Thursday 1 April 2010

பிராந்தியவாதமும் ஐ.பி.எல்லின் கலப்புமணமும்



ஏப்ரல் 2010 உயிர்மையில் வெளியாகி உள்ள கட்டுரை

வினோத பார்வையாளர்கள்
முதல் ஐ.பி.எல் ஆரம்பிக்கும் முன் அதன் செய்தியை சொல்லும் விதம் அறிமுகமான விளம்பரங்கள் ரசிகர்களின் பிராந்திய அடிப்படையிலான போட்டி மனப்பான்மையை முன்வைப்பதாக இருந்தன. ஐ.பி.எல் தன் வளர்ச்சிப்படிகளை கடந்த பின் அத்தகைய விளம்பரப் போக்கு கைவிடப் பட்டது. ஐ.பி.எல் அனைத்து தள மக்களுக்குமான ஒரு கேளிக்கையாக அறைகூவப்படுகிறது. ஐ.பி.எல் மூன்றாவதன் சென்னை×டெக்கான் ஆட்டம் சென்னையின் நடந்தது. இப்போட்டியில் சென்னை ஆரம்பம் முதலே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருந்தது. பொதுவாக தாயக அணியின் ஆட்டம் தோல்வியை நோக்கி செல்லும் போது உள்ளூர் விசிறிகள் மிக அமைதியாக அதிருப்தி காட்டுவார்கள். ஆனால் இந்த ஐ.பி.எல் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முடிந்தவரை கொண்டாடி விடும் மனநிலையில் தான் இருந்தனர். தொடர்ச்சியான சலசலப்பும் தாவலும் கைதட்டலும் சொந்த ஊர் அணியின் நிச்சய தோல்வி தெரிந்து விட்ட பின்னரான ஜீவனில்லா ஓவர்களிலும் தொடர்ந்தது. இவர்கள் சற்று வினோதமான பார்வையாளர்கள்.


இந்தியா ஆடுவதற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை ஐ.பி.எல் விசிறிகள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். சர்வதேச ஆட்ட பார்வையாளர்களுக்கும் ஐ.பி.எல் விசிறிகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ‘இந்திய’ ரசிகர்கள் சர்வதேச தோல்வியை தமது வீழ்ச்சியாக நினைக்கும் படி ஒன்றிப்போகும் மேலோட்ட தேசியவாத உணர்வு கொண்டவர்கள். கணிசமாக ஆண்கள். தேசிய அணிக்கு உணர்ச்சிகரமான ஆதரவை ஆண்டாண்டு காலமாய் வெளிப்படுத்தி வந்துள்ள விசுவாசிகள். ஐ.பி.எல் இந்த விசுவாசத்தை சிதைக்கிறது. ஒட்டுமொத்தமான ஒரு இந்தியத் தன்மை ஐ.பி.எல் பாணி கிரிக்கெட்டில் உண்டு என்றாலும் இரு காரணங்களால் அது எவ்விதமான உள்ளூர் விசுவாசத்தையும் இல்லாமலாக்குகிறது.



ஐ.பி.எல்லும் இன்றைய தலைமுறையின் மிதவை மனநிலையும்ஐ.பி.எல்லில் நாம் காணும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்றைய கேளிக்கை கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் மேற்தட்டவர். மாநில அடையாளத்தை பொருட்படுத்தாத மாநகர நுனி ஆங்கில மாநகரவாசிகள். சமகால வாழ்வின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் அவசரத்தில் அவர்களுக்கு இத்தகைய தொடர்ச்சியாக ஆடப்பட்டு நிகழ்காலத்தின் வேகத்துக்கு உடன்பட்டு உடனடியாக மறந்து விடக்கூடிய வகைமையிலான T20 தோதானதாக உள்ளது. சமகால கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பெரும்பாலான உறவுகளின் சாரம் அன்பு அல்ல, அனுகூலமான தொடர்பு வலை மட்டுமே. அது போலவே ஐ.பி.எல் கிரிக்கெட்டின் அடிப்படை கிரிக்கெட் அல்ல, கேளிக்கை - ஆதரிக்கும் அணியின் அடையாளத்தில் இருந்து அதன் வெற்றி தோல்விகள் வரை மறந்து விட ஊக்குவிக்கும் மூட்டமான கேளிக்கை.

மேலோட்ட அடையாளங்கள், அனுகூலங்கள்
அடுத்து ஐ.பி.எல் போன்ற தொடர்களில் மாநில பெயர்களிலான அணிகள் ஆடினாலும் அந்த பிராந்திய கிரிக்கெட்டின் ஆளுமையை அவை கொண்டிருப்பதில்லை. எட்டு ஐ.பி.எல் அணிகளுக்கும் வெற்றியை அமைப்பவர்கள் உள்ளூர் வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. சர்வதேசர்கள் வெற்றிப் போக்கில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள்; திசைகாட்டிகள். பல்லக்கை தூக்கிச் செல்லும் கால்கள் உள்ளூர் வீரர்களின் உடையவை. பல்வேறு பிரதேசங்களின் சிறந்த உள்ளூர் ஆட்டக்காரர்களை தன் அணியில் ஒன்று திரட்டி உள்ள அணிகள் இதுவரை நன்றாக ஆடியுள்ளன. ஏனெனில் தம் சொந்த பிராந்திய அணியில் இடம் பெற்று சோபித்துள்ள ஆட்டக்காரர்கள் ஓஜ்ஹா மற்றும் பாண்டே போன்று மிகச்சிலரே. இந்த கலப்பு அடையாளம் ஐ.பி.எல்லுக்கு எதிர்பாராமையையும் அதிரடித் தன்மையையும் வழங்கி உள்ளது. உதாரணமாக இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த மாநில அணி மும்பை. அதிக முறை ரஞ்சி தொடர் கோப்பையை கைப்பற்றி உள்ளது மும்பைதான். ஐ.பி.எல்லில் மும்பை அணி வெளிநாட்டவரின் இறக்குமதி இன்றி அப்படியே மும்பை இந்தியர்களாக ஆடியிருந்தாலும் சிறப்பாக போராடியிருக்கும். ஒருவேளை கணிசமான வெற்றிகளையும் பெற்றிருக்கும். ஆனால் முதல் இரு ஐ.பி.எல்களில் அகார்க்கர், பவார், ஜாபர், ரோஹித், சஹீர் உள்ளிட்ட வீரர்கள் வேறுபல அணிகளுக்காக ஆடினர். மூன்றாவது ஐ.பி.எல்லில் மும்பை அணி தனது பிராந்திய சாராம்சத்தை முழுக்க இழந்து பிற மாநில அணி வீரர்களை பிரதானப்படுத்தி நிற்கிறது. சுவாரஸ்யமாக இப்படி தன் பிராந்திய அடையாளத்தை துறந்துள்ளது அவ்வணியை வலுப்படுத்தி உள்ளது. தற்போது ரெஹானே, நாயர் மற்றும் குல்கர்னியை தவிர மும்பை அணியின் அசலான வீரர்கள் வெவ்வேறு ஐ.பி.எல் அணிகளில் ஆடி வருகின்றனர். ஐ.பி.எல் 2010-இன் முதல் ஆட்டத்தில் இம்மூவரும் பங்கேற்கவில்லை. சர்வதேசர்களோ உள்ளூர்க்காரர்களோ அல்ல, ஹைதராபாதின் ராயுடு, ஜார்கண்டின் சவுரப் திவாரி மற்றும் தமிழகத்தின் சதீஷ் ஆகியோர் தாம் மும்பையின் முதல் ஆட்டத்தை தன்னம்பிக்கை மற்றும் துடிப்புடன் ஆடி வென்று அளித்தவர்கள். முதல் இரண்டு ஐ.பி.எல்களில் மும்பைக்கர்களிடம் இந்த குணாதசியங்கள் வெளிப்பட இல்லை. ஏனெனில் மும்பை அணியின் பாரம்பரிய ஆட்டமுறை நிதானம், பொறுமை மற்றும் ஒழுங்கை அடிப்படையாக கொண்டது. வெளிமாநிலத்தவர் வந்த உடன் மும்பையின் மட்டையாட்டம் மேலும் அதிரடியாக பயமற்றதாக மாறி விட்டது. மும்பையை ஒரு அசலான T20 அணியாக்கி உள்ளது ஹைதராபாதியும், ஜார்கண்ட் இளைஞனும் கூட ஒரு தமிழனும் என்பது சுவாரஸ்யமான சேதி. 2010 மும்பை இந்தியர்கள் பெயர் அளவில் மட்டுமே இந்தியர்கள்.
முரணாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணியில் ரெய்னா மற்றும் பார்த்திவை தவிர வேறு சிறப்பான வெளிமாநில ஆட்டக்காரர்களை வாங்கவில்லை. ஐ.பி.எல் அணிகளிலேயே சொந்த மாநில வீரர்களை அதிகம் சார்ந்துள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்: 11 தமிழர்கள். இந்த எதிர்-ஐ.பி.எல் பிராந்திய-சார்பு குணாம்சம் தான் இவ்வணியின் பெரும் பலவீனம். தமிழக வீரர்கள் இயல்பில் சம்பிரதாய ஆட்டக்காரர்கள். மட்டையாட்டத்தில் அனிருத்தா மட்டுமே விதிவிலக்கு. கார்த்திக் மற்றும் அபினவ் ஆகியோர் ஒப்பீட்டளவில் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் T20 தேவைக்கு தங்களை தகவமைக்க முடியுமா என்று தெரியவில்லை. முரளி விஜய் மற்றும் பத்ரிநாதின் இயல்புக்கு முற்றிலும் மாறுபட்டது T20 கோரும் வேகமும், விதிகளை பறக்க விடும் கற்பனையும். தமிழக அணி உள்ளூர் T20 தொடரை வென்றுள்ளது என்றாலும் ஐ.பி.எல்லின் தரம் முழுக்க வேறானது. இப்படியான பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி அணியில் ஆடக்கூடிய 7 உள்ளூர்க்காரர்களில் ஐந்து பேர் பெரும்பாலும் T20 திறன்கள் பெறாத தமிழக வீரர்களாகவே இருப்பர். மும்பையை போல சென்னை அணியும் வரும் ஐ.பி.எல்களில் தனது பிராந்திய கற்பை இழக்க வேண்டும். அது வலிமையாக திரும்ப அதுவே வழி.

முதல் ஐ.பி.எல் முடியும் தறுவாயில் மாநில அடையாளத்தை கராறாக கடைபிடிக்கும் வகையில் அணிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்படியான போக்கு ஐ.பி.எல்லின் குணாம்சத்துக்கு மாறுபட்டதாகவே அமையும். இந்த வேரற்ற தன்மை ஐ.பி.எல்லுக்குள் இயங்கும் ஒரு உலகமயமாக்கல் இழுப்பு விசையாகவும் இருக்கலாம்.



வளர்ந்து வரும் இந்தியாவில் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக, பொருளாதார தளங்களில் அன்னிய மாநிலத்தவரின், மொழியினரின், இனத்தவரின் மேலாதிக்கம் ஒரு புகைச்சலை, நிராசையை, வெறுப்பை உள்ளூர்க்காரர்களிடம் ஏற்படுத்தி உள்ளது; இது சிலசமயம் வன்முறையாக, அரசியல் இயக்கங்கள் மற்றும் எழுச்சிகளாக வெளிப்படுவதை பார்த்து வருகிறோம். ஐ.பி.எல் எனும் வணிக கலாச்சாரம் இந்த மாநில நிறபேதங்களை, அடையாள முரண்பாடுகளை ஒரு நெருடலற்ற கேளிக்கை ஆக்கி விட்டது.



ஒரு பால் தாக்ரேவொ ராஜ் தாக்ரேவோ வெளியேற்ற கோஷங்கள் இடக்கூட வாய்ப்பு தராதபடி ஒரு கெலிடோஸ்கோப் தோற்றத்தை தருகின்றன இந்த கலப்பு அணிகளும், அவற்றை தாங்கும் கார்ப்பரேட் வெளியும்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates