Wednesday 3 November 2010

நீட்சே அறிமுகக் குறிப்புகள் – 4



ஆக்கிலஸின் கேடயம்: ஒரு மாணவனும் இரு அதிமனிதர்களும்

பொபோர்டொ பள்ளியில் பாடத்திட்டம் மரபானது; அதனாலே சற்று வினோதமானது. இப்பள்ளி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விட லத்தீன், கிரேக்கம் போன்ற மரபான பாடங்களிலே அதிக கவனம் செலுத்தியது. நீட்சேயின் பிற்காலத்திய சிந்தனையில் கிரேக்க மரபு ஒரு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது லட்சிய உலகம் கிரேக்க காலத்தில் நங்கூரம் இட்டிருந்தது. அவரது தத்துவ உலகின் அடித்தளம் இப்பள்ளி அனுபவத்தில் இருந்து அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாபெரும் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு இளமையில் கிடைக்கும் அறிவுத்துறை பரிச்சயங்கள் திசைதிருப்பியாக அமைகின்றன. உதாரணமாக பெர்டினண்டு ரஸல். ரஸலின் தத்துவத்தில் வரலாற்று அரசியல் பரிமாணங்களை வெளிப்படையாய் காணலாம். அவர் தத்துவ நிலைப்பாடுகளை அவை சார்ந்த காலத்தின் வரலாற்று அரசியல் கண்ணோட்டத்தில் விளக்கும் ஈடுபாடு கொண்டவர். ரஸல் தத்துவத்தை வரலாற்று-அரசியல் நோக்கில் அணுகக் காரணங்கள் அவருக்கு பால்யத்தில் அவரது பாட்டி வரலாற்றில் பரிச்சயமும் ஆர்வமும் ஏற்படுத்தியதும், அவர் ஒரு அரசியல்வாதிகளின் குடும்பத்தில் தோன்றியதுமே. அடுத்து நாம் இங்கு கவனிக்க வேண்டியது தத்துவ மரபின் பெரும் சாதனையாளர்களான ரெனெ டெகார்டைப் போன்று நீட்சே கணிதப் பயிற்சி பெற்றவரோ அல்லது அரிஸ்டாட்டிலைப் போன்று விஞ்ஞானியோ அல்ல என்பது. தொன்றுதொட்டு தத்துவம் அறிவியலின் ஒரு கிளைத்துறையாக இருந்து வந்துள்ளது. நீட்சே ஒரு காலகட்டம் வரை அறிவியலின் முக்கிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளையும் சித்தாந்தங்களையும் பின் தொடர்பவராக இருந்தாலும் அவர் அத்துறையில் பயிற்சி பெற்றிருக்கவில்லை. தத்துவத்தில் பயிற்சி பெற்றாலும் நீட்சே முகமூடி கையுறை அணிந்து தத்துவத்தை மேற்கோள்களின் கத்தியால் பிளக்கவில்லை. அவர் ஒரு புதிய பாதையை திறந்தார்; அதற்கு கற்பனையும் பல அறிவுத்துறைகளின் பரிச்சயமும் அவருக்கு உதவியாக இருந்தன. அவரது காலத்தில் இவ்வாறு பல்துறை பரிச்சயத்திற்கான வாய்ப்புகளை கல்வித்துறை அமைத்து தந்தது கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த பள்ளிப் பருவத்தில் நீட்சே கவிதை எழுதுவதில் மற்றும் பொதுவாக இலக்கியம் மற்றும் இசையில் தீவிரமாய் ஈடுபடுகிறார். குறிப்பாக ஆய்வுரீதியான விமர்சனத்தில் அவருக்கு தோன்றிய ஆர்வம் விவிலியத்தின் மீது முதல் ஐயங்களை தோற்றுவிக்கிறது.

அம்மாவுக்கு நீட்சேவை பாதியாராக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பம் இருந்தது. இறைத்தொண்டு சில தலைமுறைகளாக அவரது குடும்பத் தொழில் அல்லது சேவையாக இருந்து வந்தததை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். தாயின் வற்புறுத்தல் காரணமாக போன் பல்கலைக்கழகத்தில் நீட்சே மொழியறிவியலும் இறையியலும் இணைந்து படிக்கிறார். இறைநம்பிக்கை இழந்து விட்டபடியால் நீட்சேவுக்கு இப்படிப்பில் இருப்பு கொள்ளவில்லை; அவர் அங்கிருந்து லெயிப்ஸிக் பலகலைக்கு (1865இல்) செல்கிறார். இது ஒரு முக்கிய இடமாறுதல். இங்கு இருந்த நான்கு வருடங்களில் நீட்சே கடுமையாக உழைக்கக் கூடிய படுபுத்திசாலியான மாணவராக உயர்கிறார். இங்கு தான் நீட்சே சில முக்கியமான ஆளுமைகளின் நிழல்களை கடக்கிறார்; சிலவற்றில் தங்கி இளைப்பாறுகிறார். இந்த விவரங்களை நாம் பிறகு பார்க்கலாம். அதற்கு முன் நீட்சேவுக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்பட கார்சியா மார்க்வெஸுக்கு நிகழ்ந்தது போல் அவரை சிபிலிஸ் எனும் பால்வினை தொற்றுகிறது. சிபிலஸுக்கு அக்காலகட்டத்தில் மலேரியா ஜுரத்தை ஏற்படுத்தி உடலை கொதிக்க விடுதல், உடலில் பாதரசத்தை பூசுதல் போன்ற பல விசித்திரமான உதவாக்கரை வைத்தியமுறைகள் இருந்தன. கிட்டத்தட்ட இன்றைய எயிட்ஸ் தான் அன்றைய சிபிலஸ். கொப்புளங்கள் எங்கும் முகிழ்க்க உடல் விரூபமாகி விரைவில் உயிர் விடுதல் ஒரு விடுதலை ஆகலாம். அல்லது சிபிலிஸ் மைய நரம்பு மையத்தை பாதிப்பதால் பைத்தியமாகலாம். நீட்சேவுக்கு நேர்ந்தது இந்த இரண்டாவது விதிதான் என்று நம்பப்படுகிறது. மூளையில் கட்டி வந்து அவர் இறந்தார் என்றொரு தரப்பும் உண்டு. எப்படியாயினும் நீட்சேவை சிபிலஸ் மனதளவில் கடுமையாய் பாதித்ததாய் தரவில்லை. அவருக்கு தொடர்ச்சியாய் கடுமையான தலைவலிகள் ஏற்பட்டு படுக்கை ஓய்வுக்கு பல நாட்கள் தள்ளியிருக்கிறது. முக்கியமாய், எழுத்தில் நாம் காண்பது ஒரு நோயாளியின் குரல் அல்ல என்பது கவனிக்க வேண்டியது. அவரது தன்னம்பிக்கையும், வாழ்வு மீதான நேர்மறையான அணுகுமுறையும் பளிச்சிடும் ஆளுமைப் பண்புகள். ஒரு கட்டத்தில் தனிமையில் விடப்பட்டாலும் நோய்மை அவரை மனிதவெறுப்பாளராகவும் மாற்றி விடவில்லை.

தனது நாற்பது வருட சேவையில் பார்த்த மிகச்சிறந்த மாணவன் என்று நீட்சேவின் பேராசிரியர் அவரை மதிப்பிட்டிருந்தார்.
கல்லூரிகள் நீட்சேவின் காலத்தில் மிகவும் மாறுபட்டு இருந்தன; அறிவு மட்டுமே முக்கிய தகுதியாக இருந்தது. அதனால் மிகச்சிறந்த மாணவனான நீட்சேவுக்கு தேர்வின்றியே முகவர் பட்டம் வழங்கப்பட்டது; அத்தோடு 1869 இல், அதாவது 24 வயதிலே, நீட்சேவுக்கு அவர் படித்த பேஸல் பலகலைக்கழகத்திலேயே மொழியறிவியலில் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது. இங்கு நீட்சே பத்து வருடங்கள் உழைத்து நான்கு சுவர்களை விட்டு மீளாத படிப்பறை வாழ்வில் சலிப்படைந்தார். சம்பாத்திய தேவைக்காகவே அவர் பேராசிரியர் பணியில் அத்தனைக் காலம் ஒட்டியிருந்ததாக தெரிகிறது. சிறுகசிறுக அவர் கற்பித்து வந்த மொழியறிவியலில் அவரது ஆர்வம் வற்றியது. நீட்சே தத்துவத்தில் அதிக உற்சாகத்துடன் ஈடுபட்டார். அதை விட முக்கியமாய் கல்வித்துறையின் இடிபாடுகளிலிருந்து தப்பும் ஒரு வாய்ப்பாக வந்த போர் சேவையை பயன்படுத்தி பிரஷ்ய படைப் பிரிவொன்றில் செவிலி ஏவலாளராக சென்றார். இக்காலகட்டத்தில் குடியுறவுத்துறை கோளாறுகளினால் நீட்சே எந்த நாடொன்றின் பிரஜையாகவும் அல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போர் சேவையின் போது அழற்சி நோய் தாக்கிட நீட்சே மீண்டும் நான்கு சுவர்களுக்குள் படுக்கையில் முடங்கிப் போனார். இந்த சங்கடங்கள் மற்றும் கல்விப்பணி மீதான விசுவான இழப்பின் மத்தியிலும் அவர் கல்லூரிக்குள் பிரபலமான ஆசிரியராகவே இருந்திருக்கிறார். அவரது ஆர்வமும் பொங்கிப் பெருகிய ஆற்றலும் மாணவர்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இப்போது நாம் கடந்த அத்தியாயத்தில் நேரிட்ட கேள்விக்கு வரலாம். நீட்சே மனிதன் எதிர்காலத்தின் மேம்பட்ட அதிமனிதனுக்காக அல்லது எதிர்காலத்தில் மலரப்போகிற மகத்துவமான கலாச்சார, ஆன்மீக வாழ்வுக்காக தன்னை தியாகம் செய்ய துணிய வேண்டும் என்று ஏன் சொல்கிறார்? எதிர்காலம் என்கிற நிச்சயமற்ற தொலைவான ஒன்றுக்காக இன்றின் காலத்தை ஏன் வீணடிக்க வேண்டும்?
நீட்சேவின் அறிவுமனம் காலத்தை தொடக்க முடிவற்ற ஒரு தொடர் இருப்பாகவே எடுத்துக் கொண்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட மனிதன் தனது அறிவு மற்றும் கற்பனையின் பாய்ச்சலினால் காலத்தின் இந்த மேலோட்டமான வரம்புகளை எளிதில் கடந்து விடுகிறான்; வாழ்வின் அகண்ட பிரவாகத்தில் கலந்து விடுகிறான். எழுத்து, தத்துவம் போன்ற அறிவு மற்றும் கலைத்துறைகளில் இயங்குபவர்களுக்கு இது இயல்பாகவே சாத்தியமாகிறது. இலக்கியத்தில் வாள், சிவப்பு, நீர் போன்ற ஆதிபடிமங்கள் இதற்கு சாட்சி. கீஸ்லாவஸ்கி தனது சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய Three Colors திரைப்படங்களில் இந்த கருத்தை மிக கவித்துவமாக அணுகுகிறார். காலம் பற்றின பிரக்ஞை ஒரு மனிதன் தனது சௌகரியத்துக்காக மட்டுமே உருவாக்கிக் கொண்டது என்கிறார் கீஸ்லாவஸ்கி. சூழ்நிலைகளின் சுழற்சியில் ஒரு இடறல் நிகழ்ந்தால் அல்லது நமது எண்ணற்ற தீர்மானங்களின், செயல்களின் வலைப்பின்னலில் முன்பின் மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் இதைப் படிக்கும் நீங்கள் 3000இலோ கிமு பத்தாம் நூற்றாண்டிலோ இருக்கலாம். (யுவனின் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான கருதுகோள் இது). இதே சரடில் நாம் நீட்சேவின் நிலைப்பாட்டையும் புரிய வேண்டும். கணக்கிட முடியாத கால நீட்சியின் ஒரு சிறுபகுதி மட்டுமே நமது வாழ்நாள் எனும் நாட்காட்டியில் படபடக்கும் எண்கள். மேலும் தொடக்க முடிவற்றது காலம். அதனால் புலப்படாத எதிர்காலம் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அவ்வளவு அருகாமையிலும் தான் உள்ளது. எதிர்கால அதிமனிதனை காலத்தில் கடத்தி விடப் போகும் ஒரு பாலம் மட்டுமே இன்றைய மனிதன் என்கிறார் நீட்சே. இக்கூற்றை நாம் நேர்ப்பொருளில் எடுத்துக் கொள்ளலாகாது.
சென்று சேர்வது தான் தொலைவு. சென்றடைவது தான் என்றுமே சோர்வான ஒன்றாக இருக்கும். வாழ்க்கையில் எதையும் சென்றடைந்தவர்கள் உச்சத்தில் இருந்த படி இதை உணர்கிறார்கள். காலத்தின் பாரத்தை உணராதிருக்க நாம் வாழ்வை கடந்து செல்ல வேண்டும். இதைத் தான் நீட்சே குறிக்கிறார். மேம்பட்ட மனிதனை நாம் சென்றடைவது அல்ல நிகழ்கால மனிதனை கடந்து செல்வது தான் நீட்சேவின் குறிக்கோள்.இதனாலே பாதை எனாமல் பாலம் என்கிறார். கடந்து செல்லும் போது காலத்தை நாம் உணர்வதே இல்லை. இந்த பக்கத்தின் ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் மற்றொரு உருவகமாகி மனதுக்குள் கடந்து செல்லும் போது காலமற்ற ஒரு அனுபவத்தை தான் அடைகிறீர்கள். இந்த பொருளில் நீட்சேவின் superman கூட எதிர்காலத்தில் இல்லை; நாமும் நிகழ்காலத்தில் இல்லை. ஏனெனில் Superman ஒரு உருவகம் தான். வாழ்வின் மேம்பட்ட கணங்களில் ஒன்றை மனம் பறந்தெழுந்து அடைவதை தான் அவர் அப்படி குறிப்புணர்த்த வேண்டும். அகவெழுச்சியின் போது மட்டும் சாத்தியமான இந்த வாழ்நிலையை தக்க வைக்கும் ஒரு உயர்பண்பாட்டைத் தான் நீட்சே லட்சியப் படுத்துகிறார். நீட்சேவின் வாழ்வில் இப்படி மின்னற் பொழுதே தூரம் என்ற படி காலத்தை கடந்து அவர் அதிமனிதனின் பக்கத்தில் தோளில் கையிட்டு நின்ற பல தருணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கீழ்வரும் நிகழ்வு இதனை சுவாரசியமாக விளக்கும்.

நீட்சே கிரேக்க வரலாறு மற்றும் மரபில் பெரும் பாண்டித்தியம் கொண்டவராக இருந்தார். நிகழ்கால வாழ்வின் திராபையான நீட்சியின் இடையே நொடியில் கிரேக்க காலத்துக்கு மீண்டு செல்லும் கற்பனை ஆற்றலும் ஈடுபாடும் அவருக்கு இருந்தது. ஒருமுறை அவரது மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் போது ஒரு வீட்டுப்பயிற்சி அளித்தார். கிரேக்க காவியமான இல்லியடில்" ஏக்கிலஸ் எனும் புகழ்வாய்ந்த வீரனின் கேடயத்தை பற்றி படித்து வர வேண்டும் என்பதே அது. விடுமுறை கழிந்து சந்தித்த போது வழக்கம் போல் மாணவர் யாரும் படித்திருக்க இல்லை. நீட்சே அப்படியான ஒரு மக்கு மாணவனை அழைத்து ஆக்கிலஸின் கேடயத்தை விளக்குமாறு கேட்டார். அம்மாணவன் கை பிசைந்து விழித்தபடி நின்றான். ஆனால் நீட்சே அவனருகே அவனை ஊன்றி கவனித்து கேட்கும் தோரணையில் ஒரு பத்து நிமிடம் நின்றார். பின்னர் சரி என்று தலையாட்டி உட்கார சொல்லி விட்டு போய் விட்டார். மொத்த வகுப்புக்குமே ஆச்சரியம். மாணவன் மௌனித்து நின்ற பட்சத்திலும் நீட்சே தன்பாட்டுக்கு கிரேக்க காவியத்துக்கு சென்று ஆக்கிலஸின் கேடயத்தை தொட்டுணர்ந்து விட்டார். அவருக்கு மாணவன் வாயில் இருந்து அவ்விளக்கத்தை கேட்காத நிலையிலும் கேட்டாற் போல் இருந்தது. ஒவ்வொரு சொல்லும் காலத்தை கடந்து அவர் காதில் விழுந்தபடி இருந்திருக்க வேண்டும். அந்த ஒரு கணத்தில் அம்மாணவன் முன் நின்றது ஒரு அதிமனிதன் தான் - நீட்சே. கிரேக்க புராணப்படி ஆகிலஸ் மனிதனுக்கு அப்பாற்பட்டவன். தெய்வமகன். அதனால் நெப்போலியனை வழிபட்டது போல் நீட்சே அந்த அப்பாற்பட்டதெய்வமகனை கொண்டாடியதில் எந்த வியப்புமில்லை. மாணவனுக்கும் அக்கிலஸுக்கு இடையே இருந்த பாலத்தை கடக்க நீட்சேவுக்கு எத்தனை நொடிகள் ஆனது? அல்லது அதற்கு நொடிகள் தான் தேவைப்பட்டனவா?

இன்றைய மனிதன் எதிர்கால மகத்துவத்துக்காக தியாகம் செய்யும் போது, அதாவது இன்றின் பாலத்தை கடக்கும் போது, அவன் காலப் பிரக்ஞையை இழந்து விடுகிறான். அவனது காலம் ஒரு வானவில்லைப் போல் மறுகோடியைத் தொட்டு விடுகிறது. முக்காலங்களையும் ஒரு கோடு இணைக்கிறது. அவனுக்கு மகத்துவமான எதிர்கால மனிதன் பிறிதொருவன் அல்ல. இருவரும் ஒரே காலத்தில் தான் உலவுகிறார்கள். இழப்பதொ அடைவதோ அல்ல காலம். ஒன்றிலில் இருந்து மேலான மற்றொன்றுக்கு கடந்து செல்வதே அது. இதை உணர்பவன் நீட்சேவை போல் சொற்களற்ற அமைதியிடம் நின்று கருத்தூன்றி கேட்டு தலையசைத்து ஆமோதித்து நகர்ந்து விடுகிறான்.

Share This

2 comments :

  1. குற்றமும் தண்டனையும் நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் தன்னை அதிமனிதன் என்ற எண்ணத்தோடே வட்டிக்கடை அம்மையாரை கொலை செய்கிறான்.இந்த அதிமனிதன் நீட்சேவின்(நீயட்ஷ) அதிமனிதனின் பாதிப்பு இருந்திருக்கமா?

    ReplyDelete
  2. ஆம் சர்வோத்தமன் அப்படி சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். குப்புசாமி என்பவர் நீட்சே பற்றி ஒரு நூல் எழுதி உள்ளார் (தமிழினி). அதில் நேர்மாறாக நீட்சே தஸ்தாவஸ்கியால் தூண்டப்பட்டதாய் சொல்கிறார்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates