Saturday 5 June 2010

செவ்ளி: பயமுறுத்தும் வசீகரிக்கும் இருண்மை

தமிழ்ஸ்டுடியோ இணைய இதழில் நான் எழுதி வரும் குறும்படங்கள் பற்றிய தொடரில் சமீபத்திய கட்டுரை இது.


தயாரிப்பு, எழுத்து, இயக்கம்: த.அறிவழகன்

ஒளிப்பதிவு: தினேஷ் ஸ்ரீனிவாஸ்

இசை: கெ.திருமுருகன்

படத்தொகுப்பு: மதன் குணதேவா

சிறப்பொலிகள்: எம்.ஜெ.ராஜூ



படைப்புலகின் மிக வசீகரமான படிமம் இருட்டுதான். அடர்ந்த வனத்தின், குகைகளின் இருட்டுக்குள் புழங்கி பரிணமித்தவன் என்பதாலோ ஏனோ மனிதனுக்குள் இருள் மாபெரும் கதைகளின் உலகமாக உள்ளது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மனிதக்கதையாடலில் தொடர்ந்து இடம் வகிக்கிறது. பட்டவர்த்தனமான வெளிச்சத்தை அன்றாட வாழ்விலோ கற்பனை எழுச்சியிலோ நாம் சில தருணங்கள் மட்டுமே சந்தித்து சட்டென்று விலகி விடவே எத்தனிக்கிறோம். மேற்கத்திய இலக்கியத்தில் கடவுள் பற்றி பேச வந்தவர்கள் சாத்தானில் பெரும் விருப்பு கொள்வதும் கீழைத்தேய மரபில் காலங்காலமாக பேய்க்கதைகள் உரையாடப்பட்டு ஆவேசமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கும் இந்த இருண்மை மீதான பிரேமையே காரணம். அறிவழகனின் “செவ்ளி” ஒரு இருபது நிமிட குறும்படம். தமிழில் இருட்டின் வசீகரத்தை மிரட்டலாக படம் பிடித்த முதல் படம்.
”செவ்ளி” அதன் எளிதான பொருளில் ஒரு பேய்ப்படம். ஆனால் மிக முக்கியமாக அதை பேயை விளக்கவோ தர்க்க ரீதியாக நிறுவவோ மறுக்கவோ இல்லை. பேய் என்னும் கருத்துருவம் அல்லது பிம்பம் நம்முள் ஏற்படுத்தும் சஞ்சலங்களை, கிளர்த்தல்களை, தடுமாற்றங்களை நுட்பமாக, சினிமா மொழியின் லாவகத்தை கைக்கொண்டு பேசுகிறது இப்படம்.

குறும்படத்தில் எளிதான கதையமைப்பு வசதியானது. பதினைந்து நிமடங்களுக்குள் ஐந்து பாத்திரங்களை காட்டி வளர்த்தெடுத்து முடிச்சிடுவது கவனத்தை கலைக்கும். த.அறிவழகன் சாமர்த்தியமாக ஒரு தாத்தா மற்றும் பேரனுக்குள் நிகழும் சிறு அனுபவமாக கதைக்களனை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த சின்னபரப்புக்குள் ஒரு பெரும் புதிர்வெளியை பிரதிபலித்துக் காட்ட முயல்கிறார். இரண்டு பாத்திரங்களையும் அவர் நடிக்க வைத்துள்ள விதம் பெரும் வியப்பை உருவாக்குகிறது. குழந்தைகளை சிறப்பாக நடிக்க வைப்பது மாபெரும் திறமை. தாத்தாவாக எல்லக்குடி கோ.பட்டுராசுவும், பேரனாக வை.சுரேந்தரும் படம் பூரா படக்கருவியின் பிரக்ஞை எழாமலேயே மிக இயல்பாக நடந்து பேசி தூங்கி கனவு காண்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய வலு இவர்களின் நடிப்பு தான்.

இரவில் தாத்தா வழக்கமாக வயலுக்கு காவல் காக்க செல்வார். ஒரு இரவில் அவருடன் துணை செல்லும் பொந்தையன் கூத்து பார்க்க கிளம்பி விடுவதால் தாத்தா தன் சிறுவயது பேரனை கூட அழைத்து செல்கிறார். பக்கிள் இல்லாத இழுத்து முடிந்த அச்சிறுவனின் கால்சராயில் ஓட்டை இருப்பது கூட ஒரு காட்சியில் தெரிகிறது. இயல்பான ஆடை வடிவமைப்பில் இயக்குனர் அத்தனை கவனம் காட்டி இருக்கிறார். இருவரும் காட்டு வழியில் நடந்து செல்கிறார்கள். சிறுவன் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறான். தாத்தா எல்லா தாத்தாக்களையும் போல பொறுமையாக எளிய பதில்களை தருகிறார். ஒரு கட்டத்தில் அவர் வேப்பிலை கொத்தை ஒடித்து சிறுவன் இடுப்பில் சொருகுகிறார். “அப்போது தான் பேய்கள் உன்னை அண்டாது” என்கிறார். “பேய்கள் சுயகட்டுப்பாடு இன்றி ஊர் சுற்றுபவர்களை, தாயத்து கட்டாதவர்களை, சின்னஞ்சிறார்களை பார்த்தால் அடித்து கொன்று விடும்” என்று மேலும் கதையை வளர்க்கிறார். சிறுவன் மனதில் முதல் முதலாக அச்சம் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேலும் மேலும் அறிந்து கொள்ளும் சுவாரஸ்யமும் உள்ளது. இது முக்கியம். கடைசி வரை பயங்கொள்ளும் அத்தனை காட்சிகளிலும் அவனுக்கு பேய்களின் உலகம் மீதான ஆழ்மன ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது. தாத்தா பேய்களை பற்றி பேசிக் கொண்டே செல்கிறார். அப்போது செவ்ளி என்கிற நாய் குறுக்கிட சிறுவன வெலவெலத்து தண்ணீர் பாத்திரத்தை கீழே போடுகிறான். வயல் காவல் குடிசையில் நாயும் அவர்களுக்கு துணையிருக்கிறது. தாத்தா அப்போது தான் பேய் பார்த்த கதை ஒன்றை சொல்கிறார். கதையின் மிக முக்கியமான இடம் இது. தாத்தா இளமையில் ஈசல் பிடிக்க நண்பர் பொந்தையனுடன் செல்கிறார். புற்றிலிருந்து ஈசல்களை பிடித்து சாக்குக்குள் திணிக்கிறார். ஆனால் எத்தனை பிடித்தும் சாக்கு காலியாகவே உள்ளது. துணுக்குற்று அவர் மேலே பார்த்தால் வானில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது ஒரு பேய். அதுதான் சாக்கிற்கு கீழே புதைந்து ஈசல்களை உண்ணுகிறது என்று அவருக்கு புரிகிறது. பொந்தையனை அவ்விடத்தில் குழி தோண்ட சொல்கிறார். குழிக்குள் பேய் ஈசல்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பொந்தையன் மண்வெட்டியால் ஒரு போடு போட இரும்பு ஆயுதத்தின் அடி தாங்க முடியாத பேய் ஓலமிட்டபடி கசிந்து வெளியேறுகிறது. இந்த கதை கேட்ட பின் தூங்க விழையும் சிறுவனை இரவெல்லாம் பேய்க் கற்பனைகள் தொந்தரவு செய்கின்றன. செவ்ளி வேறு குரைத்து ஊளை போடுகிறது. பேய்களை பார்த்தால் நாய்கள் குரைக்கும் என்று தாத்தா சொன்னது நினைவு வருகிறது. தாத்தா விழித்துக் கொள்கிறார். செவ்ளி மரண ஓலமிடுகிறது. தாத்தா புரிந்து கொண்ட பாவனையுடன் அமைதியாக இருளை நோக்குகிறார். மறுநாள் காலையில் இருவரும் மௌனமாக செவ்ளியின் குருதி திட்டுத் திட்டாய் வயல்பரப்பில் சிதறிக் கிடப்பதை கண்ணுறுகின்றனர். இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் ஏதோ ஒரு புதிரின் ரகசியத்தை அவர்களின் மனங்கள் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த அமைதியான முடிவு இயக்குனர் மிகத் தேர்ந்தவர் என்பதை சொல்லுகிறது.

படத்தில் ஒளிப்பதிவு ஆர்ப்பாட்டமின்றி செயல்படுகிறது. வசனங்களும் மிகையின்றி சுருக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பலவீனம் தாத்தா தன் பேய் அனுபவத்தை கூறும் நீளமான வசனப் பகுதிதான். அதை காட்சிப்படுத்தி இருந்தால் இப்படம் மேலும் ஒருபடி முன்னகர்ந்திருக்கும். படத்தின் மையக் கருவை உணர்த்தும் படிமமாக அக்காட்சியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இப்படி யோசித்து பாருங்கள். ஈசல்கள் மழையில் தோன்றி இறகு முளைத்து எழுந்து வெளிச்சம் நோக்கி நகர்ந்து மறைபவை. இந்த ஈசலில் இருந்து தாத்தாவின் அனுபவம் வானில் எழுந்து நிற்கும் பூதத்திற்கு செல்கிறது. வானில் விகாசித்து நிற்கும் அந்த சூட்சும உருவமும் ஈசலை போன்றது தான். வானில் இருந்து பூமிக்குள் புதைந்து இரை தேடி இரும்பால் அடி வாங்கினதும் ஓடி மறைகிறது. ஈசலும் பூதமும் இப்படி பூமியில் இருந்து வானுக்கு எழுந்து பூமிக்கு திரும்பி மறைகின்றன. இவை பூமியின் பிடிப்புகளை உதறி ஆகாயம் நோக்கி எழவேண்டிய மனித மனத்தின் ஆவேச விருப்பத்திற்கான படிமங்கள் தாம். பேய் என்பதே மனதின் படிமம் தான் என்று இப்படம் குறிப்புணர்த்துகிறது. இந்த சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டால் ஒரு அற்புதமான படிமமாக அது உருமாறி இருக்கும். ஒரு சிறந்த மாய-எதார்த்த கதையாகவும் இந்த காட்சியை ஒருவர் எழுதிப் பார்க்க முடியும்.



இந்த படத்தை எம்.டி வாசுதேவன் நாயர் எழுதி டி.ஹரிஹரன் இயக்கிய “எண்டே ஸ்வந்தம் ஜானகிக் குட்டி” என்ற படத்துடன் ஒப்பிடலாம். பாட்டியின் கதைகள் கேட்டு குழந்தை ஜானகிக்குட்டியின் மனதில் விரியும் பேயுலகம் ஒரு கட்டத்தில் மனநோயாக மாறுவதை சொல்லும் அருமையான படம் அது. ஆனால் உருவாக்கத்தில் அப்படத்தையும் “செவ்ளி” விஞ்சி விட்டது என்று சொல்லலாம். கடைசியாக ஒன்று: எதிர்காலத்தில் சரியான உழைப்பும் சந்தர்பங்களும் அமைந்தால் த.அறிவழகன் தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களை முழுங்கி விடுவார். நமக்கு இத்தகையவர்கள் தான் வேண்டும்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates