Monday 25 January 2010

ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி



பலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம்.

இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வி மற்றும் ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இது ஒரு மிகுகற்பனை படத்தின் சாத்தியங்களை பயன்படுத்திகிறது. உக்கிரமான பல கவித்துவ படிமங்களை இதன் வழி உருவாக்கிறது. குறிப்பாக வெறும் காட்சிபூர்வ கிளர்ச்சி என்பதையும் மீறி மாந்திரிகம் குறித்த தருணங்களை மனித ஆழ்மனதின் ரகசியங்களை பேச மிகுந்த படைப்பூக்கத்துடன் பயன்படுத்தி உள்ளது. தமிழ் ஈழ இன-அழிப்பை இந்திய அரசியல் பின்புலத்தில் விசாரிக்கும் தமிழின் முதல் திரைப்படமும் கூட.

பார்க்காதவர்களுக்கு ஒரு எளிய கதைச்சுருக்கம்

1279-இல் சோழ பேரசு வீழ்கிறது. வாரிசை கண்காணா இடத்தில் பாதுகாப்பாய் வளர்க்குமாறு அரச குரு உள்ளிட்ட ஒரு படையினரிடம் ஒப்படைத்து கூடவே பாண்டிய குலத்தவரின் குலதெய்வ சிலையையும் கொடுத்து விடுகிறார் சோழமன்னர். இந்த குழுவினர் தங்களை பின் தொடர்ந்து வருபவர்களை தடுத்து அழிக்கும் வண்ணம் பல மாந்திரிக பொறிகளை ஏற்படுத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக முயன்றும் பாண்டியர்களால் அந்த வாரிசு மற்றும் சிலையை கண்டடைய முடியவில்லை. சென்றவர்கள் கண்ட பட்சத்தில் திரும்ப வில்லை. தேடல் நவீன யுகத்திலும் தொடர்கிறது. பாண்டிய குலவாரிசான அனிதா எனும் பெண் அதிகாரி மத்திய மந்திரி மற்றும் ராணுவ அதிகாரியான பிற அரச வம்சத்தவரின் துணை கொண்டு சோழர்களை அழித்தொழித்து, சிலையை மீட்க வியட்னாமில் உள்ள காட்டிற்கு செல்கிறாள். இவளுடன் ஒரு அகழ்வாராய்ச்சியாளரின் மகளான லாவண்யாவும், கூலியான முத்துவும் எதேச்சையாக இணைகிறார்கள். காட்டு குகையொன்றினுள்ன் நூற்றாண்டுகளாய் பதுங்கி வாழும் சோழப்பழங்குடிகளை பல தடைகள் தாண்டி கண்டடைகிறார்கள். அனிதா சோழமன்னனை துரோகித்து போரில் தோற்கடிக்கிறாள். மன்னனின் வாரிசை முத்து காப்பாற்றி செல்கிறான்.

இழப்பின் உரையாடல்



செல்வராகவன் படங்களில் இழப்பு மீள மீள பேசப்படும் ஒருவித மானுட வலி. ‘காதல் கொண்டேனில்’ வினோத் தான் இழந்ததாய் கருதும் குழந்தைப்பருவ பரிசுத்தத்தை பெண்ணின் அருகாமை மூலமாய் மீட்க ஏங்குகிறான். முடிவில் சுயபலி மூலம் அன்பின் தூய்மையை மீட்கிறான். ‘ரெயின் போ காலனியில்’ கதிர் தன் இறந்த காதலிக்கு கற்பனையால் உயிர்ப்பளித்து இழப்பை முன்னேற்றமாக மாற்றுகிறான்.



புதுப்பேட்டையில் அதிகாரம் மற்றும் உயிரை தக்க வைக்கும் போராட்டத்தில் தன் குழந்தையை இழக்கும் கொக்கி குமார் வாழ்வின் இறுதிவரை அதனை கண்டடைவது இல்லை. செல்வாவின் படைப்புகள் இழப்பின் மீதான் வெவ்வேறு சுருதி மீட்டல்கள் எனலாம்.




‘ஆயிரத்தின் ஒருவனில்’ வரலாற்றின் முன் இழப்பின் கொடுஞ்சித்திரம் ஒன்று தீட்டப்படுகிறது. படத்தின் ஒரு காட்சியில் தன் நண்பர்களை இழந்து அரற்றும் முத்துவிடம் லாவண்யா கூறுகிறாள்: ‘இறந்தவர்களை எண்ணி அழுதும் ஒன்று ஆகப்போவதில்லை. பேசாமல் படுத்து தூங்கு’. படம் முழுக்க பாத்திரங்கள் இப்படியான மறுப்பு மனநிலையில்தான் உள்ளார்கள்.

இழப்பில் இருந்து மீள இவர்கள் தீரா நம்பிக்கையுடன் எதிர்காலத்தின் அடுத்த தருணத்துள் குதிக்கிறார்கள். இழப்பும் மீட்பும் தொடர்ந்த இழப்புமே இவர்களின் பயணம். சோழ வாரிசை காப்பாற்ற தப்பி ஓடும் அரச கும்பல், அவர்களை பின் தொடரும் பாண்டிய வீரர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், தந்தையை தேசிச்செல்லும் மகள் லாவண்யா, சோழர்களை பழிவாங்க செல்லும் பாண்டிய குல நவீன பெண் அனிதா, தொடர்ந்து தன் தோழர்களை பறிகொடுக்கும், தன் சுய-அபிமானத்தை தொடர்ந்து இழந்து அவமானப்படும் முத்து, நூற்றாண்டுகளாய் தாய்மண்ணுக்காக இருள்குகைகளில் காத்திருக்கும் பழங்குடிக் கூட்டம் என இழந்ததை திரும்ப அடைவதற்கான மனிதர்களின் பலதரப்பட்ட பாய்ச்சல்களை படத்தில் காணலாம். முத்துவை பன்றிக்கூட்டம் என்று மேஜர் ரவி அழைக்கும் இடம் முக்கியம். அவனது ஒரே சாதனை அக்குழந்தையை காப்பாற்றுவது. ஏறத்தாழ அவனது விதிக் கடமை அது. அது தவிர அவன் ஒன்றுமேயற்ற காலத்தில் கரைந்து செல்லும் ஒரு புள்ளி மட்டுமே. ஏறத்தாழ அனைத்து பாத்திரங்களும் இப்படி உள்ளீடு அற்ற, காலத்தின் கைப்பாவைகளாகவே உள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை அனைவரையும் ஏமாற்றம் தொடர்கிறது. இதனாலே ’திடகாத்திரமான’ நாயகனோ, வில்லனோ அற்ற முதல் படம் இது.

தளர்வான இத்திரைக்கதையை மூன்று பகுதிகளாக படத்தை பிரிக்கலாம்.

1. ஆரவாரமான ஆரம்பம். கதை பாத்திரங்கள் நிறுவ பயன்படும் படலம் இது. சாவகாசமான கால அளவில் கதை சொல்லும் படத்தின் போக்கை இப்பகுதி ஆரம்பித்து வைக்கிறது. இங்கு அறிமுகம் ஆகும் பாத்திரங்களுக்கு பின்னர் வளர்ச்சியே இல்லை எனலாம்.

2. முத்து, லாவண்யா மற்றும் அனிதா நாகரிகத்தின் பின்னோக்கி சென்று உய்வு மட்டுமே இலக்காக ஆகும் கட்டத்தில் தங்கள் மறைவான உணர்வுகளால் சுதந்திரமாக செலுத்தப்படுகிறார்கள். குளிர், பசி, தாகம், மனம் பேதலிக்க வைக்கும் ஓசைகள் என இயற்கையின் இன்னல்களை கடந்து அவர்கள் சோழ பழங்குடியை அடையும் போது ஏறத்தாழ முன் நாகரிக சூழலுக்கு சென்று விடுகிறார்கள். இப்படத்திற்கு தூண்டுதல் எனக் கூறப்படும் படமான Timeline-இல் போல் ஆ.ஒ-வில் இம்மூவரும் காலஎந்திர அறிவியல் விசித்திரங்களை பயன்படுத்துவது இல்லை. முழுக்கவே ஆழ்மனம் நோக்கிய ஒரு காலப்பயணமாக செல்வராகவன் இதை சித்திரித்துள்ளார்.

உடல் உணரும் காமம் மற்றும் பசி

குளிரைத்தாங்கும் பொருட்டு மிருகங்கள், குறிப்பாய் இளம் விலங்குகள், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடக்கும். இப்படத்தில் லாவண்யா மற்றும் அனிதா முத்துவை கட்டிக்கொண்டு படுத்து குளிரைப் போக்கும் காட்சி வருகிறது. இது காமத்திற்காக அல்ல என்பதை கவனியுங்கள். நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிகளை முத்து கடக்கும் இடம் ஒன்று வரும். அப்போது குறிப்பாக அவனது அருவருப்பு மற்றும் வியப்பு கலந்த முகபாவம் காட்டப்படும். பின்னர் பாலையில் அகப்பட்டு பசியில் வாடின சூழலில் முத்து தன் இருபக்கமும் உள்ள லாவண்யா மற்றும் அனிதா பார்க்கிறான். அவனுக்கு அவர்கள் இருவரும் கோழி வறுவல் மற்றும் பீர் கோப்பையாக தெரிகிறார்கள். இரு காட்சிகளையும் தொடர்புறுத்தி பார்க்கும் போது நமக்கு முத்துவின் மனம் காலப்பயணத்தில் பின்னோக்கி வந்துள்ள தூரம் விளங்கும். சிலந்தி வகையில் பெண்சிலந்தி ஆஜானுபாகுவானது. புணர்ச்சி முடிந்ததும் சமர்த்து ஆண் சிலந்திகள் எட்ட ஓடிவிடும். இல்லாவிட்டால் களைத்த பெண்ணுக்கு பலியாக வேண்டியது தான். முத்து இங்கு பசியை முழுக்க உடலால் உணர்கிறான். மற்றொரு இடத்தில் பசி முற்றி அவனுக்கு காமம் பெருக்கெடுக்கும். அவனை சொழப்பழங்குடியினர் ஒரு பெரும் தீக்குண்டத்தின் மீது தொங்கப் போட்டு விசாரிப்பார்கள். ஆரம்பத்தில் ‘சாப்ட்டு பத்து நாளாசு ... எனக்கு பிரியாணி வேணும் பீர் கொடு ’ என்று அழுது அரற்றும் அவன் சட்டென்று அனிதாவை வன்புணர்வது குறித்த கட்டற்ற கனவு நிலைக்கு செல்கிறான். சோழமன்னன் வாளால் அவன் முதுகில் கோடுகள் கிழிக்க முத்துவுக்கு அது பெண் ஸ்பரிசத்தின் கிச்சுகிச்சாக கிளுகிளுக்கிறது. பிதற்றுகிறான். முத்து தன் நினைவிலி மனதின் ஆளுகைக்கு உள்ளாகும் காட்சிகள் மிக முக்கியமானவை.

மெல்ல நகரும் காலம்

கிளாடியேட்டரை நினைவுறுத்தும் பொதுஅரங்க களத்தில் மோதல் காட்சி ஒன்று வருகிறது. சோழபழங்குடி ராஜாங்கத்தில் அடிமைகள் பொதுமக்கள் முன்னிலையில் திற்ந்து விடப்பட்டு ஒரு ராட்சச உருவத்தினால் சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரும்பு குண்டு வீசி அடித்து கொல்லப்படுகிறார்கள். அங்கு பயந்து நடுங்கும் முத்துவின் மீது மூத்திரம் பீய்ச்சி அடித்து ஒரு சிறுவன் அசிங்கப்ப்டுத்துகிறான். அஞ்சாமல் போரிட தூண்டுகிறான். அப்போது சட்டென்று முத்துவின் பிரக்ஞையில் பார்வையாளர்கள், அரங்கு யாவும் மறைகிறது. காலம் மிக மெதுவாக நகர்கிறது. தன் மீது வீசப்படும் குண்டை சமாளித்து தப்ப அவனுக்கு ஏகப்பட்ட அவகாசம் கிடைக்கிறது. ராட்சத உருவத்தை எளிதில் வீழ்த்துகிறான். பிறகு உடனே பழைய பிரக்ஞை மீள்கிறது, கூடவே அவனை முன்னர் அச்சுறுத்திய அனைத்தும்: அதே பார்வையாளர்கள், கரவொலி, கூச்சல், ரத்தம், நிணம், கோரம். இந்த மனநிலையை மிகாலிசெக்சென்மிகாலி எனும் மனவியல் ஆய்வாளர் flow என்கிறார். Flow-இன் போது காலம் ஸ்லோமோஷனின்ல் போல் மிக தாமதாக இயங்கும். ஒரு விபத்தில் நீங்கள் தூக்கி வீசப்படும் போது அந்த சில நொடிகளை காற்றில் பறப்பது அரைமணி போல் துல்லியமாக உணரக்கூடும். பொதுவாக விளையாட்டில் சாதனைகள் காலம் உறையும் மனநிலையில் தான் செய்யப்படுகின்றன. ஆபத்தின் உச்சத்தில் முத்துவின் ஆழ்மனம் சட்டென்று தூண்டப்பெற்று, தற்காப்பு நடவடிக்கையாக காலத்தை மிக மெதுவாக பார்க்கத் தொடங்குகிறான். எதிரியை விஞ்ச இந்த அவகாசம் உதவுகிறது. மனித மனம் குறித்த செல்வராகவனின் இந்த அவதானிப்பு மிக் சுவாரஸ்யமானது.

படத்தில் சோழமன்னனின் பாத்திரம் மிக சமநிலையுடன் உருவாக்கப்படுள்ளது. அவன் தன் மக்களை பட்டியிட்டு வதைத்து அரண்மனை போகங்களில் மூழ்கி கிடக்கிறான். ஒரு மதலை ஏந்திய தாய் தன் முலையை பிழிந்து குருதியை பீய்ச்சி அடித்து காட்டின பின்னரே அவனுக்கு பசியின் அவலம் விளங்குகிறது. அதன் பின்னரே தான் கொண்டு வந்துள்ள மாமிசத் துண்டுகளை மக்களுக்கு வழங்கும் எண்ணமே அவனுக்கு வருகிறது. சம்போக மயக்கத்தில் தன் மக்கள் கூட்டத்தையே அவன் எதிரிக்கு பலி கொடுக்க நேர்கிறது. செல்வா இப்பாத்திரத்தை எவ்வித மதிப்பீட்டு சாய்வும் இன்றி உருவாக்கியிருக்கிறார். நம் மன்னர்கள் இப்படியே இருந்து வந்துள்ளனர் என்பது ஒரு வரலாற்று நிஜம். அந்த தாயின் முலைப் பீய்ச்சல் தான் இன்றும் புரட்சியாகவோ, தேர்தல் முடிவுகளாகவோ வெளிப்படுவது. இரவில் ராணுவத்தால் கொல்லப்பட்டு வீழும் இறுதி நொடியில் சோழமன்னன் கண்முன் கடலில் ஒரு சித்திரம் தெரிந்து மறைகிறது: தீவட்டிகள் ஏந்திய கப்பல்களில் சோழபேரசின் படைகள் அவனை காப்பாற்ற வந்துள்ளன. அவற்றை நோக்கியபடியே ஆவேசங்கொண்டு வீழ்ந்து மடிகிறான். மகுடாபிசேகம் குறித்த நூற்றாண்டுகளான சோழ கனவுடன் பிறந்த மன்னன் அக்கனவு தன் கண்களில் உறைந்திருக்க மாள்கிறான். செங்கோல் இடறிய வீழ்ச்சியை இதைவிட காத்திரமாக எப்படி காட்டுவது?

மாந்திரிகமும் மனதின் அடுக்குகளும்

இப்படத்தின் மிகுகற்பனை தன்மை பல்வெறு குறியீட்டு சாத்தியங்களை திறந்து விடுகிறது. பழம்சோழர்கள் தங்கள் பதுங்கிடம் நோக்கிய பாதையில் அமைத்துள்ள பொறிகள் கவித்துவம் மிக்க காட்சிகள். கடல், கிராமம், பாம்பு, புதைமணல், பசி, தாகம், படைவீரர் எனும் 7 மரணபொறிகள் குறியீட்டுப் பொருளில் மனித மனத்தின் பல்வேறு அடுக்குகள் தாம். இவற்றுள் மிகச்சிறந்த படிமமாக எனக்குப் படுவது தானாக திறந்து மூடும் புதைகுழிகள் நிறைந்த பாலை வெளி. இந்த மணல் வெளியில் சூரிய சந்திர உதய மற்றும் அஸ்தமனங்களின் போது விழும் நடராஜர் வடிவ நிழல் ஓடினால் மட்டுமே அங்குள்ள புதைகுழிகளில் விழாமல் தப்பிக்க முடியும். ஆழமான மனக்கிளர்ச்சி ஏற்படுத்தும் சித்திரம் இது. இதைப் போன்றே மாந்திரிகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் மிக கவித்துவமானவை. பரவசத்தின் எல்லைக் கோட்டை அடையும் இந்த மூன்று பாத்திரங்களின் மனம் பிறழ்வுறும் சில அலாதியான சித்தரிப்புகள் இவற்றுள் அடங்கும். இரு காட்சிகளை உதாரணமாக கூறலாம்.

சோழர்கள் குடியிருந்த ஒரு பாழடைந்த கோட்டையில் திரியும் முத்து, லாவண்யா மற்றும் அனிதாவுக்கு ஒரு இரவில் தாங்கவொண்னா ஒலியலை வரிசையில் ஓசைகள் கேட்கின்றன: உலோக முழக்கங்கள், மூதாதையரின் கூச்சல், அலறல், ஆரவாரம். காதில் ரத்தம் வர மனம் பேதலித்து ஓடுகிறார்கள். வன்முறை விருப்பு உள்ளோங்குகிறது. முத்து பெரிய இரும்பு தூண் ஒன்றை பெயர்ந்துக் கொண்டு தன் காதலி லாவண்யாவை துரத்துகிறான். கீழே விழுந்தவளின் கூந்தலை மிதித்து எக்களிப்புடன் அவளை தாக்க முனைகிறான். அப்போது அனிதா அவனை சுட, சன்னதம் கண்டவன் போல் அவளை கொல்ல துரத்துகிறாள். அவள் அந்த வன்முறையில் பெரும் கிளர்ச்சியுற்று ஒரு வனவிலங்கு போல் ஓலமிட்டு முன்னோடுகிறாள். பின்னால் லாவண்யாவும் சேர்ந்து கொள்கிறாள். சோழரின் ராஜகுரு ஒரு தீப்பந்தத்துடன் எதிரில் தோன்ற உன்மத்தத்தின் உச்சத்தில் அவர்கள் ஒவ்வொருவராய் அவர் முன் ஆடைகளை கழற்றி நிர்வாணிக்கிறார்கள். மயங்கி துவள்கிறார்கள். சால்மன் மீன்கள் நினைவு வருகின்றன. ஆற்றுநீரில் பொரியும் அவை கடலுக்கு சென்று சில வருடங்கள் வளர்ந்து முதிர்ந்த பின்னர் ஆற்றில் தாம் பிறந்த அதே இடத்துக்கு துல்லியமாக திரும்பும். அங்கு முட்டையிட்டு விட்டு, சில நாட்களில் குஞ்சுகள் பொரியும் முன்னர் இறந்து போகும். குஞ்சுகள் பின்பு கடலுக்கு பயணமாகி ஒரு கால வட்டம் அடித்து பிறப்பிடத்தில் சாக திரும்ப வரும்.

மற்றொரு கவித்துவ காட்சி சோழ மன்னனும் அனிதாவும் புணரும் காட்சி. ஆரம்பத்தில் அனிதாவை அடித்து துன்புறுத்தும் அவன் அவள் நிழலுடன் புணர்கிறான். அவளது பருவுடல் பன்மனங்கு கிளர்ச்சி உறுகிறது. நிழலின் கழுத்தைப் பற்றி நெரித்து உதடுகளை அவன் சுவைக்கும் இடம் மிக முக்கியமானது. அந்த நிழல் அவன் ஈகோ தான். புணர்ச்சியில் கற்பனைக்கு பெரும் இடம் உண்டு. நமது துணையைக் கூட ஒரு பிரதிபிம்பமாகவே காண்கிறோம். நம் நினைவின் அடுக்குகளின் ம்த்தியில் இருந்து வாசனைகளை கிளர்த்துபவர் அல்லவா வாழ்வெல்லாம் தேடும் லட்சிய காமத்துணை.

இறுதிப் போர்

3. இறுதி கட்டம் தாய்மண்னை இழக்கும் தமிழ்மனம் பற்றியது. இது இலங்கைப் போர் குறித்த ஒரு உருவகக் கதை. படம் நம்மை ஆழமாக சோகத்தில் ஆழ்த்துவது இதனாலே. உண்மையில் படத்தில் பலமும் பலவீனமும் அதுவே. ஒரு வரலாற்று உண்மையை உணர்த்துவதற்காக திரைக்கதையில் பல்வேறு பொறிகளை செல்வராகவன் சற்று வெளிப்படையாகவே வைத்திருக்கிறார்.




ஒரு இணைய விமர்சகர் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை ஆண்ட சோழரின் மொழி ஏன் ஈழத்தமிழை ஒத்துள்ளது என்று கேட்டுள்ளார். அது மட்டுமல்ல சோழரை தாக்கி அழிக்க இந்திய ராணுவ படையினர் வியட்நாம் காடுகளுக்கு வான்வழி வந்து இறங்குகிறார்கள். அவர்களுடன் ஒரு மத்திய மத்திரி வேறு துணை வருகிறார். இவர்கள் எல்லோரும் பாண்டிய வம்சாவழியினர், நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்று கோபம் மாறாதவர்கள், வெறும் சிலை ஒன்றினை மீட்பதற்காக ஒரு நாட்டின் கஜானானை காலி செய்து போரிடுகிறார்கள் போன்ற மிக பலவீனமான காரணங்கள் படத்தில் சொல்லப்படுகின்றன. ஏன் மத்திய மந்திரி, ராணுவம் எல்லாம் திணிக்கப்ப்பட வேண்டும்? இன்று ஊடகங்களின் கண்ணைக் கட்டிக் கொண்டு அயல் நாட்டில் ராணுவம் இறக்கி ஒரு மத்திய மந்திரி போரிடுவது சாத்தியம் இல்லை. அது மட்டும் இன்றி வரலாற்று நினைவுச்சின்னங்களையே பாதுகாக்காத, தமிழை செம்மொழியாய ஆதரிக்க நெடுங்காலம் தயங்கிய வடக்க்கத்திய மத்திய அரசு சோழ வம்சம் குறித்த ஒரு வரலாற்று உண்மையை கண்டறிவதில் ஆர்வம் காட்டி செலவு செய்யும் என்பது மிகத்தமாஷான காரணம் மட்டுமே. மேலும் இந்த போரில் சோழர்களின் இனம் ஏறத்தாழ அழித்தொழிக்கப்படுவதற்கு ’உள்ளே’ இருப்பவர்களால் துரோகிக்கப்படுவது ஒரு முக்கிய காரணம். இப்படத்தில் ரெட்டை வேடதாரி தி.மு.க தலைமை என்பதும், மத்திய மந்திரி காங்கிரசின் உருவகம் என்பதும் வெளிப்படையானவை. மேலும் குறிப்பாக ராணுவத்தினரால் சோழப்பெண்கள் வன்புணரப்படும் காட்சிகளை தகவல் செறிவுடன் காட்டும் அவசியம் திரைக்கதைக்கு என்ன என்ற கேள்வி இயல்பாக எழலாம். ஈழ மண்ணில் இந்திய ராணுவத்தின் துணையுடன் நடந்த எண்ணற்ற வன்கொடுமைகளை அல்லவா இக்காட்சி சொல்ல விழைகிறது!

ஆயிரத்தில் ஒருவன்: மூலமும் இருண்மை பிரதியும்

அப்புறம் நாம் கவனிக்க வேண்டியது முத்து ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என்பது. அவனது ஆரம்ப காட்சிகளுக்கு பல எம்.ஜி.ஆர் பாடல்கள் பின்னணி ஆகின்றன. உடம்பில் அவர் பெயரை பச்சை குத்தி உள்ளான். எம்.ஜி.ஆருக்கும் ஈழ ஆதரவுக்கு உள்ள தொடர்பு குறித்து விவரிக்க வேண்டியதில்லை. இங்கிருந்து எம்.ஜி. ராமசந்திரனின் 1965-ஆம் ஆண்டு மூலப்படத்துடன் செல்வராகவனின் படம் உருவாக்கும் உரையாடல் எதேச்சையானது அல்ல.



மூலப் படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு எளிய மருத்துவனாக அறிமுகமாகி, பின்னர் சந்தர்ப்ப சூழல் காரணமாக அடிமையாகிறார். பல்வேறு சோதனைகளுக்கு பின் தன் சக அடிமைகளுக்கு அவர் விடுதலை வாங்கித் தருவதாக அப்படம் முடிகிறது. செல்வாவின் படத்தில் முத்து பாத்திரத்தால் தன் நண்பர்களை காப்பாற்ற முடிவதில்லை. அவன் தொடர்ந்து யாராவது ஒருவரின் ஆளுகையின் கீழ் ஒரு கைதியாகவே இருக்கிறான். ஆரம்பத்தில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிகிறான். பின்னர் லாவண்யாவின் வழிகாட்டுதல் மற்றும் அனிதாவின் துப்ப்பாக்கிக்கு கட்டுப்படுகிறான். பின்னர் சோழக்குடிகள் மற்றும் ராணுவத்திடன் தொடர்ச்சியாக சிறைபட்டு தப்புகிறான். தன் கையாலாகாத நிலைமை எண்ணி அவன் அடிக்கடி அழும் காட்சிகள் சமகால மனிதன் அதிகாரத்தின் கைதியாக இருக்க வேண்டியதன் தவிர்க்க இயலாத நிலைமை பேசுவன. போரிட்டு தோற்றபின் முத்துவால் ஒரு இனம் கண்முன் அழித்தொழிக்கப்படும் துர்கனவை மௌனமாக வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. முதலாளித்துவ தேவைகள் முன் எளிய மக்கள் சர்வசாதாரணமாக அழிக்கப்படும், அறமதிப்பீடுகள் விழுந்து விட்ட இந்த நூற்றாண்டில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் மனிதன் ஒரு வெட்டவெளிக் கைதியாகவே உணர முடியும். எம்.ஜி.ஆரின் ஈஸ்ட்மேன் படத்தின் ஒரு இருண்மையான பிரதிதான் சமகால ஆயிரத்தில் ஒருவன்.



இப்படத்திலும் செல்வா ஒரு நம்பிக்கை சுடரை பொத்தி கொணர்ந்து கைமாற்றுகிறார். சோழகுலத்தின் கடைசி இளங்குருத்தை முத்து காப்பாற்றி கொண்டு செல்வதான இறுதிக் காட்சியும், இவ்வரலாறு தொடரும் என்பதான இயக்குனரின் அறிவிப்பும் ஏதோ ஒரு ரகசிய தகவலை நம்முடன் பரிமாறுகின்றன. நம் வரலாறு தொடரும் என்பதா அது?
Share This

12 comments :

  1. குவிந்துள்ள பல பல விமரிசனங்கள் யாவையும் படித்து முடித்த நிலையில், உங்களுடைய விமரிசனம் மிக நிறைவானதாக உள்ளது. நன்றிகள்.

    ReplyDelete
  2. மேல்நோக்கான பல அரைவேக்காடு விமர்சனங்களுக்கு மத்தியில், மிக தெளிவான பார்வையுடன்..தீர்க்கமான ஒரு பதிவு. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. தெளிவான பார்வை. நல்ல விமர்சனம். கூடவே அரிதான தகவல்கள்.
    கலக்கிடீங்க.

    ReplyDelete
  4. Detailed Analysis.Romba nalla irundhadhu.....When everyone is harping on Reema's character , your analysis on Karthi is mind-opening.

    ReplyDelete
  5. நன்றி அஹோரி மற்றும் ஜெ.பி

    ReplyDelete
  6. விரிவான அற்புதமான அலசல் நண்பரே...இதுவரை வாசித்த இப்படம் குறித்தான விமர்சனங்களில் இந்த விமர்சனம் புதிய நுட்பமான கோணங்களை அறிய வைக்கிறது...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  7. நன்றி செங்கதிரோன் மற்றும் ரௌத்ரன்

    ReplyDelete
  8. very detailed review, i really like your opinion on the mind of the hero

    i too felt the same when i saw the movie

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates