Wednesday 27 January 2010

ராபர்ட் பிளை கவிதைகள்

இந்த மாத தாமரை இதழில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதைகள்



மகிழ்ச்சியின் மாதம்

குருட்டுக் குதிரை செர்ரி மரங்களுடன் நிற்கிறது.
தண்மையான பூமியில் இருந்து எலும்புகள் மின்னும்.
ஏறத்தாழ ஆகாயம் வரை
இதயம் துள்ளும்! ஆனால் அரற்றல்களும் தாவர இழை உறுப்புகளும்
நம்மை திரும்ப இருளுக்குள் இழுக்கும்.
இரவு நம்மை எடுத்துக் கொள்ளும். ஆனால்
ஒரு விலங்குப்பாதம்
சாலையை வெளிச்சமூட்ட இருட்டில் இருந்து
வெளிவருகிறது. ஒன்றும் பிரச்சனையில்லை.
எனது அனல் தடயங்களை இரவின் ஊடாக தொடர்வேன்.


மரணத்துக்குப் பிறகு காலம் பின்னோடுகிறது


விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ரொட்டி அரைக்கும் சாம்சன்
தனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதை மறக்கிறான், பிலிஸ்டைனர்கள்
அவனிடமிருந்து பிடுங்கின பதில்கள் சிங்கத்துக்குள் திரும்புகின்றன. கசப்பும் இனிமையும் மணம் புரியும்.
அவனே சிங்கத்துக்கு அநியாயம் செய்தான். இப்போது கோதுமைப் பயிர்
காற்றை தன் மனைவி வாலால் வருடுகிறது; கழுதை
நீண்ட புற்களில் ஓடுகிறது, மேலும், சுவர்க்கத்தை விரைந்து பார்த்தபடியால், நரியின் உடல் இளங்காவி பூமியில் ஓய்வாகச் செல்லும்.


மரணத்துக்குப் பின் ஆன்மா தன் சந்தடியற்ற வீட்டுக்கு
பாலும் தேனும் அருந்த திரும்பும். உடைந்த உத்தரங்கள் சூரியோதய வாயிற்கதவுகளை திரும்ப சேர்க்கும், மேலும் தேனீக்கள் புளித்த
இறைச்சியில் பாடும். மீண்டும் தொட்டிலில் அவனது முடி
நீளமாய் பொன்னிறமாய் வளரும்; டிலிலாவின் கத்திரிக்கோல்
இரு குட்டி விளையாட்டுக் கத்திகளாக திரும்ப மாறும்.
பின் எப்போதும் அஸ்தமனம் மற்றும் நிழல்களால் துரத்தப்படாமல், சாம்சன்
கிழக்கு சமுத்திரத்தில் மூழ்கி, பிறக்கிறான்.


பழைய ஆசிரியர்களிடத்து நன்றியறிதல்



உறைந்த ஏரி மேல் வீறாப்பாய் அல்லது ஓய்வாய் நடக்கையில்
நாம் இதுவரை என்றுமே இருந்திராத இடத்தில் நம் காலடிகளை வைக்கிறோம்.
நாம் நடக்காததன் மீது நடக்கிறோம். ஆனால் சங்கடப்படுகிறோம்.
கீழே உள்ளது நம் பழைய ஆசிரியர்கள் அன்றி வேறு யார்?

மனிதப் பளுவை என்றுமே ஏற்றிராத நீர் – நாங்கள்
அப்போது மாணவர்கள் – எங்கள் பாதங்களை ஏந்துகிறது,
மேலும் ஒரு மைல் தொலைவுக்கு முன்னே செல்கிறது.
நமக்கு கீழே ஆசிரியர்கள், மேலும் நம்மைச் சுற்றி நிச்சலனம்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates