Wednesday 6 January 2010

வாசகர்கள்: இணையமும் அச்சுத்தளமும்

இணையத்தில் நான் செக்ஸ் குறித்து அதிர்ச்சியூட்டும்படி எழுதியிருக்கிறேன். அழகியல் மற்றும் ஒழுக்கவியலை சற்று ஒதுக்கி விட்டு அறிவியல் ரீதியாக செக்ஸ் குறித்து பேச வேண்டும் என்ற விருப்பமே காரணம். உயிரோசையில் வெளியான எனது “வால்” கதையிலும் பாலுறுப்புகளுக்கு கதாபாத்திரங்களின் அந்தஸ்து உண்டு. இணைய வாசகர்கள் இதுவரை என்னை கண்டித்ததில்லை. ஆனால் சம்பிரதாய பத்திரிகைகளில் ஒரு ஆச்சாரமான சூழல் உள்ளது. 2009 டிசம்பர் மாத உயிர்மை இதழில் வெளிவந்த எனது சிறுகதை “நித்திய கன்னிக்கு” கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. ஜனவரி இதழில் பிரசுரமான கடிதங்களில் நான்கு பேர் இதை போர்னோகிராபி என்றுள்ளனர். போர்னோகிராபி மேல் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. என் கதைக்கு அத்தகுதி இல்லை என்று பவ்யமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

போர்னோ ஈடுபாடு உள்ளவர்கள் சொல்லுங்கள் -- என் கதையில் அந்தரங்க வெளியற்ற காதலர்கள் கிடைத்த சில வினாடிகளில் முத்தமிடுகிறார்கள், அவசரமாக அந்தரங்க உறுப்புகளை வருடுகிறார்கள். இதுவா போர்னோ?

இங்கு ரெண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களை வைத்தவர்களுக்கு போர்னோ தெரியாது. போர்னோவை அரசாங்கம் தடைசெய்து மறைவாக விற்கப்படும் வஸ்து என்ற அளவிலே புரிந்து வைத்திருக்கிறார்கள். என் கதையில் செக்ஸ் ஒரு சிறு பகுதி மட்டுமே. அதில் உள்ள மிகை விவரணைகளுக்கு (காதலியின் குறி ஈரம் அவளது தொடை எல்லாம் நனைந்து அவள் காலில் இருந்து செருப்பு வழுவிப் போகிறது) ஒரு காரணம் உள்ளது. அவனது முதல் அனுபவம் அது என்பதாலே முதல் புணர்ச்சி அனுபவம் மிகையாகவே பிரக்ஞையில் படிகிறது. முதல் முத்தம் இதனாலே பொதுவாக சிலாகிக்கப்படுகிறது.




அடுத்து நான் நேரடியாக காமத்தை சொல்லியதனால் உயிர்மை வாசகர்களில் சிலர் மஞ்சள் எழுத்து என்று விட்டார்கள். உருவக அல்லது பூடக மொழி பாலியலை படிக்கும் முதிராத வாசகனுக்கு ஒரு புத்திஜீவி சமாதானத்தை கொடுக்கிறது. அல்லது காமத்தை சித்தரித்த பின் அதன் ஒழுக்கவியல் கோணத்தை சுட்ட வேண்டும். குறைந்தது ஒரு பின்நவீனத்துவ தத்துவார்த்த நிலைப்பாடாவது வேண்டும். பாசாங்கில்லாத நேரடி காமம் பயிற்சியற்ற வாசகனுக்கு ஒரு திகைப்பை ஏற்படுத்துகிறது. புதுவையில் இருந்து கா.ஞானம் என்பவர் அவரது பதின்பருவ மகனை உயிர்மை இதழ் வாசிக்க அனுபமதித்ததாகவும், என் கதை படித்த பின் அம்முடிவு குறித்து சங்கடப்பட்டதாக குறிப்பிட்டு, “இது உயிர்மைக்கு அழகல்ல” என்று தி.மு.க தலைவர்கள் பாணியில் எச்சரித்திருக்கிறார். மனுஷ்யபுத்திரனின் நுட்பமான தலையங்கங்களின் தொகுப்பின் தலைப்பு நினைவு வந்தது: “என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?”.

இதே டிசம்பர் உயிர்மையில் எஸ்.ரா நாகராஜனின் ”குறத்தி முடுக்கு” குறுநாவல் குறித்தான கட்டுரையில் “வேசை“ என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார் அவரது மற்றொரு சுவாரஸ்யமான பதம் “சுகப்பெண்கள்”. மார்பில் முத்தமிடுவது, ஒரு வேசை ரவிக்கை அவிழ்த்து தன் கிராக்கியிடம் மாரை வெளிப்படுத்துவது குறித்தெல்லாம் வர்ணிக்கிறார். மேற்சொன்ன வாசகரின் மகன் ’குறத்திமுடுக்கின் கனவுகள்’ படித்து விட்டு “அப்பா, நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாறாக இப்படி வேசிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளாரே இது தவறில்லையா; அவர்கள் ஏன் ஜம்பர் அவிழ்க்கிறார்கள். ச்சீ அசிங்கம்” என்றெல்லாம் கேட்கவில்லையா? இராது. இங்கு நாகராஜனுக்கு இன்று கிடைத்துள்ள கிளாசிக் முத்திரையும், அவருக்கு எஸ்.ரா நல்கும் இலக்கிய ரீதியான அதிகார பூர்வ ஏற்பும் கறுப்புப் பூனை பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தைகள் படிப்பது பற்றி கருத்திற் கொள்வதானால் எஸ்.ரா இந்த முக்கியமான கட்டுரையை உயிர்மையில் வெளியிட்டிருக்கவும் முடியாது.

உயிர்மையில் வெளிவந்த என் முதல் கட்டுரையான மிருகம்-மனிதன்-எந்திரனில் எந்திரன்கள் பாலியல் தொழிலாளிகளானால் நேரும் அறவியல் குழப்பம் பற்றி பேசியிருந்தேன். அக்கட்டுரையின் அறிவார்ந்த தொனி அல்லது அறிவியல் ஒளிவட்டம் என்னை போர்னோ கண்டனங்களில் இருந்து அப்போது காப்பாற்றியது. வன்முறைக்கு வெள்ளை வேட்டி என்றால் செக்ஸுக்கு ஜுப்பா, ஜோல்னா பை.

இதே கதைக்கு இணைய வாசகர்கள் பலத்த வரவேற்பு தந்தார்கள். மதி மற்றும் கைலாஷ் ஆகிய வாசகர்கள் இப்படி கூறியிருந்தார்கள்:

உயிர்மைக்காக இல்லாமல் பிளாகுக்காகவே இதுபோன்ற படைப்புகள் எழுதலாம் அபிலாஷ் , அருமை

Excellent!.such a bold writing.
I am regular reader of your blog.
write more as you think and feel .


இணையத்தில் வாசகன் மற்றும் எழுத்தாளனுக்கு அறிவார்ந்த மற்றும் படைப்பியல் சுதந்திரம் மேம்பட்டதாக உள்ளது. ஒழுக்க போலீஸ் இல்லை. முக்கியமாக, இதை எழுதாதே என்று யாரும் வற்புறுத்தியது இல்லை. மேலும், தான் தனி இதழ் ஒன்றுக்கு செலுத்தும் 20 ரூபாய் விலை ஒரு வாடிக்கையாளர் மனோபாவத்தை அந்த வாசகருக்கு ஏற்படுத்தலாம். “ ’நித்தியகன்னி’ கதை கொஞ்சம் ஆபாசமாகவே பட்டது. இதை எப்படி உயிர்மை ஏற்றுக் கொண்டது என்றே தெரியவில்லை” என்கிறார் கீழ்கலயத்தில் இருந்து இரா.சண்முகவேல். ஒரு தீவிர வாசகன் என்றும் ஆசிரியக்குழுவின் ஒழுக்க தார்மீகத்தை கேள்வி கேட்க மாட்டான். மேலும் சொல்வதானால் ஆனந்த விகடன், குமுதம் மற்றும் குங்குமத்துக்கு “இன்னும் அதிகமாக நமீதா படங்கள், அசின் பற்றின கிசிகிசுக்கள் போடுங்கள்” என்று விடாமல் தபால் அட்டைகள் அனுப்பும் வாடிக்கையாள மனோபாவம் இது.

மனுஷ்யபுத்திரன் இத்தகைய எதிர்ப்புகளை மிக வேடிக்கையாகவே பார்க்கிறார். ஒரு தேர்ந்த வாசகரான அவர் வெறும் கிளுகிளுப்பு கதையை வெளியிடுபவர் அல்ல. இது கூட புரியாத சில வணிகஎழுத்தின் முலைகுடி மறக்காத வாசகர்களின் ஆசிரியக்குழுவையே கேள்வி கேட்கும் அகங்காரம் என்னை திகைப்படைய வைக்கிறது. முந்தைய பதிவில் சொல்லியிருந்தது போல் இவர்கள் அ-அ வகையினர். இவர்களை கையாளுவதில் ம.பு ஒரு நிபுணர். உயிர்மையில் இதைவிட வெளிப்படையான ஒரு கதை எழுத வேண்டும் என்பதே எனது அடுத்த ஆசை.
Share This

4 comments :

  1. well done... we ecpect more bold writing from you..

    ReplyDelete
  2. எங்களுக்கு சரோஜாதேவி கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வித்தியாசம் நன்றாக தெரியும்.
    கிரேக்க. ரோமானிய ஓவியங்களுக்கும் இப்போது குமுதம் ,ஆ.வி. பத்திரிகைகளில் வரும் நடிகைகளின்
    நடுப்பக்க படங்களுக்கும் வித்தியாசம் தெரியும்.இரண்டுமே பெண்களின் அரை நிர்வாண படங்களே .
    ஆனால் மலைக்கும் ,மடுவுக்கும் உள்ள வித்தியாசம் .
    ( பேசாமல் அவர்கள் பக்திமலர்,வியாபார மலர், குடும்ப மலர் என்று அந்தந்த துறைகளுக்கு ஒரு புத்தகம் ஆரம்பித்ததை போல அவர்கள் உணர்ச்சி மலர் என்று ஒன்று ஆரம்பித்து விடலாம்.)
    அந்த மாதிரி இதழ்கள் வீட்டு கூடத்திற்குள் வரும்போது ,முமைத்கான் & ஷ்ரேயா
    டான்ஸ் டிவி மூலமாக வீட்டிற்குள் வந்து, அதை குழந்தைகளுடன் ரசித்து பார்த்து அந்த டபுள்மீனிங்
    வரிகளை மனப்பாடம் செய்து குழந்தைகளை விழாக்களிலும் டான்ஸ் ஷோவிலும் ஆடசொல்லி ரசிப்பதை விடவா உங்கள் குறிப்பிட்ட கதை மோசம் என்கிறார்கள்?
    விட்டால் தி.ஜா.வின் மோகமுள்கூட ஆபாசம் என்பார்கள்.
    சிக்மன்ட் பிராய்ட் எதிர்ப்புக்கு பயந்து தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடாமல் இருந்திருந்தால்
    மனநல மருத்துவம் இந்த அளவு உயரத்திற்கு வளர்ந்திருக்குமா ?
    அந்த நண்பருடைய வருத்தம்,தர்மசங்கடம் புரிகிறது .நம்முடைய உடலைப்பற்றி ,
    கொழுப்பு உணவு அதிகம் சாப்பிட்டால் ஹர்ட்அட்டாக் வரும் ,தண்ணீர் நிறைய குடிக்காவிட்டால் கிட்னி பாதிக்கப்படும் என்று சொல்வதை போல பிறப்பு உறுப்புகளை பற்றி மருத்துவரீதியாக தெரிந்து கொள்வதில் தவறென்ன ?
    நாம் சரியானதை தெரிவிக்க விட்டால் தவறான இடத்தில் தவறான மனிதர்களால் தவறான முறையில்
    தவறாக தெரிந்து கொள்வார்கள் .விளைவு உடல்நோய்கள் மனநோய்கள் ஏற்படும்.

    தங்கள் எழுத்தில் ஒரு உண்மைத்தன்மையும் நேர்மையும் தைரியமும் உணர்ந்த அறிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் உள்ளது. அதாவது குழந்தை மனநிலை.
    கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் தேவையான மனநிலை இதுவே.
    தொடர்ந்து உணர்ந்ததை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. பாஸ்கி மற்றும் கைலாஷுக்கு நன்றிகள். நீங்கள் தான் என் ஊக்கமருந்து.

    ReplyDelete
  4. அபிலாஷ் ...

    உங்கள் நித்திய கன்னி கதை படித்து எனக்கு கிளர்ச்சி வந்தது உன்மைதான் என்றாலும், அது ஒரு எதார்த்த கதை.... சில நேரம் இவை சுடும்... தீயை போல....

    உங்கள் ஊரின் சுசிந்திரம் கோவிலின் வாசலில் ஒரு வாசகம் இருக்கும் "உள்ளே கண்டதை வேளியே சொல்லாதே.." கோவிலுக்கு உள் சென்றால் , உள்ளே எல்லா தூனிலும் மனிதன் புணர்வது, ஆணுறுப்புகள், மிருகங்களுடன் காமம் என்று எல்லாம் அப்படியே தூணில் செதுக்கி இருப்பார்கள்... அப்படி கோவிலிக்குள் செதுக்கலாமா...??? அது சரியா என்று கேட்டால்... காமம் சரியே, தவறில்லை... ஆனால் நான்கு சுவற்றுக்குள் வைத்து கொள்ளுவது உத்தமம். அதைவிட்டு வேளியே வந்தால்... அது அசிங்கம்.

    நாம் போடுகிற ஆடை போல இந்த கட்டுபாடுகள்.. நிர்வாணத்திற்கும்
    சமூகத்திற்க்கும் இடையில்...

    நான் தமிழ் இணைய உலகத்தை ( வலைபதிவு, போரங்கள்) சுமார் 7 வருடமாக வலம் வருகிறேன்.... துவக்க நிலை எழுத்தாளர்கள் தன் எழுத்துக்கள் மேல் கவனம் கிடைக்க காதல் கவிதைகள் முதல் படியாகவும், ஆண்மீகம், அரசியல், சாதி இவற்றை இரண்டாவதாகவும் எடுத்து கொள்வார்கள்... காமம் , என்ற கத்திமேல் நடக்க கூடிய பதிவு இது... கவனம்.

    உங்கள் பதிவுகள் நன்று... உங்கள் எழுத்துகளின் நோக்கம் என்ன..??? Is that self-actualization or making a difference..????

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates