Tuesday 8 June 2010

இலங்கையிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை

உயிரோசையில் வெளியாகியுள்ள என் கட்டுரை



கால்சுழல் பந்தாளர் அமித் மிஷ்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்த போது அஜெய் ஜெடேஜா இப்படி அவதானித்தார்: “இந்தியாவில் இப்படி யாரும் எதிர்பாராமல் ஒரு திறமை தோன்றி பிரகாசிக்கும். இந்திய கிரிக்கெட் எனும் பெருங்குழப்பமான ஒரு கட்டமைப்பில் எதேச்சையாகவே அற்புதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அமித் மிஷ்ராவை பாருங்கள்! வாரியமோ, தேர்வாளர்களோ அவரை பயிற்றுவித்து, பாதுகாத்து வளர்த்தெடுக்கவில்லை. தனிப்பட்ட உழைப்பும் அதிர்ஷ்டகரமான திருப்பங்களும் காரணமாக அணிக்குள் வந்தார். சோபித்தார். ஆஸ்திரேலியாவைப் போன்ற கட்டுக்கோப்பான அமைப்புமுறை, திட்டவரைவை ஒட்டின செயல்பாடுகள் போன்றவை இந்தியாவில் பலன் தராது. இப்படி எதேச்சையாக திறமைகள் வெளிப்படுவதே இந்திய கிரிக்கெட்டின் வரலாறாக இருந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படியே இருக்கும்.” இந்தியாவில் வீரர்களை கையாள்வதும், தேர்வதும் தற்காலிக அவசியம் மற்றும் நட்சத்திர மதிப்பை பொறுத்தே உள்ளது. இதனாலேயே சில மூத்தவீரர்கள் விலகினாலோ ஓய்வுற்றாலோ நாம் அவ்விடத்தை நிரப்ப கடுமையாக தடுமாறுகிறோம்.
 இது போன்ற கட்டங்கள் வரும் போது இந்திய தேர்வாளார்களின் செயல்பாடுகள் படுவேடிக்கையாக தோன்றும். அவர்கள் இதற்கு சற்றும் தயாராக இருக்க மாட்டார்கள். தென்னாப்பிரிக்கா தொடரில் திராவிட் காயமுற்ற போது விருத்திமின் சாஹாவை களமிறக்கும் அளவுக்கு நாம் குழம்பிப் போயிருந்தோம். தற்போது ஜிம்பாப்வேவில் நடந்து வரும் முத்தரப்பு போட்டியில் இந்தியா வெளியேறி விட்ட நிலையில் தேர்வுக்குழு மீண்டும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மூத்த வீரர்களை மொத்தமாக நீக்கியது, வெறும் நாலு முழுநேர மட்டையாளர்களை தேர்ந்தது போன்ற தவறுகள் சுட்டிக் காட்டப் படுகின்றன. நம்மை விட சிறிய நாடான இலங்கை நாட்டுக்கு இந்த சங்கடங்கள் ஏதும் நேர்ந்ததில்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் உள்கட்டமைப்பு ஏது அவர்களுக்கு இல்லை. ஆனால் ஜெயசூர்யா ஓய்வு பெறத் தயாராகும் முன்னரே தில்ஷான் துவக்க வீரராக அறிமுகமாகி உலகின் மிக ஆபத்தான மட்டையாளராக கருதப்படும் அளவுக்கு முக்கியமானவராகி விட்டார். ஜெயசூர்யாவை இலங்கை கிட்டத்தட்ட மறந்து விட்டது. மாற்று வீரர்களை உருவாக்குவதை இலங்கை தேர்வாளர்கள் ஒரு தேர்ந்த சதுரங்க விற்பன்னர் காய் நகர்த்துவது போல் சாமர்த்தியமாக செய்துள்ளனர். இலங்கை இடம் இருந்து நாம் நிறைய கற்க உள்ளது.
இலங்கையில் பொதுவாக திறமையாக ஆடும் வீரர்கள் குறைவு என்பதால் அவர்கள் இருக்கும் சொச்ச திறமைகளை பராமரிப்பதில் கவனமாக உள்ளனர். கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாகக் கோளாறுகளும் இருந்தாலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நாம் கிரிக்கெட்டர்களின் பராமரிப்பு விசயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். பொதுவாக அவர்களின் தேர்வுக் கொள்கை இது: ஒரு திறமையான வீரர் தென்பட்டால் அவர் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு அணித் தேர்வுகளில் இடம் பெறுவார். இளம்வீரர்கள் ஆரம்பத்திலேயே சோபிக்க வேண்டிய அல்லது உச்சபட்ச திறமையாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தொய்வாக தங்கள் ஆட்டவாழ்வை ஆரம்பிப்பவர்களும், சராசரியாக திறமை இருந்து கடுமையாக உழைப்பவர்களும் தக்கவைக்கப் படுவார்கள். முதலில் சொன்னதற்கு மரபார்ந்த உதாரணம் முன்னாள் தொடக்க மட்டையாளர் அட்டப்பட்டு. அவர் முதலில் ஆடிய ஆட்டங்களில் தொடர்ந்து முட்டைகள் எடுத்தார். ஆனால் இந்தியாவில் போல் அவர் காணாமல் போய் விடவில்லை. முரளிதரனை இலங்கை கிரிக்கெட் வாரியம் காப்பாற்றியது மற்றொரு வரலாற்று நிகழ்வு. தற்போது இலங்கை அணியில் சோபித்து வரும் கபுக்திராவின் ஒருநாள் சராசரி 20. ஆனாலும் திறமை காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழ்ங்கப்படுகிறது. அவரும் சமீபமாக சிறப்பாக மட்டையாடி வருகிறார். நிதானமற்ற திர்ஹர பெர்ணாண்டோ, ஆடத்தொடங்கிய ரெண்டாம் வருடமே தன் ஆட்டத்திறனை இழந்த மெண்டிஸ், 120 கி.மி வேகத்தில் கூர்மையாகி வீசி ஐ.சி.சி பட்டியலில் முதலிடம் பெற்று பின்னர் சேவாக் மட்டையாட்டத்தின் உளவியல் தாக்குதலால் தன் தன்னம்பிக்கையை இழந்த குலசேகரா போன்றவர்களை இலங்கை மேலாண்மை ஒரு சிறந்த மேய்ப்பனை போல் தோளிலிட்டு பாதுகாத்து கொண்டு செல்கிறது. அடுத்து மிக முக்கியமாக இலங்கை மேலாண்மை தனது இளைய வீரர்கள் முழுமையாக பரிணமிப்பதற்கான அவகாசத்தை மட்டுமல்ல நெருக்கடியற்ற, சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. எப்போதும் இலங்கை மட்டையாட வரிசையில் இரண்டு அல்லது மூன்று அனுபவஸ்தர்கள் இருப்பார்கள். எல்லா நிலையிலும் ஆட்டத்தை வழிநடத்தும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் நெருக்கடியான கட்டங்களில் இளையவீரர்கள் ஆபத்துக்கு இரையாக்காமல் தாமாகவே முன்னின்று போராடுவார்கள். இலங்கையில் மட்டையாளர்களும், வீச்சாளர்களும் எப்போதும் ஒரு மூத்தவீரருடனே இயங்குவதை, ஆட்டநுட்பத்தை நேரடியாக கற்பதை நாம் காண் முடியும். வாஸின் கீழ் குலசேகராவும், முரளியின் கீழ் மெண்டிஸ் மற்றும் ரந்திவும் ஆடிப் பயின்ற பின்னரே இப்போது முன்னணிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒப்பிடுகையில் இந்தியா இரண்டு அம்சங்களில் மாறுபடுகிறது. இந்திய அணியில் மூத்தவீரர்கள் மொத்தமாக நீக்கப்பட்டு புதுவீரர்கள் அதிரடியாக அறிமுகப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆசானும் இல்லை. மன உறுதியும், அபரித திறமையும் உள்ளவர்கள் தாமாகவே நீந்தி கரையேற வேண்டும். தொண்னூறுகளின் பிற்பகுதியில் திராவிட், லக்‌ஷ்மண், கங்குலி ஆகியோர் இப்படித் தான் நேராக போர்முனை முகப்பிலேயே அறிமுகமானார்கள். மூத்தவீரர்கள் இருக்கும் போதே அவர்களின் அனுபவக் கண்களின் கீழ் யாரும் வளர்த்தெடுக்கப்பட இல்லை. இப்போது திராவிட், சச்சின், லக்‌ஷ்மண் ஓய்வு பெறும் நிலையில் இதே மூட்டமான எதிர்காலமே இந்திய கிரிக்கெட்டின் முன் உள்ளது. மீண்டும் கண்ணைக் கட்டிய நிலையில் ஒரு மியூசிக்கல் செயர் ஆரம்பமாகும்.




அடுத்து, அறிமுகமாகும் இளைய ஆட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தலான சூழலே அணிக்குள் நிலவுகிறது. அணிக்குள் சாவகாசமாய் ஆடி நிலைபெறும் பாதுகாப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. நடந்து வரும் முத்தரப்பு ஆட்டத்தொடரில் இந்திய மட்டையாளர்கள் மிகத் தயக்கமாக ஆடியதற்கு நேர்முரணாக இலங்கையின் இளைய வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டசுதந்திரம் ஒரு சிறந்த உதாரணம். மிக நெருக்கடியான, கைவிடப்பட்ட நிலைமைகளில் தான் இந்திய அணியின் இளையவீரர்களுக்கு ஆட்டவாய்ப்புகள் கிடைக்கும். பொறுப்பற்று மூத்தவீரர்கள் ஆட்டமிழந்த பின் ஏற்படும் பாதுகாப்பின்மை காரணமாய் அவர்கள் சுயநலத்துடன் ஆட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. சுருக்கமாக, இந்தியாவில் ஒரு புதுத் திறமை ஒரு முதலீடாக கருதப்படுவதில்லை. மூத்தவீரர்கள் இல்லாத பட்சத்தில் கடுமையான நெருக்கடிக்கு இடையில் அவர்கள் ஒருவித வெற்றிட நிரப்பிகள் மட்டுமே.

இப்படியான ஒரு களேபர கிரிக்கெட் சூழலில் நமது அணி சறுக்கு ஏணியில் விளையாடும் ஒரு குழந்தையை ஒத்தது தான். அதன் ஏற்றத்தாழ்வுகளை அலசி தீர்மானங்களுக்கு வருவதை விட வெறுமனே வேடிக்கை பார்ப்பதே நலம்.
Share This

2 comments :

  1. கிரிக்கெட் அவங்களோட விளையாடுரதே தவறு...இதுல அவங்க கிட்ட இருந்து கத்துக்கணும்னு சொல்றீங்களே நியாயமா....

    ReplyDelete
  2. நல்ல அலசல் அபிலாஷ்!

    எனக்கென்னவோ நம் தேர்வுக்குழு சந்திப்பது "Problem of plenty " என்பதாகத் தோன்றுகிறது. நிறைய ஸ்பெஷலிஸ்டுகள் இருப்பதால் மீண்டும் மீண்டும் ஒரு தவறை இந்திய கிரிக்கெட் செய்கிறது. அது ஆல்ரவுண்டர்களை உருவாக்குவதில் காட்டும் மெத்தனம். வலுவான அணியாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் நல்ல ஆல்ரவுண்டர்கள் தேவை.இருக்கும் சொற்ப ஆல்ரவுண்டர்களும் (யுவராஜ்,பதான்,ரெய்னா) பகுதி நேர ஆல்ரவுண்டர்களாகவே உள்ளனர். அதனால்தான் முக்கியமான ஆட்டங்களில் முக்குகிறோம்.

    இந்தியாவில் ஒரு வீரரை ஃபார்மில்லாமல் அணியில் தொடர்ந்து வைத்திருந்தால் மீடியா கிழித்துத் தொங்கப் போட்டு விடும்.இந்த சிக்கல் இலங்கைக்கு இல்லாமலிருக்கலாமல்லவா!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates