Tuesday 26 January 2010

வெறுப்பு நேசம் எனும் புதிர்கள்

ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன்.

அப்பாவை நேசிப்பதை ஒரு இயல்பு மீறிய செயலாகவே நம்பி வந்துள்ளேன். பதின்பருவத்தில் ஆளுமை முதிரத் தொடங்கனதில் இருந்தே அவருடன் முரண்பட்டு வந்திருக்கிறேன். பிறகு அவரது வன்மத்தை வெறுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என் ஆளுமையில் தெரிந்த அவரது குணாதசியங்களை வெறுக்க முனைந்தேன். சில வருடங்களுக்கு முன் அப்பா இறந்து போனார். அப்போது அவரை செத்துப் போக மாட்டாரா என்று ஏங்கிய நாட்கள் நினைவு வந்து திகைப்பூட்டின.

என் இளமையில் அப்பா மாலைகளில் ரொம்ப கொடுமைகள் செய்வார். காலையில் போதை தெளிந்து சவரம் குளியலுக்கு பின் பதிவிசாக நல்ல அப்பாவாக அவர் அலுவலகம் கிளம்பிய பின் நான் அம்மா அக்கா சேர்ந்து அவரது துஷ்டத்தனத்தை குறித்து புகார் பேசி மனதை ஆற்றுவோம். புகார் படலம் முடிந்ததும் எனக்குள் சிறு குற்றவுணர்வு ஏற்படும். காலையில் அப்பாவிடம் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். மிக சுறுசுறுப்பாக இயங்குவார். உட்காரவே மாட்டார். நடந்து கொண்டே செய்தி படிப்பார். நின்று கொண்டே சன் செய்திகள் கேட்பார். என்னை கண்டிப்பதானாலும் மிகக்குறைவான வார்த்தைகளே பேசுவார். வீட்டுக்கு யாராவது தேடி வந்தால் வாசலில் நிற்க வைத்து அவர் பாட்டுக்கு அரை மணிக்கு குறையாது பேசுவார். தினசரி சவரம் செய்து மோவாய் கறுத்திருக்கும். உலாவியபடியே அதில் எலுமிச்சம் தோல் வேறு பிசிறு படிய தேய்ப்பார். அடி, மிதி, கெட்ட வார்த்தைகளின் அப்பா மாலையிலே தோன்றுவார். அவருக்கு எதிராய் காலையின் பரிசுத்த வேளையில் ரகசிய கூட்டத்தை அவரது வீட்டுக்குள்ளே நிகழ்த்துவது தோதாக படவில்லை.



ஒரு மாலையில் டியூசன் முடித்து வீட்டுக்கு வந்தபோது அம்மா உடம்பெல்லாம் புலித்தடங்களுடன் தலையை பிடித்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குரல் அடைத்திருந்ததால் அவளால் அழ முடியவில்லை. எங்கள் வீட்டில் புதிதாய் நட்டு தினமும் தண்ணீர் விட்டு நான் வளர்த்திருந்த முருங்கைக்காய் தோற்றமுள்ள குரோட்டன் செடியை பிடுங்கி அப்பா விளாசி இருந்தார். நான் சென்று பார்த்த போது அவர் மகிழ்ச்சியாக எம்.ஜி.ஆர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ஆவேசமாக குரோட்டன்ஸ்களை பிழுது வீச மட்டுமே என்னால் முடிந்தது. பிறகு அவைகளை நறுக்கென்று முறித்தேன். அவருக்கு புற்று நோய் வரட்டும் என்று சபித்தேன். அம்மாவும் அக்காவும் கூட இதுபோல் சபித்திருக்கிறார்கள். காரணம் அப்பா வழி பாட்டி புற்று நோயால் மரித்திருந்தாள்.

அப்பா இறந்த போது என்னால் துளி கண்ணீர் கூட சிந்த முடியவில்லை. ஓரிரவு முழுக்க அவரது பிணமிருந்த கண்ணாடிப்பெட்டியை வெறித்தபடி அவரைக் குறித்து சிந்தித்தபடி இருந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து நள்ளிரவில் கனவில் தோன்றினார். பிறகு விழித்துக் கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தூங்க முயலும் போதே வியர்க்க ஆரம்பிக்கும்.

அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன. ஒருவரது ஆளுமையின் பிரச்சனைகள் பெரும்பாலும் தன் பெற்றோரின் தவறான பாதிப்புகளால் ஏற்படுவதே என்று ஒரு கோட்பாடை வேறு வகுத்து வைத்திருந்தேன். அப்பாவிடம் இருந்து மீள்வதே என் வாழ்க்கைக் கடன். எப்போது யோசித்தாலும் அவரது தீமைகள், குறைபாடுகள், தவறுகள் வரிசையாக தோன்றும். உச்சி வெயிலின் தகிப்பில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நிற்கையில் அவரைக் குறித்து நினைப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தேன்.



கடந்த சில நாட்களாக அப்பா கனவில் தோன்றிக் கொண்டிருக்கிறார். அப்போது நன்மை—தீமையின் இரு துருவங்களில் அவர் இல்லை. நடுவில் இருக்கிறார். மிக எளிதான செயல்களில் ஈடுபடுகிறார். அவற்றை ஒரு சிறுவனின் மிகை-ஆதர்சத்துடன் வியப்பாக கவனித்தபடி இருக்கிறேன். அவரது சாதாரண நடவடிக்கைகள் எனக்கு சாதனைகளாக பட்டிருக்க வேண்டும். சில கனவுகளில் அவர் என்ன செய்தார் என்பது நினைவில் இல்லை. எனக்கு கனவு மனநிலையை விட, முடிந்த பின்னான பிரக்ஞை மீதே ஆர்வம். அப்பா வந்து போன பின் மனதில் அலாதியான பூரிப்பு மற்றும் இனிமை. அப்பா ஒரு உற்சாக ஊக்கி ஆகி விட்டார்.

மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பில் அவநம்பிக்கை கொள்கிறேன். அதை விட முக்கியமாய் அப்பா மீதான வெறுப்பு ஒரு பெரும் பொய். நான் அதை மிக கவனமாக கட்டுவித்து காப்பாற்றி வந்திருக்கிறேன்.

அவருக்காக என் வாசலை திறந்து வைத்திருக்கிறேன்.
Share This

6 comments :

  1. அப்பா குறித்த எந்த உவப்பான நினைவுகளும் தோன்றியதில்லை. அவை நிச்சயம் உள்ளே இருக்கும். ஆனால் மேல்தட்டின் முரண்பாடுகளும் கசப்பும் அவற்றை மேலெழாதபடி தடுக்கின்றன

    அதே...

    ReplyDelete
  2. உங்கள் பதிவில் அப்பாவை பற்றி படித்ததும் பலவித உணர்சிகள் ஏற்படுகின்றன.
    சிறுபிராயத்தில் கொடுமைக்காரர் என்றும் இளைய பருவத்தில் யோசிக்காத முட்டாள்தனமானவர் என்றும் தோன்றியது.
    அவர் கடந்த வயதுகளை நான் கடக்கும்போது, இதைபோல நடந்து கொண்டதற்குதானே அப்பாவை வெறுத்தோம்
    ( குறைவாக சம்பாதித்தது ,சக மனிதர்களிடம் எளிதாக ஏமாந்தது போன்ற பல ) ,
    வேறு வழியில்லாமலோ தெரியாமலோ இப்போது அதையே செய்கிறோமே என்று தோன்றுகிறது.

    இப்போதுதான் புரிகிறது நான் கொஞ்சம் கொஞ்சமாக என் அப்பாவாக மாறிக்கொண்டிருப்பதும் என் மகன்
    சிறுவயது நானாக ஆகி கொண்டிருப்பதும் .
    மாறுதல்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  3. நன்றி புன்னகை தேசமே

    ReplyDelete
  4. ஆம் கைலாஷ் அப்பாவுடன் நாம் தொடர்ந்து உரையாடியபடி உள்ளோம். அனுபவங்கள் தொடர்ந்து கற்றுத் தருகின்றன.

    ReplyDelete
  5. //ஒரு மனிதரை வெறுக்கிறோமா நேசிக்கிறோமா என்பது தான் மிக்கபெரிய புதிர் என்று நினைக்கிறேன். // இது Relative ஆகத் தான் தோன்றுகிறது.

    இன்றைக்கும் என்னால் அப்பாவை மன்னிக்க முடிவதில்லை. புரிந்து கொண்டிருக்கிறேன். அவர் செய்த தவறுகள் இமாலயத் தவறுகளாய் இப்போதும் தோன்றினாலும், ஏன் செய்தார் என்று இப்போது புரிந்து கொள்ள முடிகிறது... ஆனால், என் வெறுப்பை அவரால் மன்னிக்க முடியவில்லை. மன்னிக்க முடியாத தூரத்துக்கும் போய் விட்டார்.

    //மனோதத்துவம் பேசும் அப்பா வெறுப்பு மன-இயல்பி// அப்படின்னா, ஒரு பெண்ணாக எங்கப்பா மேல என் கோபம் எதுக்கு? :-)

    அப்பாவைப் புரிந்து கொள்ளும் பாதையில் பெரும் தூரம் வந்திட்டீங்க! வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. பிராயிடின் அப்பா வெறுப்பு கோட்பாடு ஒரு கோணம் மட்டுமே. கோட்பாடுகளை மீறியே வாழ்க்கை போகிறது. வெறுப்பு ஆகப்பெரிய தடை என்றாலும் தடை என்பதால் அது கடந்து விடக் கூடியதே. வாழ்க்கை நம்மை விடப் பெரியது என்ற புரிதல் மட்டும் போதும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates