Wednesday 14 April 2010

உடற்பயிற்சி மித்துகள், கலாச்சாரம் மற்றும் தீட்டு



உயிரோசை இதழில் வெளியான கட்டுரை

உடற்பயிற்சி இன்று மருந்து உட்கொள்ளுவது போல் அத்தியாவசியமான செயலாக பரிந்துரைக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்பவர்களை சராசரியாக மூன்று பிரிவுகளில் அடக்கலாம். உடல் தசைகளை பெருக்கவும், மெலிதாக்கவும் விழையும் பதின்பருவ இளைஞ, இளைஞிகள். தொப்பையை குறைக்க டிரட் மில் ஓடும் மத்திய வயதினர். இவர்களில் பெண்கள் அதிகம். முப்பதில் திருமணம் செய்ய முனையும் சமகால தலைமுறையின் வேலைக்கு செல்லும் பெண்கள். இவர்கள் உடல் பருமனை குறைக்க அதிநவீன உடற்பயிற்சி நிறுவனங்களை பரவலாக நாடுகின்றனர். மூன்றாவதாக, நாற்பது வயதுக்கு மேல் ரத்தகொழுப்பு, சர்க்கரை, மாரடைப்பு போன்ற உபாதைகளை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் இருந்து மிரட்சி கலையாமல் நேரடியாக உடற்பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுபவர்கள். இவர்களுக்காக பெரும்பாலான மேல்தட்டு உடற்பயிற்சி நிறுவனங்களில் பொது நலம், எடை குறைப்பு மற்றும் உடல் கோளாறு கட்டுப்படுத்தல் என்று பயிற்சி திட்ட வகைமைகள் வைத்திருக்கிறார்கள். இம்மூன்றுக்கும் அதனதன் வரிசைப்படி கட்டணம் அதிகம். சராசரியாக இந்த அதிநவீன குளிரூட்டப்பட்ட ஜிம்கள் ஐயாயிரத்தில் இருந்து பத்தாயிரம் வரை மாதம் வசூலிக்கின்றன. இன்று பருமனான 12 வயது குழந்தைகளும் உடற்பயிற்சி நிறுவனங்களில் வெயிட் அடிக்கும் காட்சிகள் உடலுழைப்பே அறியாது 80 வயது தாண்டி வாழ்ந்த நமது தாத்தா-பாட்டிகளை பற்றி சற்று துணுக்குற வைக்கிறது.

50-இல் இருந்து ஐநூறு வரை கட்டணம் வசூலிக்கும் கீழ்\கீழ்மத்திய\மத்திய வர்க்க உடற்பயிற்சி நிறுவனங்கள் உண்டு. இந்த வகை ஜிம்களில் மாதிரி உடலமைப்பு கொண்ட உடலழகர்கள் வினோதமான பின்னணி கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட தக்கலையில் மணற்பரப்பு மேல் ஓலை வேய்ந்த உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று இருந்தது. அங்கு பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரே சட்டையயை தான் அணிவர். அது வியர்வையில் தொப்பலாகின பின் அங்காங்கு சொருகி வைத்து அடுத்த நாள் உலர்ந்து வீச்சமடிக்க மீண்டும் பயன்படுவர்.இப்படியே ஒரு வருடம் வரை துவைக்காமல் இந்த ஆடைகள் விடாப்பிடியாய் பயன்படுத்தப்படும். அது ஒரு திறந்த பயிற்சி நிலையம். ஜிம் உரிமையாளரும் பயிற்சியாளரும் வருடத்தில் சில முறை வருகையளிப்பது இரவில் ஒரு சடங்கு நடத்தவே. இச்சடங்கில் இத்தகைய துணிகளை தேடி குவித்து கட்டாயமாக எரித்து விடுவார்கள். அடுத்த வருடத்திற்கான அழுக்கு உடைகள் பிறகு மெல்ல மெல்ல சேகரமாக ஆரம்பிக்கும் அந்த ஜிம்மின் ஆணழகர் ஒரு கல்லுடைப்பவர். நாற்பது வயதிருக்கும். ஆப்பரிக்க எருமையை நினைவுபடுத்தும் தோற்றம். ஒரு நாள் விலைமகளிடம் சென்றது பற்றி, சிவப்பான அவளிடம் அதிகம் பேர் சென்றதால் அவள் புழை அகலமாக இருந்தது பற்றி பேசி பேசி விசனிப்பார். அடுத்த நாளே தன் குழந்தை கருவிலே இறந்து விட்டதை மென்மையாக குறிப்பிட்டு சோகவடிவாய் தெரிவார். இரண்டிலும் சகஜம் இருக்கும். அவர் பேச்சை கேட்க இளைஞர்கள் சதா குழுமி இருப்பார்கள். அவருடன் பயில பலரும் விரும்பினர். மேற்கில் காபி பார்களும், மதுக்கடைகளும் இலக்கியம் உள்ளிட்ட கலைவடிவங்களுடன் கலாச்சார தொடர்பு கொண்டிருந்தது. அது போல் ஜிம்கள் வயதுக்கு வராதவர்களுக்கான வாழ்வியல் பட்டறையாகவும் திகழ்ந்து வந்தன. நகரத்து மேல்தட்டு/மேல்-மத்திய தட்டு ஜிம்களில் பயில்பவர்களிடம் அந்த வர்க்கத்தின் வழமையான இறுக்கம் காணப்படுகிறது. துள்ளல் இசையுடன் கற்பனையான ஒத்திசைவுடன் பயிற்சி செய்து, ஓய்வு நிமிடங்களில் மூச்சிரைத்தபடி டீ.வியில் ஐ.பி.எல் பார்த்து, தன்னை ரகசியமாய் கவனிக்கிறவர்களை நோக்கி முறைத்து அல்லது சங்கடமாய் புன்னகைத்து ... இப்படி எந்த சமூக ஒருங்கிணைவும் இன்றி கழிகின்றன ஹைடெக் உடற்பயிற்சி பொழுதுகள். தமது பயிற்சி எந்திரத்தின் தலைமாட்டில் முன்பு இயங்கினவரின் வேர்வை இருந்தால் மட்டும் பெரும் தீட்டாகி விடுகிறது இவர்களுக்கு. எந்த விதத்திலும் அன்னிய மனிதத் தடங்களை இவர்கள் விரும்புவதில்லை.
ராயப்பேட்டை ரத்னா கபே அருகில் உள்ள விமல் ஜிம்மில் குள்ளமாக ஆனால் வலுவான தசைகள் கொண்ட ஒரு இளைஞர் இருந்தார். நாற்பது கிலோ எடையெல்லாம் தோளில் சுமந்து ஸ்பிரிங் போல் துள்ளி எழுவார். அவர் ரத்னா கபேவில் பாத்திரம் அலம்பும் பணி செய்தார். ரெண்டு ஆள் நெஞ்சகலமும் தும்பிக்கை கரங்களும் கொண்ட ஆணழகர் மற்றொருவர். பர்மா பஜாரில் பிளாட்பார்ம் கடை போட்டிருந்தார் ரொம்ப தயங்கிய பின்னரே தன் பணி விபரத்தை பிறரிடம் தெரிவிப்பார். இவர்களின் லட்சியம் என்பது தற்போது அருகி விட்ட இனமான தீவிர இலக்கியர்களுடையது போன்றே புதிரானது. எளிய உடலமைப்பு கிளர்ச்சியோ, உடல் பருமன் குறைப்பதோ, ஆயுள் நீட்டிப்போ அல்ல. மிக அந்தரங்கமான திருப்தியாக இருக்கலாம். உடற்பயிற்சி நிறுவனத்துள் உருவாகும் நட்பு வலை மற்றும் ஆரம்ப கட்ட இளைஞர்களின் ஆதர்ச வழிபாடு இவர்களை சட்டென்று ”புலிக்கலைஞர்கள்” ஆக்கி விடுவதும் காரணம் ஆகலாம்.

மாறாக குளிரூட்டப்பட்ட மேல்தட்டு ஜிம்களில் நீண்ட வருடங்களாக பயின்ற கட்டுமஸ்தான உடலை மேலும் உறுதியாக்க வாழ்வெல்லாம் உழைப்பவர்களை விட குறுகின நோக்கத்துடன் வருபவர்களையே அதிகம் காண முடிகிறது. உதாரணமாக ஆறு மாதங்களில் இருபது கிலோ குறைக்க வருபவர்கள் அதற்கு மேல் தங்குவது இல்லை. பலர் ரெண்டு மூன்று மாதங்களில் உடல் எடையில் வித்தியாசம் இல்லாதது உணர்ந்து கழன்று விடுவார்கள். சிலர் ஐந்து ஆறு கிலோக்கள் இழந்ததும் நின்று கொள்வார்கள். பயிற்சியை நிறுத்தியதும் உடல் இயல்பாகவே அசுரவேகத்தில் எடையை பத்து கிலோ மேலும் அதிகரிக்கும்.. பிறகு இவர்கள் அடுத்த ”சிகிச்சை” முறைக்கு செல்வார்கள். நவீன ஜிம்கள் நல்ல வியாபார மார்க்கம் ஆகி விட்டனவால் உடல் எடை குறைப்பது பற்றிய போலியான பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் சற்றும் தயங்குவது இல்லை. உதாரணமாக, உடல் எடை கட்டுப்பாடு என்பது வெறுமனே எந்திரங்களில் பயின்று கொழுப்பை கரைப்பது மட்டும் அல்ல. ஒருவரது வாழ்க்கைச் சூழல், மரபணு, உணவுக் கலாச்சாரம், மூளை அமைப்பு, வீட்டு சமையல், வேலை, மன அமைப்பு, மன அழுத்தம், நெருக்கடி என்று பல்வேறு காரணிகள் உடல் எடையை நிர்ணயிக்கின்றன. ஆனால் உடற்பயிற்சி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் போல் மூன்று மாதங்களில் பத்து கிலோ என்று கூவியே ஆள் பிடிக்கின்றன. ஆரம்பத்திலே உறுப்பினர்களிடம் பெரும் கனவுகளை வளர்த்து விடுகின்றன. உணவுத் திட்ட பட்டியல், எடைகுறைப்பு பட்டியல், தானியங்கி எந்திரத்தில் கொழுப்பளவு நிர்ணயம் என்று மேலோட்ட அறிவியல் ஜம்பங்களும் உறுப்பினர்களுக்கு மிகையான நம்பிக்கைகளை அளிக்கின்றன. தனிப்பட்ட மன உறுதியுடன் தொடர முடிகிறவர்கள் அன்றி பிறர் விரைவில் ஏமாற்றமடைந்து காசையும் வீணடிக்கிறார்கள்.

உடற்பயிற்சி குறித்து மற்றொரு நீண்ட கால நம்பிக்கை இப்போது வெறும் புரட்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது. அதாவது ஒருவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் குறைந்த எடைகளை கொண்டு அதிக முறைகள் பயிற்சி செய்ய வேண்டும். பயில்வான் உடலமைப்பை விரும்புகிறவர்கள் அல்லது உடல் எடை கூட்ட வேண்டுகிறவர்கள் அதிக எடைகளை தூக்கி குறைந்த எண்ணிக்கையில் பயில வேண்டும். நிஜத்தில் இது நேர் முரணானது என்று நிரூபித்துள்ளது அசிரோனா பல்கலையை சேர்ந்த கோயிங், கஸ்லர், லோமேன் உள்ளிட்டோரின் ஆய்வு. ஜார்ஜியா சதர்ன் பல்கலையை சேர்ந்த தோர்ண்டன் மற்றும் பொட்டெய்கர் ஆகியோரின் ஆய்வும் இதே முடிவை எட்டியுள்ளது. உடல் எடையை குறைக்க விழைபவர்கள் ஐந்து கிலோ டம்பெல்களை தவிர்த்து பத்தில் இருந்து பதினைந்து கிலோ எடைகளுக்கு செல்லலாம். பெஞ்ச் பிரஸ்ஸுக்கு நாற்பது கிலோ போடலாம். குறைந்த எடையில் இருபது தடவை செய்பவர்கள் அதிக எடை எடுத்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து தடவைகளாக பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம். ஜிம்முக்கு புதிகாக சேரும் ஒல்லிப்பீச்சான்களிடம் பயிற்சியாளர் குறைந்த எடை போட்டு பயிற்சி செய்ய சொன்னால் அவர்கள் ஷுவாஸ்னேக்கரை நெஞ்சில் வேண்டிக் கொண்டு பத்து, இருபது கிலோக்கள் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். தொடர்ந்து இவர்கள் இதனால் மூச்சு வாங்கி திணறுவது ஒரு சம்பிரதாய வேடிக்கை. இது மேற்சொன்ன தவறான நம்பிக்கை காரணமாக நடக்கிறது.
Share This

2 comments :

  1. அப்புறம் என்னதான்
    செய்யச் சொல்றீங்க?

    ReplyDelete
  2. ஒரு கலாச்சார அம்சத்தை குறிப்பிட்டேன். அவ்வளவுதான். எந்த தீர்ப்பும் தர முயலவில்லை. வாசிப்புக்கு நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates