Tuesday 11 May 2010

எல்.எஸ்.டி, சைலோசிபின், சாரஸ், மெய்ஞானம்: ஒரு விஞ்ஞான மேம்பாலம்.



வரலாறு நெடுக அறிவியல் முதலாளித்துவத்தினோடு கைகோர்த்தே வளர்ந்துள்ளது. மனித அறிவை விகாசிக்கும் உன்னத நோக்கம் கொண்டிருந்தாலும் வணிக வாய்ப்புள்ள சாத்தியப்படுகள் தாம் அறிவியலில் என்றும் ஊக்கம் பெறுகின்றன. இதனாலே எந்த அறிவியல் தேடலையும் மனித குலம் ஒரு கண்ணை சந்தேகத்தில் மூடியபடியே பார்க்கிறது. அறிவியலுக்கு மெய்ஞான தரிசனத்திற்கான மனநிலையை கண்டறிவதில் பேரார்வம் உண்டு. சுருக்கமாக ஒரு உயிரியல் கடவுளை கண்டுபிடிப்பதற்கான இந்த ஆவலை நாம் திருச்சபைக்கும் அறிவியல் உலகுக்குமான பகைமையின் பின்னணியில் காண்பது சுவாரஸ்யமானது. அறுபதுகளிலேயே விஞ்ஞானிகள் சைக்கெடெலிக் மருந்துகள் எனப்படும் போதை மருந்துகளை சரியான அளவில் உட்கொள்ளும் ஒருவர் துறவிகளுக்கு இணையான மெய்ஞான பரவச மனநிலையை அடைய முடியும் என்ற ஒரு ஆய்வு முடிவை அறிவித்து எதிர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தினர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் போதை மருந்துகளின் மருத்துவ பயன் குறித்து எழுதப்பட்டன. குறிப்பாக 1966-இல் வால்டர் பான்கே என்பவர் போதை மருந்துகளால் ஏற்படும் மெய்ஞான திறப்புக்கும், துறவிகளின் ஆன்மீக அனுபவத்துக்கும் உள்ள வேறுபாடுகள் ஒற்றுமைகள் குறித்து விரிவாக ஆய்ந்து இந்த மெய்ஞான நிலையை புறவயமாக நிறுவ முயன்றார். இம்மனநிலைக்கு ஒருமை, கால, வெளி கடத்தல், ஆழ்ந்த நேர்மறை மனநிலை, இறைநிலை உணர்வு, உள்ளுண்ர்வு-சார் அவதானிப்புகளை புறவய உண்மையாக அடைவது, மெய்நிலையின் முரண்பாடுகள் (உ.தா: வெளியில் இருப்பதாகவும் இல்லாமல் இருப்பதாவும் தோன்றுவது), அனுபவத்தை மொழியில் கடத்த முடியாமை, காலமற்ற அனுபவத்தின் தற்காலிக தன்மை என ஒன்பது பண்புகள் உள்ளதாக வால்டர் தெரிவித்தார். ஆன்மீக பின்புலமற்றவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என இரு குழுவினருக்கும் சைலோசிபின் போதை மருந்தை (மேஜிக் காளான்களில் உள்ளது) அளித்து ஆராய்ந்த வால்டர் இரு சாராரின் மெய்ஞான அனுபவங்களுக்கு அதிக வித்தியாசமில்லை என்ற முடிவை அடைந்தார். மேலும் இவர்கள் இம்மருந்தை உட்கொண்ட ஆறுமாதங்களுக்கு பிறகு இந்நபர்கள் மனஆரோக்கியத்தில் பெரும் முன்னேற்றத்தையும், ஆன்மீக ரீதியாக முதிர்ச்சியையும் அடைந்திருப்பதாக வால்டர் குறிப்பிட்டார். குறிப்பாக இவர்கள் ஆழமானதொரு அமைதி மற்றும் வெளி-உறவுகளுடனான ஒருங்கிணைவு பெறுவதில் தொடங்கி சமூக அல்லது பிரபஞ்சம் முழுமையின் ஒரு பகுதி தனது சுயம் என்று தொடர்புறுத்த முடிகிற வரை இம்மருந்து உட்கொள்ளல் அனுபவம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் வால்டரின் ஆய்வு இரு குறுங்குழுக்களை கொண்டு செய்யப்பட்ட ஒன்று. ஒரு பெரிதுபட்ட விரிவான களத்தில் இப்படியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இத்தகைய போதை-ஆன்மீக விடுதலை கோட்பாடுகளை நாம் சமூக அளவில் பரிசீலிக்க முடியும். ஆனாலும் அப்படி விரிவான ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சூழல் ஏறத்தாழ 50 வருடங்களுக்கு பின் இன்னும் சாத்தியமாக இல்லை. காரணம் அறுபதுகளில் இத்தகைய ஆய்வு முடிவுகள் மிகையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு அழிவு கலாச்சாரத்துக்கு இட்டுச் சென்றது. போதை ஆய்வின் சமூக விளைவுகளை விளக்க நமக்கு திமோதி லியறியின் சிறிதொரு வாழ்க்கைக் குறிப்பே போதும்.



உளவியலாளர் திமோதி லியரி பீட் கலாச்சார நட்சத்திரமான் ஆலன் கின்ஸ்பெர்குடன் இணைந்து கொண்டு அமெரிக்காவின் எதிர்கலாச்சாரத்தை அதன் உச்சத்துக்கு எடுத்து சென்றார். பிரேசிலில் வாழும் மசாடெக் எனும் பழங்குடி மக்கள் தங்கள் மதச்சடங்குகளுக்கு பயன்படுத்தும் சைலோசைபின் எனும் போதைப்பொருள் கொண்டுள்ள காளான்களை உண்ட லியரி அதை ஒரு பெரும் மனத்திறப்பாக அறிவித்தார். “ஐந்து மணிநேரங்களில் நான் அப்போது மனித மூளை குறித்து கற்றறிந்தவை எனது பதினைந்து வருட உளவியல் படிப்பு மற்றும் ஆய்வுகளில் பெற்றதை விட பலமடங்கு அதிகம்” என்றார். ஊருக்கு திரும்பிய திமோதி முன்னூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள், தத்துவவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மெக்சிக்கிய போதை காளானை ஒத்த செயற்கை மருந்தை அளித்தார். இக்குழுவில் 75 சதவீதத்தினருக்கு இந்த போதை அனுபவம் ஒரு பெரும் தரிசனமாக இருந்தது என்று லியரி அறிவித்தார். திமோதி லியரியின் இந்த போதை ஆய்வுக்கு கின்ஸ்பெர்க் தன்னிச்சையாக தன்னை ஒப்புவிக்க, அதனால் உந்தப்பட்ட ஹிப்பி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என ஒரு பெருங்கூட்டம் எல்.எஸ்.டி, சைலோசைபின் போன்ற போதை பொருட்களை கட்டற்ற மன-அனுபவத்திற்காக பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். லியரி சிறைக்கைதிகளுக்கு போதை மருந்தளித்து அவர்களை திருத்த முடியும் என்று ஒரு ஆய்வில் நிரூபித்தார். பின்னர் இந்த ஆய்வு சரியான முறைமைகளை பின்பற்ற இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. லியரி மதுபோதைக்கு அடிமையானவர்களையும் தனது சைகடிலிக் மருத்துவத்தின் மூலம் விடுவிக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தார். ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து லியரி ”உள்விடுதலைக்கான சர்வதேச நிறுவனத்தை” ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த சிகிச்சையில் கலந்து கொள்ள பெருகி வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் லியரி திருப்பி அனுப்ப, அவர்களுக்கு போதை மருந்துகள் விற்க கறுப்பு சந்தை உருவானது.



மெல்ல மெல்ல சமூகத்தின் ஒரு பகுதி போதை கலாச்சாரத்தில் செயலிழப்பது கண்டு அஞ்சிய அமெரிக்க அரசு எல்.எஸ்.டியை தடை செய்தது. மரிஜுவானா வைத்திருந்ததர்காக லியரி கைது செய்து 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. சுவஸ்சர்லாந்து, அப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு தப்பி ஓடிய லியரியை ஜனாதிபதி நிக்சன் “அமெரிக்காவிலேயே மிக அபாயகரமான ஆள்” என்று வர்ணித்தார். அறுபதுகளுக்கு பின்னர் போதை வஸ்துக்களின் பயன்பாடு மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ”போதை-வழி மெய்ஞானத் தேடல்” ஆய்வுகளும் கரடு தட்டி நின்றன. பின்னர் சமீபமாக மேற்கத்திய அரசுகள் இத்தகைய ஆய்வுகளுக்கான வாசலை ஒருக்களித்து திறந்து வைத்துள்ளன. இப்போது மெய்ஞானமெல்லாம் நோக்கமல்ல. மன-அழுத்த நோயாளிகளை குணப்படுத்தவும், மக்களின் பொதுவான சமூக உறவாடல்களை மேம்படுத்துவதற்குமான மற்றொரு அதிசய மருந்தாக சைகலெடிக் மருந்துகளை பயன்படுத்தலாம் என்பதே தற்போதைய அறிவியல்-மருந்தாக்க தொழில்துறையின் திட்டவரைவு.

இரண்டு வருடங்களுக்கு முன் ஜான் ஹாப்கின்ஸ் மெடிக்கல் ஸ்கூலில் தான் இந்த ஆய்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவரான கிளார்க் மார்டின் என்பவரும் கலந்து கொண்டார். 65 வயதாகும் கிளார்க் சிறுநீரக புற்றுநோய் சிகிச்சைகளின் விளைவான மன-அழுத்தத்துடன் போராடி வந்தவர். இவ்வாய்வின் போது கிளார்குக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சைலோசிபின் தரப்பட்டது. அப்போது கண் மூடியை அணிந்து கொண்டு இயர் போன் மாட்டி செவ்வியல் இசை கேட்டபடி பிரபஞ்சம் குறித்த விசாரத்துடன் கிடந்ததாய் கிளார்க் சொல்கிறார். ”சட்டென்று பரிச்சயமானவை எல்லாம் மறைய ஆரம்பித்தன. திறந்த சமுத்திரத்தில் ஒரு படகிலிருந்து விழுந்து விடுகிறீர்கள் என்று நினைத்து கொள்ளுங்கள். திரும்பிப் பார்க்கிறீர்கள், படகைக் காணவில்லை. பிறகு தண்ணீரையும் காணவில்லை. பிறகு நீங்களும் காணாமல் போய் விடுகிறீர்கள்”. மேற்கண்ட 6 மணிநேர அனுபவத்திற்கு பின்னர் கிளார்க் சிறுக சிறுக மன-அழுத்தத்திலிருந்து விடுபட்டார். அது மட்டுமல்ல இதனால் தனது மகள் மற்றும் நண்பர்களுடனான உறவும் பெருமளவில் மேம்பட்டதாக கிளார்க் சொல்லுகிறார். இது எப்படி? போதை மருந்து சுயத்தின் இறுக்கத்தை தளர்த்துகிறது; பிரக்ஞை வெளி மற்றும் காலத்தில் இருந்து விடுபட்டு பிரபஞ்சமும் தானும் ஒன்று என்பதை உணர்கிறது. அல்லது குறைந்த பட்சம் ஒரு சமூகம் அல்லது குழுவுடன் தன்னை ஈகோ வேறுபாடற்று அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது. எந்தவொரு அனுபவத்தைப் போலவும் இந்த கட்டற்ற மனநிலை ஒரு பாடத்தை கற்றுத்தருகிறது. அது உள்ளுணர்வால் உணரப்படும் அகவய தரிசனம். இதை ஒரு பண்பட்ட தேடல் கொண்ட மனதால் தான் வாழ்வின் ஒரு திருப்பு-முனை அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியும். மேம்போக்கானவர்களுக்கு இந்த போதை அனுபவம் மனதில் ஒரு எளிய நினைவாக மட்டுமே எஞ்சும். கிளார்க் இந்த அனுபவம் தன் ஆளுமையில் ஒரு ஒரு முக்கிய வளர்ச்சியை எற்படுத்தியதாக கூறுகிறார்; ”எனது செயல்பாடுகளுடன் மட்டுமே என்னை இணைத்துக் கொள்வதை, வெளிக்காரணிகளை கட்டுப்படுத்த அனாவசியமாக முயல்வதை நிறுத்தினேன்.” கிளார்க்கும், இதே ஆய்வில் பங்குகொண்ட அவரைப் போன்ற பிறரும் சைகடெலிக் அனுபவத்தின் போது ஒரு மாபெரும் பிரக்ஞையில் தங்கள் கவலைகள் மற்றும் அக்கறைகள் கரைந்து விடுவதாகவும், தங்களுக்கும் பிறருக்கும் இடையிலான எல்லைகள் மறைந்து விடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். பரிணாம மனவியலாளர்கள் இப்படியான போதை வஸ்துக்களின் மூலம் பிரக்ஞையை கடப்பதற்கான ஒரு மரபணு பண்பை நாம் பல நூற்றாண்டுகளாக முன்னோர்கள் வழி கைகடத்தி வந்துள்ளதாக கூறுகின்றனர். போதை வஸ்து அனுபவம் சமூகத்தினுடனான மனிதனின் ஒருங்கிணைவை மேம்படுத்துவதால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் பயனுள்ள உளவியல் கூறாகிறது. நமது மரபணுவில் போதை வஸ்து பயன்பாட்டுக்குமான மென்பொருளும் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது.
மேற்சொன்ன ஆய்வு அறிக்கை வெளியான பின் அமெரிக்காவில் இத்தகைய ஆய்வுகளுக்கு தன்னிச்சையாக தம்மை ஒப்புக் கொடுக்கும் மக்கள் அறுபதுகளின் ஹிப்பி-சைகடெலிக் கலாச்சார கலவரத்துக்கு பின்னர் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். நவீன சமூகத்தின் ”மீட்பர் மறுவருகையாக” சைலோசிபின் சிகிச்சை மாறி வருகிறது. அரிசோனா பல்கலை, நியூயார்க் பல்கலை, கலிபோர்னியா பல்கலை ஆகியவற்றில் இத்தகைய ஆய்வுகள் மக்கள் பங்களிப்புடன் நடந்து வருகின்றன. மரண படுக்கையில் பதற்றம் மற்றும் வேதனையில் அவதியுறும் மக்களுக்கு ஆறுதலளிக்கவும் இம்மருந்துகள் பயன்படப் போகின்றன. இவ்வகை ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்.குரோப் “இம்மருந்துகள் உடலுடன் நம்மை அடையாளப்படுத்துவதில் இருந்து விடுவித்து ஈகோ கடந்த நிலைகளை அடைய உதவுகின்றன. வாழ்வியக்கம் குறித்த ஒரு பெரும் புரிதலுடன் இதற்கு பின்னர் நம்மால் மரணத்தை அணுக முடிகிறது. அந்த புரிதல் வாழ்வு அடிப்படையில் மாற்றம் தான் என்பதே” என்கிறார்.



ஒரு ஆயுட்கால துறவு வாழ்வு, பயிற்சி, புலனடக்கம் போன்றவற்றுக்கான துரிதமான எளிய மாற்று என சைகடெலிக் மருந்துகளை கூற முடியுமா? The Psychedelic Experience என்ற நூலில் திமோதி லியரி மெய்ஞான அனுபவங்கள் பல்வேறு வழிகளில் சாத்தியமாகலாம் என்கிறார். ”புலனடக்கம், யோகா, தியானம், மதபூர்வ அல்லது அழகியல் பரவசம் மூலமாக, அல்லது தன்னியல்பாக ஒருவருக்கு மெய்யுணர் நிலை ஏற்படலாம். எல்.எஸ்.டி, சைலோசைபின், மெஸ்கலைன், டி.எம்.டி போன்ற போதை வஸ்துக்களும் இத்தகைய நிலையை தூண்டலாம். இவை தனிப்பட்டு இவ்வனுபவத்தை அளிக்க முடியாது; போதை மருந்து ஒரு ரசாயன சாவி மட்டுமே. அது நம் மனதைத் திறக்கிறது; நமது நரம்பு மண்டலத்தை வழமையான வார்ப்புகள் மற்றும் வடிவமைப்புகளில் இருந்து விடுதலை செய்கிறது”. லியரியின் அவதானிப்பு மிக முக்கியமானது. சாவி இருந்தால் மட்டும் போதாது. கதவை கண்டுபிடிப்பதற்கான தேடல் வேண்டும். அதற்கான மன-அமைவு வேண்டும். ஆனால் எந்தவொரு கண்டுபிடிப்பும் மையநீரோட்டத்துக்கு கொண்டு வரப்படுகையில் மிகைப்படுத்தப்பட்டு அனைத்து தீர்வுகளுக்குமான துரித வழியாக முன்வைக்கப்படுகிறது. அறுபதுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சமூக அவலம் இதுவே. சைகடெலிக் மருந்துகள் மனித சமூகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. சைபீரியா, தென்மேற்கு வட-அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஆதி பழங்குடியினர் பல்வேறு மூலிகைச் செடிகள் மற்றும் காளான்களில் இருந்து எடுக்கப்பட்ட போதை பொருட்களை தமது மதச்சடங்குகளில் மேற்சொன்ன ஆன்மீக பரவசத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். சீன தாவோ மரபு, ஜெர்மானிய பேகன் மரபு, யூத சடங்குகள், இஸ்லாமிய சூபி மரபு ஆகியவற்றில் மக்கள் போதை மருந்துகளை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தியே வந்துள்ளனர். புத்தர் ஞானமடைவதற்கு முன் ஆறு வருடங்கள் கஞ்சா விதைகளை மென்றதாக ஒரு ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இந்து மரபில் சாதுக்களில் இருந்து நித்யானந்தர் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஆன்மீக விடுதலைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். பெனாரஸ்,பைத்யனாத் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் பாங் எனப்படும் கஞ்சா பானம் சிவனுக்கு படைக்கப்படுகிறது. சாதுக்கள் சாரஸ் புகைப்பதை ஏற்றுக் கொண்ட நம் சமூகம் நித்யானந்தர் அமெரிக்க ஆசிரமங்களில் போதை மருந்துகளை பக்தர்களுக்கு அளித்ததாக செய்தி வெளியாகும் போது எதிர்ப்பது ஏன்? போதை மருந்து பயன்பாடு மேற்சொன்ன எந்த கலாச்சாரங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தொடர்ச்சியாக மனித குலத்தில் வரலாற்றில் சிறு குழுக்கள் மட்டுமே போதை மருந்துகளை தங்கள் மனதை திறந்து கொள்ள பயன்படுத்தி வந்துள்ளன. ஆனால் நித்யானந்தர் ஒரு பெரும் மக்கள் அமைப்புக்குள் வந்த பின் தாந்திரிக முறைகளை, போதை வஸ்துக்களை மெய்யறிவுக்காகவோ அல்லது வெறுமனே வித்தை காட்டவோ பயன்படுத்துவது மிக இயல்பாகவே கண்டனத்துக்கு உள்ளாகிறது. அறிவியல் அறிஞர்களின் கையில் சைகலெடிக் மருந்துகள் செல்லும் போதும் இதே சிக்கலே நிகழ்கிறது. விஞ்ஞானிகள் உடல்நலக் கேடு இல்லை என்று உத்தரவாதம் வழங்கி விட்டால், நோய்நொடிகள், மனித உறவுகளிடையேயான பிரச்சனைகள், சலிப்பு மற்றும் சோர்வு ஆகிய உணர்வுகளில் இருந்து தப்பிப்பு, மரணபயம் என பல்வேறு மனித சவால்களுக்கு ஒரு பின்வாசல் திறப்பாக இம்மருந்துகள் எம்.என்.சிகளால் எதிர்காலத்தில் சந்தைப்படுத்தப்படும். எந்தவொரு பிரச்சனையும் சவாலாக எதிர்கொள்ளப்படும் போது தான் மனிதகுலம் முன்னகர்வதான உந்துதல் ஏற்படுகிறது. குறுக்குவழி மருந்துகள் சவால்களை எதிர்கொள்ள முடியாதபடி மனிதனை முடக்கி விடும். 1966-இல் போதை அனுபவத்தையும் மெய்ஞான மனநிலையையும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை எழுதின வால்டர் பாங்கே சைகலெடிக் பொருட்களை மருந்துகளாக சந்தையில் கொண்டு வருவதன் பல ஆபத்துகளை குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய மருந்துகள் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அடிமையாகாத படிக்கு பரிந்துரைக்கப்படுகிற அளவில் வழங்கப்பட்டாலும் கூட போதை அனுபவம் தரும் பேரின்பமும் கிளர்ச்சியும் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான ஒரு சார்புநிலையை பயனரிடத்து ஏற்படுத்தலாம். அடுத்து இதனை பயன்படுத்தும் மனப்பிறழ்வு அறிகுறிகள் கொண்டவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படலாம் அல்லது முழுபைத்தியமாகலாம். சமூகத்தின் உழைப்புத் திறனை இப்போதை பழக்கம் வெகுவாக குறைக்கலாம்.

விஞ்ஞானத்தில் இருந்து மதம் வரை எந்த உடனடி மார்க்கத்தையும், மிகையான கூற்றையையும் அதன் தலை கூட நம் கூடாரத்தினுள் நீட்ட விடாமல் தடுப்பதே நலம்.
Share This

3 comments :

  1. உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி வித்தியாசமான மேட்டரா தோணுது

    நல்ல ஆக்கம் ஆனால் ஏனோ கட்டுரை முழுமை அடையாததை போன்ற உணர்வு ஏற்ப்படுகிறது.

    ReplyDelete
  2. நன்றி ராஜசூரியன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates