Sunday 24 January 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 11


அம்மா தான் இத்தகைய வாதைகளில் இருந்து விடுபட்டவள் என்று நினைத்தாள்; ஏனெனில் அவளது பெற்றோர்களின் மரணத்திற்குப் பின் அரகடாகா உடனான எல்லா தொடர்புகளையும் துண்டித்திருந்தாள். அவளது கனவுகள் அவளை ஏமாற்றின.
குறைந்தது காலை சிற்றுண்டியின் போது யாரும் ஆர்வம் உடையோர் இருந்தால் அவள் சொல்வதெல்லாம் வாழைத்தோட்ட பிராந்தியம் தொடர்பான பழங்கால ஏக்க நினைவுகளுக்கு தொடர்புள்ள விசயங்களாகவே எப்போதும் இருக்கும். நிறுவனம் திரும்ப வந்த பின் மும்மடங்காக விலையை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் மிகச்சிரமமான வேளைகளில் எல்லாம் வீட்டை விற்காமல் தாக்குப்பிடித்து வந்திருந்தாள். கடைசியில் எதார்த்தத்தின் தாங்கவொண்ணா நெருக்கடி அவளை தோற்கடித்து விட்டது. ஆனால் ரயிலில் பாதிரியார் அந்நிறுவனம் திரும்பி வருவதாக சொல்லக் கேட்ட போது அவள் துயரமிக்க சைகை ஒன்றை செய்துவிட்டு என் காதில் கிசுகிசுத்தாள், “என்னவொரு வெட்கக்கேடு, நம்மால் இன்னும் சற்று பொறுத்து, அதிக விலைக்கு வீட்டை விற்க முடியாதே”

பாதிரியார் பேசிக் கொண்டிருக்கையில் சதுக்கம் முழுக்க நிரம்பி நின்ற கூட்டம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் உற்சாகமாக கச்சேரி வாசிக்கும் இசைக்குழுவினர் தென்பட்ட நகரம் ஒன்றைக் கடந்தோம். இந்த அனைத்து நகரங்களும் எனக்கு ஒன்று போலவே தோன்றின.
பாப்பலேலோ என்னை டோன் ஆண்டோனியோ போகோண்டேவின் புத்தம் புதிய ஒலிம்பிய சினிமாவுக்கு அழைத்துச் சென்ற போதெல்லாம் அங்கு காட்டப்படும் கவ்பாய் திரைப்படங்களில் வரும் ரயில்நிலையங்கள் எங்களது நிலையங்கள் போலே உள்ளதை கவனித்திருக்கிறேன். பின்னர் பாக்னரை படிக்கையில் அவரது நாவல்களில் வரும் சிறு நகரங்களும் எங்களுடையது போல் தோன்றியது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை; ஏனெனில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழைப்பழ நிறுவனத்தின் மீட்பாளர் பாணி தூண்டுதலால், ஒரு தற்காலிக முகாமின் மோஸ்தரில், கட்டியெழுப்பப் பட்டவையே அவை. சதுக்கத்திலுள்ள தேவாலயம் மற்றும் அடிப்படை வண்ணங்கள் மட்டும் தீட்டப்பட்ட தேவதைக்கதை வீடுகளையும் சேர்த்து எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தேன். வைகறையில் பாடும் கறுப்பின தொழிலாளர்களின் குழுக்கள், தோட்டங்களில் நிலக்கூலிகள் ஆர அமர்ந்து சரக்கு ரயில்கள் போவதை வேடிக்கை பார்த்தபடி இருக்கும் குடிசைகள் மற்றும் சனி இரவு கலாட்டாக்களில் வெட்டப்பட்ட தலைகள் காலையில் கிடக்கும் பள்ளங்களும் நினைவுக்கு வந்தன.



ரயில் தண்டவாளங்களின் மறுபுறம், குளிர், கோடை விடிகாலைகளில் கருகின தூக்கணாங்குருவிகளால் கறுப்பாய் தோற்றமளிக்கும் மின்சார கம்பி வேலியால் சூழப்பட்ட கோழிப்பண்ணை போன்ற அரகடகாவிலும், செவில்லகாவிலுமுள்ள ஆங்கிலேயர்களின் தனிப்பட்ட நகரங்களை ஞாபகம் கொண்டேன். மயில்களும், கௌதாரிகளும் கொண்ட அவர்களது நிச்சலமான புல்வெளிகள், சிவப்புக் கூரை, ஜன்னல்களில் கம்பிக்கிராதிகள், பனைமரங்கள், தூசு மண்டிய ரோஜாப்புதர்களிடையே பால்கனியில் உணவருந்த சிறுமேஜைகள், மடிப்பு நாற்காலிகள் உடைய குடியிருப்புகளையும் நினைவு கூர்ந்தேன். சில நேரங்களில் கம்பி வேலியினூடே மென்துகில் உடுத்து, அகன்ற பட்டுவலை தொப்பிகள் அணிந்த அழகான சோம்பலுற்ற பெண்கள் தங்கக் கத்திரிக்கோலால் தங்கள் தோட்டங்களில் பூக்கள் வெட்டுவதை காணலாம்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates