Tuesday 29 June 2010

திசைகளற்ற வீடு



வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை

கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ

பலம் பிரயோகித்தாலோ

அன்றி

இரு திசைகளில் ஒன்றை

தேர்ந்திட விரும்புவதில்லை



பீரோவுக்குள் இருந்தால் வாலும்

அலமாரிக்கு வெளியே காலும்

ஜன்னல் வழி வானத்துக்கு முகமும்

தரும்


பூனை என்றோ

ஒரே பெயராலோ

அழைக்கப்பட விரும்பாத அது

வித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்து

முதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய் தேர்வு செய்கிறது


இரண்டு வித உணவுகளில்

முதலில் தந்த உணவை கடைசியிலும்

கடைசி உணவை முதலிலும்

உண்ண முனைகிறது


செய்தித் தாள் மேல் படுத்து

டி.வியை வெறிக்கும் அது

சானல்கள் இரைச்சலுடன் மாற்றப்படும் போது

மும்முரமாகிறது


ஒருநாள்

மூடப்படாத ஜன்னல்கள் கொண்ட

மாபெரும் அறை ஒன்றினுள்

தாவி இறங்கி

வாசலை தேடியது

அது வெட்டவெளி என்பதை உணராமல்
Share This

10 comments :

  1. நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  2. படிக்கும் போதே மனதினுள் வெவ்வேறு அர்த்தங்கள் தோன்றி மறைகின்றன. அர்த்தங்கள் என்பதை விட காட்சிகள் என சொல்லலாம். கனவுநிலை காட்சி. 'வெட்டவெளி என்பதை அறியாமல் அதை அறையாக பாவித்து கதவை தேடும் பூனை'-யை இன்னும் சில நாட்களுக்கு மறக்க இயலாது.

    ReplyDelete
  3. நன்றி ரியாஸ் மற்றும் சாய்ராம்!

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு,,,,,,ரொம்ப

    ReplyDelete
  5. nalla iruku abilash..
    Valthukkal!!

    ReplyDelete
  6. அந்தப் பூனையை எழுத்து சித்திரத்தில் நன்றாக வடித்து விட்டீர்கள்!! நன்றாக இருந்தது!!

    ReplyDelete
  7. 'நின்றால் தீவு
    அசைந்தால் தோணி
    இரண்டுக்கும்
    மின்னற் பொழுதே தூரம்'
    என்கிற அற்புதமான கவிதை வரிகளில் தங்கள் தலைப்பு கவருகிறது. தேவ தேவனுடைய கவிதை வரிகள் தானே இவை ?

    சில கவிதைகள் படித்தவுடன் பதிந்து விடும். ஒரு பலாச்சுழையின் இனிப்பு மாதிரி இருக்கும் அவை.

    சில கவிதைகள் புதிர் போடும். நிதானிக்க வைக்கும். அடர்ந்து கிடக்கும். மறுவாசிப்பைக் கோரும். தேன் மாதிரி. இனிப்பு ஒட்டிக்கொண்டே வரும்.

    பூனையை பரபரப்பான மாநகரத்தில் வாழ்க்கையை நகர்த்துகிற மனிதனாகக் கொண்டால் இக்கவிதையில் நானே பூனையாகிறேன் :)

    நன்றி அபிலாஷ் அண்ணா ...

    ReplyDelete
  8. கொற்றவை, ஆரண்யநிவாஸ். ஆர் ராமமூர்த்தி, செந்தில் பாபு, மற்றும் வழிப்போக்கன் உங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  9. மாணிக்! தேவதேவன் வரியே தான். உங்கள் வாசிப்பு உவப்பாக உள்ளது, நன்றி.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates