Sunday 16 August 2009

அடிகாவின் "வெள்ளைப் புலி": கண்ணாடியில் தோன்றும் கோமாளி



இந்த வருடத்துக்கான புக்கர் பரிசை வென்றுள்ள அரவிந்த அடிகாவின் "வெள்ளைப் புலி" ஒன்றும் உன்னதமான நாவல் கிடையாதுதான். ஒரு சிக்கலை பல்வேறு கதாபாத்திரங்கள் வழி மேலும் சிடுக்காக்கி பின்னலாக்கி வளர்த்தெடுக்கும் பாணி இதில் இல்லை. ஒரு பிரச்சனை \ அவதானிப்பு \ மையக்கருத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசும் செவ்விலக்கிய போக்கும் கிடையாது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் அடிகா அலசிப் பார்ப்பதில்லை. நூலின் ஒவ்வொரு வரிக்கும் பகடி செய்வதும், சமூக பாவனைகளை அம்மணமாக்குவதுமே பணி. அதற்கான சாத்தியங்களைத் தேடி சம்பவங்களை நகர்த்தும் குழந்தைத்தனமான ஆர்வத்தில் அடிகா கதை அமைப்பு அல்லது பாத்திர வார்ப்பு ஆகியவற்றை கோட்டை விடுகிறார். உதாரணமாய், கதைசொல்லியான பல்ராம் ஒரு கொலை செய்து அதிலிருந்து தப்பித்து விட்டான் என்று ஆரம்பப் பக்கங்களிலேயே முடிச்சவிழ்க்கப் படுகிறது. இதற்கு அடுத்து மற்ற சிக்கல்கள், உண்மை வெளிப்பாடுகள் நிகழ்வதில்லை. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் கூட இத்தொழில் நுட்பத்தை பொறுத்தமட்டில் கவனமாக இருப்பான். ஆனாலும் அங்கதத்துக்கான அடிகாவின் உற்சாகம் வாசகனுக்கு சீக்கிரம் தொற்றிக் கொள்கிறது. இத்தொழிற்நுட்பக் குறைகளை மறந்து, சேற்றை வாரி அடிக்கும் குழந்தை விளையாட்டில் பங்கெடுப்பது போல் நாவலோடு வாசகன் ஒன்றி விடுகிறான்.

16-ஆம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பொதுமக்களிடையே மிகப்பிரபலம் லியர், ஹேம்லெட் போன்ற சிக்கலான, கனமான தலைமை பாத்திரங்கள் அல்ல, கோமாளிகள். கதையின் விளிம்பில் பட்டும் படாமலும் நின்று மைய பாத்திரங்களின் ஜம்பத்தை, ஆணவத்தை, குதிரைக்கடிவாள பார்வையை பகடி செய்து அபத்தத்தை வெளிப்படுத்துவதே இந்த கோமாளியின் வேலை. உதாரணம் ஹென்ரி 1V நாடகம். இந்நாடகம் இளவரசன் ஹால் தன் பொறுக்கித்தனத்தை உதறி பொறுப்பாளனாகி அரச பொறுப்பை ஏற்பது பற்றியது. ஹாலின் உற்ற நண்பனான திருடனும், மொடக்குடிகாரனுமான பால்ஸ்டாப் எனும் கோமாளி இவனுக்கு நேர்முரணான பாத்திரம். இவன் வேலை எந்த வேலையும் செய்யாமலிருப்பது. மற்றொரு வேலை நாடகம் முழுக்க பொறுப்பு என்பதன் பின்னுள்ள ஆணவம், அதிகார மோகம், அதன் விளைவான அநீதி, அபத்தம் ஆகியவற்றை தன் பொறுப்பற்ற கோமாளித்தனங்கள் மூலம் பகடி செய்து காட்டுவது. இவன் உருவாக்கும் உரையாடலை பின்தொடர்கையில் வாழ்க்கையை ஒருவித எக்காளத்துடன், ஒட்டிக் கொள்ளாமல் உற்றுப் பார்ப்பது மட்டுமே நேர்மையான முறையோ எனப்படுகிறது. ஒரு வேலையை, பொறுப்பை எடுத்துக் கொள்கையில் அதன் பின்னுள்ள அரசியல், அநீதி, போலித்தனத்தை ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது. இன்றைய சமூகத்தில் அதிகார மையத்தின் விடாப்பிடியான கண்காணிப்பு மற்றும் கடுமையான பொதுமையாக்கல் காரணமாய் நிகழ்வுகளை தொடர்ந்து பிரதிபலிக்கும் ஒரு சாட்சியாய் மட்டுமே மனிதனால் எஞ்ச முடிகிறது. அப்போதும் உங்கள் வாயிலிருந்து சொல்லை உருவியெடுக்க, அதை மாற்றியமைக்க அதிகாரத்தின் கரங்கள் எப்போதும் காத்திருக்கின்றன. எந்த ஒரு சித்தாந்தத்தையும், கண்ணோட்டத்தையும் நம்பவோ, சார்ந்திடவோ முடியாத மிதவை மனநிலையில் இருக்கிறோம். ஈழப்படுகொலைகளை எதிர்ப்பவர்களை இலங்கை போர்த்தளபதி கோமாளிகள் என வர்ணிக்கும் போது, சமரச, பொதுமயமாக்கல் அரசியல் காரணமாய் கா.மு.க ஆகிவிட்ட தி.மு.க சர்க்கஸ் கூண்டுப் புலி போல் வேடிக்கை பார்ப்பதில் ஒரு கோமாளித்தனம் உள்ளது. உலகமயமாக்கலால் பிரஜை அடையாளம் அழிந்து விட்ட நிலையில் நாடுகளின் தேசிய அரசியல் சர்வதேச அரசியலின் பொம்மலாட்டமாக அபத்தக் கூத்தாகிறது. அமெரிக்காவுக்காக பாக் ராணுவம் தங்கள் ஆதரிக்கும் தாலிபான் படையினரையே தாக்குவது ஒரு அரசியல் அபத்தம். இந்த சூழலில் நுண்ணுர்வுள்ள நவீன மனிதன் நிகழ்வுகளின் நிச்சயத்தை நம்பாமல் நாடக மேடையின் ஓரமாய் நிற்கும் கோமாளி மட்டுமே. தடுக்கி விழுந்தும், பிறரை தடுக்கி விட்டும் கேலி செய்து சிரித்து அவன் தன் இருப்பை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.

"வெள்ளைப்புலி" இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் நிலைப்பாடு, தேர்தல், நீதி, காவல், பிராந்திய மொழிப் பிரச்சனைகள் என ஒவ்வொரு கூறையும் இந்த விதூசகனின் கண்ணோட்டத்தில் பகடி செய்து பரிகசிக்கிறது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டு கோமாளியின் கருத்து சுதந்திரம் இன்றைய கண்காணிப்பு சூழலில் நமக்கு இல்லை. அதனால் இந்நாவலில் கதைசொல்லி சுயபகடி செய்கிறான். அவனுக்கு சொந்தமாய் பெயர் இல்லை. முன்னா, பல்ராம் என பல பெயர்களை உதிர்த்துச் செல்கிறான். தேநீர்க் கடையில் எடுபிடியாக ஆரம்பித்து கார் ஓட்டுனனாக உயரும் போதும் எதிலும் ஒட்டுறவு இல்லாமல் போலியான பாவனைகளுடன் காலம் கடத்துகிறான். ஒரு நாள் அவனுடைய முதலாளியை கொன்று விட்டு அவரது பெரும்பணத்தை திருடிக் கொண்டு பங்களூர் வந்து சுயதொழில் செய்து செல்வந்தனாகிறான். இங்கே இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். கதைசொல்லிக்கு சமூக நியாயத்தில் நம்பிக்கை இல்லை. அதனால் கொலை சார்ந்த குற்றவுணர்வும் இல்லை. அவனது கொலைச் செயலுக்கு பழிவாங்கலாக எதிரிகள் அவன் குடும்ப உறவினர்களை கொன்றிருக்கலாம். அவர்களை காப்பாற்றிட அவன் முனையவில்லை. லாபத்துடன் சேர்ந்து கிடைக்கும் இழப்பாக இதை நியாயப்படுத்துகிறான். இவனது இந்த ஒட்டுறவற்ற, எதையும் நம்பாத மனப்பான்மை நாவலின் செயல்முறையை, வடிவத்தை தீர்மானித்துள்ளது. எந்த ஒரு கருத்தியல் அல்லது கண்ணோட்டத்தை அலசவோ அணுகவோ செய்யாமல் அனைத்தையும் அம்மணமாக்கி விட்டு அடிகாவின் நாவல் நின்று கொள்கிறது.

நாவலின் முற்பாதி குஜராத்தில் ஒரு கிராமத்திலும், பிற்பாதி தில்லி மற்றும் பங்களூரிலும் நடக்கிறது. அடிகாவின் கிராம வாழ்வு சித்திரிப்பு மிகையான ஒரு கேலிச் சித்திரமாக மட்டுமே எஞ்சுகிறது. தில்லி வாழ்வின் போது கார் ஓட்டியாக கதைசொல்லி உணரும் தனிமை, சலிப்பு, அதிர்ச்சி காத்திரமாய் உள்ளன. அடிகா இந்திய மக்களை முதலாளித்துவ விசுவாசம் மிகுந்த் அடிமைகளாய் வர்ணிக்கிறார். இந்திய சமூகம் ஒரு கோழிப்பண்ணை என உருவகிக்கிறார். இந்த பிரம்மாண்ட கூண்டின் கதவைத் திறந்து சாவியை உள்ளே வீசினால் கூட அடிமைகள் வெளியேறாமல் கதவை தாங்களே பூட்டி சாவியை விசுவாசமாக முதலாளியிடம் கொடுத்து விடுவார்கள் என்கிறார். இது ஒரு மிகையான சித்திரம். ஆண்டான்---அடிமை முறை இன்றைய சமூக கட்டமைப்பில் மிக நாசூக்காகவும், நுட்பமாகவுமே செயல்படுகிறது. நாவலில் கூறப்படும் அமைப்பு இன்று பொதுவாய் நிலுவையில் இல்லை. இன்றைய அடிமை பீட்டர் இங்கிலாந்து சட்டையும், ஆலன்சோலி கால்சட்டையும் டிசைனர் கண்ணாடியும் அணிகிறான்; அவன் மிக மெல்லிய நூலால் கட்டப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறான். உச்சபட்ச சுதந்திரத்திற்கும், தீவிர கண்காணிப்பு நிலைக்கும் அவனுக்கு வேறுபாடு புரிவதில்லை.

அடிகா காட்டும் இந்தியா வெள்ளைக்கார பார்வையாளனுக்கு உவப்பாக இருக்கும்படி மேற்கின் பார்வையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாய் சில விமர்சகர்கள் (தமிழில் குறிப்பாய் இந்திரா பார்த்தசாரதி) "வெள்ளைப்புலியை" பந்தாடியுள்ளனர். இந்திய வாழ்வு பற்றிய அடிகாவின் சில எதிர்மறை தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை தான். உதாரணமாக, குஜராத் கிராமம் ஒன்றில் யாரையும் வாக்களிக்க அனுமதிக்காமல் அரசியல்வாதிகள் முடிவுகளை அறிவிக்கிறார்கள். மேற்கத்தியப் வாசகனே இலக்கு என்பதால் அவனது கண்ணோட்டத்தை ஆதரிக்க ஒரு வெள்ளைகாரியையும், அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்திய வாழ்வுக்கு இயைந்து போக முடியாத ஒரு பணக்கார இந்திய இளைஞரையும் அடிகா முக்கிய கதாபாத்திரங்களாய் நிறுவியுள்ளார். இந்திய கீழ்த்தட்டு மக்களை "அனுமார்கள்" என நாவல் அடையாளப்படுத்துவது வெள்ளை இனத்துவேச வெளிப்பாடுதான். மேலும் அடிகா கதைமாந்தர்களுக்கு உயிரோட்டம் அளிக்க முயன்றதாகக் கூடத் தெரியவில்லை. கோட்டோவியங்களாய் பக்கங்களிலிருந்து நழுவிப் போகிறார்கள். அவருக்கு படைப்பாக்கம் சார்ந்த தொழில்நுட்ப சூட்சுமம் கைவரவில்லை. கதைசொல்லி தன் முதலாளியை கொல்ல திட்டமிட்டு பின் குழப்பத்தில் தடுமாறும் கட்டத்தில் அவன் இலக்கில்லாமல் அலைந்து தில்லி புறநகர்ப் பகுதியை அடைகிறான். அங்கு அவனைத் தாண்டி ஒற்றைக் காளைமாட்டு வண்டி ஒன்று கசாப்பு மாடுகளின் தலைகள் அடுக்கப்பட்டு செல்கிறது. அருமையான படிமமாக உருவாக வேண்டிய இக்காட்சியைத் தொடர்ந்து பதவுரை தந்து அடிகா கெடுத்து விடுகிறார். தொழிற்நுட்பத்தை பொறுத்த வரையில் அடிகா மட்டம்தான். இவரது அங்கதத்தில் தொக்கி நிற்கும் காழ்ப்புணர்வும் ஒரு சமனிலை கொண்ட வாசகனுக்கு உவப்பானதல்ல.

இத்தனை குறைகளையும் நம்மை மறக்கச் செய்யும்படி இந்நாவலின் சுயபகடி அதன் தீவிரத்தன்மை குறையாமலே கடைசிவரை தக்க வைக்கப்படுகிறது. உள்ளூர் ஊழல் அரசியல்வாதியில் இருந்து இலக்கிய விமர்சகர்கள், தத்துவவாதிகள் என் யாரும் இவரது பகடிக்கு தப்புவதில்லை. இதை மிக எளிமையாக, நாசூக்காக செய்யத் தெரிவதே அடிகாவின் மகாபலமும், நாவலின் வெற்றியும். நான்கு மிகச்சிறந்த கவிஞர்களை அடிக்கடி பட்டியலிடும் கதைசொல்லி ரூமி, இக்பால், மிர்சா காலிப் என்று விட்டு ஒவ்வொரு முறையும் நான்காவது கவிஞர் பெயர் மறந்து விட்டதென்கிறார். இவ்வாறு பெயர்களை உதிர்த்து பெருமை தட்டும் இலக்கிய விமர்சகர்கள், புத்திஜீவிகளின் சில்லறைத்தனத்தை நக்கலடிக்கிறார். தன் முதலாளியைக் கொல்லும் முன் கதைசொல்லி பழைய தில்லியின் பிரபலமான பழைய புத்தகக் கடை தெருவொன்றில் உலாத்தி, ஓசியில் புத்தகங்கள் படிக்கிறான். அங்கிருந்து திரும்பும் போது சிதிலமான பழைய நூல்களின் சுவை வாயில் ஒட்டியுள்ளதாய் சொல்கிறான்: "பழைய புத்தகங்களோடு நேரம் செலவிட உங்களுக்குள் விசித்திர எண்ணங்கள் ஏற்படும்". இங்கு குறிக்கப்படுவது கதைசொல்லியின் கொலை எண்ணமே. புத்தகங்களின் சுவை குருதியின் சுவை. தத்துவ சிந்தனைக்கும் வன்முறைக்குமான மறைமுக உறவை ( நீட்சே--ஹிட்லர் )அடிகா இங்கு நுட்பமாய் அடிக்கோடிட்டு காட்டுகிறார். எனக்கு நாவலில் மிகப்பிடித்த இடம் இது.

இந்த 300-பக்க நாவல் ஒரே நாளில் படித்து விடும்படி லகுவானது. ஆரம்பகட்ட ஆங்கில வாசகர்களுக்கு நல்ல தேர்வு. இறுதி வரி வரை ஒரு புன்னகை உதட்டில் தங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
Share This

1 comment :

  1. படித்தேன் நண்பரே. இறுதியில் விபத்தில் இறந்த ஒரு சிறுவனின் குடும்பத்தை சந்திக்கும் செல்லும் இடத்திலிருந்து ஒரு மசாலா தமிழ்ப்பட கிளைமாக்ஸ் போல சென்றது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates