Tuesday 25 January 2011

நீரிழிவு - குழந்தைமையை நோக்கி




காமமும் உணவும் அடிப்படையான உடல் இச்சைகள் என்பதால் அவை சார்ந்த நோய்களும், உடல் கோளாறுகளும் மனிதனின் ஒருவகை தண்டனை நிலைகளாக மாற்றப்பட்டவை. இந்த நோய் நிலைகளின் குற்ற தண்டனை வரலாறு கலாச்சாரத்துடன் கலந்தது, மறைமுகமானது. இது ஒருவகை நேர்மறை ஒடுக்குமுறை. உதாரணமாக நீரிழிவு, உடல் பருமன் போன்ற மெடபொலிசம் சம்மந்தப்பட்ட உடல் கோளாறுகள். குறிப்பாக, நீரிழிவை நுட்பமாக நோக்கும் போது அதில் மனிதனின் தண்டனை தரும் ஆசை தீவிரமாக செயல்படுவதை காணலாம். இது என்ன?
சர்க்கரை நோய் ஒரு சூழியல் சேதம் போன்றது. உடலை எண்ணற்ற வலைப்பின்னல்களின் அமைப்பு என்று கொள்வோம். ஏராளமான நடவடிக்கைகள், ஆற்றல் உருமாற்றங்கள், சேமிப்புகள், அழிவு, மீள்-உருவாக்கங்கள் ... உணவு ஆற்றல் உருமாற்றம் தொடர்பான ஒரு கோளாறு தான் நீரிழிவு. சிடுக்கு கோட்பாட்டில் சொல்வது போல நீரிழிவிலும் ஒரு இலை அசைவோ, பட்டாம்பூச்சியின் சின்ன சிறகுகளின் அடிப்போ ஒரு பூகம்பத்தை தொலைவில் ஒரு பகுதியில் விளைவிக்க முடியும். அதாவது கண்டுபிடிக்க முடியாத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒரு மிகச்சின்ன காரணம் ஒருவரின் ரத்த சர்க்கரை அளவை எகிறச் செய்யலாம். அதிகப் படியான உணவோ இனிப்போ ஒரு காரணமே அன்றி ஒரே காரணம் அல்ல. உடலுறவால் மட்டுமே எய்ட்ஸ் தொற்றுகிறது என்பது போன்றதே சர்க்கரை உண்டு நீரிழிவு/உயர் ரத்த சர்க்கரை ஏற்படுகிறது என்பது. எளிமைப்படுத்தல் தான் இக்கோளாறு மற்றும் பிற மெடொபொலிஸ நோய்களின் ஆதார சமூக பிரச்சனை. சமூகம் நீரிழிவு நோயாளியை ஒரு உணவுக் குற்றவாளியாக முத்திரை குத்துகிறது. அவனை ஒரு சாப்பாட்டு பண்டத்தை போல் இனிப்பில் முக்கி எடுக்கிறது. ஒரு கரண்டியால் ஒடுக்குகிறது. பழைய தேவதைக் கதையில் வரும் துடைப்பத்தில் அமர்ந்து பறக்கும் சூனியக்காரி போல் ஒரு தேக்கரண்டி மீது அமர்ந்து அவனை துரத்துகிறது. சமூகம் ஏன் இதை செய்கிறது.?

முதலில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் மருந்தும் உணவுக் கட்டுப்பாடும் ஓரளவு குறிப்பிட்ட பங்கு மட்டுமே ஆற்ற முடியும். கூட்டிக் கழித்துப் பார்க்கையில் அது ஒரு பின்னோக்கிய ஓட்டம். பெட்ரோல் ஒழுகும் ஒரு காரைப் போன்றது நீரிழிவாளனின் உடல். சுருக்கமாய், ஒரு போது நிற்காத கசிவு. நீரிழிவாளனின் கையில் மருத்துவர் ஒரு லட்டு தருகிறார். தன் கையில் அவர் ஒரு பிரம்பை வைத்துள்ளார். லட்டை வாயில் வைத்தால் ஒரு அடி; கீழே போட்டலும் ஒரு அடி. நீரிழிவில் மருத்துவர்-நோயாளி உறவு இப்படித் தான் நடக்கிறது. மருத்துவர் தொடர்ந்து நோயாளியின் உடலைக் கொண்டு ஒரு பகடையாட்டம் ஆடியபடி உள்ளார். பல சமயங்களில் கட்டையின் எந்த பக்கம் விழப் போகிறது என்பது அவருக்கு பெருங்குழப்பமாக உள்ளது. மருத்துவருக்கும் நீரிழிவாளருக்கு நடுவில் உள்ளது ஒரு கதவோ திரையோ அல்ல மூடுபனி. மூடுபனிக்கு பின்னால் மின்னும் முகத்தின் மீது மருத்துவருக்கு சதா அவநம்பிக்கையும் அச்சமும் உள்ளது. இது தொடர்ந்து குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நீளுகிறது. நீரிழிவாளன் ஏராளமான ஹெட்லைட்டுகளின் வெளிச்ச பாய்ச்சல்கள் நடுவே பதுங்கின ஒரு முயல். அவனை என்ன பண்ணுவது என்று அவர்களுக்கோ என்ன நிகழ்கிறது என்று அவனுக்கோ புரிவதில்லை.

இன்று ஏராளமான தகவல்கள் நீரிழிவு பற்றி ஆவணமாக்கப்பட்டுள்ளன; ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் நீரிழிவின் போது உடலில் நிகழும் தொடர் சலனங்களும், அதனாலான விளைவு சங்கிலிகளும் ஒரு பெரும் புதிராகவே உள்ளன. இந்த மர்மம் காரணமாக நீரிழிவாளன் அவநம்பிக்கை கூண்டில் நிற்க வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்படுகிறான்; உளவியல் வதைக்கு உள்ளாகிறான். தன் கையில் உள்ள லட்டுவின் ஒவ்வொரு பூந்திக்கும் அவன் கணக்கு சொல்ல வேண்டும். அவன் கண்ணீர் விடுகிறான்.

நோய்மை எதிர்ப்பின் பெரும்பகுதி பொறுப்பு நீரிழிவாளனுக்கு போய் விடுவதால் அவன் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறான். அவன் பார்ப்பது எல்லாம் தின்பண்டமாகிறது. எதையும் தின்பதும் தின்னாமல் இருப்பதும் அவன் முன் தீராத ஒரு கேள்வியாகிறது. உணவு மெல்ல மெல்ல ஒரு பாவமாகிறது. மர்ம உறுப்பை போல் நாக்கை அவன் பாதுகாக்க பார்க்கிறான். அதை வெறுத்து மோகித்து பின்னர் அதன் வழியாய் நரகம் திறந்து தன்னை விழுங்கிடும் என்று அஞ்சுகிறான். சமூகம் அவனுக்கு ஒரு கச்சிதமான பாதிரியார் அங்கியை அணிவித்து பழக்குகிறது. அவன் எங்கும் குற்றவுணர்வையும், மன்னிப்பு வேண்டுதலையும், மெல்லிய ஏக்கத்தையும் சிலுவையாக ஏந்தி அலைகிறான். நீரிழிவு அவனை பால்யத்தை நோக்கி திருப்புகிறது. அவன் திரும்ப இழக்க முடியாத கன்னித் தன்மையை, கற்பை தந்து பாதுகாக்க சொல்கிறது இனிப்பு. அந்த நீண்ட நெரிசலான அங்காடியில் அவன் பல் மஞ்சளித்த ஒரு சிறுவனாக ஈக்களால் மொய்க்கப்பட்டு இனிப்புகளை பற்றி கனவு கண்டு தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வாழ வேண்டும்; விரல் நுனிகளில் ஒட்டின இனிப்பை நக்குவதே அவன் ஆதார குற்றம். ஏனிப்படி தண்டிக்கப்படுகிறான்.

உணவு பற்றின ஒரு அடிப்படை குற்றவுணர்வின் மீது மனித அடையாளம் கட்டுவிக்கப்பட்டுள்ளது. உணவு ஆற்றல் உருமாற்றத்தின் கோளாறு தான் நீரிழிவு. ஆனால் மிகுதியாய் உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை ஏற்படுவதில்லை. அதன் காரணங்கள் சிக்கலானவை. ரத்த சர்க்கரை அளவு ஒருவருக்கு 120இல் இருந்து நானூறுக்கு உயர்வதன் காரணம் ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்ல. ஆனால் அப்படி சிந்திப்பதே எளிது. ஒரு தேக்கரண்டியால் அவனை துரத்துவதே வசதி. மெத்த படித்த நிபுணர்கள் தொடங்கி பொது மக்கள் வரை நீரிழிவாளனை ஒரு ஸ்பூன் சர்க்கரை கொண்டு துலாத்தட்டில் அளக்கும் ஒழுக்க புத்தி உள்ளது. கடந்த நான்கு வருடங்களில் பல நீரிழிவு மருத்துவர்களை பார்த்திருகிறேன். அவர்கள் அனைவரும் என்னை மிட்டாய் திருடிய சிறுவனாகவே பார்த்துள்ளனர். நான் இனிப்பை திருடித் தின்பதாகவே எப்போதும் அவநம்பிக்கை கொள்கின்றனர். பிடிபட்ட சிறுவனிடம் போலவே மிரட்டலாக பேசுகின்றனர். ஒரு ஆஸ்துமாக்காரருக்கோ முட்டி வலிக்காரருக்கோ இது நடக்காது. பின்னர் சிகிச்சைக்காக நான் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். அங்கு நடந்தது தான் உச்சம்.

அங்கு என் ரத்த சர்க்கரை எகிறி குதித்துக் கொண்டிருந்தது. நான் மருத்துவமனையில் தந்ததை தவிர அதிகமாகவே குறைவாகவோ உண்ணவில்லை. மருத்துவர்கள் மட்டும் என்னை நம்ப தயாராக இல்லை. எந்த ஆதாரமும் இன்றி, நான் கள்ளத்தனமாய் பிஸ்கட்கள் தின்பதாய் சொன்னார்கள். சர்க்கரையோடு பழச்சாறு குடித்ததாய் குற்றம் சாட்டினார்கள். ஒரு எளிய பள்ளி உபாத்தியாயர் போல் நடந்து கொண்டார்கள். என் அக்கா மகன் கூட தங்கி இருந்தான். அவனது பிறந்த நாள் அன்று பெற்றோர் கூட இல்லாததால் என் ஆஸ்பத்திரி அறையில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினான். நான் நாவு நுனியில் கூட அதை சுவைக்கவில்லை. ஆனால் செவிலிகள் நான் கேக் தின்றதாய் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார்கள். இந்த மனவதை போதாதென்று அடுத்த நாள் வந்து என்னை எச்சரித்த மருத்துவர்கள் ரெண்டு நாள் முன்பு திறந்து வைக்கப்பட்ட ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பார்த்து என்னை முறைத்து ஒரு விசாரணை மனநிலைக்கு வந்தார்கள். “நான் தின்னவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டி வந்தது. ஆனால் சந்தேகம் நீங்கவில்லை என்று தெரிந்தது. வாழ்வில் என்றுமே நான் ஒரு உணவுப் பொருளை பார்த்து இவ்வளவு பயந்ததில்லை. அடுத்து அவர்கள் போன பின் நான் பாய்ந்து போய் அந்த பிஸ்கட் பாக்கெட்டை பதுக்கினேன். என் மனைவி வந்தாள். கையில் சிப்ஸ் பாக்கெட். அவளை விரட்டி அதையும் அலமாரிக்குள் வைத்து பூட்டினேன். பிறகு அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது உணவுத் துண்டுகள் கிடக்கின்றனவா என்று தேடினேன். என் எதிரில் அமர்ந்து கொறிக்காதீர்கள். எனக்கு கெட்ட கோபம் வருகிறது!

என்னை திரும்பவும் தொட்டிலில் கிடத்தி தொடையை கிள்ளி விடுகிறார்கள். வீறிட்டலறுகிறேன்
Share This

5 comments :

  1. மருத்துவர்களே இது குறித்த அறிவற்ற மூடர்களாய் இருப்பின் எங்கே போய் முட்டிக் கொள்வது. நீங்கள் நல்ல மருத்துவர் ஒருவரை கண்டு பிடிக்க வேண்டியது அவசியம் என்று படுகிறது. தமிழில் இந்த உடல் குறைபாட்டின் பெயரிலேயே இழிவு என்று வைத்து விட்டதால் இழிவாகவே பார்க்க முயல்கிறார்களோ என்னவோ. :-(

    ReplyDelete
  2. சர்க்கரை நோய் பற்றிய முழுமையான அறிவை 'நோயாளிகளுக்கு' தவறு' குறைபாடு' உள்ளவர்களுக்குக்
    கொடுப்பதில் மருத்துவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது, நல்ல உணவு, உடற்பயிற்சி, மனமகிழ்சி மற்றும் மருந்து இவைகளால் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும் என்பது என் அனுபவ அறிவு!

    ReplyDelete
  3. நுட்பமான வர்ணனை என்று பாராட்ட தோன்றுகிறது.
    ஆனால், கட்டுரையின் பின்னால் உள்ள ஆற்றாமை பாராட்டுதலை விட புரிதலை தேடுகிறது.

    அருண் இரா

    ReplyDelete
  4. நன்றி சத்யராஜ் குமார், கவிதா மற்றும் அருண்

    ReplyDelete
  5. சர்க்கரை நோயின் புதிர்தன்மை என்றுமே விளங்கிக்கொள்ளமுடியாத ஒன்று.என் அனுபத்தில், ஒரு உயிர்வேதியல் படித்திருப்பவருக்கு தெரிந்திருக்கும் அடிப்படை அறிவியல்கூட பெரும்பாலான மருத்துவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. அல்லது மருத்துவர்கள், நம்மிடம் இவைகளைப் பற்றி பேசுவது பயனற்றது என்று நினைத்திருக்கக்கூடும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates