Wednesday 5 May 2010

இந்தியா-பாக் T20 & டெஸ்டு கிரிக்கெட்: சறுக்கலின் வெவ்வேறு திசைகள்



20-20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா ஆடிய 20-20 ஆட்டங்களில் அதன் சாதனை அதிருப்திகரமானது. 22 ஆட்டங்களில் 12 வெற்றிகள் இது அனைவரும் அறிந்த சேதி: இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல 20-20 அணி அல்ல. ஒருநாள் ஆட்டத்தில் மட்டையாட்ட வலிமையை நம்பி சமாளிக்கிறோம். ஆனால் அதே பருப்பு 20-20-இல் எளிதில் வேகாது என்பதே உண்மை.
20-20-இல் நம் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பலவீனத்தை மறைக்க முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களில் கிரிக்கெட், நிர்வாகம், அரசியல் என பல்வேறு தளங்களில் பெரும் நெருக்கடிகளையும் சறுக்கல்களையும் சந்தித்த பாக்கிஸ்தான் அணியின் T20 சாதனை அபாரமானது. 30 ஆட்டங்களில் 23 வெற்றிகள். இதுவரையில் இரு T20 உலகக் கோப்பைகளில் இறுதியாட்டம் வரை சென்றுள்ளது. ஒருமுறை கோப்பையை கைப்பற்றியது. டெஸ்டு ஆட்டங்களில் வாத்து போல் அடி வாங்கும் பாகிஸ்தானால் T20இல் துடிப்பாக ஆட முடிவது ஏன்?

இந்தியா 20-20 கிரிக்கெட் வகைமைக்கு உகந்தது என்ற கருத்துரு இரு காரணங்களால் உருவாகி நிலைபெற்றுள்ளது: உலகக் கோப்பை வெற்றி மற்றும் ஐ.பி.எல் ஆட்டத்தொடர். ஆனால் நமது மரபார்ந்த ஆட்டமுறையும் அணுகுமுறையும் 20-20க்கு ஏற்றதல்ல. பொதுவாகவே இந்திய உள்ளூர் கிரிக்கெட்டர்கள் மெத்தனமாக ஆடக்கூடியவர்கள். பொறுமையும், கவனமுமே இளமையில் இருந்தே அவர்களுக்குள் திருகி செலுத்தப்பட்டுள்ள பண்புகள். 80-களில் தோன்றிய இளைஞர்கள் சச்சின் மற்றும் திராவிடை முன்மாதிரிகளாக கொண்டு பயின்று வந்தவர்கள். அவர்களே தொண்ணூறுகளின் இறுதிவரை உள்ளூர் அணிகளில் முன்னணி வீரர்களாய் ஆடி வந்தவர்கள். அடுத்த தலைமுறை வீரர்கள் சேவாக் மற்றும் யுவ்ராஜை முன்மாதிரியாக கொண்டு வளர்ந்தவர்கள். இவர்கள் தற்போது சற்று அதிரடியாக உள்ளூர் ரஞ்சி ஆட்டங்களில் கூட ஆடி வருகிறார்கள். மிக சமீபமாகவே இந்த தடமாற்றம் நடந்து வந்துள்ளது. இந்தியாவின் கடந்த ஆஸி சுற்றுப்பயணத்துக்கு முன்னர் பாகிஸ்தான் உள்ளூர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேவாக் தலைமையிலான தில்லி அணிக்கு எதிராக ஒரு நான்கு நாள் ஆட்டம் ஆடியது. மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் பாக் அணி மிக ஆவேசமாக இயங்கியது. விக்கெட்களை தக்க வைப்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அதே அதிரடியில் விக்கெட்டுகள் சாய்ந்தன. ஆனால் வலுவான பந்து வீச்சு மற்றும் ஆவேச அணுகுமுறை காரணமாக அந்த ஆட்டத்தை அவர்கள் வென்றனர். இந்த ஆட்டம் முடிந்த பின் சில தில்லி அணி வீரர்கள் “பாக் மட்டையாளர்களின் தொழில்நுட்பம் பலவீனமானது. தடுப்பாட்டமே அவர்களுக்கு தெரியவில்லை” என்று மிகையான தன்னிறைவுடன் அவதானித்தனர். இதில் ஒரு சுவாரஸ்யமான உண்மை உள்ளது.



பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நிதானித்து கவனமாக நெடுநேரம் ஆட வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் அவர்கள் கோட்டை விடுவதே வழமை. தங்குதடையற்ற ஆக்ரோசமே அவர்களின் வலிமை. இந்த பொருளில் பாக் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அதிக வேறுபாடில்லை. இதற்கு ஒரு காரணம் பாகிஸ்தானிய இளைஞர்கள் உள்ளூர் ஆட்டங்களில் பெரும்பாலும் 20-20 வகையான குறுகின ஆட்டங்களே ஆடி வளர்கின்றனர் என்பது. ஐ.பி.எல்லின் முதல் வருடத்தில் சோபித்த பாகிஸ்தானின் சொஹைல் தன்விர் அனாயசமாக யார்க்கர் வீசக்கூடியவர். இது குறித்து விசாரிக்கப்பட்ட போது சொஹைல் இப்படி விளக்கினார்: “ஒழுங்குமுறையான ஆட்டங்கள் ஆடுமுன்னே 20-20 வகையான ஆட்டங்களில் தான் நான் சிறுவயதில் இருந்தே ஆடி வந்தேன். இந்த ஆட்டங்களில் ஆடுதளம் தட்டையாக இருக்கும். லெங்த் பந்துகள் வீசவே முடியாது. இந்த ஆட்டங்களில் தாக்குப்பிடிக்க யார்க்கர் பந்துகள் எறிவதே ஒரே மார்க்கம்.”



இந்திய பந்து வீச்சாளர்கள் இத்தகைய அதிரடி சூழலில் உருவாகி வந்தவர்கள் அல்ல. ஆடும் லெங்தில் பந்து வீசவே அவர்கள் சிறுவயதில் இருந்தே பயிற்சியாளர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் மட்டையாளர்களும் அவ்வளவாய் அச்சுறுத்துபவர்கள் அல்ல. நமது வீச்சாளர்களுக்கு யார்க்கர்கள் வீசுவதற்கான அவசியமும் ஏறத்தாழ இல்லை எனலாம். இதனாலே இன்று வரையிலும் எதிரணி மட்டையாளர்கள் அடித்தாடும் போது நமது வேகப்பந்து வீச்சாளர்கள் பதற்றமாகி பனிச்சறுக்கு ஆடுகிறார்கள். ஸ்லோ பந்துகள் பிரபலமாகாத தொண்ணூறுகளில் இருந்தே இவற்றை சிறப்பாகவும் அதிகப்படியாகவும் வீசி வந்துள்ளவர்கள் மேற்கிந்திய தீவு அணியினரும் (பிராவோ, வால்ஷ்) பாகிஸ்தானியருமே (அப்துல் ரசாக், ஷோயப் அக்தர்) என்பது விதிவிலக்கோ எதேச்சையோ அல்ல. தமது முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக அதிரடியாகவே ஆடிவரும் இந்திய இளந்தலைமுறை மட்டையாளர்களுக்கே உள்ளூர் பாகிஸ்தானியரின் ஆட்டம் வயிற்றை கலக்குகிறதென்றால் நமது இதுவரையிலான மெத்தன மரபை புரிந்து கொள்ளலாம்.

20-20 ஆட்டத்தை கோலாகல விழாவாக்கி சந்தைப்படுத்தியது இந்தியா தான். வெளிப்புற பொழுதுபோக்குகளோ விளையாட்டுகளோ இல்லாத ஒரு கலாச்சாரம் சினிமாவை T20 கிரிக்கெட் போன்ற மற்றொரு கேளிக்கை வடிவத்துடன் இனக்கலப்பு செய்து ஜிகினா ஆடை போர்த்திய அழகிய கோவேறு கழுதை ஒன்றை உருவாக்கியது. உள்ளார்ந்த பெரும் மாற்றம் ஒன்று நிகழாதவரை நாம் மேலும் இனக்கலப்புகளை முயன்று கொண்டே இருப்போம். ஆனால் ஆட்டக்கலாச்சாரத்தை பொறுத்தவரை T20 நமது கோப்பை தேனீரல்ல. ஆட்டநேரம் அதிகமாக ஆக நாம் மேலும் ஈடுபாடு மற்றும் ஆசுவாசத்துடம் ஆடுவோம். இதனாலே 50 ஓவர் ஆட்டமும், அதை விட டெஸ்டு ஆட்டமும் இந்திய அணி வீரர்களுக்கு தோதானதாக இருக்கிறது. ஐ.சி.சி டெஸ்டு அணிகள் பட்டியலில் நாம் முதலிடம் பிடிக்கவும் இதுவே காரணம். பாகிஸ்தானின் சறுக்கலும் முன்னேற்றமும் வேறு திசையிலானது.
Share This

4 comments :

  1. பல தவறான கருத்துக்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளன . பொதுவாக யார்கர் வீசுவதில் எல்லோரும் திறமைபெற முடியாது. ஏன் என்றால் தவறினால் கண்டிப்பாக அது நான்கு அல்லது ஆறுதான். நீங்கள் சொல்லும் மாலிக் சுழற பந்து வீச்சாளர் எனவே அவர் மெதுவாகத்தான் போடுவார். ரசாக் நல்ல உதாரணம். ஆனால் அவர் பொதுவாக உபயோகிப்பது cuttersthan. சொஹைல் தன்விர் பந்தில் தடுமாரியாதன் காரணம் அவர் பந்தை வீசும்பொழுது வழக்கமான கால் முன் வைக்காமல் மாற்றி வைத்து போடுவார் அதுதான். இப்பொழுது அவரது பந்து வீசி அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. மேலும் கடந்த உலகக் கோப்பையில் நமது தோல்விக்கு காரணம் மட்டை வீச்சாளர்களே அன்றி பந்து வீச்சாளர்கள் அல்ல

    ReplyDelete
  2. LKவுக்கு
    ஷோயப் அக்தருக்கு பதில் மாலிக் என்று அடித்து விட்டேன். தற்போது திருத்தி விட்டேன். நன்றி. பாகிஸ்தானின் யார்க்கர் மரபு பிரசித்தமானது. ரசாக் இந்தியாவுக்கு எதிராக ஆடின முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஸ்லோ பந்துகளாக வீசித்தான் திணறடித்தார். ஆப் கட்டர்கள் வீசுவார் என்றாலும் ஸ்லோ பந்துகளும் சிறப்பாக வீசக் கூடியவர். தன்விர் கட்டுப்பாடாக வீசக் கூடியதன் காரணத்தை அவரது பேட்டியை சுட்டியே குறிப்பிட்டிடுக்கிறேன். வெறுமனே வீசும் பாணி மட்டும் கைகொடுக்காது. தென்னாப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ் நினைவிருக்கும். தற்போது திணறி வரும் இலங்கையின் மெண்டிஸும். பொதுவாக பாகிஸ்தானியர் நல்ல சிக்கன வீச்சாளர்கள் என்ற கருத்தில் எனக்கு எந்த தடுப்பாட்டமும் இல்லை. கடைசியாக நான் உலகக்கோப்பை ஆட்டங்களை மட்டுமல்லாது இந்தியாவின் பொதுவான T20 ஆட்டவரலாற்றையே குறிப்பிட்டு பேசியுள்ளேன். அந்த வகையில் உலகக் கோப்பை வென்றபின் T20இல் நாம் சொதப்பி வந்துள்ளமைக்கு பந்து வீச்சு மிக முக்கிய காரணம். மேலும் எளிய ஒரு உதாரணம் தருகிறேன். நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் அனைத்து முன்னணி அணிகளும் வேகப்பந்துக்கு அன்னிய வீச்சாளர்களையே நம்பி இருந்தது. இது ஏன்? இதே ஐ.பி.எல் போன்றதொரு தொடரை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அல்லது பாகிஸ்தான் நடத்தி இருந்தால் நிலைமை நேர்மாறாக இருக்கும்.

    ReplyDelete
  3. பொதுவாகவே இந்திய உள்ளூர் கிரிக்கெட்டர்கள் மெத்தனமாக ஆடக்கூடியவர்கள். பொறுமையும், கவனமுமே இளமையில் இருந்தே அவர்களுக்குள் திருகி செலுத்தப்பட்டுள்ள பண்புகள்.
    ************************************

    இதை டெக்னிகல் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஆனால் 20 20 கிரிக்கெட்டில் டெக்னிகலாக தேர்ந்த ஓபனர்களை விட ஐந்தாவது அல்லது நான்காவது இறங்கும் வீரர்தான் போட்டியின் போக்கை மாற்றுகிற சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். அதிலும் பெரும்பாலும் பரபரப்பாக இயங்கும் இந்த ஃபார்மட்டில் ஃபீல்டிங்கின் பங்கு கணிசமானது. பவுண்டரிகளை மூன்று அல்லது இரண்டுகளாக மாற்றுவது இதில் மிகவும் முக்கியம். ஒரு நாள் போட்டிகளைப் போல டாஸ் முக்கிய பங்காற்றுவதில்லை. கேப்டன் எவ்வாறு ஓவர்களை மாற்றிக் கொடுக்கிறார் என்பதிலும் கூட 20 20 கிரிக்கெட்டின் வெற்றி சூட்சும அடங்கியிருக்கிறது. உதாரணம் தோனி அஷ்வினை ஐ.பி.எலில் உபயோகப் படுத்தியது.

    பாகிஸ்தானின் சாபம் பாகிஸ்தானே...அவர்கள் எப்போது ஆவேசமாக விளையாடுவார்கள்..எப்போது அடக்கி வாசிப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இதற்கு அவர்களுடைய போர்டும் ஒரு காரணம். ஒரு காலத்தில் ஆறு முன்னாள் கேப்டன்களை ஓரணியில் வைத்து விளையாடிவர்களாயிற்றே...! பாகிஸ்தான் பவுலர்களிடம் மட்டுமே ஒரு வித வெரைட்டி காணப்படும். அக்ரம் , வக்கார் முதல் சோஹைல் தன்வீர் வரை அவர்களது எல்லா ஃபாஸ்ட் பவுலர்களிடமும் யார்க்கர் முதல் பவுன்ஸர் வரை நிச்சயமாக ஒரு தனித்தன்மை காணப்படும். ஆனால் இந்தியாவைப் போல அவர்களும் ஆல்ரவுண்டர்களை உருவாக்கத் தவறினர். பார்க்கலாம் பாகிஸ்தானின் வெற்றிகள் தொடர்கிறதா என?

    ReplyDelete
  4. நல்ல அவதானிப்புகள் ரெட்டைவால்ஸ்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates