Tuesday 18 May 2010

T20 உலகக் கோப்பை: இந்தியா சறுக்கியது எங்கே?




இந்தியாவின் 2010 உலகக் கோப்பை பின்னடைவுக்கு அனில் கும்பிளே, அருண் லால் உள்ளிட்ட பல விமர்சகர்களும் தோனியில் திட்டமிடல் மற்றும் அணுகுமுறையையே காரணமென சாடி உள்ளனர். சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் கவாஸ்கர் இந்திய மட்டையாளர்கள் குறைநீள அல்லது பவுன்சர் பந்துகளை சந்திப்பதற்காக மனதளவிலான ஒழுக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய அணி பொதுவாக உற்சாகமும் ஈடுபாடும் குன்றியவர்களாகவே காணப்பட்டனர் என்று மஞ்சுரேக்கர் கூறுகையில், கவாஸ்கர் வீரர்கள் இந்தியா திரும்பியதும் அவர்களின் ஓய்வை ரத்து செய்து விட்டு, கட்டாயமாக பங்களூரில் உள்ள NCA-வுக்கு அனுப்பி உயர்ப்பந்துகளை சமாளிக்க பயில செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் கிறிஸ் கெய்லும் மஞ்சுரேக்கரை போன்று மனத்தயாரிப்பையே சுட்டுகிறார். அவரை பொறுத்தவரையில் இந்தியர்கள் தொழில்நுட்ப அளவில் அல்ல உளவியல் ரீதியாகவே மேலும் உறுதியாக வேண்டும். கெய்ல் கூறியுள்ளது சற்று விவேகமானதாக படுகிறது. அதாவது ஒரு மட்டையாளன் ஒரு குறிப்பிட்ட வகை பந்துவீச்சை சமாளிக்க அதில் நிபுணனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாமர்த்தியமான ஒரு செயல்திட்டம் மற்றும் அதை நிறைவேற்றும் மனவலிமை போதும். நாம் பவுன்சரை சந்திக்க திறனுள்ள மட்டையாளர்களை (திராவிட்?) மே.இ தீவுகளுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று கும்பிளே சொல்கிறார். மேலும், பார்படோஸ் ஆடுகளத்தில் தோனி சுழலர்களை நம்பி களமிறங்கியதை கும்பிளே கண்டித்துள்ளார்.

ரவிசாஸ்திரி ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதியுள்ள பத்தியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு 20-20 அணித் தலைமையிலிருந்து தோனியை நீக்கி ஒரு இளைஞரை (ரெய்னா?) நியமிக்க வேண்டும் என்று குறிப்புணர்த்தி உள்ளார். பின்னர் தோனி நீக்கம் ஒரு புரளியாக கிளம்ப இந்திய கிரிக்கெட் வாரியம் அவசரமாக அதை மறுத்தது. திரிவேதி, அஷ்வின், உமேஷ் யாதவ், திண்டா, ஓஜ்ஹா போன்ற இளைய வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி நம்புகிறார். இந்திய அணி மேலாண்மை வேகவீச்சாளர்களை சரியாக பராமரிப்பது இல்லை என்கிறார் கும்பிளே. கடந்த ஐந்து வருடங்களில் பல திறமையான வீச்சாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். முனாப் படேல், ஆர்.பி சிங் போன்றவர்களின் தேக்கத்தை கும்பிளே குறிப்பிடுகிறார். இர்பான் பதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும் கும்பிளே சாடுகிறார். ஆனால் ஐ.பி.எல் இந்திய உள்ளூர் பந்து வீச்சாளர்களின் தரத்தை அம்பலப்படுத்தி விட்டதால் இனிமேல் இப்படியான வாதங்கள் எடுபடுவது சந்தேகமே. உதாரணமாக இந்த வருட ஐ.பி.எல்லில் ஏறத்தாழ அனைத்து அணிகளும் வேகப்பந்து வீச்சுக்கு ஆஸி, தெ.ஆ, மே.இ நாட்டு வீரர்களையே நம்பி இருந்தன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை போல நம்மிடம் வேகவீச்சாளர்களின் சுரங்கம் இல்லை.

இந்திய அணியின் இறங்குமுகத்துக்கு ஹர்ஷா போக்ளே மூன்று காரணங்களை தனது cricinfo பத்தியில் குறிப்பிட்டுள்ளார். துவக்க பந்து வீச்சு, களத்தடுப்பு, உயரப்பந்து. இதை விட முக்கியமாய், ஹர்ஷா சொல்லும் வேறிரண்டு விசயங்கள் கவனிக்கத்தக்கவை. முதலாவதாய், இந்திய அணியினர் வெற்றிக்கான மனப்பாங்கை கொண்டிருக்க இல்லை. அடுத்து, இந்த அணியை விட்டால் நமக்கு வேறு வழியில்லை. அதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ”A different batsman might have been picked, another spinner might have made his way here, but there was no Bradman or Sobers left behind” என்கிறார்.

பத்திரிகையாள சந்திப்பில் Respected Sir, as I am … விடுப்புக்கடித பாணியில் தோனி சொன்ன செயல்விளக்கத்தில் அசரூதீன் உள்ளிட்ட முன்னாள் உதிரி ஆட்டக்காரர்களில் இருந்து ஊடகவியலாளர்கள் வரை ஓட்டை காண தோனியின் யங்ஙிஸ்தான் பிம்பத்தில் சில செங்கற்கள் சரிந்து விட்டன. இந்தியாவிலிருந்து தத்தளித்தபடி வெளிப்பட்ட ஒரே சமாதானப் புறா சச்சினுடையது.

உயரப்பந்தை சமாளிக்க இரு முரண்பட்ட வழிகள்

தொண்ணூறுகளில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் அனைத்து அணிகளையும் தனது தூஸ்ராவால் குழப்பிக் கொண்டிருந்தார். இந்தியா. இலங்கை போன்ற சுழலர்களை உடைத்து குடிக்கும் அணிகளுக்கே சக்லைன் பந்து எங்கே திரும்பும் என்பது புதிராக இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென்னாப்பிரிக்க அணி முதன்முதலாக சக்லைனை நன்றாக சமாளித்து விக்கெட் அளிக்காமல் ஆடியது. அதற்கு ஒரு எளிய செயல்திட்டம் பயன்பட்டது. பொதுவாக காற்றில் ப்ளைட் செய்து வீசப்படும் சுழல்பந்தை மட்டையாளர்கள் இறங்கி வந்து அடித்து சமா`ளிப்பார்கள். ஆனால் தெ.ஆ மட்டையாளர்கள் கிரீசிலே நின்று சக்லைனை நேராக ஆடினார்கள். சக்லைன் பந்தை அதிகம் திருப்புவதில்லை என்பதால் இந்த திட்டம் வெற்றி பெற்றது. பின்னர் இந்தியாவுக்கு வந்த ஆஸி மற்றும் தெ.ஆ அணி வீரர்கள் ஹர்பஜனுக்கு எதிராக மற்றொரு வித்தியாசமான முறையை பயன்படுத்தினர். ஹெய்டன், காலிஸ் போன்றோர் ஆப் குச்சியில் கார்டு எடுத்து நின்று கொண்டனர். இதனால் ஹர்பஜன் மிடில் மற்றும் ஆப் குச்சிகளுக்கு வீச ஆரம்பித்தார். ஜெயவர்தனே ஹர்பஜனை சந்திக்கையிலும், திராவிட் மற்றும் காம்பிர் போன்றோர் முரளிதரனை சந்திக்கும் போது அவர்களின் பந்தின் உயரத்தை சமாளிக்க லெக் குச்சி பக்கமாக விலகி நின்றி வெட்ட முயன்றனர். இது பஜ்ஜி மற்றும் முரளியின் லைனை வெகுவாக எதிர்மறையாக மாற்றியது. இது போன்றதொரு செயல்திட்டத்தை உயரப்பந்துக்கு உகந்ததாக இந்தியர்களாலும் பின்பற்ற முடியும். உதாரணமாக, இந்தியாவின் கடந்த ஆஸி சுற்றுப்பயணத்தில் சச்சினுக்கு ஜான்சன் லெக்-ஆப் ஆக குறுக்கே வீசும் உயரப்பந்துகள் பெரும் தொந்தரவாக இருந்தது. காரணம் சச்சின் ஹூக் மற்றும் புல் ஷாட்டுகளை கிடப்பில் போட்டிருந்தார். இதை சமாளிக்கும் விதமாக சச்சின் தொடர்ச்சியாக சற்று விலகி நின்று கீப்பர் அல்லது ஸ்லிப் களத்தடுப்பாளர்களுக்கு மேலாக பந்தை வெட்டி நாலுக்கு விரட்டினார். ஒரு கட்டத்தில் ஜான்சன் வெறுத்துப் போய் அப்படி வீசுவதை நிறுத்திக் கொண்டார். அந்த டெஸ்டு தொடரில் தான் அடைந்த மிக முக்கியமான உளவியல் வெற்றியாக இந்த ஷாட்டை சச்சின் கருதுகிறார். முன்னாள் ஆஸி மட்டையாளர் ஸ்டீவ் வாஹ் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை உலகின் மிகச்சிறந்த மட்டையாளர்கள் பட்டியலில் இருந்தவர். ஒரு கட்டத்தில் அவர் உச்சத்தில் இருந்த சச்சினையே நெருக்கித் தள்ளும் அளவுக்கு தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்தார். ஸ்டீவ் இளமையில் உயரப்பந்துக்கு ஹூக் மற்றும் புல் ஷாட்டுகளை அதிரடியாக பிரயோகித்து விக்கெட்டை எளிதில் இழந்து வந்தார். ஒரு கட்டத்தில் இனிமேல் உயரப்பந்துகளை தாக்குவதில்லை என்று முடிவு செய்தார். அப்போதில் இருந்து அவரது ஆட்டவாழ்வின் நிறைவு வரை உயரப்பந்துகள் அவரது பலவீன பிரதேசமாகவே இருந்தன. ஸ்டீவ் இப்பந்துகளுக்கு பவ்யமாக குனிந்து வழி விட்டார்; அல்லது கண் சிமிட்டாமல் நெஞ்சில் தோளில் வாங்கிக் கொண்டார்; ஆனால் தற்போதைய இந்திய மட்டையாளர்களை போலன்றி எப்போதுமே உயர்பந்துகள் தன் ஈகோவை தாக்காமல் பார்த்துக் கொண்டார். ஒற்றை ஓட்டங்கள் எடுத்து வேகவீச்சு முனையில் இருந்து விலகிக் கொள்வார். மட்டையில் பட்டாலும் நெஞ்சில் வாங்கினாலும் இறுதியில் ஓட்டங்களே முக்கியம் என்பது ஸ்டீவின் நம்பிக்கை. உலகின் மிகச்சிறந்த மட்டையாளர்கள் இருவர் உயரப்பந்தை இவ்வாறு இரு முரணான விதங்களில் சந்தித்து வெற்றி கண்டனர். இங்கு நமது சமகால இந்திய மட்டையாளர்களுக்கு ஒரு பாடம் உள்ளது: திறமை அளவுக்கு மனத்திடம் மற்றும் துணிவு அவசியமான பண்புகள்.



இந்தியாவின் செயல்திட்டம் பழுதுபட்டதா?

2010 ஐ.பி.எல்லின் போது பெரும்பாலான ஆடுகளங்கள் மெதுவாக இருந்தன. இதனால் மும்பை, ராஜஸ்தான், சென்னை, கர்நாடகா என்று பெரும்பாலான அணிகள் ஆரம்ப 6 ஓவர்களை வீச வெற்றிகரமாக சுழலர்களை பயன்படுத்தினர். இதற்கு பின்னர் T20 உலகக்கோப்பை நடைபெறும் மே.தீவுகளில் ஆடுகளங்கள் இதே போன்றே மெதுவானவையாய், சுழலுக்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே.தீவுகளில் ஆடுகளங்கள் இருவகைப்பட்டதாக இருந்தன. செயிண்ட் லூசியா போன்ற மைதானங்கள் மெதுவானவை; ஆசிய அணிகளுக்கு உகந்தவை. பார்படோஸ் மைதானம் எகிறும் ஆடுகளம் கொண்டது. இங்கு ஆஸி, தெ.ஆ, இங்கிலாந்து அணிகள் சிறப்பாக ஆட முடியும். ஆனால் பொதுவாக மே.இந்திய அணியைத் தவிர பிற அணிகள் தங்களது பந்து வீச்சு சேர்க்கையை தங்களது மரபுப்படியே அமைத்துக் கொண்டன. மெதுவான ஆடுகளத்தில் தெ.ஆ, இங்கிலாந்து மற்றும் ஆஸியினர் ஒரு சுழலருடன் ஆடினர். இந்த செயல்திட்ட இறுக்கம் காரணமாக தெ.ஆ இந்தியாவிடம் முதல் ஆட்டத்தில் வீழ்ந்தது. ஆஸ்திரேலியா பங்களாதேசிடம் ஏறத்தாழ மண்டியிட்டது. அரைஇறுதியில் பாகிஸ்தான் சுழலர்களை ஆடத் திணறி ஆஸி அணி பத்து ஓவர்களில் 60 சொச்சத்துக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்து கிட்டத்தட்ட தோற்றது. இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் சுழலர்களை நம்பியே இறங்கியது. வேக ஆடுதளங்களில் இந்த செயல்திட்டம் எதிர்மறையான விளைவுகளை தந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த உலகக்கோப்பையில் பந்துவீச்சு அமைவு மட்டுமே ஆட்டமுடிவுகளை தீர்மானிக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அணிகளின் முன்னேற்றத்துக்கும் பின்னடைவுக்கும் ஆட்டத்தரம் தான் தீர்மானிக்கும் காரணியாக இருந்தது. எந்த ஆடுகளத்திலும் வேகவீச்சாளர்கள நம்பி ஆடி வெற்றி பெற்று வந்துள்ள ஆஸ்திரேலியா ஒரு சிறந்த உதாரணம். பன்னிரெண்டு ஓவர்களும் சுழலர்களை கொண்டே வீச முனைந்த தோனியின் செயல்திட்டத்தில் எந்த கோளாறும் இல்லை. அவரது பந்து வீச்சாளர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே நிஜம். இந்த விசயத்தில் தேர்வாளர்களுக்கும் தோனிக்கும் எந்த அளவுக்கு ஒத்திசைவு இருந்துள்ளது என்பதே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. இந்திய முழு அணியில் இரு முழுநேர சுழலர்களும், நான்கு வேகவீச்சாளர்களும் உள்ளனர். இரண்டு வேக வீச்சாளர்களுடன் களமிறங்குவதே தோனியின் திட்டம் என்றால் நான்கு வேகவீச்சாளர்களை தேர்ந்தெடுத்தது ஏன்? உள்ளூர் ஆட்டங்களில் 36.16 மட்டையாட்ட சராசரியும் இரண்டு சதமும் அடித்துள்ள அஷ்வின் அல்லது 32.64 மட்டையாட்ட சராசரி உள்ள இக்பால் அப்துல்லா போன்ற மட்டையாடத் தெரிந்த முழுநேர சுழலர்களில் ஒருவரை நான்காவது வேகவீச்சாளருக்கு பதிலாக சேர்த்திருக்கலாம்.



உயரப்பந்துகள் நம் வாய்ப்புகளை எவ்வளவு தாழ்த்தின?

இந்தியாவின் T20 உலகக்கோப்பை சொதப்பலுக்கு உயரப்பந்தை சந்திப்பதற்கான தொழில்நுட்பக் குறைபாடே பிரதான காரணமாக இன்று பேசப்படுகிறது. ஆனால் இது ஒரு பரிமாணம் மட்டுமே. 2009 மற்றும் 2010 T20 உலகக்கோப்பை தொடர்களில் மிக முக்கியமான ஆட்டங்களில் நாம் சாதகமற்ற ஆடுகளங்களில் ஆட நேர்ந்துள்ளது. 2009 தொடரின் போது மிக முக்கியமான இரு ஆட்டங்களில் நாம் இங்கிலாந்து மற்றும் மே.இ தீவுகளை உயரப்பந்து வீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் ஆடுகளத்தில் சந்தித்தோம். இழந்தோம். ஆனால் மெதுவான நாட்டிங்கம் ஆடுகளத்தில் இலங்கை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஆடி வீழ்த்தியது. இதே ஆசியாவுக்கு சாதகமான மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியது. இப்படி 2009 உலகக்கோப்பையில் மிக முக்கிய ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாக் அணிகள் ஐரோப்பிய அணிகளை மெதுவான ஆடுகளங்களில் சந்திக்கும் சாதக வாய்ப்பை பெற்றனர். இதனால் இவ்விரு அணிகளும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று லார்ட்ஸின் வேகமாக ஆடுகளத்தில் ஆடின. பாகிஸ்தானிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால் இலங்கையை அது சுலபமாக தோற்கடித்தது. ஆனால் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தை இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் சந்தித்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். 2010 20-20 உலகக்கோப்பையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இதுவே நடந்துள்ளது. இந்தியா முதல் கட்ட ஆட்டத்தில் தெ.ஆ-வை செயிண்ட் லூயிசின் மெதுவான ஆடுகளத்தில் சந்தித்து வென்றது. ஆனால் அவ்வாட்டம் அத்தனை முக்கியமானது அல்ல. செயிண்ட்.லூசியாவில் நாம் ஆஸ்திரேலியா மற்றும் மே.இ அணிகளை ஆடியிருந்தால் நிலைமை நிச்சயம் வேறாக இருந்திருக்கும். மீண்டும் இவ்வருடமும் மிக முக்கியமான ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை சுழல்சாதகமான செயிண்ட் லூசியாவில் ஆடி வெற்றி பெற்றது. அரை இறுதிக்குள் நுழைந்து செயிண்ட் லூசியாவில் ஆஸ்திரேலியாவின் மென்னியை 19வது ஓவர் வரை காலால் நெரித்து பிறகே விட்டது. இரு உலகக்கோப்பைகளின் போதும் இந்தியாவின் ஆட்டநிரலை தீர்மானித்தவரின் குசும்பு வெற்றி தோல்விகளுக்கு இடையேயான மிக மெல்லிய கோட்டை கிழிப்பதாக இருந்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டத்தின் நுரை பொங்கும் சுழற்சியில் உயரப்பந்தை ஆடுவது மட்டும் திசையை தீர்மானிப்பதில்லை. அணியின் ஆட்டத்திறன் உள்ளிட்டு விளக்க முடிகிற, முடியாத எத்தனையோ காரணிகள் ஒரு ஆட்டத்தொடரின் பின்னணியில் உள்ளன. ஆற்றொழுக்குக்கு எதிராக துரும்புகள் எப்போதும் பயணிப்பதில்லை.
Share This

2 comments :

  1. அபிலாஷ்! கிளாசிக்கான அலசல்.

    உயர பந்துகளை எல்லோராலும் மன ரீதியாக வெல்ல முடியும் என்று தோன்றவில்லை , முறையே பயிர்ச்சி தேவை.இது டெஸ்ட் ஆட்டங்களில் கூட பாதிக்கும்.எல்லா பந்துக்ளையும் மிட் விக்கட்டுக்கு மேல் தூக்கி அடிக்க தேவையில்லை என்பது உண்மை தான். ஆனால் தடுத்து ஆடுத்ல தலைக்கு மேல் வெட்டி ஆடுதல் , புல் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு எதிர்நோக்கு தேவை படுகிறது.

    நான் மிகவும் ரசித்து வாசித்த கட்டுரை.

    ReplyDelete
  2. நன்றி வால்பையன் மற்றும் பிரகாஷ்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates