Friday 14 August 2009

பின் தொடரும் செருப்பின் குரல்



கர்நாடக மாநிலத்தின் ஹசனிலுள்ள ஜெய்ன் போஜனின் மலையுச்சிக் கோவிலுக்கு என் மனைவியின் அலுவலக சுற்றுலாக் குழுவுடன் சென்றிருந்தேன். கோயில் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் மொய்க்கும் புகைப்பட வியாபாரிகள் மற்றும் வழக்கமான சுற்றுலாத்தல கடைகளின் வரிசை. மலையுச்சிக்கு செல்ல நெளிந்தோடும் கற்படிக்கட்டு. ஏறிட குறைந்தது 40 நிமிடங்கள் தேவைப்படும். எனக்கு உடனே படியேறிப் பார்க்கும் உற்சாகம் வந்தது. நான் அணிந்திருந்த காலிப்பர் எனும் போலியோ காலுக்கான கருவியில் ஷூவை மட்டும் தனியாக கழற்றும் வசதி உண்டு. பொதுவாய் காவித் தீவிரவாதிகளுக்கு இணங்கி நானாகவே ஷூவை கழற்றி விட்டு கோவில்களுக்குள் பிரவேசிப்பேன்; யாருமே எனக்காய் செருப்பு சம்மந்தமான ஆலய புனித விதிமுறைகளை விவரிக்கும் சிரமத்தை நான் தருவதில்லை. ஆனால் அன்று என் காலிப்பரின் பாதப் பகுதி சற்று உடைந்திருந்தது. ஷூவை கழற்றி விட்டு வலியுடன் தான் நடக்க முடியும். அதோடு காலிப்பர் மேலும் உடைந்து போய் நான் முடங்கிப் போகும் வாய்ப்பிருந்தது. கழற்றாமலே நுழைந்தேன்.

படிக்கட்டுகளின் வாயிலில் உக்கிரமான தோரணையுடன் காவலாளி நின்றான். நாலைந்து படிக்கட்டுகள் ஷூவை கழற்றாமல் ஏறியிருப்பேன். அவன் தடியை தட்டி கன்னடாவில் இறங்கு என்றான். அவனிடன் நூறு ரூபாய் தள்ளினால் என்ன என்று எங்கள் குழுத் தலைவி பிரீத்தாவிடம் கேட்டேன். அவர் பதறி விட்டார். "அய்யோ இவர்கள் எல்லாம் மிகக்கறாரானவர்கள்". தலை போனாலும் விதிமுறைகளை யாரும் மீற மாட்டார்களாம். குழு நண்பர்கள் என்னை வெளியே அமர்ந்திருக்கச் சொன்னார்கள். ஒரு காலணிக்காக குழுவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, உடல் வித்தியாசம் காரணமாய் வாழ்வனுபவம் மறுக்கப்படுவது நினைத்து எனக்கு நெஞ்சடைத்தது. தனியாய் சென்றிருந்தால் ஒருவேளை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஊனர்களுக்கு தனிமை என்றுமே அரண் போன்றது. ஊனர்கள் பூரண மனிதர்களோடு பொது இடங்களில் செயலாற்றுவது குழந்தைகளின் பூங்காவில் முதியவர்கள் காத்திருப்பது போன்றது; அல்லது படுக்கையில் விரைப்பை அடுத்தடுத்து இழந்த ஆண் தொலைக்காட்சி பார்ப்பது போன்றது. என் வலிமையான நண்பர் குழுவுக்கு இணையாய் மலையுச்சி ஏறும் பெரும் உந்துதல் என்னை கோவில் அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பியது. அவரது உயர்ந்த வழுக்கை நெற்றியும் புன்னகை நெளியும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உதடுகளும் ஆரம்பத்தில் நிரம்ப நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர் வார்த்தைகளுக்கு தகுந்த இடைவெளிகள் விட்டு எந்திரகதியில் சொன்னார்: "செருப்புகளுக்கு அனுமதி இல்லை".

"ஐயா நான் அணிவது துணியால் செய்த செருப்பு. மேலும் கடவுள் முன் அனைவரும் சமம்."

குழுவுக்குள் அடையாளத்தை காப்பாற்றும் பதற்றம் ஒருவரை இவ்வாறெல்லாம் படு அபத்தமாய் பிதற்ற வைக்கும். அந்த கோயில் புனித காப்பாளர் இந்த அனாவசிய விவாதங்களுள் செல்ல சிரமப்பட வில்லை.

"உங்களுக்கு வேண்டுமானால் டோலியில் போங்கள். சுவாமி சன்னதி அருகில் வரை போய் பார்க்கலாம்"

அவர் சொன்ன வசதி மூங்கில் ஊஞ்சல் நாற்காலியில் பிதாமகன் வில்லன் மகாதேவன் பாணியில் அடுத்தவர்களால் தூக்கிச் செல்லப்படுவதே. 200 ரூபாய் தட்சிணை வேறு.

அப்போது அது எனக்கு என் தனிப்பட்ட சுதந்திரம் மீதான அத்துமீறலாய் தோன்றியது. தானாய் ஏறிச் செல்ல தயாராய் இருந்த என்னை போய் ரூபாய் 200 செலவழித்து பல்லக்கில் போ என்று கட்டளையிட இந்த மாண்புமிகு மனிதர் யார் எனப் பட்டது. அதுமட்டுமல்ல, வேறு ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. எங்கள் பூனையை பிளாஸ்டிக் உணவுக் கூடையில் அடைத்து வைத்து ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம். அது போக்குவரத்து இரைச்சல் கேட்டு பயந்து ஊளையிடும். இத்தனை பேர் நடந்து போக நான் மட்டும் ஒரு பிராணி போல் கொண்டு செல்லப்படும் கற்பனை ஒரு நொடி என்னை கலங்க வைத்தது. நண்பர் குழு மலையேற நான் கொதிப்பும் குமுறலுமாய் திரும்பினேன். எனக்கு திரும்பச் சென்று அந்த புனிதக் காப்பாளரிடம் "உன் ஓத்த சாமியின் குண்டியில் நான் மிதித்தால் பாவமா?" என்று கத்திட தோன்றியது. பாதையோர கடையில் விற்கும் ஜெயின் சிலையை வாங்கி வீசி உடைக்க, கோயில் வாயில் சிற்பம் மீது காறி உமிழ என பல்வேறு வன்முறைக் கற்பனைகள் கிளர்ந்தன. ஆனால் அவை என் சிந்தனை முதிர்ச்சிக்கு (!) அப்பாற்பட்டவை ஆகையால் தவிர்த்தேன். நிலப்பிரபுத்துவ சுரணையை விடாமல் ரூபாய் ஒன்றுக்கு சுற்றுலாத்தல புகைப்படங்கள் விற்க நெருங்கும் எளிய நபர்களிடம் விரக்தி மற்றும் ஆத்திரத்தை வெளியிட்டேன்:
" இந்த குப்பை யாருக்கு வேணும், உன் கடவுளை போய் ஓக்கச் சொல் "

இவ்வாறு கத்தி முடித்து தணிந்த பின் இறுதியாய் ஒரு புகைப்பட விற்பனையாளரிடம் உண்மை நிலவரத்தை அமைதியாய் சொன்னேன். அவருக்கு ஆங்கிலம் புரிந்ததா தெரியவில்லை. ஆனால் சொன்னார்:
" எனக்கு நீங்கள் சொல்வது புரிகிறது. I am a photoseller. நீங்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்யுங்கள் "

நான் நிறைய பேச வேண்டியிருந்தது. ஆனால் அவர் மேலும் இதை சொல்லி விட்டு தன் கையிலிருந்த புகைப்பட கத்தையோடு மற்றொரு வடவிந்திய வாடிக்கையாளரை நோக்கி நகர்ந்தார்:
" இந்தி பேசுவீங்களா? அப்படியென்றால் நாம் மேற்கொண்டு பேசலாம்"

அன்று வரை இந்தியை வெறுத்ததற்காக நான் என்னை சில நொடிகள் வெறுத்தேன்.

உட்காரப் பிடிக்காமல் அங்கும் இங்குமாய் தெருக்களில் அலைந்தேன்.

மலையுச்சியில் இருந்து மனைவி குறும்பேசியில் பேசினாள்:
" வரமுடியலேண்ணு வருத்தமா?"
" சேச்சே எனக்கென்ன... "

தேநீர் அருந்தி, அழகான கடைப்பெண்ணை வேடிக்கை பார்த்து, பூங்காவில் அமர்ந்து எதிர்பெஞ்சு பள்ளிக்குழந்தைகளுடன் கற்பனை உரையாடல் நடத்தி, வேலிச்செடிகளின் நேர்த்தியை கவனித்து ... எனக்கு எங்கும் இருப்பு கொள்ளவில்லை. என் மனைவி, மாமியார் சொல்வது போல் சாந்தசொரூபியான நான் அப்போது மனக்கொந்தளிப்பை எப்படி அடக்க என்று புரியாமல் தவித்தேன். எழுத வேண்டும் எனும் உணர்வு விரைப்பை அரிப்பு போல் சட்டென ஏற்பட்டு தொடர்ந்தது. பல விசயங்களை எழுத திட்டமிட்டேன். உடனடி பேனா, காகிதம் வேண்டும். அங்குள்ள கடைகள் ஒவ்வொன்றும் சுற்றுலாப் பயணிகளின் வினோத மனோபாவத்தை உத்தேசித்து உருளைக்கிழங்கு சிப்ஸ், நடுங்கும் குளிருக்கு இளநீர், கோக், பெப்ஸி, தலையில் அணிய கவ்பாய் தொப்பி, சாவி கொடுத்தால் தாவும் கோழிக்குஞ்சுகள் ஆகியவை மட்டும் நிரப்பி வைத்திருந்தன. சாலை முடிவில் இருந்த ஒரே தேனீர் கடையை ஒட்டி வரிசையில் அய்யப்ப சாமிகள் பல தோரணைகளில் வேட்டி தூக்கி சிறுநீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். பல கடைகளில் அலைந்து தேடி ஒரு கடையில் பேனா மட்டும் தருகிறேன் என்றார்கள். நான் விடாப்பிடியாய் ஏதேனும் பழைய காகிதம் ஏனும் கொடுங்கள் என்றேன். கடைக்காரர் மனைவி ஓரங்களில் எலி கடித்த அட்டையில்லாத ஒரு பழைய நோட்டு புத்தகத்தை தந்தார். கடைக்காரர் இளித்துக் கொண்டு "இலவசமாக வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அருகிலுள்ள திண்ணையில் அமர்ந்தேன். வெகுநேரம் எழுத ஏதும் தோன்றவில்லை. பக்கத்து முடிதிருத்தும் கடைத்திண்ணைத் தாத்தா " அந்த ஊர்?" என்று ஆங்கிலத்தில் வினவினார். "தமிழ்நாடு" என்றவுடன், கண்ணில் வெளிச்சம் தெரிய, தமிழில் "தமிழ்நாட்டிலே எங்கே சார்" என்றார். " நாகர்கோவில் ". எதிரில் தொடை தெரிய வெள்ளைக்காரி நம்மூர் குறுந்தாடி நபர் ஒருவரின் கரத்தை முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டு விரைந்து போனார். கூட்டமாய் கடக்கும் பக்தகோடிகளின் வெறுங்கால்களை கவனிக்க எரிச்சல் மீண்டும் கிளம்பியது. " மதவாதிகள் முட்டாள்கள் தானே. குஜராத்தில் குழந்தைகளையும், கர்பிணிகளையும் குழிக்குள் தள்ளி வெட்டிக் கொன்றவர்கள் இவர்களுக்கு தூரத்து சொந்தம் தானே " எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் நேரடி அவமானமும், மறுதலிப்பும் புத்தக தர்க்கங்களை விட காத்திரமான நிஜங்களாய் தெரிந்தன. அப்போது தோன்றிய குரோதத்தில் லஷ்கர் தோயிபாவிலிருந்து கோவில்களை தகர்க்க அழைத்திருந்தால் ஆவேசமாய் கிளம்பியிருப்பேன். தலைமுறைகளாய் நிராகரிப்புக்கும், அவமானத்துக்கும் அவசியமின்றி உள்ளாக்கப்படும் தலித்துகளின் பொறுமையை எண்ணி திகைத்தேன். என் வலி எம்மாத்திரம்.

மனைவி குறும்பேசியில் மீண்டும் அழைத்தாள்: " கோயில் வளாகத்துக்குள் வா, வழியோர கடை ஒன்றில் வளையல்கள் வாங்கித் தா "

" அந்த கேவலமான இடத்தில் இனி கால் வைக்க மாட்டேன் ", நான் உறுமினேன்.

" கோயிலுக்குள் நீ வர வேண்டாம், வளாகத்துக்கு வந்தால் போதும் "

" அந்த பிராந்தியத்துக்குள் நிச்சயம் வர மாட்டேன் "

ஒரு நாற்பது வயதுப் பெண் கன்னடத்தில் பிச்சை கேட்டாள். அவளது சதுர வடிவ மர ஒடு அழகானது.
" உன் ஜெயின் கடவுளுக்கு இதோ நான் போடும் பிச்சை! " ஒரு ரூபாயை வன்மத்தோடு போட்டேன். அவள் என்னை நீடுழி வாழ வாழ்த்திப் போனாள்.

திரும்பி வந்த மனைவி கோவிலை ஏகத்துக்கு டிஜிட்டல் நிழற்படங்கள் எடுத்துத் தள்ளியுள்ளதாய் சொன்னாள். எனக்காக. ஒரு சுவர், கல் கூட விடவில்லையாம். மிக அழகான சிற்பங்களாம். எனக்குள் ரத்தம் மீண்டும் சூடாகியது. யாரையேனும் மாற்றி மாற்றி அறைய வேண்டும்.

" உன் போட்டோ ஒன்றும் பார்க்க வேண்டாம் " நிழற்படக்கருவியை தள்ளி விட்டேன்.
" உன்னை மன்னிக்கவே மாட்டேன், மடையா! "

அவள் கண்கள் பொங்கியிருந்தன.

இரவில் இப்போது குறட்டை விட்டு தூங்கும் வரை அவள் என்னிடம் பேசி விடவில்லை. திருட்டுத்தனமாய் நிழற்படக்கருவியை திறந்து படங்களை ரசிக்கிறேன். எவ்வளவு அருமையான அனுபவத்தை இழந்திருக்கிறேன். ஒருவேளை பல்லக்கில் ஏறி சென்றிருக்கலாமோ!

எனக்குப் புரிகிறது: என் தவறுதான். அன்று நான் தான் சமயோசிதமாய் விதிமுறைகளை சமாளித்திருக்க வேண்டும். மனிதன் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் உட்பட்டு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த மிருகம். ஒரு மதவாதியிடம் அணிபணிவது போல் ஏமாற்றி சமாளிப்பது மட்டும் உசிதம். ஒரு பூனைக்குட்டியை கூடையிலிட்டு பத்திரமாய் அழைத்துச் செல்வது போல் அவனைக் கையாள வேண்டும். நான்தான் தவறு செய்து விட்டேன். அக்கணம் என் மூளை செயல்படவில்லை.
Share This

3 comments :

  1. அபிலாஷ், வாசித்ததும் வருத்தமாக இருந்தது. அனுதாபப்படவில்லை. கால்கள் இருந்தும் மனஊனம் படைத்தவர்களிடம்தான் அனுதாப்படவேண்டும். நானும் உங்களைப் போல சில இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனது ஊனம் வெளித்தெரியாதது. அதாவது, எனக்குக் குழந்தைகள் இல்லை.(தவறு என் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இல்லை) உறவுக்காரர்களின் விசேடங்களை காரணம் சொல்லாமலே தவிர்த்துவிடுவேன். அவ்வகையில் நண்பர்கள் உன்னதமானவர்கள். அதைப் பற்றிக் கேள்வியே கேட்கமாட்டார்கள். இப்போது யாராவது அதைப் பற்றிக் கேட்டால் பட்டென்று ஏதாவது சொல்லிவிடுகிறேன். நீங்கள் கவலைப்பட்ட மாதிரி இருந்தது. அது எனக்குக் கலக்கத்தை அளித்தது. அதனாலேயே இந்தப் பின்னூட்டம்.

    ReplyDelete
  2. கவலை என மாட்டேன், அதைக் கடந்து சென்றேன். அன்று இதை எழுதாமல் அன்றிரவு தூங்க முடியவில்லை. எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. மறு நாள் விடிந்ததும், ஏன் விழித்துக் கொண்டேன் என்று கேட்டேன். பறவைகள் தொடர்ச்சியாய் என் மேல் எச்சமிட்டு செல்லும் உணர்வு. இனிமேல் நடந்தால் என்ன செய்திருப்பேன் என்பதே கடைசி பத்தி. பின்னூட்டத்துக்கு நன்றி தமிழ். இப்போது கனடாவிலா?

    ReplyDelete
  3. சத்தியமான வார்த்தைகள் அபிலாஷ்!!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates