Tuesday 29 December 2009

ஊடகங்களால் விற்பனை செய்யப்படும் நம் பண்பாடு

வியாபார வெற்றியும் தரமும்

இன்று ஒரு குழப்பமான பண்பாட்டு சூழலில் வாழ்கிறோம். தொழில்நுட்ப சிறப்பு கொண்ட எளிய மசாலா படங்களை உலகத்தரம் என்று கொண்டாடும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ”சிவாஜியில்” இருந்து ”அவதார்” வரை நம் முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டு இது உருவாக்கப்பட்டு வருகிறது.

ஊடக வளர்ச்சிக்கு முன் தீவிர மற்றும் வணிக சினிமாக்களுக்கு இருந்த இடைவெளி இன்று மங்கி விட்டது. குறிப்பாக மத்திய மற்றும் உயர்மத்திய வர்க்கத்துக்கு. தமிழில் துல்லியமான பண்பாட்டு சித்தரிப்புகளுடன் வரும் மசாலா படங்கள் வெற்றி பெற்றால் டி.வி மீடியா உடனே அதை விழுங்கி விடுகிறது. பிறகு “தரமான சினிமா” அல்லது “வித்தியாசமான படம்” என்று ஏப்பம் விடுகிறது. இது கொட்டாவி போல் பரவி ஆளாளுக்கு “தரம்” “தரம்“ என்று பஜனை கோஷ்டி கிளம்புகிறது. அடுத்து இத்தகைய சினிமாக்களின் நாயகர்கள் அமீர், சசிகுமார் போன்றவர்கள் தீவிர இலக்கிய கூட்டங்களில் தரிசனம் தந்து நூல் வெளியிட்டு தாடி வருடி “எனக்கு புத்தகம்னாலே அலர்ஜிப்பா” என்று வேறு பேசுகிறார்கள். வெகுஜனவாதிகளுக்கு தீவிர படைப்புலகம் தீட்டு என்பதல்ல என் வாதம். இருவருக்குமான எல்லைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்து விட்டார்கள் என்பதே. ‘Mending Wall” கவிதையில் ரோபர்ட் புரோஸ்டு குதர்க்கமாய் குறிப்பிடும் ஒரு வழக்காறு நினைவு வருகிறது: அண்டை வீட்டாரின் அமைதி வாழ்வுக்கு அவர்கள் இடையே ஒரு மதில் வேண்டும்.

வடக்கத்திய டீ.வி மீடியா நட்சத்திர அந்தஸ்து படங்களை தொழில்முறையாக அவேசமாக விளம்பரப்படுத்தி கொண்டாடும் நோய்மை நம்மூருக்கு இன்னும் தொற்றவில்லை (”த்ரீ இடியட்ஸ்”). “சிவாஜி” போன்று சில விதிவிலக்குகள் மட்டும். வெகுஜன அறிவுஜீவி மதன் இப்படத்தை உச்சபட்ச தரம் என்று உச்சுக்கொட்டியது நினைவிருக்கலாம். சமீபமாக “உன்னைப் போல் ஒருவனை” விஜய் டீவி ஒரு மாத ஆர்ப்பாட்டங்களுடன் சந்தைப்படுத்தியது. ஓரளவுக்கு ’வித்தியாசமான’, ’யோசிக்க வைக்கக்கூடிய’ படங்களை அங்கீகரித்தால் என்ன தவறு என்கிறீர்களா?




‘வி..யோ’ படங்கள் தோல்வி அடையும் போது ஊடகங்கள் ஏன் இது போல் அவற்றை கொண்டாடுவது இல்லை. நல்ல உதாரணம்: ”கற்றது தமிழ்“. வெளியான போது இணையத்தில் ஒரு cult அந்தஸ்து பெற்ற படம் இது. எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. “பருத்தி வீரன்”, “மொழியை” விட அதிகமாக அலசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததால் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களும் அதை கைவிட்டனர். சொல்லப்போனால், சமகால இருப்பு சார்ந்த, உலகமயமாக்கல் பிரச்சனைகளை இத்தனை தீவிரமாக பேசின படமே வேறு வரவில்லை. திராவிட கட்சிகளின் நீண்ட ஆட்சிக் காலத்திற்கு பின்னரும் தமிழ் படித்தோர் உதாசீனிக்கப்பட்டு ஒதுக்கப்படும் அவலம் குறித்து பேசின ஒரே படம். ’பருத்தி வீரனில்” கலாச்சார நுண்விவரிப்புகளை எடுத்து பார்த்தால் மிகையான காதல் தியாகம் பேசும் படம். ஆனால் ‘க.த’ வெளியான பின் எந்த ஒரு விழாச்சிறப்பு இதழ்களிலோ, டீ.வி நிகழ்ச்சிகளிலோ அதைக் குறித்து பேசப்பட இல்லை. பேட்டிகளில் பிடித்த படங்கள் பற்றி குறிப்பிட்ட முன்னணி இளம் இயக்குனர்களின் பட்டியலில் வெற்றி பெற்ற பரிசோதனை படங்கள் மற்றுமே இருந்தன. விருது நிகழ்ச்சிகளிலும் “க.த“ தவிர்க்கப்பட்டது. சொல்லுங்கள், வெற்றி பெற்ற படங்கள் மட்டுமே தரமானவையா? அல்ல. வெற்றி பெற்றவை மட்டுமே நன்றாக விற்கப்பட்ட சரக்குகள். நம் மீடியா முதலாளிகள் சரக்குகளை புழக்கத்தில் விட பயன்படுத்தும் ஒரு விளம்பரச்சொல் மட்டுமே “தரம்” என்பது.



தற்போது பரபரப்பாக விற்பனையாகி வரும் “தரமான ” சரக்கு ஜேம்ஸ் கேமரோனின் “அவதார்”. இது ஒரு காட்சிபூர்வ சாதனை மட்டுமே ஆகும். பாத்திர அமைப்பு மற்றும் திரைக்கதையில் வேறு எந்த நுட்பமோ ஆழமோ கிடையாது. இன்று இந்தியாவில் மிக வெற்றிகரமாக இது ஓடிக் கொண்டிருப்பதற்கு காட்சிபூர்வ பிரம்மாண்டத்துடன் இதன் மசாலாவும் ஆதார காரணம். முக்கிய சினிமா விமர்சகர் ரோஜர் எபெர்ட் தனது கட்டுரை ஒன்றில் இப்படம் இன்று தவிர்க்க முடியாதபடி நம் கலாச்சார நீரோட்டத்தில் கலந்து விட்டதை குறிப்பிடுகிறார். உயர், மத்திய தட்டு மக்களின் குமாஸ்தா நீரோட்டத்தில். உங்களை பண்பட்டவராக காட்டிக் கொள்ள ”அவதார்” பார்த்தே ஆகவேண்டும்.

ஜெயமோகனின் ”அவதார்”

இந்த நிர்பந்தம் ஜெயமோகனுக்கே வந்து விட்டதென்றால் பாருங்கள். அவரது சமீபத்திய ”அவதார்” கட்டுரையில் தீவிரர்கள் வெகுஜன சினிமா பக்கம் மூக்கு நீட்டிட நேரும் முத்தாய்ப்பான சறுக்கல்களும் தெரிகின்றன. கதாநாயகனுக்கு போலியோ என்கிறார். உண்மையில் ஜேக் சல்லி எனும் அந்த பாத்திரம் பாராபிளிஜியா எனும் ஒருவகை பக்கவாதம் பாதிக்கப்பட்டவர். ஜேக் சல்லி சக்கர நாற்காலியில் இருந்தபடி போரிடக்கூடிய வீரன் என்று உதார் வேறு விடுகிறார் ஜெ.மோ. படத்தின் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உச்சபட்ச வேடிக்கையாக இப்படி சொல்கிறார்: அந்த வரைவியப் (animation) பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன?.

”அவதார்” படத்தில் நடிகர்கள் உண்டு. அவர்கள் நடித்த காட்சிகளை motion-capture வரைவியல் தொழில்நுட்பம் பயன்படுத்தி பிம்பங்களாக மாற்றி உள்ளனர். ஜெயன் இந்த அடிப்படை தகவல் கூட தெரியாமல் மயிர்கூச்செறிகிறார். தெரியாத பிரதேசத்துள் தயாரிப்பின்றி நுழைவது இப்படி பல்பில் தான் முடியும். முன்னர் ஒருமுறை என் அப்பா பிடிவாதமாக ஒருவகை பரிட்சார்த்த உப்புமா செய்தார். தாளித்து வெங்காயம் வதக்கி ... எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கோதுமை மாவை அதில் கொட்டினார். விளைவு எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

வேட்டைக்காரனும் அவதாரும்




நேற்று பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் சென்ற போது அங்கு கேமரோனை ஒரு கும்பல் குரோசேவொ, டொரெண்டினோ, மஜீத் மஜீதி அளவுக்கு சிலாகித்து கொண்டிருந்தனர். இதோடு ”வேட்டைக்காரன்” போன்ற விஜய் படங்கள் சந்திக்கும் நக்கல் மற்றும் ”நுண்ணுணர்வு” நிராகரிப்பையும் ஒப்பிடுங்கள். ”வேட்டைக்காரன்” வாழைக்காய் பஜ்ஜி என்றால் ”அவதார்” ஐயங்கார் பேக்கரி சைவ சமோசா. யார் முதுகை யார் சொறிந்து விடுகிறார்கள்.
Share This

6 comments :

  1. You belled the cat. You seem more angry than ever. Keep that anger up! Thats what differentiates you from other bloggers.

    ReplyDelete
  2. கற்றது தமிழை இன்னும் interestta சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுயிருக்கும். கதாநாயகனின் படத்தேர்வும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

    ஜெயமோகன் அவதார்.. பகடியை ரசித்தேன்.

    //”வேட்டைக்காரன்” வாழைக்காய் பஜ்ஜி என்றால் ”அவதார்” ஐயங்கார் பேக்கரி சைவ சமோசா//:)

    ’சினிமா’ குழந்தைகளைதான் குறிவைக்கறார்கள்.

    ReplyDelete
  3. "கற்றது தமிழை" நாம் மேலும் கொண்டாடி ஊக்குவித்திருக்க வேண்டும். அது சற்று சிரமமான படம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நான் அதை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன். எப்பவும் சலிப்பு உண்ர்ந்ததில்லை. அவ்வளவு கலை நுணுக்கமுடைய படம் அது. நம் தமிழ் கலாச்சார வாழ்வில் நிகழ்ந்த பெரும் துயரங்களில் ஒன்று அப்படம் கைவிடப்பட்டது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates