Sunday 19 July 2009

அரசியல் சதிராட்டத்தில் இடம் மாறும் காவல் பகடைகள்

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் (2002-04) சில மொழி வாரியான கலவரங்கள் நடந்துள்ளன. என் விடுதியில் மூன்று வருடங்களும் இந்து தமிழ்--கிறித்துவ மலையாளிகளிடையே பூசல் இருந்தது. இரண்டு குழுவினரும் ஒருவரை மற்றவர் தீண்டத்தகாதவர்களாய்க் கருதி வந்தனர். இந்தச் சூழலில் கல்லூரி விழா ஒன்றுக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் மலையாளி என்று தெரிந்த தமிழினப் போராளிகள் மேடையிலேயே கல் வீசித் தாக்கினர். அவர் ஓடியே போனார். மற்றொரு முறை மேகாலயா, மணிப்பூர் பசங்களும் ('சிங்கி' என்றழைப்போம்) தமிழினப் போராளிகளும் ஹாக்கி மட்டை, கிரிக்கெட் மட்டை சகிதம் மோதினர். கல்லூரி மேலாண்மை அதிகாரப் பகிர்வில் நாடார் கிறித்துவர்கள், வேளாளர்கள், சிறியன், மார்த்தோமா கிறித்துவர்கள் என்று இழுபறி இருந்தது. ஆனால் சாதிக் கலவரங்கள் நடந்ததில்லை. கிறித்துவம் என்ற ஒரே குடையின் கீழ் பெரும்பாலானோர் வருவதால் இந்தச் சச்சரவுகள் புகை வடிவில் மட்டுமே தொடர்ந்தன. சிறுபான்மையினர் ஆகையால் கிறித்துவர்களுக்கு உட்பூசல்களைத் தவிர்க்கும் அவசியமுள்ளது. ஆனால் பெரும்பான்மை இந்துக்களுக்கு உட்பூசல்கள் தவிர்க்க முடியாதவை. காரணம், சிறு குழுக்கள் மனிதனுக்கு வலுவான அடையாளம் தருகின்றன. 

தமிழகத்தில் சாதி பூதம் எந்தக் குடுவையிலிருந்து வெளிவரும் என்று சொல்ல முடியாது. சாதாரண சோடா பாட்டிலை இந்த பூதம் கையில் எடுத்தாலே மிஸைல் ஆகி வெடிக்கும். உதாரணமாய் ஸ்ரீனிவாசுக்குப் பதில் பாரதிராஜா, கல் வீசியவர்கள் தலித்துகள் என்றால், என்ன ஆகியிருக்கும். எங்கள் கல்லூரிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே பொருள், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் தேர்வெழுத வந்த முதலாம் ஆண்டு தலித் மாணவர்களை ஆதிக்க சாதி (தேவர்?) மாணவர்கள் சூரசம்ஹாரம் செய்ய வர இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். "புகார் அளிக்கப்படாத காரணத்தால்" காக்கிகள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை காக்கிகள் வேறு புகுந்து தாக்கியிருந்தால் கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று நீண்டிருக்கலாம். ஏனெனில் மாணவர்களிடம் குண்டாந்தடிகள், கத்தி, டியூப் லைட் போன்ற ஆயுதங்கள் தயாராய் இருந்தன. 'பாதுகாப்பற்ற' நமது லத்தி போலீசாரை இந்த பயங்கர ஆயுத கும்பலிடம் அனுப்புவது பூனையைப் பிடிக்க எலிக்கூட்டத்தை ஏவுவது போன்றது. மேற்குறிப்பிட்ட பாணியில் காக்கிகளும் சற்று உயர்ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி கும்பலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் இருதரப்பினருக்கும் பலத்த காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டிருக்கும். வெறுமனே மாணவர்கள் விளையாடியதன் எதிரொலியாக கோவையில் சட்டக்கல்லூரி கல்வீச்சில் சேதம், திருச்சி, மதுரை சட்டக்கல்லூரிகளில் மாணவர் போராட்டம், மதுரையில் 10 பேருந்துகள் தாக்குதல். மூன்றாவது அணியும் இறங்கியிருந்தால், இதுவொரு பெரும் சாதிக்கலவரமாக நீடித்திருக்கலாம். போலீசார் 'வேடிக்கை' பார்த்ததற்கு இதுவும் காரணமோ?

அடுத்து ஒரு பாமர சந்தேகம். இதுபோன்ற கலவரச் சூழலில் கமிசினர் நிச்சயம் முதல்வரிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நம் அரசியல் தலைமையின் உத்தரவு என்னவாக இருந்திருக்கும்? நாம் வேறு புகுந்து எதற்கு இரு தரப்பு சாதிகளை காயப்படுத்த வேண்டும், அவர்களாகவே அடித்து ஓயட்டும் என்பதாக இருக்கலாம். தலித்துகள் தேர்தலில் நிற்கும், கோயில் விழாக்களில் ஈடுபடும் பிரச்சினைகளாகட்டும் நம் அரசுகள் பூனை பிடிபட்ட எலியோடு விளையாடுவது போலவே கையாண்டு வருகிறது. இன்றளவும் தலித்துகள் பாதுகாப்பற்றவர்களாகவே உணர்ந்து வருகிறார்கள். நெல்லையைச் சேர்ந்த என் நண்பர் ஆறுமுகம் பள்ளியிலிருந்து முனைவர் பட்டப் படிப்பு வரை ஆதிக்க சாதியினரால் மனவதை பட்டுள்ளார். இப்போது திருவல்லிக்கேணி செம்மொழி ஆராய்ச்சி மையத்தில்கூட இவர் பாதுகாப்பற்றவராகவே உணர்கிறார். ஊரில் இவரது நிலம் தேவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. படித்த தலித்தின் நிலையே இதுவென்றால், மற்றவர்கள்? பந்தபுலி கிராமத்தில் அக்டோபர் மாதம் ஆதிக்கசாதி மக்களால் 200 தலித்துகள் மலைப்பகுதிக்கு விரட்டப்பட்டனர். இவர்களுக்கு இதுவரை பாதுகாப்பு அளிக்காத காவல்துறை மற்றும் நெல்லை கலெக்டரை தேசிய மனித உரிமை ஆணையம் சமீபமாய்க் கண்டித்துள்ளது. இது நம் அரசுகள் வேட்டையாளிகளுக்கு காவல் நிற்கும் கையாலாகாத போக்கினாலே. 

சட்டக் கல்லூரிக் கலவரத்தில் இருவேறு சாதித் தலைவர்களின் ஆவிகள் சம்மந்தப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வதைபடும் தலித்துகள் தங்கள் அடையாளத்தை நிறுவ அம்பேத்கரைப் பயன்படுத்துவது புரிந்து கொள்ளத்தக்கது. அடிபட்ட கால் குணமாகும்வரை ஊன்றுகோல் பயன்படுத்துவது போன்றது இது. ஆனால் வலுவான சாதியினரான தேவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் எதற்கு? தலித் சிந்தனையாளனான மதுரையைச் சேர்ந்த நண்பன் சார்லஸ் வழிபாட்டு வேற்றுமைகள் கொண்ட தேவர் உபசாதியினரை ஒன்றிணைப்பதற்காக முத்துராமலிங்கத் தேவர் ஒரு பொது அடையாளமாக முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறான். இது ஒரு ஆபத்தான போக்கு. எதிர்காலத்தில் இது போன்ற உபசாதிகள் ஆளாளுக்கு அகழ்வாராய்ச்சியில் இறங்கினால் தமிழகத்தில் தீவிரமான இட நெருக்கடி ஏற்படும். அதுமட்டுமல்ல, யார் யாருடன் மோதுவது போன்ற கடுமையான குழப்பமும் ஏற்படும். 

ஒருவேளை கலவரம் பற்றி கமிசினர் சேகர் அரசிடம் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாய் நடந்திருந்தால் அதன் பொருள் காவல்துறையைக் கட்டுப்படுத்த நம் அரசு தவறிவிட்டது என்பதே. "இப்போது எரிதழல் கொண்டு வா அண்ணன் கையை எரித்திடுவோம் " என்று ஏழு போலிசாரை இடமாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் என்று தண்டித்திருப்பது நடந்த அராஜகத்துக்குத் தீர்வல்ல. முன்பு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதியபோது போலீசார் கைகட்டி நின்றது இது போன்றதொரு 'அரசியல் காரணத்தினால்' தான். ஏற்கனவே டவுசர் கிழிந்த தமிழக காங்கிரசார், போலீஸ் அனுமதியுடன் நடந்த, இந்த குஸ்திப்போட்டி தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பப்பட நிர்வாணமாயினர். இந்த பொறுப்பற்ற காக்கிகள் என்னவாயினர்? பகடையாட்டத்தில் வெற்றிகரமாய் நகர்த்தப்பட்ட மற்றொரு காய் அது. அதற்கடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் தினகரன் அலுவலகத்தை எரித்து அப்பாவிகளைக் கொன்ற போது 'வேடிக்கை' பார்த்த போலீசார் நிலை என்ன? நாடகம் முடிந்ததும் அரிதாரம் கலைத்துவிட்டு மீண்டும் திரும்பினர்.

"ஒவ்வொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வரும்போதும் போலீஸ் வலுவிழந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது" என்றார் சோ. அப்பாவி கல்லூரி மாணவிகளை நீதிமன்ற தீர்ப்புக்காக எரித்தவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தினால் மட்டும் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது? "மக்கள் காவல்துறை மீது மொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள்" என்று சீறினார் வைக்கோ. இருந்தால் தானே இழப்பதற்கு. ஜெயலலிதா வழக்கம் போல் ராஜினாமா கோரியுள்ளார். இவரது தொடர்கோரிக்கைகளில் லாலிப்பாப் கேட்கும் குழந்தையின் அப்பாவித்தனம் உள்ளது. 

காக்கிகள் அரசு எந்திரத்தின் கூலிப்படையினர் என்பது ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இத்துறையில் நிகழும் பதவி, இட மாற்றங்கள் தெளிவாக்குகின்றன. நடந்த கலவரத்தின் போது அடிபட்ட மாணவர்களை காவலர்கள் மருத்துவமனை உதவியாளர்கள் போல் தூக்கிச் செல்லும் பத்திரிகைப் படங்கள் ஒரு பரிதாபமான சித்திரத்தை அளிக்கிறது. போகிற போக்கில் இருக்கிற அமெரிக்க பாணி ரோந்து கார்களை புடுங்கி விட்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை இவர்களுக்கு அரசு அளிக்கலாம். குற்றங்களைத் தடுக்கும் அதிகாரம் இழந்த இந்தப் பொம்மைக் காவல்துறையைச் சீர்படுத்த நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றொரு வாதம் உள்ளது. ஆனால் வக்கீல்கள், சட்ட மாணவர்கள் சமீபமாய் தமிழகத்தை உலுக்கி வரும் அதிகாரம் பெற்ற அராஜக கும்பல்கள். கடந்த சில வருடங்களில் இந்தக் கறுப்புத் தீவிரவாதிகள் நிகழ்த்தி வரும் தர்ணாக்கள், அடிதடிகள் காரணமாய் இவர்கள் விசயத்தில் நம் அரசு எப்போதும் நான்கு அடிகள் பின்வைத்த பின்னரே இரண்டு அடிகள் முன்வைக்கிறது. இந்த வாரத்தில் தமிழகத்தில் உரையாற்ற வந்த கிரண் பேடியை, அவர் முன்னர் வெளியிட்ட ஒரு கருத்துக்காக, வக்கீல்கள் தாக்கச் செல்ல, அவர் வந்த வேகத்தில் திரும்பியுள்ளார். சமீபமாய் ஹிந்து பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கின இந்த வக்கீல்களின் தேர்தல் சட்டமன்றத் தேர்தலை விட பதற்றமிக்கதாக உள்ளது. இப்படிப்பட்ட ரௌடிகளிடம் சிக்கி நீதித்துறை அவதிப்படுவது போதாதா!

செய்தித் தாள் புகைப்படங்களில் குருதி வெள்ளத்தில் கிடக்கும் ஒரு மாணவரைச் சூழ்ந்து நின்று குண்டாந்தடியால் ஆக்ரோசமாய்த் தாக்கும் ஒரு மாணவரின் கலையாத சட்டை, சீராய் வாரின தலை, பளபள பூட்ஸ்கள் போன்ற சீரான கார்ப்பரேட் குமாஸ்தா வகை தோற்றம் காணும்போது ரௌடிகள் பற்றி சமூகம் அளித்துள்ள சித்திரம் கலைகிறது. அன்றைய தினம் திட்டமிடப்பட்ட கசாப்புக்காக இவர் கண்ணாடி முன் மிடுக்காய் தன்னைத் தயாரித்துக் கொண்டு கையில் ஆயுதம் கொண்டு கிளம்புவதைக் கற்பனை செய்தால் இரக்கமின்மையின் நிதர்சனம் கலங்க வைக்கிறது. இனிமேல் காவல் துறைக்கு ஆளெடுப்பதானால் சட்டக்கல்லூரிகளிலிருந்தே இறக்குமதி செய்யலாம்.

 




 
   
  

  
 
 


Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates