்சிமம் சிட்டி’ எனும் மும்பை மாநகர வரலாற்று நூலில் வரும் நிழலுலக வாடகைக் கொலையாளி ஒருவனது வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றன. மேத்தா அவனிடம் கேட்கிறார்: "ஏன் நீ திருந்தி சகஜ வாழ்வுக்குத் திரும்பக் கூடாது?". அதற்கு அந்த வாடகைக் கொலையாளி பதிலுரைக்கிறான்: "எனக்கு வேறெதுவும் தெரியாது. அதோடு துப்பாக்கியின் குதிரையை அழுத்தும் போது அதிகப்படியான அதிகாரத்தை உணர்கிறேன் ... என்னால் வேறெதுவும் செய்ய முடியாது". இதைச் சொல்லும் போது அவன் விரல்கள் நடுங்குகின்றன.

சுயஏமாற்றத்தை பயில்வானால் இனிமேல் தாங்க முடியாது. அனைத்து அடையாளங்களும் இழந்த நிலையில் அவர் குஸ்தி அரங்கிற்குத் திரும்ப முடிவு செய்கிறார். குஸ்திக் கலை மட்டுமே தனது ஒரே இருப்பு, பார்வையாளர்களே தனது குடும்பம் என முடிவு செய்கிறார். அவர் மீது காதல் ஏற்பட்டு தனது வேலையை உதறி அவரை நாடி வரும் கேஸிடியை ரோபின் இம்முறை தவிர்க்கிறார். குஸ்திக்குத் திரும்பி உயிரிழக்க வேண்டாம் என்று அவளும், போட்டியில் அவரது எதிராளியான அயடோலா என்பவரும் வற்புறுத்துகின்றனர். ரோபின் விழிப்புணர்வு அடைந்தவனின் மன உறுதியுடன் குஸ்தியில் போராடுகிறார். நடுவில் மாரடைப்பின் அறிகுறிகள் வந்து தளர்கிறார். அயடோலா, தன்னைத் தாக்கி ஒரே அடியாய் போட்டியை முடித்துக் கொள்ளக் கேட்கிறார். ரோபின் மறுக்கிறார். ரேம் ஜாம் எனும் ஒரு குஸ்தி யுத்தி உள்ளது. அரங்க எல்லைக் கயிற்றின் மீதேறி கீழே கிடக்கும் எதிராளியின் மீது பாய்ந்து அவனை முடக்குவது. ரோபின் கயிற்றில் ஏறி நின்று தன்னை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்களை கண்ணீர் தளும்பப் பார்க்கிறார். அரங்கிலிருந்து காஸிடி கிளம்பி விட்டதைக் கவனிக்கிறார். ரோம் ஜாம் செய்யக் குதிக்கிறார். காட்சி அங்கு உறைய, படம் முடிகிறது. உச்சபட்ச சுயமிழத்தலின் மூலம் கலை வாழ்வின் எல்லைகளைக் கடப்பதைக் குறியீட்டுத்தனமாய்ச் சொல்கிறது இது.

கலைக்கும் நிஜவாழ்வுக்கும் இடையிலான கண்ணாடிச் சுவர் பற்றிய இப்படத்தின் கரு நார்சிஸஸ் எனும் கிரேக்க புராணக் கதையை நினைவு படுத்துவது. நார்சிஸஸ் கிரேக்கத்தின் மிக அழகான இளைஞன். அவனைப் பல பெண்கள் மோகிக்கிறார்கள். அவர்களில் எக்கோ (எதிரொலி) எனும் ஒரு தேவதையும் அடக்கம். இப்போது ஒரு திருப்பம்: எதேச்சையாக குளத்தில் தனது பிம்பம் பார்க்கும் நார்சிஸஸ் தன்னைத் தானே காதலிக்க ஆரம்பிக்கிறான். சதா குளக்கரையில் அமர்ந்து பிம்பத்தைப் பார்த்து ஏங்கித் தொட முயன்று அது கலைய மருகிய படி அவன் பொழுது போகிறது. எக்கோ அவனைப் பின்தொடர்ந்து அழைக்கிறாள். ஆனால் நார்சிசஸின் தொடர்ந்த நிராகரிப்புகளால் உருகி அவள் உருவிழந்து விடுகிறாள். எப்போதாவது சுயபிம்ப வழிபாடு சலித்து அவன் யாரது தன்னை அழைப்பது என்று திரும்பினால், குரல் மட்டுமே கேட்கும், எக்கோ தேவதையைக் காண முடியாது. நார்சிஸஸின் இந்தப் பிம்பத்துக்கும், எதிரொலிக்கும் இடையிலான அவஸ்தை பொறுக்காமல் கடவுள் சீயஸ் அவனை, நீ ஒரு செடியாகக் கடவ என்று மாற்றி விடுகிறார். நமது நட்சத்திர எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உறவுகளில் நார்சிஸ அம்சங்களை எளிதில் காணலாம்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் ரோபின் நடன அழகி கேஸிடியை மதுக்கடையில் சிறுமைப்படுத்தும் சில இளைஞர்களை எதிர்கொண்டு விரட்டுவார். பிறகு கேஸிடியிடம் தான் இதுவரை போட்டிகளில் பெற்ற காயங்களைக் காட்டி விளக்குவார். அப்போது அவள்பேஷன் ஆப் கிரைஸ்டுபடத்தில் கர்த்தர் வதை செய்யப்படும் காட்சியை உருக்கமாகக் குறிப்பிடுவாள். அவள் அப்போது பயன்படுத்தும்பலி ஆடுஎனும் பதம் குறிப்பிடத்தக்கது. ரோபின் அதைக் கேட்டுச் சொல்வார்: "ஜீஸஸ் திடமான மனிதர்தான், இத்தனை அடிகளைத் தாங்கியிருக்கிறார்". இங்கிருந்து கர்த்தரின் பௌதீக வாழ்வு பற்றின சித்திரமாக மற்றும் அவரை முழுதாக என்றுமே புரிந்திராத சீடர்கள், உபதேசத்துக்குக் கூடின கும்பல் மீதான நுட்பமான பகடியாகதெ ரெஸ்லரைபுரிந்து கொள்ளலாம். கேஸிடியுடன் உறவாடுகையில் ரோபின் வெளிப்படுத்தும் கருணையும், அடித்தட்டு மக்கள் மீதான புரிதலும் நமக்கு மேரி மெக்தலீனாவை நினைவுபடுத்துகின்றன.

தனது நோக்கத்தைப் புரிந்து கொள்ளத் தவறும் சீடர்கள், உபதேசங்களை சரிவரப் புரியும் திறனற்ற மக்கள் கூட்டத்தின் மத்தியில் கர்த்தர் எனும் அம்மாமனிதன் ஒரு பெரும் தனிமையை உணர்ந்திருக்க வேண்டும். தொடர்ந்து சந்தேகிக்கப்பட்டு கைவிடப்பட்ட ஆன்மாவாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். ஆன்மீக வலுவற்ற கோடானுகோடி மனித கும்பலுக்கு கர்த்தர் அரங்கில் குருதி சிந்தி பார்வையாளர்களை குஷிப்படுத்தும் குஸ்திவீரன் மட்டும் தான். பிறரின் குரோத, கீழ்மை உணர்வுகளுக்காக உடல் சிதைவுபடுகையில் ரோபினுக்கு வலியில் உழலும் தன்னை ஒத்த சகவீரர்களிடமிருந்து மட்டுமே அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. எளியவர்களுக்கு மட்டும்தான் ஆன்மீக மனவிரிவு சாத்தியமோ இல்லையோ அவர்களிடம் நிரம்ப கருணை உள்ளதை இன்றும் நேரடியாகக் காண்கிறோம். தொடர்ந்து கர்த்தரின் வாழ்வினோடு பகடி சாத்தியமாகும் பல புள்ளிகள் படத்தில் உள்ளன. தனது பிதாவால் தான் புறக்கணிக்கப்பட்டதாக ஏசு தடுமாறும் கணத்தை மாரடைப்பிற்குப் பின் ரோபின் ஓய்வு பெற்று அன்றாட வாழ்வுக்குத் திரும்ப முயன்று தடுமாறும் காட்சிகள் குறிக்கின்றன. தன் மரணத்தை ஏசு முன்கூறும் போது அதை ஒரு பைத்தியக்கார முடிவாக அவரது சீடர்கள் காண்கிறார்கள். அயதோல்லா மற்றும் கேஸிடியும் இறுதிப் போட்டியில் ரோபின் கலந்து கொள்வதை வீணான உயிர் ஆபத்து என்று தடுக்க முயல்கிறார்கள். இங்கு அயதோல்லா பைலட்டை நினைவுறுத்துகிறான். இறுதியில் ரோபின் அரங்கக் கயிற்றில் நின்று குதிக்கத் தயாராகும் காட்சி சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை மறைமுகமாகச் சுட்டுகிறது. இந்தக் குறியீட்டுக் கதையாடலை கர்த்தரின் ஆன்மீகம் மீதான பகடியாக நாம் கொள்ள முடியாது. அவரை என்றுமே புரிந்து கொள்ள முடியாமல், அவர் வாழ்ந்த நாளில் விலகி நின்று, மரித்த பின் மதப்பீடத்தில் ஏற்றிப் பிம்பமாக உறைய வைத்த மக்களுடனான உறவு மீதான அங்கதமாக இப்படத்தைப் புரிவதே தகும். எல்லா மதத்திலும் நிகழ்வது போல் மதமயமாக்கல் தீவிரத்தில் கிறிஸ்துவின் பௌதீக வாழ்வை கிறித்துவம் தந்திரமாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. திரையை ஆக்கிரமிக்கும் பயில்வானின் பிரம்மாண்ட உடலின் தனிமை, அந்த வெறுமையை நிரப்புவதற்கான அவரது ஏக்கம் மூலம் இந்த பௌதீக எதார்த்தம் குறிப்பிடப்படுகிறது.

வெனிஸ் திரைப்பட விழாவில்தெ ரெஸ்லர்கோல்டன் லயன் விருது வென்றது. முக்கிய திரை விமர்சகர் ரோஜர் எபர்டு இதை 2008-இல் தான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கட்டுரையின் முதல் கடைசி வரிகளை மட்டுமே படிப்பவர்கள் ரோபினாக மிக்கி ரூக்கின் அற்புதமான நடிப்புக்காக மட்டுமாவது ஒரு முறைதெ ரெஸ்லரைபார்க்கலாம்.

Share This

2 comments :

  1. i intend to borrow the title from Marquez inorder to post comment on ur Tamil translation-Living to Learn Language.Still am amazed while reading the translation since i come across new words and phrases in tamil which are absolutely fresh to me.It obviusly shows the tranlator's mastery over the target language and his excellence in composition........

    ReplyDelete
  2. what makes the translation vibrant and powerful could be an arguable topic for a better debate for ever if the participants are well aware of the free play,foregrounding and flexible nature of both languages being involed in translation.my little knowledge still pursuades to analyse all the structures of language-vissible as well as concealed-which is being beautified,focussed,forgrounded and also highlighted by the translator during the operation.Abilash's translation simply focusses the fact that his overall mastery of the languages and the insights,which he could have obtained through his ardent reading.The unwanted and useless translation therioes should be kept aside and unnoticed-theories always likely tend to bring the translators under its horrible clutches- while taking the magnificient attempt of translation.With immense happiness Abilsah is successfully able to copy the exact text into the targeting language without having lost the originality of the text and distorted the idea of the writer.............

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates