Tuesday 22 June 2010

பள்ளிச்சாலை: குறும்பட விமர்சனம்


படத்தொகுப்பு: அன்பழகன்


ஒளிப்பதிவு: முத்து

கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்: செல்வகணேஷ்



”பள்ளிச்சாலை” குழந்தைகளின் களங்கமற்ற உலகை எதார்த்தமாக, ஏறத்தாழ அவர்களது மொழியிலேயே சொல்லி உள்ள படம். படத்தின் கதைக்களன் சற்று வினோதமானது. ஆரம்ப, இறுதிக் காட்சிகளின் சில வினாடிகளை மட்டும் பார்ப்பவர்களை இதை ஒரு பொதிகை டீ.வி வகையறா செய்திப்படம் என்று கருதி விடக் கூடும்.
சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்தால் தயங்கவும், சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும் என்பது போன்ற விதிகளை பிரச்சாரம் செய்வது தான் இப்படத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக உள்ளது. ஆனால் முயலுடனான ஓட்டப்பந்தயத்தில் ஆமை செய்தது போல் இயக்குநர் செல்வகணேஷ் போக்குவரத்து மேடையில் இருந்து முதல் காட்சி ஆரம்பித்த சில நொடிகளிலேயே இறங்கி குழந்தைகளோடு அவர்களது கேலி, விளையாட்டு, மோதல், பிணக்கு, இணக்கம், பரஸ்பர புரிதல் ஆகிய கட்டற்ற வெளிப்பாடுகளோடு ஐக்கியமாகி விடுகிறார்.



குட்டிப்பெண் இந்திராவின் கோழி சுசீலாவுக்கு உடல்நிலை கெட அவள் மிகுந்த துயரமுற்று அழுகிறாள். தோழிகளும் தோழர்களுமாய் ஒரு குட்டிப் படை கோழி டாக்டரான மற்றொரு சிறுவனை தேடிக் கிளம்புகிறது. அவன் கொல்லையில் வெளிக்கு போய் கொண்டிருக்கிறான். “டாக்டரை இப்போ பாக்க முடியாது அப்புறமா வாங்க” என்ற டாக்டரின் நண்பன் கும்பலை விலக்க முயன்று தோற்றுப் போகிறான். டாக்டர் பாதியில் விட்டு விட்டு கழுவாமல் கொள்ளாமல் சைக்கிளில் ஏறிக் கிளம்புகிறான். சைக்கிளில் நின்றபடியே ஓட்டுகிறான். இதற்கு ஒரு சிறுவன் தீவிரமான முகத்துடன் காரணம் அளிக்கிறான் “உக்காந்தா ஒட்டிக்கிடும் இல்ல”. இக்காட்சியில் தெரியும் உற்சாகமான நகைச்சுவை முற்றிலும் குழந்தைகளின் மனநிலையில் தோன்றி, விமர்சன, ஒழுக்க விகல்பங்களற்று வெளிப்படுவது. தமிழின் பொதுவான குழந்தைப் பட நகைச்சுவை வளர்ந்தவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் நிலைப்பாடுகள் குழந்தைமையின் ஒட்டுமீசை ஏந்தி வருவது மட்டும் தான்.



ஒரு ஆவணப்பட பாணியில் ஒளிப்பதிவு செயல்படுகிறது. இப்படத்தின் சிறந்த காட்சிகள் இவ்வாறு நாடகீய அத்துமீறல்கற்று சாமான்ய வாழ்க்கை பதிவாகுபவை தாம். உதாரணமாக முதல் காட்சியில் சிறுமி இந்திரா வாசல் வழியில் நின்று சீருடை அணிய தண்ணீர் குடம் சுமந்து வரும் அவள் அம்மா அலட்டாமல் அவளை அனிச்சையாக சற்று தள்ளி விட்டு கடந்து செல்கிறாள். பிற்பாடு குழந்தைகள் விளையாடும், கல்வீசி மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒருவர் கூட படக் கருவியை பார்ப்பதில்லை. இவ்வாறு படம் முழுக்க பிரக்ஞையின் ஊடுருவல்கள் இல்லாமல் குழந்தைகளை நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநர் செல்வகணேஷை பாராட்ட வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாகவே வாழும் மிக அரிய தமிழ்ப்படங்களில் “பள்ளிச்சாலையும்” ஒன்று.
Share This

2 comments :

  1. உங்களின் அனைத்து குறும்பட விமர்சனங்களையும் கவனித்து வருகின்றேன். மிகவும் நுட்பமான விமர்சனங்கள்.

    தமிழ் ஸ்டுடியா.காம் நடத்திவரும் மாதாந்திர குறும்பட வட்டம் நிகழ்ச்சி ஒன்றே இது போன்ற படங்களை பார்க்கக்கிடைக்கும் வாய்ப்பாக எனக்கு இருக்கின்றது.

    இது போன்ற குறும்படங்களை காணும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைக்கின்றது. சொன்னால் எனக்கும் உபயோகமாக இருக்கும்.

    ஆயிரத்தில் ஒருவன் பற்றிய உங்களின் கட்டுரையை சமீபத்தில் தான் வாசித்தேன். உண்மையில் 'ஆயிரத்தில் ஒருவன்- எதிர்மறைகளின் அபத்தம்' என்கிற கட்டுரையை விட பன்மடங்கு உயர்வானது நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை. சாருவின் சினிமா கட்டுரைகள் மிகவும் அற்புதமானவைதான். நான் குறைத்துச்சொல்லவில்லை. இருப்பினும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி நான் இதுவரை வாசித்த கட்டுரைகளில் மிகச்சிறந்தது உங்களுடையதுதான். சல்யூட் வாத்தியாரே...

    ReplyDelete
  2. நன்றி நளினி சங்கர். தமிழ் ஸ்டுடியோ டாட்காமின் நிர்வாகிகளிடம் இருந்து பெற்று இக்குறும்படங்களை பார்க்கிறேன். கவர்ந்தவற்றை விமர்சிக்கிறேன்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates