Sunday 16 August 2009

கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...



20-20 கிரிக்கெட் போட்டிகளை மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மிக நூதனமான தீர்மானம். ஒருநாள் மற்றும் டெஸ்டு கிரிக்கெட் ஆட்ட வகைகளை 20-20 முழுங்கி விடும் என்ற அச்சம் பல முன்னாள் ஆட்டக்காரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உள்ளதே காரணம். வயசுக்கு வந்த பெண்ணை தாவணி கட்டி, முட்டை அடித்து குடிக்க வைத்து வீட்டு அறைக்குள் பதுக்கி வைப்பது போன்றது இந்த எதிர்மறை தீர்மானம்.
மிக சமீபமாய் நிகழ்ந்த தென்னாப்பிரிக்கா--ஆஸி தொடரைத் தவிர பிற டெஸ்டு ஆட்டங்கள் குளித்து கரையேறின எருமை மாடுகள் லட்சணமாய் தான் நடந்து முடிந்தன. பொதுவாய் டெஸ்டு ஆட்டம் நடக்கும் அரங்குகள் ஒருவித மென்வதை முகாம்கள். ஏன்: ஏறுவெயில், மோசமான இருக்கைகள், எதிரில் படுசலிப்பான காலந்தள்ளும் ஆட்டம், சுற்றிலும் ஒரு இஸ்லாமிய தொழுகை அரங்கை நினைவுபடுத்தும் படியாய் முழுக்க முழுக்க ஆண்கள். துப்பட்டாவால் தலை மூடின சில காதல் ஜோடிகளும் இருப்பு கொள்ளாமல் உணவுப் பந்தலுக்கும், புது இடங்களுக்குமாய் அலைகழியும் சூழல். இந்த அமானுஷ்ய இயக்கமின்மையை, பாதிகாலியான அரங்கத்தை டி.வி பார்வையாளர்களிடம் இருந்து மறைக்கவே வர்ணனையாளர்கள் ஓயாமல் முணுமுணுப்பது: "எங்கள் காலத்தில் எல்லாம் பந்து இன்னும் வழவழப்பாக இருக்கும்". இந்த நிலைமையில் முன்னாள் ஆட்ட மேதை பிரையன் லாரா "கிரிக்கெட் அழிந்து வரும் ஆட்டம்" என்று சமீபமாய் சொல்லியிருப்பது மிக முக்கியமானதாகிறது.
ஒரு டெஸ்டு ஆட்டம் வெற்றி அல்லது தோல்வி முடிவைத் தர (அ) வீரர்கள் 5 நாளும் அதிதீவிரமாய் ஆட வேண்டும் அல்லது (ஆ) படுமோசமாய் சொதப்ப வேண்டும். வாய்ப்பு (அ) யதார்த்தத்துக்கு ஒவ்வாதது. ஒரு மனிதனால் தன் உச்சகட்ட திறமைகளை தொடர்ச்சியாய் வெளிப்படுத்த முடியாது. வாய்ப்பு (ஆ)வைப் பொறுத்த மட்டில் ஆட்டம் பரபரப்பாய் 3வது அல்லது 4வது நாளில் முடிந்து பார்வையாளர்களுக்கு கிளர்ச்சி ஊட்டும்; ஆனால் நிர்வாகத்துக்கோ ஆட்டக்காரர்களுக்கோ விளம்பரம் செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கோ துட்டு பெயராது. இதனால் போட்டி மனப்பான்மை அறவே இல்லாமல் ஆகி ஐந்து நாட்கள் நிலைத்தால் போதும் எனும் அரசு குமாஸ்தா மனப்பான்மை உருவாகி விட்டது. இப்படி ஆட்டக்காரர்கள்--நிர்வாகிகளின் சுயநலத்துக்காக மட்டுமே ஆடப்பட்டு வழிதவறின ஆடுகள் போன்று சில பார்வையாளர்கள் சிதறியிருக்க கனத்த மவுனத்தினிடையே நடக்கிறது டெஸ்டு கிரிக்கெட். இந்த சுயநலமிகளால் டெஸ்டு கிரிக்கெட் சீரழிக்கப்படுவதற்கு அதன் கோளாறான அடிப்படை அமைப்பும் காரணம். டெஸ்டு கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க அதன் விக்டோரியா ராணி கால ஆட்ட விதிகள், முறைகளை புனரமைக்க வேண்டும்.
டெஸ்டு அமைப்பை தூர்வாரும் முன் கிரிக்கெட் கிருஷ்ண கானசபா தீம்தரிகரிட...தோம் அல்ல, பாமரர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து பங்களிக்க வேண்டிய பொழுதுபோக்கு கலை என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்டமுறை மற்றும் ஆட்டக்காரர்களின் மனவியல்\தொழிற்நுட்ப விவரங்களை வல்லுநர்கள் நடுமண்டை சொறிந்தபடி சிலாகித்தாலும் அரங்கில் கூடும் பெருவாரியான பார்வையாளர்களின் பங்களிப்புதான் கிரிக்கெட்டை முழுமையாக்குகிறது. உதாரணமாய் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் ஆட்டமொன்றில் முன்கால் ஆட்டத்திலிருந்து கண்சிமிட்டும் அரைநொடியில் பின்சென்று விலகி சேவாக் வாஸின் பந்தில் தெர்டுமேன் பகுதிக்கு விளாசிய ஆறு. பண்டிதர்கள் சேவாகின் சமயோஜிதத்தை மெச்சி, ஆராய்ந்தாலும் வீரு தான் சற்றும் யோசிக்காமல் தன் உட்தூண்டுதலின் படி அடித்த ஷாட் அது என்று அவர்களின் வாயை அடைத்தார். இந்த ஷாட்டின் மகத்துவம் ஆயிரக்கணக்கானோர் சற்றும் சிந்திக்காமல் அதை உள்வாங்கி அடையும் மன-எழுச்சியில் உள்ளது. படம் வரைந்து விளக்குவதில் அல்ல. பார்வையாளர்கள் கொக்குகளாய் பூத்த மைதானத்தில் கிரிக்கெட் மியூசியத்தில் காத்திருக்கும் டினோசராக தனிமைப்படுகிறது.
மக்களின் கரகோஷம், ஈடுபாடு, உற்சாகம் தங்கள் ஆட்டத்தரத்தை உயர்த்தி உள்ளதாய் பல ஆட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர் (கபில்தேவிலிருந்து சச்சின் வரை). இதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகி உள்ளது. உதாரணமாய் 1999 பாக் தொடரில் கொல்கத்தா டெஸ்டின் போது சச்சின் அக்தரின் முதல் பந்தில் பவுல்டாகியதற்கு அவர் அரங்கத்திற்குள் நுழைந்த போது லட்சக்கணக்கானோர் எழுந்து நின்று செய்த கரகோஷம் காரணம். ஒரு நொடி சச்சினின் கவனம் கலைந்து விட்டது.
கிரிக்கெட்டை தொலைக்காட்சி பிம்பத்திலிருந்து வெளியேற்றி அதை மக்களுக்கான ஆட்டமாக மாற்ற வேண்டும். எப்படி?
டெஸ்டு ஆட்டம் பகலில் பெரும்பாலாய் வேலை நாட்களில் நடப்பது. மக்கள் வேலை மெனக்கட்டு ஏழு மணிநேரத்துக்கு மேல் 5 நாட்கள் வெயிலில் காய்ந்து ஒரு ஆட்டத்தை பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இந்த ஆட்ட நிரலை முதலில் மாற்றியமைக்க வேண்டும்.
செயற்கை வெளிச்சத்தில் மாலைப் பொழுதில் டெஸ்டு ஆட்டத்தை நடத்தலாம். இதற்காக திட்டமிடல் ஏற்கனவே இங்கிலாந்தில் நடக்கிறது. டெஸ்டு போட்டியின் கால அளவு எத்தனை அபத்தமானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொதுவாக ஒருநாளில் 1 செஷ்னுக்கு 20 ஓவர்கள் விகிதம் 4 செஷ்ன்களில் 80 ஓவர்கள் வீசுவார்கள். இதை ஒரு நாளைக்கு 2 செஷ்ங்களாக (40 ஓவர்கள்) குறைக்கலாம். அடுத்து ஒவ்வொரு நாள் ஆட்டத்திற்கும் ஒருவித முழுமை கிடைக்கும்படி, அன்றைக்கு யார் ஜெயித்தார்கள் என்று தெளிவாய் புரியும்விதம் புள்ளிகள் வழங்கும் முறையை கொண்டு வரலாம். 40 ஓவர்களில் 6 ஓட்டசராசரி தக்கவைத்தால் 4 புள்ளிகள். 8க்கு ஆறு புள்ளிகள். தடுப்பாட்டத்திற்கு இந்த முறையில் அங்கீகாரம் இல்லை. 4க்கு கிழே சராசரி எடுத்தால் 0 புள்ளிகள்.
ஸ்டிரைக் ரேட் என்பது ஒரு பந்து வீச்சாளர் எத்தனை குறைந்த பந்துகள் வீசி எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பதை கணக்கிட்டு அவரது விக்கெட் வீழ்த்தும் திறனை கணிக்கும் ஒரு முறை. எத்தனை குறைவாய் ஸ்டிரை ரேட் உள்ளதோ அந்த அளவிற்கு சிறந்த வீச்சாளர். நாம் டெஸ்டின் ஒரு நாளில் ஒரு அணியின் ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் சராசரியை கணக்கில் கொள்ளலாம். இதன்படி 35க்கு கீழே ஸ்டிரை ரேட் பெற்றால் 6 புள்ளிகள்; 40க்கு கிழே 4 புள்ளிகள். அதற்கு மேல் முட்டை. அதாவது 40 ஓவர்களில் குறைந்தது 8 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 6 புள்ளிகள். 6க்கு 4 புள்ளிகள்.
இந்த முறையில் மெத்தன ஆட்டத்திற்கு புள்ளிகள் இல்லை. ஒரு அணியின் வெற்றி அது பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதால் டிரா ஆகும் வாய்ப்பு முழுக்க இல்லாமலாகிறது. வெற்றி-தோல்வி-ஒரே ஸ்கொர் (டை) மட்டுமே சாத்தியம். இதனால் அறிவியல் பூர்வமான துல்லிய முடிவுகள் சாத்தியம் ஆகும். (அதிர்ஷ்டம், நடுவர் தவறுகள் ஆகிய காரணிகளின் குறைந்த பட்ச குறுக்கீடுகளுடன்; ஆனால் ஒரு நடுவர் தவறு, சிறு ஆட்டப் பிசிறு காரணமாய் வெற்றி\தோல்வி எல்லாம் தீர்மானிக்கப்பட மாட்டாது.) பார்வையாளர்களுக்கு அன்றன்றைக்கு யார் முன்னணியில் என்பது துல்லியமாக தெரியும். 5வது நாளின் இறுதியில் அதிக புள்ளிகள் (மட்டையாட்ட, பந்து வீச்சு புள்ளிகள் சேர்த்து) பெற்றுள்ள அணிக்கே வெற்றி.
சமீபத்தில் நடந்த மேற்கிந்திய--இங்கிலாந்து, இலங்கை--பாக்கிஸ்தான் தொடர்களில் கடைசி நாளில் கூட நமக்கு யார் முன்னிலையில் என்பது தெரியாதபடி ஆடினார்கள். முதல் அணி இரண்டரை நாட்களில் 600 அடித்தால், இரண்டாவது அணி இரண்டே கால் நாளில் 615 அடித்து, அடுத்த அணியை மீதமிருக்கும் சில மணி நேரங்களில் விருப்பமிருந்தால் ஆட அழைத்து, எல்லாரும் கொட்டாவி விட முடித்துக் கொண்டார்கள். யாரும் ஜெயிக்காமல் எதற்கு ஒரு ஆட்டம்? நம் ஆட்டத்தில் இந்த கேள்வியே வராது.
பார்வையாளர்களை டிராவிட் போன்ற எதிர்மறை ஆட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வேறு சில விதிமுறைகள். பந்து புதிதாக இருக்கும் முதல் 20 ஓவர்களில் விக்கெட்டுகள் விழ வாய்ப்புகள் அதிகம். இன்றைய பெரும்பாலான டெஸ்டு துவக்க ஆட்டக்காரர்கள் (வீரு--காம்பிர் விதிவிலக்கு) இந்த கட்டத்தில் 60 ரங்களுக்கு மேல் எடுப்பதில்லை. கிரிக்கெட்டின் அரைத்தூக்க வேளை இது. புது விதிமுறைப்படி இந்த முதல் 20 ஓவர்களில் எல்லைக்கோட்டுக்கு 4 அடித்தால் 8 ஒட்டங்கள்; வெளியே 6 அடித்தால் 10 ஒட்டங்க்கள். ஆனால் ஒருநாள் ஆட்டங்களில் உள்ளது போன்ற பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லை. இந்த புதுவிதிகளின் படி இந்த கட்டத்தில் 6 பந்துகளை எலைக்கோட்டுக்கும், 5 பந்துகளை அதற்கு வெளியேயும் அடித்து ஒருவர் முதல் செஷனிலே சதம் அடித்து விட முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் 300 அடிக்க கூட வாய்ப்பு உண்டு. இந்த தூண்டுதல் மட்டையாளர்களை அதிரடியாய் ஆட வைக்கும் என்பதால் விக்கெட்டுகள் துவளும் சாத்தியமும் உள்ளது. இதனால் எதிரணியினரின் வீச்சு சராசரி குறையும், புள்ளிகள் ஏறும். மட்டையாட்டம், பந்து வீச்சு இரண்டுக்கும் சாதகமான விதிமுறை இது. பந்து பழசாகிட டைமிங் செய்வது சிரமம் என்பதால் மட்டையாளர்கள் புதுப்பந்து மாற்றும் வேளையில் கட்டை போட ஆரம்பித்து விடுவார்கள். இதைத் தவிர்க்க பந்து மாற்றும் கட்டத்தில் எதிரணி தொடர்ந்து பழைய பந்துடனே ஆடுமானால் மேற்சொன்ன விதிமுறை பயன்பாட்டுக்கு வரும்.
இந்த விதிமுறை மாற்றங்களுக்குப் பின்னரும் ஆண்ட்ரூ ஸ்டுராஸ், காலிங்வுட், சமரவீரா போன்றோர் நளினமற்ற ஷாட்டுகளை மட்டுமே அடித்து சராசரியை தக்க வைக்கும் ஆனால் வசீகரமற்ற கிரிக்கெட்டை ஆடும் வாய்ப்புள்ளது. அதாவது நமது மெரீனா கடற்கறை காட்டு சுற்றல் ஆட்டமாக சர்வதேச கிரிக்கெட் மாறாமல் இருக்க சில வசீகரமான மற்றும் ஆபத்தான ஷாட்டுகளுக்கு அதிக ஓட்டங்கள் அறிவிக்கலாம். உதாரணமாய் கவர் டிரைவ், ஹுக், ஸ்விட்ச் ஹிட், லொஃப்ட், ஸ்டிரெயிட் டிரைவ் போன்றவை. 2003-04 இந்தியாவின் ஆஸி பயணத்தின் போது சிட்னியில் சச்சின் ஆட்டமிழக்காமல் 436 பந்துகளில் எடுத்த 241
ஞாபகமுள்ளதா? அன்று அவர் முழுக்க முழுக்க கால்பக்கம் மட்டுமே ஓட்டங்கள் எடுத்து பார்வையாளர்களை வேறுப்பேற்றினார். காரணம்? அவர் முந்தைய ஆட்டங்களில் ஆஃப் பக்கத்தில் அடித்து ஆட்டமிழந்தாராம். அதனால் இந்த ஆட்டத்தில் ஆஃப் குச்சிக்கு வந்த எந்த பந்தையும் அவர் தொடவில்லை. சரி, இம்முறை கால்பக்கத்தில் அடிக்கப் போய் ஆட்டம் இழந்திருந்தால்? அவர் ஆடியதிலேயே மிக பயந்தாங்கொள்ளி ஆட்டம் அது. இத்தகைய ஆட்டம் கிரிக்கெட்டுக்கு மோசமான விளம்பரம். மேற்சொன்ன விதிமுறை மாற்றத்திற்குப் பின் இது போன்ற தடுப்பாட்டங்கள் குறையும்.
தமிழை கல்லூரி வாத்தியார்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார் கா.நா.சு. கிரிக்கெட்டை குமாஸ்தா ஆட்டக்காரர்களிடம் இருந்தும், புராதான நிர்வாகிகளிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates