Monday 12 April 2010

அங்காடித்தெரு: அன்றாட நெருக்கடிகளுடனான முதல் காதல்

கூடு இணையதளத்தில் வெளியாகி உள்ள எனது கட்டுரை



தகவல்-சார் படைப்பு என்ற வகைமை நாவல்களிலும் திரைப்படங்களிலும் உண்டு. நாவல்களில் ஆர்தர் ஹெய்லி உடனே நினைவுக்கு வருபவர். பாலிவுட் படங்களில் மதுர் பண்டார்க்கர் தகவல்-சுவாரஸ்ய படங்களுக்கு பேர் போனவர். உதாரணமாக ”சாந்தினி பார்” மதுக்கூட நடனப்பெண்ணின் வாழ்க்கையை சொன்னது. ”பேஜ் 3” மேல்தட்டு மக்களின் உள்ளீடற்ற பாசாங்கு வாழ்க்கை. ”கார்ப்பரேட்” தனியார் நிறுவனங்களின் இரக்கமற்ற அரசியல். ”டிராபிக் சிக்னல்” பிச்சைக்காரர்களின் சில்லரைகள் நாட்டின் அதிகார வர்க்கத்தையே இயக்குவது குறித்தது. ”பேஷன்” மாடல் பெண்களின் நிரந்தரமற்ற பணி நிலை ஏமாற்றங்கள் மற்றும் சறுக்கல்கள். இத்தகைய தகவல்சார் படங்களின் முக்கிய பண்பு தகவல் செறிவே அவற்றின் சுவாரஸ்யமாக இருப்பது. இந்த பாணி படங்களில் இரண்டு வகை. ஒன்று தகவல்களின் வலிமையால் நிற்கும் படம். இது பலவீனமான திரைக்கதை கொண்டிருக்கும். எந்த உள்ளார்ந்த தேடலும் இருக்காது. மதுர் பண்டார்க்கரின் ”டிராபிக் சிக்னல்” தவிர்த்த பிற படங்கள் அத்தனையும் இந்த வகையறா. இயக்குனரின் அவதானிப்புகளும் தரிசனமும் ஒரு தகவல்-சார் படத்தை மேம்பட்ட தளத்துக்கு கொண்டு செல்லலாம். உலகப்படங்களிலும் ஹாலிவுட்டிலும் பல உதாரணங்கள் சொல்லலாம். எனக்கு பிரியமானது Perfume. பாலிவுட்டில் ”டிராபிக் சிக்னல்” மற்றும் Black Friday ஆகியவற்றை சொல்லலாம். நிழலுலக தாதா வகை படங்களை இவற்றுடன் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. என்னதான கள-ஆய்வுகளால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஒரு உணர்வு அல்லது சமூகரீதியான பிரச்சனை அல்லது மோதலை தனது மையமாக கொண்ட படங்கள் இவை. உதாரணமாக ”சத்யா”, ”புதுப்பேட்டை”, ”அஞ்சாதே”. தமிழில் அசலான தகவல்-சார் படத்திற்கான முதல் முயற்சி வசந்தபாலனது: ”அங்காடித் தெரு”. இதை யாரும் கவனிக்காதது, அல்லது பொருட்படுத்த முடியாதபடி படம் உருவானது அதன் தோல்விக்கு முக்கிய காரணம்.



மதுர் பண்டார்க்கர் ஒரு வறிய பின்னணியில் வளர்ந்து வந்தவர். சிறுவயதில் காஸெட்டுகள் விற்று படித்திருக்கிறார். அப்போது அவரது வாடிக்கையாளர்களில் பார் நடனப்பெண்களும் அடக்கம். பண்டுரேக்கரின் பிரபலமான படம் ”சாந்தினி பார்” அவர்களின் வாழ்க்கையை ஈடுபாட்டுடன் பேச முடிந்ததற்கு இந்த சிறுவயது அனுபவம் காரணமாக இருக்கலாம். அதைப் போன்றே அவர் போக்குவரத்து சிக்னலில் நின்று பபுள் கம் விற்றிருக்கிறார். அந்த வாழ்வின் படிநிலை மற்றும் பொருளாதார சிடுக்குகளை மேலும் ஆய்வு செய்து ”டிராபிக் சிகனல்” படமாக உருவாக்கி சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை 2007-இல் வென்றார். இதன் பொருள் சிறைச்சாலை பற்றி படம் எடுக்க சிறைக்கு போக வேண்டும் என்பதல்ல. பட கள-ஆய்வுக்கான பொருள் நமக்குள் ஒரு பொறியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அக\புற அனுபவ ரீதியான ஈடுபாடு ஆய்வுப்பொருளோடு வேண்டும். வசந்தபாலனுக்கு ரங்கநாதன் தெருவுடன் இந்த உறைதல் இல்லை என்பது படத்தில் வெளிப்படையாகிறது. படத்தில் கிராமிய வாழ்க்கை கொண்டுள்ள இயல்போட்டம் சென்னைக் காட்சிகளில் இல்லை. இந்த சின்ன தடுமாற்றத்தில் இருந்து தான் படத்தின் ஆகப்பெரும் குழப்பமும் இலக்கின்மையும் விளைகின்றன.



தமிழில் பரிட்சார்த்த முயற்சிகள் செய்து தோற்றவர்களை எண்ணி அங்கலாய்க்கிறோம். ஊனமுற்றவர் செய்த ஊதுபத்தி கணக்காக ”அங்காடித் தெரு” இணையத்தில் பரிந்துரைக்கப்படுவது இந்த நோக்கில் தான். ஆனால் தமிழ் பார்வையாளனுக்கு நல்ல ”முயற்சிகள்” குறித்தெல்லாம் கவலை இல்லை. பரீட்சார்த்த படம் ஓடாதபோது தமிழ்ப்பார்வையாளனை சாடுவதும் நியாயமாக இல்லை. எதார்த்த படங்களில் இருந்து தர்க்கமற்ற வணிகப்படங்கள் வரை அங்கீகரிக்க தயாராக உள்ள அவனது முதல் எதிர்பார்ப்பு தெளிவான, எளிதான கதை கூறல் தான். ”அங்காடித் தெரு” படம் எதைக் குறித்தது? இதுதான் தமிழ்ப்பார்வையாளனின் முதல் கேள்வி. படத்தின் ஆரம்பத்தில் காதலர்கள் மழையில் குதித்து ஆடுகிறார்கள். இது காதல் படமா? இல்லை. பிறகு காதலர்கள் மீது லாரி ஏறி அவர்களின் சிதைந்த உடல்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. காதல் இழப்பை பேசப் போகிறதா? இல்லை. பிறகு கிராமத்துக் காட்சிகள். கதாநாயகன் ஜோதிலிங்கம் கிரிக்கெட் ஆடுவது, அவனது நண்பன் மாரிமுத்துவின் கோணங்கித்தனங்கள், அவன் முதல் மதிப்பெண் பெறுவது, அப்பா விபத்தில் இறப்பது. கிராமத்து பசுமையை, மாமன் மகள்களை, குடும்ப வறுமையை பேசப் போகிறதா? இல்லை இல்லை என்று இப்படியே நீங்கள் மறுத்து அரை மணி போன பிறகு நிஜமான அங்காடித் தெருவை, அதன் குரூர எதார்த்தங்களை, பொருளாதார மற்றும் இருப்புசார் நெருக்கடிகளை பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். பிறகு இருபது நிமிடங்களில் ஒரு எளிய காதல் கதையாக ”அங்காடித்தெரு” கிளை பரப்பி வளர்கிறது. இடையிடையே நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெருக் காட்சிகள், பிச்சைக்காரர், அனாதைக் குழந்தைகள் மற்றும் அன்னை தெரெசாவின் நிழற்படங்களுடன் ஆவணப்பட பாணியில் காண்பிக்கப்படுகின்றன. நடுநடுவே நரம்பு பழுத்து சாகும் பிச்சைக்காரன், பிளாட்பார்மில் வியாபாரம் செய்யும் குருட்டுத் தாத்தா, குள்ளன், அவன் மனைவியான விபச்சாரி என்று ஒரு ஏழாம் உலகம் வேறு ஒரு பக்கமாய் இயங்குகிறது. படத்தின் பிற்பகுதி தான் பார்வையாளனுக்கு பரிச்சயமுள்ள பிராந்தியம். நாயகன் வில்லனை எதிர்த்து எப்படி நாயகியை மணக்கிறான் என்பதை பேசும் இப்பகுதியில் படத்தில் முதல் முறை வேகம் கூடுகிறது. இதைவிட குழப்பங்கள் குறைவான ”ஹேராமும்”, ”கற்றது தமிழுமே” தோல்வி அடைந்த போது ”அங்காடித் தெரு” பெறப் போகும் வரவேற்பு கேள்விக்குரியதே. படம் வெளியான முதல் வாரத்தில் நான் சென்றிருந்த போது அரங்கு முக்கால்வாசி காலியாகவே இருந்தது.
இப்படத்தின் மேலும் சில குறைகள் அபத்தமான பின்னணி இசையும், மிகையான காட்சிப்படுத்தலும். விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி பிரகாஷுக்கு படத்தை குறித்த எந்தவித புரிதலோ ஈடுபாடோ உருவாக்க முடியாதது பாதி இயக்குனரின் தவறும் தான். காட்சிப்படுத்தலின் மிகைக்கு ஆரம்ப பகுதியில் நாயகனின் அப்பா இறந்ததும் வானில் கலைந்து சிதறும் பறவைகள் உதாரணம். தொலைதூர காட்சியாக அப்படியே விட்டிருந்தால் அது நாயகனின் அப்போதைய மனநிலைக்கு அருமையான ஒரு உருவகமாக இருந்திருக்கும். இயக்குனர் மேலும் பல நொடிகள் அக்காட்சியிலேயே தங்கி பறவைகளை நூறாக, ஆயிரமாக பெருக்கி ஹிட்ச்காக்கின் Birds போல திகில் காட்சியாக்கி விடுகிறார்..
ஒரு தகவல்சார் படமாக அங்காடித் தெரு மிக பலவீனமானது. ரங்கநாதன் தெரு மற்றும் அங்குள்ள பிரம்மாண்ட ஜவுளிக்கடைகள் குறித்த நுணுக்கமான விபரங்கள் படத்தில் குறைவே. தரப்படும் தகவல்கள் ஏற்கனவே தெரிந்தவை அல்லது மிகைப்படுத்தப்பட்டவை. உதாரணத்திற்கு படத்தில் மோசமான உணவு, உறைவிடம், கெடுபிடி விதிமுறைகள், மேலாளர்கள் தரும் உளவியல் மற்றும் பாலியல் நெருக்கடிகள் ஆகியன படித்த இளைஞர்களே பி.பி.ஓக்களில் அன்றாடம் சந்திப்பவை தானே. ஐந்து நிமிடம் தாமதித்து ஸ்வைப் செய்வதற்கு ஜோதி லிங்கம் மற்றும் மாரிமுத்துவின் சம்பளத்தில் இருந்து ஐந்து ரூபாய் குறைக்கப்படுவதாக ஒரு காட்சியில் வருகிறது. பி.பி.ஓக்களில் அரை நாள் சம்பளமே பிடித்து விடுவார்களே? சென்னையில் ஆறாயிரம் சம்பளத்திற்கு தினமும் பதினாறு மணி நேரம் முதுகொடிய வேலை பார்க்கும் சோடாபுட்டி முதுகலை பட்டதாரிகளை நேரடியாக பார்த்திருக்கிறேன். செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஊழியர்களுக்கு கால் வலி என்றால் நான் பார்த்த எத்தனையோ பி.பி.ஓ பணியாளர்களுக்கு டிஸ்க் புரோலாப்ஸ் எனப்படும் நிரந்தர முதுகு வலி சர்வசாதாரணமாக ஏற்படுகிறது. அடுத்து சென்னையே ரங்கநாதன் தெரு தான் என்பது போல் குறுக்கி காட்டப்படுகிறது மிகையானது. அங்கு வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருப்புக்காக அடி வாங்க, கற்பை இழக்க, சூப்பர்வைசரின் காலில் விழுந்து கெஞ்ச தயாராக இருக்கிறார்கள். வேலையை இழப்பவர்கள் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம். வேலையில் இருந்து முரண்பட்டு விலகுபவர்களுக்கு அனுபவ சான்றிதழ் தராமல் பிற அங்காடித் தெரு கடைகாரர்களுக்கு அவர்களை சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்துவார்களாம் முதலாளிகள். இது ஒரு அரை உண்மை மட்டுமே. குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக உள்ளவர்களுக்கு எப்போதும் திறந்தே கிடக்கிறது நகரம். இப்படி எளிய பிரச்சனைகளை பூதாரகரப்படுத்தி நம்மை வியப்படைய வைக்கும் வசந்தபாலனின் முயற்சி பொய்த்தே போகிறது. அங்காடித்தெருவை குறித்து அறிய விரும்பி வரும் கூர்மையான பார்வையாளர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கும்.

இதுவரை நாம் பார்த்தது எளிய குறைகளின் தொகுப்பு மட்டுமே. இவற்றையும் மீறி நாம் பார்த்து விவாதிக்கும் படியான ஒரு அசலான தேடல் இப்படத்தில் வெளிப்படுகிறது. தமிழில் மன-உடல் கிளர்ச்சி, சிக்கல்கள், கலாச்சார, வர்க்க முரண்கள் என பல்வேறு தளங்களில் வைத்து காதல் படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. ஒவ்வொரு விதமான படமும் காதலை அதன் நடைமுறை நெருக்கடிகளில் இருந்து விலக்கி ஒரு குறிப்பிட்ட மனரீதியான சாத்தியத்துக்குள் சுருக்கி விடுகிறது. இந்த ஒற்றைபட்டையான போக்கில் இருந்து வசந்தபாலன் காட்டும் காதல் மாறுபடுகிறது. அவரது காதலர்கள் கற்பனாவாதிகள் அல்ல. அதற்கான அவகாசம் அவர்களுக்கு இல்லை. சதா சாப்பாடில் இருந்து தங்குமிடம் குறித்து வரை கவலைப்பட்டபடி இருக்கிறார்கள். காதலிப்பதா வேண்டாமா, காதலை ஏன் பிறர் எதிர்க்கிறார்கள், ஏன் காதலிக்க வேண்டும் போன்ற கேள்விகளே தமிழ் சினிமாவின் இதுவரையிலான காதலர்கள் கேட்டு வந்துள்ளவை. “விண்ணைத் தாண்டிய வருவாயா” படத்தில் இந்த காலகட்டத்தில் வெளிவந்துள்ளது பொருத்தமான ஒரு நிகழ்வு.



ஒப்பிட்டு பாருங்கள். அந்த படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் துணை, இணை துக்கடா பாத்திரங்கள் வரை திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி: ”உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்க ஏன் ஜெஸ்ஸியை காதலிக்கிறாய்\காதலித்தேன்?”. அங்காடித்தெரு ஜோதிலிங்கத்துக்கு ஒரே கேள்வி மட்டுமே: கனியை எப்போது காதலிப்பது என்பது தான் அது. நடைமுறை பிரச்சனைகள் காதலுக்கான வெளியை அவனுக்கு தொடர்ந்து மறுக்கின்றன. நகைமுரணாக, அவன் கனியிடம் கோபித்து பிரிவதும், பின்னர் அவளை மணப்பதாக தீர்மானிப்பதும் ஒரே காரணத்துக்காகவே: அன்றாட வாழ்வின் நெருக்கடிகளை தவிர்க்க மற்றும் சமாளிக்க. சமகால மெட்ரோபொலிடன் காதல்களை பொருளாதாரம் தான் தீர்மானிக்கிறது. பலர் காதலை தவிர்ப்பதற்கும், அல்லது காதலித்து மணம் புரிவதற்கும் தினசரி நெருக்கடிகளே ஆதாரமாக உள்ளன. ஒரு உதாரணம் சொல்கிறேன். என் நண்பன் ஒருவன் யாருக்கும் சொல்லாமல் திடுதிப்பென்று மணம் புரிந்து விட்டான். அதற்கு அவன் சொன்ன காரணம் இது. அவனது காதலியை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். அவளை பெண்கள் விடுதியில் தங்க வைத்தான். அங்கு தொடர்ந்து இருக்க முடியாதபடி பண பற்றாக்குறை மற்றும் உளவியல் வதை. அப்பெண்ணின் அம்மா வேறு நண்பனை அழைத்து “என் பெண்ணை நீ கடத்தி வைத்திருப்பதாய் புகார் கொடுக்க போகிறேன்” என்று மிரட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரின் காதலில் மிக அவஸ்தையான கட்டம் இது. அவளுக்கு ஒரு வசதியான தங்குமிடம் ஏற்படுத்தி தருவது அவனுக்கு அவசியமாக இருந்தது. தாலி கட்டாமல் இருவரும் சேர்ந்து வாழ வாடகை வீடு தரமாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்வதை ஆர்வமின்றி தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனே முடிவு செய்து மணமுடித்தார்கள். கௌதம் மேனனின் படங்களில் நாம் காணும் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மட்டுமே மணமுடிக்கிற காதலர்கள் அரிதான பாக்கியவான்கள்; காதலின் தோல்வியும் வெற்றியும் உண்மையில் காதலுக்குள் இல்லை. இதை தமிழில் சொன்ன முதல் இயக்குனர் என்ற வகையில் வசந்தபாலனை எத்தனை பாராட்டினாலும் தகும்.
Share This

5 comments :

  1. அங்காடி தெரு பற்றிய மிக நேர்மையான விமர்சனம் அபிலாஷ்!

    நீங்கள் கூறும் பல விஷயங்கள் நிதர்சனமானவை. வெறுமனே அதிர்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள காட்சிகள் நம்மை படத்துடன் ஒன்றிவிட முடியாதபடிக்கு செய்துவிடுகிறது.

    ஆனால் மதுர் பண்டார்கரின் படங்கள் குறித்த உங்கள் பார்வையுடன் முரண்படுகிறேன். சிறுவயதில் பார்த்த பார் பெண்களை உணர்வுபூர்வமாக சித்திரித்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அது போலத்தானே கார்ப்பரேட்டும் பேஜ் 3 யும் ஃபாஷனும். கொஞ்சம் வயதான பின் வரும் மெச்சூரிட்டியான பார்வையில் விளைந்ததே ஏனைய படங்கள்.

    மதுர்பண்டார்கர் படங்களைப் போல் தமிழில் ஏதேனும் படம் வருமா என்ற ஏக்கத்துடனே காத்திருக்கிறேன். அதன் அருகில் நின்றது கற்றது தமிழ். ஆனால் நம் இயக்குநர்கள் என்றைக்கு இந்தப் பாழாய்ப்போன காதலை எல்லாப் படங்களிலும் சொல்ல மறக்கிறார்களோ அன்றைக்குத்தான் வித்தியாசமான படங்கள் வரும் என்பது என் அனுமானம் (நல்ல காதல் படங்கள் உட்பட).

    அங்காடி தெரு பற்றிய பார்வை , விசேஷம்.

    ReplyDelete
  2. Original thoughts and clear-headed analysis. Keep it up!

    ReplyDelete
  3. அன்பின் அபிலாஷ்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். தமிழில் படம் எடுப்பதற்காக எத்தனை compromise செய்ய வேண்டும் என்பது மிக மிக வேதனையான நிகழ்வு.


    Middle Cinema வகையாகத்தான் இதை கருத வேண்டியிருக்கிறது.

    நல்ல முயற்ச்சியை சில குறைகளை மற்ந்து பாராட்ட போகிறோமா அல்லது சுறா சிங்ககளுக்காக விசிலடித்து காத்திருக்க போகிறோமா என்பதே என் ஆதங்கம்.

    அருமையான பகிர்விற்கு நன்றி..

    வாழ்த்துகள் வசந்த பாலன்.

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். உங்கள் எழுதும் மிக அழகாக உள்ளது

    ReplyDelete
  5. //காதலின் தோல்வியும் வெற்றியும் உண்மையில் காதலுக்குள் இல்லை//

    மிக ஆழமான வார்த்தைகள். இன்று காதலும் ரங்கநாதன் தெரு போலதான் தெருவுக்குள் நுழைவது நம் விருப்பம் என்றாலும் பிறகு யார் யாரோ நம்மை நகர்த்திச்சென்று ஏதோ ஒரு இடத்தில் விட்டு செல்கிறார்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates