Saturday 29 May 2010

தகவல்தொடர்பும், கவனக்குலைவும்: துண்டாகி வரும் மனித சமூகம்

இந்த மாத உயிர்மையில் வெளியாகி உள்ள என் கட்டுரை. கவனக் குலைவு ஒரு நோய் அல்ல சமகால கலாச்சாரத் தன்மை என்று பேசுகிறது.


ADD எனப்படும் கவனக்குறைவு கோளாறின் சில அறிகுறிகள் இன்றைய தலைமுறையின் பெரும்பாலான குழந்தைகளின் ஆளுமைக் கூறு ஆகி விட்டது. அவர்களால் ஓரிடத்தில் சில நொடிகள் கூட அமைதியாக இருக்க முடிவதில்லை. கணினி விளையாட்டு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக பெறும் மூளைக்கிளர்ச்சி ஒரு நிரந்தரத் தேவையாகி விட்டது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு வெளிப்புற விளையாட்டுக்கள் அவசியம். ஆனால் விளையாட்டு வெளிகள் ஒருபுறம் சுருங்கி வந்தாலும், இன்றைய குழந்தைகளுக்கு எந்திரங்களுடன் விளையாடுவதுதான் பிரியமானதாக உள்ளது. புலன்களை அதிகப்படியாக தூண்டும் செயல்களே அவர்களுக்கு இயல்பாகப் படுகின்றன. முன்னெப்போதையும் விட இன்றைய தலைமுறை தான் மிகச்சின்ன வயதில் இருந்தே பலவித போதைப் பழக்கங்களை பரிச்சயப்படுத்திக் கொள்கின்றன. இப்படிப்பட்ட மிகை-கிளர்ச்சி தூண்டுதலுக்காய் ஏங்கும், நரம்புகள் மின்சாரம் பாய்ச்சப்பட்ட குழந்தைகளால் அமைதியாக அமர்ந்து பள்ளியில் கவனிக்க முடிவதில்லை. சுலபமாக சலிப்படைவதால் நீண்ட புலன் தூண்டுதலற்ற உழைப்பை கோரும் கல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆறுமாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இந்த நோய்க்குறிகளிகளை வெளிப்படுத்தும் பத்து சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் உலகமெங்கும் ADD-யால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்படுகிறார்கள். கல்வியில் கவனமில்லை என்பது தான் இவர்களைப் பற்றி பெற்றோர்களுக்கு கிடைக்கும் முதல் புகாராக இருக்கும். அடுத்து பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் ஆவேசத்தை, நிலையில்லாத மிகை செயல்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாமல் ஆகிறது. குழந்தைகளின் மட்டுமீறிய ஆற்றல் வெளிப்பாடு முன் தத்தளிக்கும் பெற்றோர்களை சாதாரணமாக்வே இன்று காண முடிகிறது. என் நண்பரின் குழந்தை நடப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் ஓட்டம் தான். குறிப்பாக அப்பா\அம்மா வீட்டுக்குள் வந்தால் தாறுமாறாக ஓடி சுவரில் மோதிக் கொள்கிறது. குழந்தை தினமும் இப்படி விழுவதும் மோதிக் கொள்வதும் வழக்கமாகி விட பதற்றமான நண்பர் மனவியல் நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டியதாயிற்று. உலகம் பூரா ADD குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உளவியல் மருத்துவர்கள் மன-அழுத்த மருந்துகளை அளித்து ஆற்றுப்படுத்துகிறார்கள் அல்லது சைக்கியாட்ரிக் பயிற்சிகள் அளிக்கிறார்கள். இவர்களில் 60 சதவீதத்தினர் வாழ்நாள் பூரா ADD-ஆல் அவதிப்படுகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜிம்கேரி ஒரு உதாரணம். ஏறத்தாழ இந்த பெற்றோர்கள் அளவுக்கு பி.பி.ஓ நிறுவன மேலாண்மைகள் தங்கள் ஊழியர்களின் மிகை-ஆற்றல் மற்றும் கவன இழப்பு குறித்து பதற்றம் கொள்கின்றன. இணையத்தமிழில் இன்று உருவாக்கப்படும் படைப்புகளில் கணிசமானவை அலுவலகங்களில் ஊழியர்களால் உலகம் பூரா படிக்கப்படுபவை. தமிழின் முன்னணி எழுத்தாளர்களை இணையம் வழி மட்டுமே அறிந்துள்ள ஆயிரக்கணக்கான வாசகர்கள் உள்ளனர். ஆங்கிலத்தில் இப்படி அலுவலக வாசகர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தொடும். இதை விட அதிகமாய கோடிக்கணக்கான அலுவலக மணிநேரங்கள் facebook, arkoot போன்ற சமூக வலைதொடர்பு தளங்களில் தொடர்புறுத்தவும், skype, gtalk, yahoo மெசஞ்சர்களில் அரட்டையடிக்கவும் செலவிடப்படுகின்றன. பெரும்பாலான அலுவலக நேரம் விரயமாவதாக கலவரமான மேலாண்மைகள் இத்தகைய தளங்களை தடை செய்யும் மென்பொருட்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகின்றன. எறத்தாழ எல்லா அலுவலகங்களிலும் மேலாண்மைகள் நுண்பேசி பயன்பாட்டை வரவேற்பதில்லை. இன்றைய தகவல் யுகத்தில் இப்படியான தடை ஒரு ஒடுக்குமுறை என்றும், இணைய உலாவல் ஊழியர்களுக்கு மனதளவிலான ஓய்வு என்றும் சர்ச்சை நிலவும் போது அதை விட முக்கியமாய், facebook-இல்கோடிக்கணக்கான மணிநேரங்களை விரயமாகும் பட்சத்தில் நிறுவனங்கள் எப்படி லாபகரமாக செயல்படுகின்றன என்ற ஐயம் எழுகின்றது. ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியருக்கு ஒரு இலக்கை விதிக்கின்றன. கணிசமான அலுவலக மணிநேரங்களை இணையம் மற்றும் நுண்பேசியில் கழிக்கும் ஊழியர்கள் இந்த இலக்கையும் சுலபமாக எட்டி விடுகின்றனர். இலக்கு எட்டப்படும் பட்சத்திலும் தரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதே நிறுவனங்களின் கவலை. மேற்சொன்ன குழந்தைகளின் பெற்றோரைப் போன்று ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருத்தி வைப்பதே இன்றைய மேலாண்மைகளின் சவால். சரி இப்படியான ADD ஊழியர்களை துரத்தி விட்டு கவனம் கூர்ந்த அடக்கமானவர்களை சேர்க்கலாமே ஆனால் நகைமுரணாக தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றவே இந்த மிகையான ஆற்றல் வெளிப்பாடு தேவையுள்ளது. கவனச்சிதறலுக்கு ஒரு காரணமான மல்டி டாஸ்கிங் எனப்படும் பலபணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறனும், தொடர்ச்சியாக மாறும் பணி இயல்புகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்றபடி உடனடியாக தன்னை தகவமைக்கும் சாமர்த்தியமும் அவசியமாக உள்ளது. அதாவது, நிலையின்மையை ஒரு ஆளுமை இயல்பாக கொண்டுள்ளவர்களுக்கே இன்றைய வேலைசூழலில் சோபிக்க முடியும். மேலும் அயராத ஆற்றல் வெளிப்பாடு, மூளைக்கிளர்ச்சியால் ஆகர்சிக்கப்பட்ட நேரங்காலமற்ற உழைப்பு, அபாய விழைவு போன்ற ADD அறிகுறிகள் கொண்டவர்களே BPO படிநிலைகளில் முன்னேறுபவர்களாக இருக்கிறார்கள். அமைதி, விசுவாசம், பதவிமூப்பு போன்ற பண்புகளுக்கு மதிப்பு குறைந்து விட்டது. இவர்களால் சத்தமான அலுவலக சூழலிலும் பாட்டு கேட்டபடி பக்கத்தில் பேசிக் கொண்டே facebook-இல் தொடர்புகளை புதுப்பித்தப்படியே, நுண்பேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டு தங்கள் அலுவலக பணி இலக்கையும் பிழையின்றி எட்ட முடிகிறது. 16 மணிநேரம் அலுவலகத்தில் கழித்தபடியே புறவுலக தொடர்புகளை தக்க வைக்க, தங்கள் கலாச்சார சமூக புரிதலை புதுப்பிக்கவும் முடிகிறது. முன்னர் நோய் அறிகுறிகளாய் கருதப்பட்டவை இன்று வாழ்வின் நடப்பியல் தேவைகள் ஆகிவிட்டன. வளர்ந்தோருக்கான கவனக்குறைவு கோளாறு ADHD என்று அழைக்கப்படுகிறது. Attention Deficit Hyperactivity Disorder. இந்த பத்துகை இருபது தலை சமாச்சாரம் ஒரு இழப்புடனே வருகிறது. அதைப் பிறகு பார்ப்போம்.



கவனக்குறைவு கோளாறு நவீன சமூகத்தின் கலாச்சார பகுதி ஆகிவிட்டது. கீழே தரப்பட்டுள்ள அறிகுறிகளில் சிலவாவது உங்களிடம் தென்படுகிறது என்றால் சமகால பிளவுண்ட தலைமுறையின் படகில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று பொருள். இவற்றை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ வாழ்வில் பயன்படுத்தலாம்.
• குறைவாகவே சாதித்திருப்பதான உணர்வு
• ஒழுங்கமைவற்ற வாழ்வு
• வேலையை ஆரம்பிப்பதில் சிரமம் அல்லது தொடர்ச்சியாக வேலையை தள்ளிப் போடுதல்
• பணிகளை ஆரம்பித்த வேகத்தில் கைவிடுதல்
• மனதிற் பட்டதை சமயோசிதம் பாராமல் உளறி விடுதல்
• உச்சபட்ச தூண்டலுக்கான விழைவு
• சலிப்பு மற்றும் எரிச்சலை தாங்க முடியாமை.
• எதிலும் பாதியிலே கவனம் கலைதல்
• பாதுகாப்பிமை உணர்வு

நமது மூளை புறமாற்றங்கள் அல்லது அகத்தூண்டல்களுக்கு ஏற்றபடி தன்னையே தகவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இதனை plasticity என்கின்றனர். பக்கவாதத்தால் செயலிழந்தவர்கள் தங்கள் மூளையை பயிற்றுவித்து உறுப்புகளில் ஆற்றலை மீட்க முடியும் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இப்படி தனிப்பட்டு அன்றி மனித குலத்தின் மூளை ஒட்டுமொத்தமாக மாறுமா? ரெண்டு லட்சம் வருடங்களுக்கு முன்னர் கருவிகளின் பயன்பாடு, கூட்டு வேட்டை, மொழி காரணமாக மனித மூளை மாற்றமடைந்தது. அதற்கு பின்னர் இப்போது தான் குறிப்பிடத்தக்க மாற்றத்தை மனித மூளையின் வடிவமைப்பில் காண முடிகிறது. இதற்கு காரணம் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி. Wired பத்திரிகையின் இவான் சகுவார்ட்ஸ் ADHD தகவல் யுகத்தின் அதிகார பூர்வ மூளை நோய்குறித் தொகுதி என்கிறார்.

மிதமிஞ்சிய தகவல் திணிப்பும் தொடர்புறுத்தலும்: சுருங்கும் காலம் மற்றும் வெளி



தொழில்நுட்பம் இன்று நமது காலம் மற்றும் வெளியை அழுத்தி குறுக்கி விட்டது. இது மனிதனின் செயல்பாட்டு/எதிர்வினை இயல்புக்கு மீறிய வேகத்தை எதிர்பார்க்கிறது. டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக் தனது “The New Brain” நூலில் நம் பண்பாடு மீது மீடியா நிகழ்த்தியுள்ள பாதிப்பால் சுருங்கி விட்ட மொழியின் காலத்தை time-compressed speech என்கிறார். தினசரி பேச்சுக்கும் ரேடியோ மிர்ச்சி அல்லது சன் மியூசிக்கில் கேட்கும் மொழிக்குமான காலவித்தியாசத்தை கவனியுங்கள். இத்தனை வேகமாய், அதன் விளைவாய் அபத்தமாய், இந்த வர்ணனையாளர்கள் பேச வேண்டிய அவசியம் என்ன? நமது காலம் நொடிக்கு நொடி உற்பத்தியாளர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களால் கூறுகட்டி சந்தைப்படுத்தப்படுகிறது. எவ்வளவு விரைவில் எத்தனை அதிகம் தகவல்களை நம் மூளைக்குள் திணிக்க முடியும் என்று தொடர்ந்து முயன்றபடி சோதித்தபடி உள்ளது நவீன முதலாளித்துவம். (இந்த சந்தைப்படுத்தல் சோதனை குறித்து பெடரிக் போல் ஒரு விஞ்ஞான சிறுகதை எழுதியுள்ளார்: The Tunnel under the World). நுகர்வுப்பொருட்களில் காலாவதி தேதி உட்பட்டு வாடிக்கையாளருக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மிகப்பொடிசான எழுத்துக்களில் படிக்க முடியாதபடி தரப்படுவது இந்த முதலாளித்துவ தந்திரத்தின் அச்சுவடிவ உதாரணம். இதற்கு நிகராக டி.வி பரஸ்பர நிதி விளம்பரங்களில் mutual funds investment are subject to market risk Please read the offer document carefully before investing.... என்ற் வாசகம் மின்னல் வேகத்தில், ஏறத்தாழ ஒரு கேலி போல, வாசிக்கப்படுவதை சொல்லலாம். மிதமிஞ்சிய தகவல் சுமையின் அதிகபட்ச சாத்தியப்பாடுகளை சமீபத்தில் முயன்று பார்த்தது லலித் மோடிதான். ஐ.பி.எல்லின் போது காற்றில் மிதக்கும் MRF ராட்சத பலூனை ஐந்து நிமிடங்களுக்கு ஒருதடவை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அதைக் காட்டும் போது வர்ணனையாளர்கள் MRF Pace Foundation குறித்து ஏதேனும் சிலாகித்து பேசும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். டேனி மோரிசனின் முறை வந்த போது அடுத்ததாக நிலவை காட்டினார்கள். டேனி சொன்னார்: “இதோ பாருங்கள் MRF நிலா”. DLF Maximum, Citi Moment of Success, Carbon Kamal Catch போன்று ஓயாத பொழியப்பட்ட அடைமொழிகள், வீரர்கள் உடல் எங்கும் ஒட்டியிருந்த விளம்பரங்கள், மூன்று பந்துகளுக்கு ஒருமுறை விளம்பரங்கள் என்று பார்த்து பதறி டேனிக்கு ஏற்பட்ட அதே அரைப்பைத்திய நிலைதான் தகவல் திணிக்கப்பட்ட பார்வையாள மூளைக்கும் ஏற்பட்டது. செய்தியின் போது வானிலை அறிக்கைகள் வண்ணமய சார்ட்டுகள் மற்றும் கிராபிக்ஸுகளுடன் தரப்படுவதை காட்டிலும் நேரடியாக வாசிக்கப்படுவதே பார்வையாளர்களுக்கு புரிய எளிதாக இருப்பதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலம் மேலும் மேலும் சுருக்கப்பட்டு மேலதிக தகவல்கள் திணிக்கப்படுவதால் நவீன மனிதன் எதையும் கவனிக்கும் பொறுமையை இழந்து வருகிறான்.

தகவல் சாதனங்கள் வழியாக மனிதர்கள் இன்று மிதமிஞ்சிய தொடர்பு நிலையில் உள்ளார்கள். Distracted: The Erosion of Attention and the Coming of Dark Age என்ற நூலை எழுதியுள்ள மேகி ஜாக்சன் இந்த மட்டுமீறிய virtual தொடர்புறுத்தலின் அபத்தத்தை விளக்குகிறார். அவருக்கு தெரிந்த மைக் என்பவரின் தனிப்பட்ட மின்னஞ்சல் காப்பகத்தை ஆராய்ந்ததில் அவர் ஐந்து வருடங்களில் மட்டும் 11.7 மில்லியன் நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டறிந்தார். இந்த வகையான தொடர்பு நெருக்கம் எத்தகைய அணுக்கத்தையும் தர இயலாதது. இப்படி தொடர்பு சாதனங்கள் உருவாக்கும் மிதமிஞ்சிய தொடர்பு நிலை நவீன மனிதனை சிதறுண்டு பரவிய ஆளுமை கொண்டவனாக்குகிறது. அர்த்தமற்று கோடிக்கணக்கானோர் தங்களுக்குள் உறவாடும் அபத்த நிலையை இந்த hyperconnectivity ஏற்படுத்துகிறது. இணைய செக்ஸ் அரட்டை இதற்கு ஒரு உருவகம் என்றே கூறலாம். இந்த அரட்டையின் பொது ஜன்னலை திறந்து நுழையும் ஒருவர் எதிர்தரப்பு பெண்ணை நோக்கி உள்ளக்கிடக்கைகளை அடித்துக் கொண்டே செல்லலாம். கூடவே உலகின் பல முனைகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதே அரட்டை ஜன்னலில் இதேவித உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திய படியே இருப்பர். அந்த பெண் விதவிதமாய் அசைந்து கொண்டிருப்பாள், ஆனால் பதில் அளிக்க மாட்டாள். நமது தகவல் தொடர்பு சாதனங்கள் ஒருவிதத்தில் அந்த பெண்ணை போலத்தான். தினசரி மின்னஞ்சல், குறுந்தகவல், நுண்பேசி, மெஸன்சர்கள், சமூக வலைதொடர்பு தளங்கள் வழியாக தகவல்கள் நம் முதுகைப் பற்றி பலகுரல்களில் பேசிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை உதறி விட மூளை மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் அசாதரணமானவை. இதன் விளைவாக தனிமனித உறவுகள் ஆழமும் மதிப்பும் இழக்கின்றன. மேலோட்டமான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அரட்டைகளில் நமக்குள்ள ஈடுபாடு ஆழமான உறவாடலில் இல்லை. இத்தனை தகவல் பரிமாற்ற வசதிகள் இருந்தும் நவீன மனிதன் தனித்து விடப்பட்டதாக, உள்ளீடற்று வாழ்வதாக நிறைவற்று உணர்வதன் காரணம் இதுவே.

ஒரு உதாரணம். டாக்டர் ரிச்சர்டு ரெஸ்டாக்கின் வந்த ஒரு நோயாளி ரயிலில் வேலை பார்த்தவர். ஒருமுறை ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை புரிந்ததை பார்த்து அந்நினைவில் இருந்து மீளமுடியாது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகிறார். தனது மனவதையின் மிக சிரமமான பகுதி யாரும் தான் சொல்வதை கேட்க தயாராக இருக்கவில்லை என்பது என்கிறார் அந்த நபர். தற்கொலை சம்பவம் குறித்து பேசினால் அவர்கள் குறுக்கிட்டனர் அல்லது மெல்ல மெல்ல ஆர்வம் இழந்து கவனம் திருப்பினர்.”எனக்கு என்ன நேர்ந்தது என்பதை எத்தனை வேகமாய் சொல்ல வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. யாருக்கும் கேட்க நேரமில்லை”. இதனாலே அவரால் தன் மனச்சோர்வில் இருந்து எளிதில் வெளிவர முடியவில்லை. ரிச்சர்டிடம் ஆலோசனை பெறும் மற்றொரு ADD நபர் தன் மனைவி என்ன பேசத் தொடங்கினாலும் இப்படி சொல்லி அதிர்ச்சி அடைய வைக்கிறார்: “உனக்கு முடிப்பதற்கு 30 நொடிகளுக்கு மேல் தேவைப்படும் எதையும் சொல்லாதே”. இந்த கவனிப்பதற்கான நேரமின்மைக்கு வேலைப்பளு மட்டும் காரணமில்லை என்கிறார் ரிச்சர்டு. மட்டுமீறிய அளவுக்கு தகவல்களை குறுகின நேர அளவுகளில் செரிக்கும்படி மூளைக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மூளையில் வடிவமாற்றம் நேர்கிறது. எல்லா மூளைகளும் இம்மாற்றத்தை சுமூகமாக சமாளிப்பதில்லை.

Monsters Inc எனும் அனிமேஷன் படத்தில் பாதாளத்தில் வாழும் அரக்கர்கள் நள்ளிரவில் உலகில் தோன்றி குழந்தைகளை அழ வைத்து அந்த ஒலியை பதிவு செய்து கொண்டு போவர். இந்த அழுகை ஒலி மின்சாரமாக மாற்றப்படும். ஒரு கட்டத்தில் பாதாள உலகில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்படும். காரணம் அரக்கர்களின் பயமுறுத்தல் பூமியின் குழந்தைகளுக்கு பயப்பட முடியாதபடி பழகி விடுகிறது. இக்கதை நவீன மனிதனுக்கு ஊடகங்களுக்குமான உறவின் மீதான ஒரு பகடி தான். மேலும் விளக்கமாக பார்ப்போம். நமது புலன்களால் நுகரப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும், வாசனையோ, ஒலியோ, சுவையோ, ஒரு தகவல் துணுக்குதான். இந்த தகவல் துணுக்கு நரம்பணுவால் அதன் புதுமை அளவுக்கு ஏற்றபடி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மூளைக்கு சமிக்ஞையாக மாற்றி தரப்படுகிறது. சமிக்ஞையின் தீவிரத்திற்கு ஏற்றாற் போல் மூளை விழிப்பு கொள்கிறது. பரபரப்பாகிறது. மூளையின் இந்த செயல்முறையை தமது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் நமது விளம்பர நிறுவனங்களும் ஊடகங்களும் அதிர்ச்சியான மற்றும் புதுமையாக தோற்றமளிக்கும் தகவல்களால் நம் மூளையை தொடர்ச்சியாக தாக்குகின்றன. மிதமிஞ்சிய தூண்டுதலால் மனித மூளை மரத்துப் போக ஊடகங்கள் மேலும் மேலும் நம்மை கிளர வைப்பதற்காக கற்பனையின் எந்த எல்லைக்கும் செல்ல, ஆட்டத்தின் அத்தனை விதிகளையும் கலைத்துப் போட தயாராகின்றன. விளம்பரங்களில் வோடோபோன் zoozoo விளம்பரங்களின் மிகை வன்முறையை சொல்லலாம். வேறெந்த விளம்பரமும் zoozoo அளவுக்கு அறமதிப்பீடுகளையும் பொருட்படுத்தாமல் வன்முறையை நேரடியாக காட்சிப்படுத்தியதில்லை. சர்க்கஸில் மிகை ஆர்வத்தில் பயிற்சி செய்யும் பணியாளன் சிங்ககூண்டுக்குள் விழுவது, தெறித்து வரும் கிரிக்கெட் பந்து பட்டு குட்டிச்சுவரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் மண்டை உடைய சக நண்பர்கள் ரசித்து சிரிப்பது, தொந்தரவு செய்யும் பெரியவரை சிறுவன் தன் கூட்டாளிகளை அழைத்து வந்து மொத்துவது என்று ஏகப்பட்ட உதாரணங்கள். கவனம் இழந்த நவீன பார்வையாளனை முகத்தில் குத்தி உலுக்குகின்றன இந்த விளம்பரங்கள். பார்வையாளன் ஆர்வமிழந்து விலக விலக ஊடகங்கள் மேலும் மேலும் அதிக சத்தமும், வேகமும், கூர்மையும் கொண்டதாக மாறி வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்களை கிலி கொள்ளச் செய்ய பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டாலோ, வாகனங்கள் சீறி வந்தாலோ போதும். இன்று விண்கலங்கள் சிதறவும், கோளங்கள் மோதவும் வேண்டி உள்ளன. அருவருப்பான வெற்றுகிரக வாசிகள் ஒன்றின் வயிற்றைப் பிளந்து மற்றொன்றாக குதித்து வர வேண்டி உள்ளது.



செய்தி ஊடகங்களும் வரலாற்று பிரக்ஞையற்ற மனிதர்களும்

பல்வேறுபட்ட ஈடுபாடுகள் கொண்ட பார்வையாளப் பரப்பை இணைப்பதற்காக காட்சி செய்தி ஊடகங்கள் மதிப்பற்ற செய்திகளை முன்னிலைப்படுத்துகின்றன அல்லது முக்கியத்துவம் மிக்க செய்திகளை இணையாக வழங்குகின்றன. ஆங்கில ஊடகங்கள் சூழலைப் பொறுத்து கிரிக்கெட் அல்லது சினிமா செய்திகளுக்கு அரசியலை விட அதிகம் நேரம் மற்றும் அழுத்தம் தருவதை குறிப்பிடலாம். இப்படி மதிப்பு வேறுபாடின்றி செய்திகள் திணிக்கப்பட்டு மூளை தொடர்ந்து தூண்டப்படுவதால் சமகால மனிதனின் செய்தி ஈடுபாடு, தகவல் நினைவாற்றல் குறைகிறது. தகவல் வெடிப்புக்கு முன் ஒரு அரசியல்/சமூக நிகழ்வு அவனது மனப்பரப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு இன்று நிகழ்வதில்லை. ஈழப்போர் ஊடகங்களில் மிகப்பரவலாக பேசப்பட்டும் தமிழக தேர்தல் வாக்குகளை பாதிக்காதது ஒரு தகுந்த உதாரணம். மனிதன் தன் வரலாற்று பிரக்ஞையை இழந்து வருவதாக, நாம் மீவரலாற்று குடியரசுகளில் வாழ்வதாக மேகி ஜாக்சன் குறிப்பிடுகிறார். அதிகபட்ச தூண்டுதலுக்கு மட்டுமே எதிர்வினையாற்றும் படி தகவமைந்து விட்ட நம்மால் எந்த செய்தியின் மனக்கிளர்ச்சியையும் அதிக நேரம் தக்க வைக்க முடிவதில்லை. சீக்கிரமே களைத்து கவனம் இழந்து அடுத்த தகவல் கிளர்ச்சியை நாடுகிறோம். கவனக்குறைபாட்டு கோளாறை உருவாக்குவதில் இந்த விட்டில்பூச்சி பண்பாட்டுக்கு பெரும்பங்கு உள்ளது.

மனித எதார்த்தம் எத்தனையோ மாறுபட்ட பிரதிகள் கொண்டது என்பதை தகவல்யுகம் முதன்முதலில் நடைமுறையில் நிரூபித்தது என்கிறார் ரிச்சர்டு. கால, வெளி மற்றும் இடத்தின் வித்தியாசங்களை அது அழித்து விட உலகின் ஒரு மூலையில் இருந்தபடி மற்றொரு மூலையில் போர், தீவிரவாத அழிவு, கட்டபஞ்சாயத்து, வணிகம், குடும்ப உறவாடல் என அனைத்தையும் சுலபமாக நடத்த முடிந்தாலும் அதன் உள்ளீடற்ற தன்மையும், அபாயங்களும் தாம் பிரதான எதிர்விளைவுகள். இன்றைய சமூக உறவாடலில் பெரும் தடைகள் தொலைதொடர்பு சாதனங்கள் தாம் என்பது மற்றொரு நகைமுரண். உரையாடலின் போது எதிர்தரப்பின் தொடர்ச்சியான கவனத்தை கோரும் சிரமத்தையும் சங்கடத்தையும் வேறெந்த நூற்றாண்டிலும் மனிதன் இப்படி அனுபவித்திருக்க மாட்டான். உரையாடல் நடுவே நுண்பேசிக்குள் நுழைவதோ, மின்னஞ்சல் திறப்பதோ, டீ.வி கவனிப்பதோ எதிர்தரப்பை அவமானிக்கும் பண்பற்ற செயல் என்பதை உணர முடியாதபடி தகவல் யுக நிஜத்தின் பல்வேறுபட்ட பிரதிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கவனம் இழக்கும் அந்நபர் எந்த இடத்தில் இருக்கிறார்? நுண்பேசியிலா, டீ.வி அல்லது மின்னஞ்சலிலா, அல்லது நேரடி உரையாடலிலா.



மல்டி டாஸ்கிங் நம் செயல்திறனை ஆழமாக பாதிக்கும் ஒன்று என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வேலையில் இருந்து மற்றொன்றுக்கு தடம் மாறும் போது மூளைக்கு அரை வினாடி உபரியாக வீணாகிறது. மேலும் மூளையின் ஒரே பகுதியை செயல்படுத்தும் இருவேறு செயல்கள் கடுமையான அழுத்தத்தை விளைவிக்கின்றன. உதாரணமாக மின்னஞ்சல் அடித்தபடியே தொலைபேசியில் உரையாடுவது. ஆனால் ஓவியம் கிறுக்கியபடியே பேசுவது அத்தகைய சிரமத்தை மூளைக்கு அளிக்காது. ஏனென்றால் இரண்டும் வெவ்வேறு மூளை தசைகளை செயல்படுத்துவன. இதே காரணத்தால் இசை கேட்டபடியே எழுதுவது, ஓவியம் வரைவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவை செயல்திறனை அதிகரிக்க செய்யும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காப்ரியல் மார்க்வெஸ் இசை கேட்டபடியே எழுதும் பழக்கம் கொண்டவர். தொண்டை, வாய், மூக்கு நிபுணர் பிளேக் பாப்சின் தன்னால் இத்தாலிய இசையமைப்பாளர் மரியா புயுசினியின் ”லா பலாமே” கேட்டபடியே மிகுந்த ஈடுபாட்டுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவதாக சொல்லியுள்ளார். இப்படி மல்டி டாஸ்கிங் நம் சிதறுண்ட சமூக ஆளுமையின் ஒரு பகுதி ஆகி விட்டபடியால் அதை விஞ்ஞானபூர்வமாக செயல்படுத்தும் மெருகேற்றப்பட்ட வழிமுறைகள் எதிர்காலத்தில் கண்டடையப்படலாம். மிதமிஞ்சிய புலன் தூண்டுதல்களை அகத்தூண்டல்களாய் திசைமாற்றும் மேம்பட்ட ஒரு மனிதகுலமும் உருவாகலாம்.
Share This

12 comments :

  1. சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை. நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் குறித்த உங்கள் அவதானிப்பு வழக்கம் போல வியப்பில் ஆழ்த்துகிறது.ஒரு கட்டுரையை எழ்துவதற்கு முன் நிறைய ஹோம் வொர்க் செய்கிறீர்கள் போல.:-)
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நம் முகத்தில் அரையும் காட்சி ஊடகங்களின் இரைச்சல்.நல்ல கட்டுரை.

    சர்வோத்தமன்

    ReplyDelete
  3. நன்றி நடேஷ். பி.பி.ஓவில் நாலுவருடங்கள் பணி செய்திருக்கிறேன். இந்த கட்டுரை ஒரு விதத்தில் எனக்கு சுயபரிசீலனை தான்.

    ReplyDelete
  4. நன்றி சர்வோத்தமன்!

    ReplyDelete
  5. மிகவும் அவசியமான கட்டுரை.

    உரையாடல்களின் நடுவே கவனம் சிதைப்பதில் செல்ஃபோன்களின் பணி கணிசமானது. இதனால் பல உரையாடலகளை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்,நீங்கள் சொல்வது உண்மைதான். நான் செய்தது சரியா என்ற குழப்பத்தில் இப்போதெல்லாம் கவனச்சிதறல்களுடன் வாழப் பழகிவிட்டேன் அல்லது பழக்கிவிட்டார்கள்!

    ReplyDelete
  6. நன்றி ரெட்டைவால்ஸ். நம் சமகாலத்தின் முக்கியமான பிரச்சனை நீங்கள் குறிப்பிட்டது. நாம் யாரோடு உறவாடுகிறோம்/தொடர்புறுத்துகிறோம் என்பதே குழப்பமாக உள்ளது.

    ReplyDelete
  7. அருமை. அற்புதம்.

    ReplyDelete
  8. This is a very good article which clearly portrays our life today especially software engineers. You have made a huge amount of research on this topic. Hats off to you !!!

    It is surprising that we have so many gadgets to save time but at the end have no time.

    ReplyDelete
  9. நன்றி சூர்யா மற்றும் ஜார்ஜ்

    ReplyDelete
  10. நல்ல பல தகவல்கள்,சுடும் உண்மைகள் அடங்கிய பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates