Monday 21 December 2009

அவர்களின் விசித்திர கற்பனைகள்


கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் விழுந்தேன். ஒரே இடத்தில் (கால் பாதம்)அடி. வெவ்வேறு விளைவுகள். வெறும் சுளுக்கு, சுண்டு விரலில் எலும்பு முறிவு மற்றும் மேல்பாத எலும்பு முறிவு. கூடுதலாக இம்முறை நான் அணியும் காலிப்பர் (வாதத்தால் கால் பலவீனமானவர்கள் அணியும் குழல் போன்ற கருவி) நெளிந்து கோணியது. இப்பதிவின் தலைப்பில் உள்ள விசயங்கள் எனக்கு உருவாக இல்லை. ஜோசியரை பார்க்கவோ, வழிபாடு செய்யவொ விதியை நோகவோ இல்லை. மிகச்சிறு வயதில் இருந்தே விழுகை எனக்கு பழகி விட்ட ஒன்று. அதாவது அப்போது எல்லாம் காலிப்பர் அணியாததனால் விழுவேன். ஒரு தடவை இதனால் முட்டி எலும்பு முறிந்திட காலிப்பர் கட்டாயமாய் அணிவது என்று தீர்மானித்தேன். மேலே குறிப்பிட்ட மூன்று முறைகள் காலிப்பர் அணிந்ததனால் ஏற்பட்டன. என் காரண-காரிய போக்கு சற்று இடறி விட்டது.

கடந்த 8 வருடங்களாக Rainbow Orthopedics எனும் நிறுவனத்திடன் இருந்து தான் காலிப்பர் வாங்கி வருகிறேன். தேனாம்பேட்டையில் ராஜ் டி.வி அலுவலகம் தாண்டி வந்தால் ஒருகடை முன்பாக கயிற்றில் பத்திரிகைகள் தொங்க போட்டு, மாலையானால் ஒரு வெள்ளை வேட்டி கும்பல் பெஞ்சுகளில் அமர்ந்து தெனாவட்டாக தண்ணி அடிக்கும். அவர்களுக்கு பக்கத்தில் உள்ளது RO அலுவலகம். முந்தின கருவி வரை ஸ்டெடியாக தான் இருந்தது. இக்கருவியில் லாக் எனும் முட்டி இணைப்பை மடிக்கவும் நேராக்கவுமான பகுதியை வெளியில் வாங்கி பொருத்தி இருந்தார்கள். பழைய மாதிரி சுதேசி லாக் சரியாக விழாமல் சிலரை விழ வைத்து விட்டதாம். ஆனால் புது லாக்கில் எனக்கு கண்டம் இருந்ததை அப்போது அறியவில்லை. புது காலிப்பர் கனமாக இருந்தது. நான் காரணம் கேட்டதற்கு லாக் கனமாக இருந்ததால் கருவியும் கனமாக்க வேண்டி வந்தது என்றார்கள். வித்யா பாலனுக்கும் தான் மூக்கு பெரிசாக உள்ளது; அசினுக்கு கண்கள் கோணி உள்ளன. அதற்காக? வெளியிலிருந்து தருவித்த லாக் நான் எழுந்து நின்றால் தானாக விழுந்து பொருந்திக் கொள்ளும். சில சமயம் நான் நடந்தால் உற்சாகத்தில் அதுவும் எழுந்து கொள்ள முட்டி மடிய நான் விழுவேன். உற்றோர் நண்பர் கேட்டனர்: முதல் தடவையே ஏன் சரி செய்ய வில்லை?

நான் பார்த்தை கேட்டதை நடந்ததை நம்புபவனல்ல. ஆதாரபூர்வமாய் தீர்க்கமாய் விளங்கும் மட்டும் எதுவும் உண்மை அல்ல. முதல் இருமுறை வீழ்ச்சிகளின் போது நான் ஒரு நீண்ட அரைகால் சட்டை அணிந்திருந்தேன்; அதன் துழாவும் விளிம்பு மேற்சொன்ன லாக்கில் மாட்டி இழுத்து விட்டதென்பது என் கண்டுபிடிப்பு. தீர்வாக குறிப்பிட்ட அரைக்கால்சட்டையை தூக்கி கடாசினேன். மூன்றாவது முறை விழுந்த போது புறக்காரணிகள் காரணமல்ல, RO தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்தேன். ஏன் இம்முறை ஒரு நீண்ட சட்டை நுனியோ, வேறுகால் சட்டையோ ஏமாற்றி இருக்கலாம் இல்லையா? இல்லை. ஏன் எனில் இம்முறை விழுந்த போது நான் நிர்வாணியாக இருந்தேன்.

மூன்று வீழ்ச்சிகளுக்கும் ஒரு பொதுப்பின்னணி உள்ளதாய் மனைவி சொன்னாள்: உறங்காத இரவுகளைத் தொடர்ந்த மூன்று கலக்கமான காலைகள். ” நீ தூக்க கலக்கத்தில் லாக்கை சரியாக போடாமல் நடந்துள்ளாய்”. நான் இதை கட்டாயமாக மறுத்தேன்: “பார் இம்முறை சிறிது தூரம் சரியாக நடந்த பின்னரே வீழ்ந்தேன். ஆதாரம் என் பக்கம்”.

முதல் இருமுறைகளும் விழுவதற்கு கால் நொடி முன்னரே எனக்கு அது தெரிந்திருந்தது; ஒரு ஆபத்தை தடுக்க முடியாதே என்ற ஆற்றாமையே ஏற்பட்டது. பெரும்பாலும் ஒரு யோசனை நிலையில் தான் தலைவெட்டப்பட்ட துரோணர் போல் விழுந்தேன். இம்முறை அலசி புரிய அவகாசம் இல்லை. பீசா கோபுரம் போல் காற்றில் இழுக்கப்படும் மைக்ரோ நொடிகளில் தான் விழுவதாகவே உணர்ந்தேன். கடுமையான பீதியில், என்னிடம் கோபித்துக் கொண்டு சில நாட்களாக தொலைபேசியில் பேசாத அம்மாவை கத்தி அழைத்தேன். ஆணவம் மூத்தவனுக்கு இருப்பதில் கொடுமையான அனுபவம் சிந்திக்க முடியாது கடும் பீதியில் கைவிடப்படுவது தான். ச்சே!

விழுந்த பின்னான நொடிகளில் முதலில் தோன்றியது என்ன?

ஜூலை மாதம் விழுந்த சுளுக்கி கொண்ட போது ஓய்வுக்காக நான் முந்தைய அலுவலகத்தில் ஒரு மாதம் விடுப்பெடுத்தேன். அடிக்கடி விடுப்பெடுப்பவன் என்பதால் யாரும் என் விபத்தை நம்பவில்லை. பிறகு இது குறித்து என்னை விசாரித்த தலைமை மேலாளருக்கு நான் நுட்பமாக நடந்ததை விவரித்தேன். முதலில் அவர் முகம் கூம்பு வடிவாகி பப்பாளியாகி முட்டை வடிவம் வந்து பிறகு அசல் வடிவம் பெற்றது. ’என்னை அடிக்காதே’ என்ற பாவனையில் அவர் உடனே கூறினார்: “இனிமேல் விழுந்து வைக்காதீர்கள்”. பிறர் கருணையற்றவர்கள்; கூருணர்வு மழுங்கினவர்கள் என்று நானிதனால் சொல்ல உத்தேசிக்க இல்லை. மனிதர்களுக்கு சகிப்புணர்வு குறைந்து விட்டது.



அக்டோபர் மாதம் விழுந்து முடித்து என் சமீப அலுவலகம் சென்ற போது ஒரு நபர் கேட்டார்: “என்ன விழுந்து அடிபட்ட மாதிரியே தெரியவில்லையே”. மேலும் சிலருக்கு என்ன அடி, எப்படிப்பட்ட விபத்து என்றெல்லாம் விளக்கிய போது எளிதில் குழம்பினார்கள். தவறில்லை, அவர்களுக்கு அப்படி ஒன்றும் என்றுமே நடந்திருக்க வாய்ப்பில்லை. கம்பீரமாய் தீவிர இலக்கிய சிந்தனையில் நடந்து போகும் போது, அதுவும் வீட்டுக்குள்ளே, பட்டென்று விழுந்தேன் என்று சொன்னால் நம்ப சிரமம் தான். அலுவலகத்துக்கு திரும்பிய பின் யாரும் விசாரிக்கவில்லை என்பது எனக்கே ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியது. இப்படியான கலவரச்சூழலில் விழுந்த பின் எனக்கு முதலில் தோன்றிய பிரச்சனை: “அட யாரும் நம்ப மாட்டார்களே!”

மருத்துவமனையில் எக்ஸ்.ரே பார்த்து விட்டு மருத்துவர் பேசிய வார்த்தைகள் தாம் விநோதங்களிலே உச்சம். நான் அறிய விரும்பியது கால் எப்போ குணமாகும்; எத்தனை நாட்கள் ஓய்வு தேவை. என் கேள்விகள் அவர் காதில் விழவில்லை. குழந்தைக் குழறலுடன் சொன்னார், “உங்கள் எலும்புகள் மிகவும் மெலிந்து உள்ளன. ஏன் இப்படியே ஓய்வெடுக்காமல் நடந்து வந்துள்ளீர்கள்?”
“உங்களை பார்க்கத்தான் டாக்டர்”
“உங்கள் கால் எலும்புகள் wafers போல் உள்ளன. எளிதில் நொறுங்கி விடும்”. தொடர்ந்து அவர் ஒரு நீண்ட விளக்கம் அளித்தார். எனது தீர்க்க முடியாத குறைகளைப் பற்றின அவ்வுரையை முடிந்த மட்டில் ஒரு அறிவியல் ஈடுபாட்டுடன் சிரமப்பட்டு கேட்டேன். ஆனால் என்னை முழுக்க ஆட்கொண்டிருந்தது ஒரு வியப்புணர்வு: அவரது உவமை அல்லது அலாதியான கற்பனை குறித்து. குழந்தையாய் இருக்கையில் wafers பிஸ்கட்டை நிறையவே சுவைத்திருக்கிறேன். வாயில் இட்டால் கரையும் படி அத்தனை மெல்லிசாக, உட்துளைகள் கொண்டிருக்கும். நானும் அக்காவும் அதற்காக கட்டிப் புரண்டிருக்கிறோம். உடல் உறுப்பை பிஸ்கட்டோடு ஒப்பிடும் அம்மனநிலை எப்படியானதாக இருக்கும்? அடுத்த முறை கால் எப்படி முறிந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்க ஒரு வார்த்தை கிடைத்து விட்டது. அவர்களுக்கு நிச்சயம் புரியும்!

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates