Sunday 16 August 2009

தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்காலப் புறக்கணிப்பும் அவசர தேர்வுகளும்





இந்திய கிரிக்கெட் அணியின் பின்வாசல் எச்சக்கலைகள் தமிழக வீரர்கள். ஜார்க்கண்டிலிருந்து ஒருவர் அணித்தலைவர் ஆகும் போது தமிழக வீரர்களால் இதுவரை தேசிய அணியில் நிலைக்கக் கூட முடியவில்லை. ஸ்ரீகாந்த் இந்திய தேர்வாளர் தலைவர் ஆகிட நிலைமை ஒரு U திருப்பம் எடுத்து மீடியனில் மோதி நிற்கிறது.

தமிழக வீரர்களின் உதாசீனப் பட்டியல் பெரிசு. தொண்ணூறுகளில் இருந்து தற்போது வரை மாநில அளவிலான சிறந்த மட்டையாட்ட அணிகளில் தமிழகமும் ஒன்று. ஷரத், ரமேஷ், பதானி, ஸ்ரீராமிலிருந்து பரத்வாஜ், விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த் வரை அனைவரும் ரன் எந்திரங்கள். இவர்களில் தேசிய அணியில் ஓரளவு பெயர் பெற்றவர்கள் மூவர்.

ராபின் சிங். 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆறுதல் பூச்செண்டாக ராபின் சிங் தேசிய ஒருநாள்அணியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தோதான இடம் எண் 3 தான். அவ்விடத்தில் கிடைத்த குறுகின கால வாய்ப்பில் (இலங்கைத்தொடர்) சதம் அடித்து ஒரு ஆட்டத்தை வென்றார். அந்த தொடரில் இந்தியா அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தது அந்த ஆட்டத்தில் மட்டுமே. பிறகு எந்த காரணமும் இன்றி அவரிடமிருந்து மூன்றாவதாய் ஆடும் வாய்ப்பு அடுத்த தொடரிலிருந்து பறிக்கப்பட்டது. எப்போதும் எண் 6 இல் ஆடியதால் ராபினால் அடுத்து சதம் அடிக்க முடியவில்லை. கங்குலி தலைவரானதும் அவசர அவசரமாக கழற்றி விடப்பட்டார். காரணம் மற்ற நட்சத்திரங்களைப் போல் அதிக சதங்கள் அடிக்க வில்லை என்பது. ராபின் அதிகம் அலட்ட மாட்டார். ஓய்வு பெற்ற பின் மட்டும் " நான் என் ஆட்ட உச்சத்தை கடந்து விட்ட பின் தான் தேசிய அணியில் ஆட வாய்ப்பு வந்தது" என்று கொஞ்சம் புலம்பினார்.

பதானி. நெருக்கடி விரும்பி. மும்பைக்கு எதிரான இறுதி ரஞ்சி ஆட்டத்தில் தமிழ்நாட்டுக்காக ராபினுடன் இணைந்து இவர் சதம் அடிக்க, கவனித்த சச்சின் தனியே அழைத்து மெச்சினார். சச்சின் ஆதரவில் தேர்வாளர் கவனம் மற்றும் வாய்ப்பு. தொடர்ந்து தேசிய ஒருநாள் அணியில் 2 வருடங்கள். ஒரே தொடரில் சொதப்ப நிரந்தரமாய் வெளியேற்றப்பட்டார். 40 ஆட்டங்களில் ஒரு சதம் 4 அரை சதங்கள். ஒருநாள் ஆட்ட சராசரி 30. அணியில் ஐந்தாவது இடத்தில் ஆடுபவருக்கு இது ஒன்றும் மோசமில்லை. தேர்வாளர்களின் ஞாபக மறதிக்கு காரணம் பதானிக்கு காட்பாதர் இல்லாதது.

தினேஷ் கார்த்திக் மூவரிலும் அதிர்ஷ்டசாலி. தோனி வந்த பிறகும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் நிலைக்கவில்லை. காரணம் இவரது பலவீனங்கள்: நிலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாய் பதற்றம், அதன் விளைவாய் அவசர அல்லது ஆமை ஆட்டம்.

இனி வாய்ப்பு சரிவர கிடைக்காதவர்கள்.

சடகோபன் ரமேஷ். 19 டெஸ்டு ஆட்டங்களில் சராசரி 37. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய புதிர் இவரது புறக்கணிப்பு. 1999-இல் சேப்பாக்கில் ரமேஷ் ஷோயப், அக்ரம், சக்லைன், வகார் போன்ற தரமான பந்து வீச்சாளர்களை படு கெத்தாக சந்தித்து ஓட விட்டதை நாம் மறக்க முடியாது. ஜிம்பாப்வேவில் காயம் பட்டு விலகிய பின் ரமேஷ் பதானி மாதிரி ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அவருக்கு அக்ரம், கவாஸ்கர் என்று ஆதரவாளர்கள். தினமும் விடிகாலை துயில் களைந்து, போர்வை உதறி கடுமையாய் வலையில் பயின்று, உள்ளூர் ஆட்டங்களில் நிலையாய் ஆடி ஓட்டங்கள் குவித்து, "இதற்கு என் மனைவியின் ஊக்குவிப்பே காரணம்" என்று பேட்டி கொடுத்து, ஒரு வருடத்துக்கு பிறகு ரமேஷுக்கு ஆஸ்திரேலியா போக வாய்ப்பு வந்தது. அங்கு முன்னணி நட்சத்திரங்கள் சொதப்பின பயிற்சி ஆட்டத்தில் ரமேஷ் மட்டும் நிலைத்து ஆடி 80 அடித்தார். ஆனாலும் அந்த பயணம் முழுக்க புறக்கணிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்தும். ரமேஷுக்கு பதிலாக அவர் இடத்துக்கு ஒரு நிரந்தர தரமான துவக்க ஆட்டக்காரர் (காம்பிர்) வர 7 வருடங்கள் ஆயின என்பதே இவரது நெடுங்கால உதாசீனிப்பு தேர்வாளர்களின் ஒரு குரூரமான வேடிக்கை என்பதை விளக்குகிறது. ரமேஷுக்கும் தமிழக தேர்வாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என்பது புரளி. இதை உறுதி செய்யும் விதம் அவர் தமிழக அணியிலிருந்து விலகி ஒரிசா அணிக்கு போனார். யாரும் திரும்பிப் பார்க்காததால் கேரள அணிக்கு சென்றார். ஒன்றும் வேலைக்காகாது என "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் தேர்வாளராக, பிறகு "சந்தோஷ் சுப்பிரமணியம்" படத்தில் அண்ணனாக தலையாட்டிப் போனார். இடையே வாசிம் அக்ரம் ஒருதடவை கேட்டார் " அந்த ரமேஷ் எங்கே? ".

ரமேஷை விட குறைவாக சராசரி 30 கொண்டுள்ள வாசிம் ஜாபர் தேர்வாளர்களின் செல்லப் பிள்ளை. இதுவரை 30 டெஸ்டு ஆட்டங்கள் ஆடி விட்டார். கடந்த ஆஸி பயணத்தில் முதல் டெஸ்டில் சேவாக்கை கூட உட்கார வைத்து இந்த மும்பைக்கருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த புதிரையெல்லாம் விளக்க முடியாது. சிலருக்கு ரொம்ப அழகான மனைவி வாய்ப்பது போல்.

ஷரத். இவருக்கு தொண்ணூறின் ஆரம்பத்தில் ஒரு வாகன விபத்தில் முழங்கை முறிந்தது. இது இவரது ஆட்ட முறையை பிற்பாடு மாற்றியது. வழக்கமான சரளம் இழந்து சற்று தடுமாறி ஆடினாலும் அதிகபட்ச ஓட்டங்களை ஒவ்வொரு பருவத்திலும் குவித்தார். ஏறத்தாழ எல்லா ஆட்டங்களிலும் குறிப்பிடும்படியாய் ஓட்டங்கள் எடுத்தார். தேர்வாளர்கள் தவறாமல் தவிர்த்தனர். 100 ஆட்டங்கள் ஆடி 8390 ஓட்டங்கள் மற்றும் 27 சதங்கள் அடித்த நிலையில் அவர் தேசிய அணியில் ஆடும் கனவை இழந்திருந்தார். "மாநில அணிக்கு பங்களிப்பதில் ஒரு சந்தோசம் உள்ளது" என்று ஒரு உறுத்தலான அமைதியுடன் செப்பினார். பிறகு "கேரள அணிக்கு பயிற்சியாளராகி கரை தேற்றப் போறேன்" என்று ஓய்வு பெற்றார். படித்து பெருமூச்சு விட்டேன். தேர்வாளர்களும் ஒருவேளை. சதம் சதமாய் அடித்து எத்தனை நாட்கள் அவர்களது பாராமுகத்துக்கு புட்டம் திருப்பி காட்டுவது.

ஸ்ரீராம் ஏறத்தாழ ஷரத் மாதிரி. 8703 ஓட்டங்கள் மற்றும் 30 சதங்கள். கிடைத்த 8 ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சில் சிறந்தார். ஒன்பதாவது நிறுத்தத்தில் அனாதரவாக நின்றார். அடுத்த ரொம்ப நாட்கள் கழித்து ஸ்ரீராமுக்கு மீண்டும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு எதிராக. 3 விக்கெட்டுகள் சாய்த்து அரை சதம் அடித்தும், விசிலடித்து இறக்கி விட்டார்கள். தொடர்ந்து உள்ளூர் ஆட்டங்களில் சதங்கள் செதுக்கி, பிறகு சலித்து ஐ.சி.எல்லில் இணைந்திட, ' கல்லாய் போக' என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சபித்த வீரர்கள் பட்டியலில் இப்போது. பல வருடங்களுக்கு முன் ராஜ் டீவியில் ஸ்ரீராமை ஸ்ரீகாந்த் பேட்டி கண்டார். அப்போது ஸ்ரீ 'எதிர்கால பிரகாச நட்சத்திரம்'. அவர் சீக்காவிடம் சொன்னார்: 'நான் இடது கை சுழல் பந்து வீச்சாளனாகத்தான் பள்ளிக் காலத்தில் ஆரம்பித்தேன். அப்புறம் மட்டையாளனாகி விட்டேன்'

சீக்கா கடிந்து கொண்டார்: 'வீணடிச்சுட்டியே ஸ்ரீராம், நீ சுழல்பந்துலேயும் கவனம் செலுத்தி ஒரு ஆல்ரவுண்டர் ஆகியிருக்கலாம். அப்போ சுலபமா இந்திய அணியில இடம் பிடிக்கலாம்'

ஸ்ரீராம் பவ்யமாக தலைகுனிந்து நகம் பார்த்தார்: 'ஆமா'

கூடவே விக்கெட் கீப்பராக, ஆப் சுழல்பந்து , கால் சுழல்பந்து, வேகப் பந்து வீச்சாளராகவும் ஸ்ரீராம் இருந்திருக்கலாம். முன்னணி வீரர்கள் யாராவது காயமடைய வாய்ப்பு வந்திருக்கும்.

ஸ்ரீராம் கால்பக்கம் வரும் பந்தை இடதுகையால் விரும்பி அடிக்கக் கூடியவர் (சந்தர்பவுல் மாதிரி). அதனால் 'அபிஷ்டு' என்று தேர்வாளர்கள் இவரை விலக்கி வைத்து விட்டனரா?

இவர் தேசிய அணியில் அறிமுமான புதிதில் கவாஸ்கர் சொன்னார்: 'இந்த இளைஞர் முதன் முதலில் மட்டையாட களமிறங்கும் போது கைதட்டி ஊக்குவிப்பவர்களில், வெற்றி பெற வாழ்த்துபவர்களில் நானும் இருப்பேன்'. அது சரியாய் கேட்கவில்லை.

கவனிக்காமல் விட்ட நட்சத்திரம்.

ராஜகோபால் சதீஷ் திருச்சிக்காரர். வறிய பின்னணி. கிரிக்கெட் பயில தினமும் 20 கிலோ மீட்டர் தொலைவை மிதிவண்டியில் கடந்தார். பொறியியல் முடித்து சென்னைக்கு வந்து சிறிது சிறிதாய் மாநில அணியில் இடம் பிடித்தாலும் நிலைக்க வில்லை. பிறகு அஸ்ஸாம் அணிக்கு திரும்பி தமிழகத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். இரண்டு பருவங்களுக்கு 55 சராசரியில் ஓட்டங்கள் எடுக்க, தமிழக அணிக்கு திரும்ப அழைத்தார்கள். அங்கு மீண்டும் நிலைக்க முடியாமல் 28 வது வயதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிரி வாரியமான ஐ.சி.எல்லில் சேர்ந்தார். அங்கு அவரது அணியை காப்பாற்றும்படியான அதிரடி ஆட்டம் பார்த்து முன்னாள் ஆட்டக்காரரும், சிறந்த வர்ணனையாளருமான டோனி கிரெயிக் சொன்னார்: "இவர் உலகத் தரம். டோனி அணியில் இருக்க வேண்டியவர் ". அவர் அன்று 36 பந்துகளில் எடுத்த 76 ஓட்டங்கள் நவித் உல் ஹசன், சாமி, சக்லைன் உள்ளிட்ட உலகத்தர பாக்கிஸ்தான் வீச்சாளர்களுக்கு எதிராக அடித்தவை. சதீஷின் நெருக்கடி ஆட்டம் டோனியை நினைவூட்டுகிறது, பீல்டிங் யுவ்ராஜையும். நாம் ஒரு ரத்தினத்தை இழந்திருக்கிறோம்.

தமிழகம் இதுவரை புறக்கணிக்கப்பட என்ன காரணம்? வடக்கத்திய, மேற்கத்திய அணித்தலைமைகளின் ஆதிக்கம் என்று கூற முடியாது. கங்குலிக்கு முன் வரை இந்திய அணியை கன்னட பிராமணர்கள் தான் ஆக்கிரமித்தனர். தமிழக அணிக்கு ஆதரவளிக்கும் தேர்வாளர்கள் கடந்த காலத்தில் (ஸ்ரீகாந்துக்கு முன்) இல்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. மற்றொரு ஊகம் தமிழக வீரர்கள் அணித்தலைமைக்கு அடங்காமல் வாய் நீட்டுவார்கள் என்பது. இதனால் தமிழர்களை பொதுவாய் அணித்தலைவர்கள் விரும்புவதில்லையாம். பலவீனமான பந்து வீச்சு காரணமாய் இதுவரை ரஞ்சி தொடர்களில் தமிழக அணி சோபிக்காததும் முக்கிய காரணம்.




ஸ்ரீகாந்த வந்த பிறகு நிலைமை மாறியுள்ளதை குறிப்பிட்டேன். முந்தை நிலைக்கு நேர்மாறாக தமிழக வீரர்களை தேசிய அணியில் நுழைப்பதில் இப்போது படு அவசரம் தெரிகிறது. ஸ்ரீகாந்த குழுவினர் டோனி ஏற்கனவே இருக்க தினேஷ் கார்த்திக்கை இரண்டாவது விக்கெட் காப்பாளராக தற்போது நியூசிலாந்துக்கு அனுப்பியது, இந்த வருடத்து ரஞ்சி தொடரில் 80 சராசரிக்கு 1260 ஓட்டங்கள் சேர்த்த, இந்திய தேர்வாளர்களின் பாசமலர், வாசிம் ஜாபருக்கு பதில், இந்த வருட ரஞ்சி தொடரில் சொதப்பின, ஒரே ஒரு டெஸ்டு ஆட்டம் மட்டுமே ஆடியுள்ள, எகிறும் பந்தை பலவீனமாய் கொண்டுள்ள தமிழக வீரர் முரளி விஜயை தேர்வு செய்தது, படுமிதமாக பந்து வீசும் பாலாஜியை கூட சேர்த்தது ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

முதுகு காயத்திற்கு பிறகு இந்த வருட ரஞ்சி தொடரில் தான் பாலாஜி, தொடர்ந்து பந்து வீசி, தன் பழைய உச்சத்துக்கு அருகில் வந்தார். ஆனால் கடந்த பிப்ரவரியில் தமிழக அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் "பாலாஜியின் வீசும் முறை மாற்றப்பட்டு விட்டதால், அதற்கு உடலின் தசை நினைவு பழக சில மாதங்கள் ஆகும். ஏப்ரலில் பாலாஜி என்ன நிலையில் உள்ளார் என்பதை வைத்து அவரது எதிர்காலத்தை கூற முடியும்" என்றார் . பாலாவின் அதிரடி நியூசிலாந்த் வாய்ப்பை அவர் பயிற்சியாளர் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால் பாலாஜி முழுக்க பழைய பந்து வீச்சு நிலைக்கு, வேகத்துக்கு இன்னும் திரும்ப வில்லை. சமீப இலங்கைத் தொடரில் பாலாவின் 115 கிலோமீட்டர்-வேக பந்து வீச்சை பொருட்படுத்தாமல் எதிரணி மட்டையாளர்கள் சாத்தி விரட்ட, டோனி வேறு வழியின்றி அவருக்கு 5 ஓவர்களுக்கு மேல் அந்த ஆட்டத்தில் வழங்கவில்லை. பாலாவின் ஓட்டம் மற்றும் உடல் மொழியில் தயார்த்தன்மையோ, தன்னம்பிக்கையோ இல்லை. இந்நிலையில் தான், காயத்தில் இருந்து திரும்பி பந்து வீச ஆரம்பித்திருக்கும் ஸ்ரீசாந்த், மற்றும் போன ஐ.பி.எல் 1-இல் அசத்திய திரிவேதி ஆகியோரை புறக்கணித்து பாலாவை நியூசிலாந்துக்கு அனுப்பினார்கள்.

தமிழகத்தை பொறுத்த மட்டில் இந்நிலை ஒரு முழுங்க முடியாத யானை உருளை. இவர்களின் அவசர தேர்வு தகுந்த ஆட்டத்தால் நியாயப்படுத்தாமல் போனால், எதிர்காலத்தில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இரட்டை சிரமம் ஆகி விடும். ஏற்கனவே தமிழக வீரர்களின் தேர்வு அநியாயம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது (பார்க்க:http://blog.thecricfanclub.com/2009/02/14/indian-selection-saga-balajis-inclusion-defies-logic/ மற்றும் http://i3j3cricket.wordpress.com/tag/team-selection/). இந்த வீரர்கள் சொதப்பினால் ஒரு நெடுங்கால புறக்கணிப்பு துவங்கும். ஒரு தோதான உதாரணம் முன்னாள கீப்பர் சாபா கரீம். அப்போது கங்குலி ஆட்சி. சாபா கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழுக்க குணமாகாத நிலையில் கங்குலியிடம் பொய் சொல்லி (ரெண்டு பேரும் வங்காளிகள்) வங்கதேசம் சென்ற அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த டெஸ்டு தொடரில் பார்வை தெளிவின்றி அசிங்கமாய் தடுமாறி காற்றில் துழாவினார். பந்துகளை அவரால் பிடிக்கவே முடியவில்லை. சவுரவ் தான் ஏமாற்றப்பட்டதாய் கொதித்தார். பிறகு சாபா ஒருபோதும் தேர்வு செய்யப்பட வில்லை. உள்ளூர் ஆட்டங்களில் 56 சராசரிக்கு ஓட்டங்கள் சேகரித்தும் கூட.

அடுத்து தேசிய அணியில் நியாயமாய் இடம் பெற வாய்ப்புள்ள தமிழக வீரர்கள் யார்? இப்போதைக்கு பத்ரி மட்டும் தான். இவரையும் கூட தேர்ந்தெடுத்தால் கண்ணு படும் என்று பத்ரியை ஸ்ரீகாந்த் நியுசிலாந்துக்கு அனுப்பவில்லை. சேப்பாக்கில் முகுந்த் ஆடிப் பார்த்திருக்கிறேன். குறைவான கால் நகர்த்தல் கொண்ட இடதுகை அதிரடிக்காரர். தரத்தில் விஜய்க்கு ஒரு படி கீழ் தான். தமிழக அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் நமது உள்ளூர் தரவரிசையில் இப்பொது முன்னிலையில் உள்ளார். இவரது மட்டையாட்டமும் முன்னேறி வருகிறது. யோ. மகேஷ் எனும் ஒல்லிப் பீச்சான் வேகப் பந்தாளரை ஐ.பி.எல்லில் டெல்லி டேர் டெவில்ஸ்சுக்காக ஆடிய போது பார்த்திருப்பீர்கள். இந்த 21 வயது சென்னை இளைஞரின் வீச்சின் கூர்மை மற்றும் பந்தை எக்குத்தப்பாய் எகிற விடும் பாங்கை முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது Beyond the Blues நூலில் மிகவும் சிலாகித்துள்ளார்.

கிரிக்கெட்டில் டைமிங் முக்கியம். ஸ்ரீகாந்தின் நாற்காலி ஆடும் முன் இந்த வீரர்கள் உச்சத்தை வெளிப்படுத்தினால் கவனிக்கப் படுவார்கள். இல்லாவிட்டால் கேரளா, அஸ்ஸாம் பக்கம் டிக்கெட். பிறகு காய்கறிக்கூடை, போக்குவரத்து, ஏமாற்ற நினைவுகள் ...
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates